தொலைபேசியைத் துண்டிக்க
நீ உதிர்த்த கடைசிச் சொல்லுக்குப் பின்
நான் உறங்கவே இல்லை
எல்லோருக்கும் வாய்ப்பதில்லை
சொற்களைக் கையாளும்
தேர்ந்த ஆற்றல்
வீசியதே திரும்பவருமென்றும்
நம்புவதற்கில்லை
எதிர்பாரா தருணத்தில்
நம்மை வீழ்த்திவிடும் அபாயம்
சொற்களுக்கு உண்டு
சொற்களின் கனத்தைத்
தாங்கமுடியாமல் நம்மில் பலர்
சுயசாவைத் தேடிக்கொண்டனர்
சொற்களின் வீரியத்தில்
நம்முடைய கற்பு
சூறையாடப்பட்டிருக்கிறது
சொற்களைச் சொற்களாகவே
கேட்டுக்கொண்டிருக்கும் சமூகம்
எந்தக் கோடுகளையும்
தாண்டிவதில்லை
சொற்களிடம் வசப்பட்டு
சொற்களாலேயே முடிந்துபோன
வரலாறு நம்முடையது

