யுகபாரதி

ஜூலை, 2010 க்கான தொகுப்பு

முதல் தலைமுறையில் கல்லூரி வந்தவர்கள்

Posted by யுகபாரதி மேல் ஜூலை 17, 2010

செய்யக்கூடாத பாவத்தைச்
செய்ததுபோல் காணப்படுவார்கள்

ஒரு நாளென்பது
ஒரு நாளாக அல்லாமல்
வேலாக அவர்களின் விலாஎலும்பைக்
குத்திக்குடையும்

இஸ்திரி இடப்படாத
அவர்களின் சட்டை சுருக்கங்கள்
அவர்களுக்குள் கட்டாய வருத்தங்களைக்
கொண்டுதரும்

தன் சகாக்களின் முன்பாக
உணவுப் பொட்டலத்தைப் பிரிக்கத்தயங்கித்
தாமதமாக உண்பார்கள்
சமயத்தில் பட்டினியும் கிடப்பார்கள்

இயல்பான தம் பேச்சுகளை
ஏகடியம் செய்வார்களென்று
வெறுமனே தலையை மட்டும் ஆட்டுவார்கள்

தேர்வைவிடவும்
தேர்வுக்கட்டணத்திற்காக கவலைப்படுவார்கள்
 
அவர்கள் படிக்க வந்ததை மறந்து
நடிக்கத் தொடங்குவார்கள்

ஆசையிருந்தும்
அழகிய பெண்களை/ஆண்களை
ஆழ்ந்து ரசிக்கத் தயங்குவார்கள்

முடிவாய்ச் சொல்வதெனில்,
முதல் தலைமுறையில்
கல்லூரிக்குள் நுழைபவர்கள்
தங்கள் மூதாதையர்களின் அழுகையையும் சேர்த்து
அழுதுகொண்டிருப்பார்கள்

.... இங்கே பதியப்பட்டது கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: | 6 மறுமொழிகள் »

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 73 other followers