நம்முடைய நியாயங்கள்
அவர்களை நிராகரிக்கச்சொல்லவில்லை
மாறாக அவர்களின் பிறழ்வை
நினைவூட்டுகின்றன
நம்முடைய முழக்கங்கள்
அவர்களை காயப்படுத்தும் தந்திரமில்லை
மாறாக அவர்கள் படப்போகும்
வலிகளை பறைசாற்றுகின்றன
நம்மை அவர்களுக்கு
நம்முடைய உண்மைகளால்
பிடிக்காமல் போகிறது
நம்மை அவர்கள்
அலட்சியம் செய்வதுபோல
அதிகமும் கவனிக்கிறார்கள்
ஒரு நேர்மையும் இல்லாமல்
வறட்டுப் புகழ்ச்சியில்
தங்களை தாங்களே சாகடிக்கும்
செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்
இருக்கும் பதவியும்
கிடைக்கும் சௌகர்யங்களும்
நாளையும் தொடருமென்று நம்புகிறார்கள்
யாரைப்பற்றியும் யோசியாமல்
எளிய மனிதர்களை வஞ்சிக்கிறார்கள்
எத்தனையோ படித்திருப்பதாகவும்
எல்லாமும் வசப்பட்டுவிட்டதாகவும் கருதி
வாழ்வதில் போதையுறுகிறார்கள்
அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டியதில்லை
அவர்களே அறிவார்கள்
தருக்கித்திரிந்த சமஸ்தானங்களெல்லாம்
தரைமட்டமான கதை

