யுகபாரதி

Archive for ஜூலை, 2009

தோழர்

Posted by யுகபாரதி மேல் ஜூலை 31, 2009

தோழர்

தோழர்

தோழர்


தமிழக அரசு வெளியிடும் விருது பெறுவோர் பட்டியல், பெரும்பாலும் அலுப்பூட்டுவதாகவும் விருதையே கொச்சைப்படுத்தும் விதமாகவுமே அமையும். ஆனால், இம்முறை வழக்கத்துக்கு மாறாக நல்லப் பட்டியல். பட்டியலில் தோழர் நல்லகண்ணுவின் பெயர். அம்பேத்கார் விருது பெற மிகச் சரியான நபரை தேர்ந்தெடுத்தமைக்காக அரசையும் தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்தோரையும் மதிக்கத் தோன்றுகிறது.

ஒரு விருதை பெறுகிற நபர் அந்த விருதுக்கு தகுதியானவராக இருக்க வேண்டும் என்பதிலும் பார்க்க, அந்த விருதையே கௌரவிக்கும் நபராக தோழர் எனக்குப் படுகிறார். தோழர், இதை தன் அரசியல் வாழ்வுக்காக கிடைத்த மகுடமாகவோ மகோன்னத பெருமையாகவோ கருதமாட்டார். ஏனெனில், பொதுவுடமை இயக்கத்தில் தன்னை முழுமையாக அர்பணித்த யாரும் தன் கழுத்தில் விழும் மாலைகளுக்காக கர்வப்படுகிறவர்களில்லை. மக்களை மீட்பதிலும் மக்களின் நேசத்துக்கு பாத்திரமாவதிலுமே அவர்கள் குறியாய் இருப்பார்கள். இனிவருங் காலங்களில் இவ்விருதுக்கு கூடுதல் மதிப்பும் மரியாதையும் கிட்டும் என்பதில் சந்தேகமில்லை.

மாண்புமிகு, மானமிகு, மரியாதைக்குரிய, உயர்திரு. திருமிகு போன்ற எந்த போலி மதிப்பீடுகளாலும் தான் அழைக்கப்படுவதை விரும்பாமல் ” தோழர்” என்ற ஒற்றை வார்த்தையில் முகம் மலர்பவர் நல்லகண்ணு. பொதுவுடைமை என்னும் சொல்லே அவர் வாழ்வின் முழுமைக்குமான அர்த்தமாகியிருக்கிறது. எளிமையின் கம்பீரத்தை யாருக்காவது சிபாரிசு செய்ய விரும்பினால் தோழரின் புகைப்படத்தைக் காட்டினால் போதும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக இருந்த போதும் சரி அப்பொறுப்பை தாமே பிறருக்கு வழங்கி வழி நடத்தும் உயரத்துக்கு போன போதும் சரி தோழர், தோழராகவே இருப்பதுதான் சிறப்பு.

தொடக்க கால அவருடைய அரசியல் வாழ்வில் இருந்து இன்று வரை தன்னை ஒரு செம்மையான கம்யூனிஸ்ட்டாகவே நிறுவிக் கொண்டவர் தோழர். உலகத்தின் சகல திசையில் நிகழும் மாற்றங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவராய் இருந்தும் தன்னை ஒரு ஏழைப் பங்காளனாகவே காட்டிக் கொள்வதில் கவனமாய் இருப்பவர்.இந்தப் பண்பும் கட்டுப்பாடுமே மற்ற அரசியல் கட்சி பிரமுகர்களிடம் இருந்து அவரை வேறுபடுத்தி காட்டுன. ஒரு கம்யுனிஸ்ட்டாகத் தொடர்ந்து வாழ்வை எதிர்கொள்வதில் நேரும் எல்லா நெருக்கடிகளையும் வெகு இயல்பாகச் கிறகிப்பவர்.

பத்து வருடத்திற்கு முன்பு கணையாழி இலக்கியப் பத்திரிகையில் வேலை கிடைத்து நான் பணிச்சுமையில் உழன்று கொண்டிருக்கையில் எனக்கிருந்த ஒரே ஆறுதல் பாலன் இல்லமும் அங்கிருந்த நூலகமும்தான். கணையாழி அலுவலகத்திற்கு பக்கத்தில் பாலன் இல்லம் அமைந்தமையால் தோழரை தினசரி சந்திக்கும் வாய்ப்பு இருந்தது. அவர், வயதுக்கும் அனுபவத்திற்கும் வாசிப்புத் தீவிரத்திற்கும் எவ்விதத்திலும் நெருங்க இயலாத என்னிடமும் அவரால் அன்பு செலுத்த முடிந்தது.

படித்த நூல்கள் குறித்து பேச முடிந்தது. அவரால்,இளைஞர்களின் ஆர்வத்தில் உண்டாகும் அறியாமைகளை நாசூக்காக சுட்டிக்காட்டி திருத்த முடிந்தது. பிறர் மனம் நோகாமல் தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில் அவருக்கு ஈடாக வேறொரு அரசியல் தலைவரை நானறியேன். வாசித்த வரலாற்றுப் புத்தகத்தில் இருந்து நான் மக்கள் தலைவர்களை யூகித்திருக்கிறேன். ஆனால், வாழும் வரலாறாக என்னையும் என்போல பிறரையும் தன் செயல்பாட்டால் வெகுவாக கவர்ந்தவர் தோழர்.

தோழரின் முன்னால் அமரும்போது ஒரு கட்சியின் மாபெரிய தலைவர் முன் அமரும் பதற்றம் நம்மை தொற்றாது. நம்முடைய அப்பாவிடம் சகோதரனிடம் அமரும் ஒழுங்கும் அன்புமே கவ்வும். கடந்த கால அரசியல் பகிர்வுகளை அவ்வப்போது அவர் உதிர்க்கும்போது மிகையுணர்ச்சிக்கு ஆட்படாதவராகவே காணப்படுவார். அவருக்குள் வேர்விட்டு கிளைத்து நிற்கும் மாந்தநேய மரநிழலில் நம்மை அமர்த்தி கொறிப்பதற்கு விஷயங்களைப் பங்கிடுவார்.

ஏனையக் கட்சி தலைவர்களும் மதிக்கத்தக்க தலைவராக, தோழர் இருப்பதற்கு அவர் எளிமை அல்ல காரணம். எடுத்துச் செயல்படுத்தும் கொள்கைத் தெளிவு. வேட்டி சட்டைகளின் எண்ணிக்கை குறைவாக வைத்திருப்பதால் ஒரு தலைவரை மக்களுக்குப் பிடித்துவிடுவதில்லை. எந்த நேரத்திலும் தன்னை மக்களின் அடையாளமாக மாற்றிக் கொள்வதாலேயே பிடிக்கிறது. தோழர், மாற்றிக் கொண்டவரில்லை. அவரது இயல்பே மக்களின் அடையாளம்தான்.

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் செயலாளராக 5 ஆண்டும், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் செயலாளராக 1968 முதல் 1991 வரையும், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் செயலாளர்களில் ஒருவராக சில காலமும் பணியாற்றிய தோழர், 1991 ஏப்ரலில் மதுரையில் நடந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தமிழ் மாநில செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2005ல் அப்பொறுப்பில் இருந்து விடுபட்டு தேசிய நிர்வாகக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.

கருத்துக்களால் முரண்பட்டவர்களையும் தன் செயலூக்க நேர்மையினால் வசீகரிப்பவர் தோழர். ஒரு முறை கட்சி அலுவலகத்திற்கு நான் போயிருந்த போது ‘விஷ்ணு புரம்’ நூலை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜெயமோகனின் எழுத்துக்களுக்கு இடதுசாரி வட்டாரத்தில் ‘இந்துத்துவ’ களிம்பு தடவப்பட்டிருந்தது. காயத்திற்கு களிம்பு தேவையென்பதால் என் பிரயோகம் தவறாகப் போய்விடாது. தோழர், முழுமையாக அந்நாவலை வாசித்துவிட்டு ஜெயமோகன் எழுத்திலுள்ள தடுமாற்றங்களை வேறொரு சந்தர்ப்பத்தில் வேறு ஒருவருக்கு விளக்கக் கொண்டிருக்கையில்தான் அவர் வாசிப்பின் தீவிரமும், ஞாபக சக்தியும் என்னை பிரமிக்க வைத்தது.

எழுத்தைக் காதலித்து கம்யூனிஸத்தைக் கைப்பிடித்து புரட்சிகர வாழ்வை மேற்கொள்ள நினைக்கும் யார் ஒருவரையும் அவர் உரையாடல்கள் ஈர்க்கவே செய்யும் சிற்றிலக்கிய மரபில் சிறு தெய்வ வழிபாடு மிகுதியாகக் காணப்படுகிறது. தனி ஒரு மனிதன் தன் வாழ்வில் புரிந்த வீர தீர செயல்களுக்காக பின்னால் தெய்வமாகக் கருதப்படுகிறான். அதை கவனத்தில் வைத்துக் கொண்டு ஆ.சி வசுப்பிரமணியனின் ‘கொலையில் உதித்த தெய்வங்கள்’ என்னும் கட்டுரையின் துணையால் ‘போக்தியம்மனை’ பற்றி ‘தாமரை’யில் ஒரு கவிதை எழுதினேன். தோழர், வாசித்துவிட்டு ‘நெல்லை பகுதியில் உள்ள போத்தியம்மனை தஞ்சைப் பகுதியில் இருந்து வந்த உங்களுக்கு எப்படித் தெரிந்தது’ என்றார்.

நான் தஞ்சைப் பகுதி என்பதை என் கவிதைகள் உணர்த்தும். ஆனால், ‘போத்தியம்மன்’ நெல்லைக் சீமையிலுள்ள சிறுதெய்வம் என்பதும் அதன் வரலாறு குறித்தும் அவரால் போகிற போக்கில் சொல்ல முடிந்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. தெய்வ நம்பிக்கை இல்லாத போதும் தெய்வக் கதைகளை அவர் தெரிந்து வைத்திருந்தது மேலும் வியப்பூட்டின. விவரங்களை மகனுக்குச் சொல்லித் தருவது போல இளம் தோழர்களுக்கு அவரால் எப்படிச் சொல்ல முடிகிறதோ?

தோழர், கவிதையும் எழுதுவார் என்பது எனக்கு அவர் பற்றிய ஆய்வை மேற்கொள்கையில் கிடைத்தப் புதிய செய்தி. இரண்டு முக்கியமான கட்டங்களில் அவர் கவிதையை நாடியிருக்கிறார். ஒன்று, பொதுவுடைமையைத் தமிழ்ப்பற்றோடு இணைத்துக்கட்டிய தோழர். ஜீவாவின் மறைவுக்காக. மற்றொன்று, தன் மாமனார் அன்னசாமி படுகொலை செய்யப்பட்ட துக்கத்துக்காக. அன்னசாமி தன் மாமனார் என்பதால் அல்ல. தோழரின் துக்கம். ‘மருதன் வாழ்வு’ கிராம மக்களின் முன்னேற்றதுக்குப் பாடுபட்ட ஒரு கம்யூனிஸ்ட் தோழரின் மரணம் என்பதற்காக.

தலித் மக்களின் விடுதலைக்காக பாடுபட்ட அன்னசாமி கொலை செய்யப்பட்டபோது தோழர், அப்பழி தலித் மக்கள் மீது திசை திருப்ப ஆதிக்க சாதிகள் செய்திருக்கும் சதியோ என கலவரத்தை மக்கள் நேசனாக இருந்து கையாண்ட விதம் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியது.

சொந்த சாதி அபிமானத்தை எவனொருவன் துறக்கிறானோ அவனே முழுமையான மனிதன் என்பதற்கு ஒப்ப, தோழரின் அப்போதைய நடவடிக்கையை மெய்சிலிர்க்க இன்றும் தோழர்கள் விவரிப்பது மகிழ்ச்சியல்ல. பாடம்.

ஒரு தலைவர் உருவாகுவதற்கு சூழல் அமைய வேண்டும் என்பார்கள். சூழல் என்றால் தலைவனின் சூழல் அல்ல. தலைமை தாங்கும் தேவை ஏற்படும் சூழல். தோழருக்கு அப்படியான சூழல் வாய்த்திருக்கிறது. தோழர் பிறந்த ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு வித்தியாசமான கோட்டை இருக்கிறது. அந்தக் கோட்டையின் சுற்றளவு சுமார் 450 அடியும், உயரத்தின் அளவு 10 அடியும் கொண்டது. கோட்டை என்றால் கல் கோட்டை அல்ல. மண்கோட்டை.

அந்தக் கோட்டைக்குள்தான் கோட்டைப் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தப் பெண்கள் வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்டுக்கொருமுறை கோட்டையில் ஏற்படும் பழுதை, கோட்டைக்கு வெளியே வாழும் தலித் மக்கள் செய்திருக்கிறார்கள். கோட்டைக்குள் வாழும் பெண்களை வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சந்திக்கலாம். ஆனால், ஆண்கள் சந்திக்க இயலாது. அத்தனை இறுக்கமான சூழ்நிலையை மூன்று நூற்றாண்டுகள் எதிர்கொண்டு கடந்ததற்கு பிறகுதான் பாலதண்டாயுதமும் ப.மாணிக்கமும் நெல்லைச் சீமையில் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு வித்திட்டதாக எழுத்தாளர். பொன்னீலன் தம் கட்டுரையில் தெரிவிக்கிறார்.

விவசாய இயக்கம் வேர்பிடித்து கோட்டைப் பிள்ளைமாரின் நஞ்சை நிலங்களில் கூலி வேலை செய்த தலித் தொழிலாளர்களின் எழுச்சிமிக்கப் போராட்டத்திற்கு தலைமை தாங்கியதே தோழரின் முதல் பாய்ச்சல். பிறகு, எண்ணிலடங்கா போராட்ட நாள்கள். எடுத்துச் சொல்ல இயலா கடுச்சிறைக் கனவுகள்.

ஒரு கம்யூனிஸ்ட் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை. ஆனால், கட்சிக்காக கட்சி விரும்பி விழா எடுத்தால் தன் பிற்நத நாளை மக்கள் நாளாக கொண்டாட மறுப்பதில்லை. அப்படித்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழருக்காக 80ஆவது பிறந்த நாள் விழா எடுத்தது. ஒரு கோடி ரூபாயை வசூலித்து அவரது சேவைக்கான தியாகத்துக்கான மரியாதையைச் செலுத்த விரும்பியது. மேடையில் யாருக்கோ விழா எடுப்பது போல அமர்ந்திருந்த தோழர், பேச வருகையில் அத்தொகையை கட்சி நிதிக்காக திரும்ப அளித்தது, இன்னொரு ஜீவாவை அடையாளம் காண உதவியது.

இன்றும் கட்சி தருகிற சொற்ப ஊதியத்தில் தன் தேவைகளைப் சுருக்கிக்கொண்டு மக்களக்காக பாடுபட்டு வருகிறார். மனப்பாறையில் ஒருமுறை ஆடம்பர மேடையிட்டு பேசுவதற்கு தோழரை அழைத்த போது ‘நாட்டு கஷ்டத்தை இத்தனை அலங்கார விளக்குப் போட்டா பேசுவது’ என கோபித்துக் கொண்டிருக்கிறார்.

அரசியல் வியாபாரிகள் அதிகரித்து வருகிற நிலையில், நாளைக்கு ஒரு கட்சி, நொடிக்கொரு தலைவன் தேர்தல் வேட்டைக்குத் தயாராகிற கேவலத்துக்கிடையேயும் தோழர் தன் மக்களுக்காக சுழற்றத் தொடங்கிய சக்கரத்தை நிறுத்தாமல் இயங்கி வருகிறார். சாதியின் பேரால் மதத்தின் பேரால் அணு உலை ஒப்பந்தத்தின் பேரால் இன்னும் நீண்டுக்கொண்டு போகும் முடிவில்லாத வேதனைகளிலிருந்து மக்களை விடுவிக்க ஓயாதிருக்கிறார்.

புரட்சிகர முழுக்கங்கள், வெறும் இரத்தத்தை உசுப்பேத்தி ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்துன அல்ல. தோழர், போல எளிமையும் வலிமையும் இணைந்த இடையறாதச் செயல்பாட்டின் குவிமையம். அம்பேத்கர் விருதை தோழர் பெறும் அந்நாளில் விழாவின் ஓரத்தில் அல்லது தூரத்தில் இருந்து மேலும் ஒரு தோழர் இயக்கத்திற்குக் கிடைப்பார். கைதட்டல்கள் ஓய்ந்து கட்சி அலுவலத்தை நோக்கி தோழர் திரும்பும் போது அவர் முகம் வாடியிருக்கும், அந்த வாட்டம் மக்களின் நிரந்தர இருட்டை வெல்லத் துடிக்கும் சிவப்பின் வாட்டம்.

ஒரு சமூகத்தின் தேவை உணர்ந்து செயலுக்காக தன் வாழ்நாளின் மொத்தமும் இழந்த தோழரின் ஒரு வெளீர் சிரிப்புக்கு ஈடாகுமோ விருதுகளும் மாலைகளும், வேறு எப்படித்தான் இந்த விருதுகளும் பெருமை பெறுவது?

Advertisements

Posted in அரசியல், கட்டுரைகள் | குறிச்சொல்லிடப்பட்டது: , | 4 Comments »