யுகபாரதி

பார்வதி என்றொரு பெண்

Posted by யுகபாரதி மேல் ஜூலை 29, 2009

1.
பார்வதி என்றொரு பெண்
என் பக்கத்து இருக்கையில்
வந்தமர்ந்தாள்.
பேரைக் கேட்கப்போக
பிரியமாகிவிட்டது
வயது கூடத்தான் அதனாலென்ன?
பேச்சில் வசீகரம் தொடர
பேசிக்கொண்டே வந்தவந்தவள்
அவளுக்கான நிறுத்தம் வந்ததும்
இறங்கிக்கொண்டாள்
 
பெண்கள் நிறுத்தம் வந்ததும்
இறங்கிக்கொள்கிறார்கள்
ஆண்களின் அவஸ்தைகள்
அங்கிருந்து தொடங்கிவிடுகிறது
 
2.
அவர் ஜவுளிக்கடைக்கு
முதலாளியாயிருந்தார்
நல்ல கவிதைகள் செய்பவராகவும்
சொல்லப்பட்டார்
எழுதும் போது அவர் முதலாளியாய்
இல்லாமல் இருந்தது
கவனிக்கப்பட வேண்டிய அம்சமில்லையா
முதலாளிகள் கவிதை எழுதலாம்
கவிதை எழுதுபவர்கள்
முதலாளியாக முடியாதுண்ணே
 
3.
நேசிப்பதற்கான
காரணங்களை பட்டியலிடுகிறவர்களை
நான் நேசிப்பதில்லை
நேசத்தைப் பட்டியலுக்குள்
அடைக்க அல்ல அடக்கத் துடிப்பவர்கள்
பின்வருங்காலங்களில்
பட்டியலுக்காக நேசத்தையும்
அடக்கம் செய்துவிடுவார்கள்
 
4.
உன் வருத்தங்கள் நியாயமானவை
ஆனாலும் என்ன செய்ய?
உன் பிரியங்களும் அப்படியே
ஆனாலும் என்ன செய்ய?
நமக்கிடையே பரிந்து பரிந்து
பரிமாறிக்கொள்ளும் இந்தப் பிரியங்கள்
நியாயத்திற்கு புறம்பானவை
ஆனாலும் என்னதான் செய்ய?
 
5.
வெளிப்படையான உறவில்
ஏற்பட்டுவிடுகிற ரகசியம்
வெளிப்படத் தொடங்குகையில்
உறவு தலைகுனிந்து கொள்கிறது.
கொச்சையான உறவில்
ரகசியத்தைக் காட்டிலும்
ரசனை மிகுந்திருக்கிறது
தெரிந்து சொல்வேன்
ஒரு ரகசியமும் இல்லாத வாழ்க்கை
வாழ்க்கையே இல்லை
 
6.
என் கவிதைகள் உங்களுக்கு
எதுவும் தரப்போவதில்லை
பிறகேன் படிக்க வேண்டுமென்று
கோபமுற்று வீசிவிடாதீர்கள்
என் கவிதைகள் உங்களை
எனக்குத் தந்திருக்கிறது
யாரோ ஒருவருக்காவது
பயனளிக்கும் கவிதைகள் பாசாற்றவை
 
7.
மேகத்தை விட அழகான
பூக்களைவிட இயல்பான
ஊசியைவிட கூர்மையான
ஒரு பகல் பொழுதில்
நாம் சந்தித்துக்கொண்டோம்
தேநீர்க் கடையிலிருந்து திரும்பிய
ஒருவனைப் போல நான்
உற்சாகமடைந்தேன்
ஒரு மதுவின் ருசியைப் போல என்று
எழுதும் நிலையை
ஏற்படுத்திவிடாதே
 
8.
அமலாவும் கேட்கிறாள்
நீ ஏன் ஒருத்தியைக் கூடக்
காதலிக்கவில்லையென்று
என்னை கடந்துபோன ஒவ்வொருத்தியும்
இவ்வாறாக கேட்டவிட்ட போனபிறகு
நான் யாரைக் காதலிப்பது யமுனா?
 
9.
மீண்டும் அதே கடைக்குப் போய்
உணவருந்தினேன்.
முந்தைய நாள் ருசி இல்லை.
ஒருநாளின் ருசி
மறுநாளும் தொடரும் என்பதுபோன்ற
அபத்தம் எதுவுமில்லை.
மோசமானதும் ருசியென்று அறிய
பக்குவம் தேவை

10.
ஒரு நல்ல மனிதரை
அடையாளம் கண்டு பழகுவதற்குள்
அவருடைய நட்பு முறிந்துவிடுகிறது
 
அவர் ஏன் என்னை
நல்ல மனிதராக கருதவில்லை என   யோசித்து
இருந்த ஒரு நல்லவரையும் அல்லது
தெரிந்த ஒரு நல்லவரையும்
நான் கொன்று விடுகிறேன்.
 
11.
நான் பெண்களை மோசமானவர்களாகக்
கருதுவது, அவர்களின் நடத்தையினால் அல்ல
அன்பினால்
 
அன்பினால்  எல்லா மோசத்தையும்
செய்துவிடுகிறார்கள்
சமயத்தில் மோசத்தையே அன்பாகவும்

Advertisements

4 பதில்கள் to “பார்வதி என்றொரு பெண்”

 1. கவிஞர் திரு.யுகபாரதி அவர்களுக்கு வணக்கம். உங்க புத்தக கவிதைகளை விட
  பாடல் வரி கவிதைகளை நிறைய கேட்டும் வாசித்தும் ரசித்திருக்கும் ரசிகர்களில் ஒருவன்.

  உங்கள் ரசிகர்கழுக்காக வலைப்பூ தொடங்கியமைக்கு முதல் நன்றி.

  நேற்று ஜூலை 29 தான் முதலில் உங்களுடைய வலைபூவினை தொடங்கி இருப்பீர்கள் என்று நினைக்கிறான்
  சில மாதங்களுக்கு முன்பே உங்களின் சிவப்பதிகார பாட வரியான,

  அற்றை திங்கள் வானிடம்
  அல்லிச் செண்டோ நீரிடம்
  சுற்றும் தென்றல் பூவிடம்
  சொக்கும் ராகம் யாழிடம்

  கேட்ட மயக்கத்தில் உங்கள் வலைப்பூ ஏதும் உள்ளதா என தேடி வெகு நாட்களுக்கு பிறகு
  அழுவலக [ இது கணினி மென்பொருள் தயாரிப்பு சார்புடையது ] நண்பன் தேடுதலின் வெற்றியில் நேற்றுத்தான் உங்களின் முதல் பதிவினை நான், மற்றும் பதிவினை மேயும் பழக்கம் உள்ள சில நண்பர்கள் வாசித்தோம்.

  பல யோசனைக்கு பின்பு இதை பின்னூட்டம் இடுகிறேன்.

  முதல் பதிவே அலுவலக ஓய்வறையில் கார சார
  கவிதை மோதலில் இழுத்து விட்டது. இதில் ஒரு சந்தோசம் இலக்கிய சண்டை இஞ்சினியர்களிடம்.

  பார்வதி என்றொரு பெண் என்ற தலைப்பில் இவ்வாறு ஆரம்பிக்கும் உங்கள் வரிகள்

  பார்வதி என்றொரு பெண்
  என் பக்கத்து இருக்கையில்
  வந்தமர்ந்தாள்.

  உடனே இது கவிதையா என்றொரு குரல். என்ன இது, பார்வதி என்றொரு பெண் என் பக்கத்து இருக்கையில் வந்தமர்ந்தாள்.

  மச்சான் நேத்து தொடர்வண்டி பயணம் எப்படி என்ற கேள்விக்கு தொடங்கும் பத்தி போல உள்ளது என்று ஒரு கருத்து.
  இன்னொருவர், இல்ல நீங்க முழுவதும் வாசித்து கருத்து சொல்லுங்க என்றார்.

  பின்பு அவர் கவிதை பற்றி ஒன்று சொல்ல. மற்றொருவர் ஒன்று, என கிட்ட தட்ட 1 மணி நேர மோதல்.

  இதில் அனைவருமே எங்கோ ஒரு நாள் ஒருகவிதை வசிப்பதும், கிறுக்குவதுமான உறவு மட்டுமே கவிதையுடன் வைத்திருப்போர்.

  மோதலின் மையம் கவிதை என்பது எப்படி இருக்க வேண்டும். வாசிப்பவன் தயார் நிலை என்ன என்பது தான்.

  புது கவிதை, ஹைக்கூ கவிதை போல உரைநடை பாணி கவிதை என்றும் உள்ளது என்பது என் கருத்து.

  பார்வதி என்றொரு பெண் அதை சார்ந்து போல உள்ளது என நினைக்கிறேன்.

  விமர்சனங்களை நான் அன்போடு ஏற்று அதைப்பற்றி கவலையுறாமல் தூங்கிவிடுவேன்., என்ற வரியை படித்தேன், அதனால் அதை உண்மையாக்கி தூங்கிவிடாமல் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

  [*எழுத்துபிழைகளுக்கு மன்னிக்கவும்]

 2. யுகபாரதி said

  ஒரு கவிதை எப்படியும் இருக்கலாம்.ஆனால்,அது கவிதையாக இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும்.எனக்கு கவிதையாக
  இல்லாத அல்லது தோன்றாத விஷயம் உங்களுக்கு கவிதையாகப் படக்கூடும்.கவிதையின் சுருதியும் சுவாரஸ்யமும் அவரவர்
  மனம் சார்ந்தது என்பதால்தான் கவிதைகள் காலந்தோறும் வந்துகொண்டே இருக்கின்றன.காலத்தின் புள்ளியில் கவிதைகளின்
  சுழற்சி இடது பக்கத்திலா?வலது பக்கத்திலா? என்று யோசித்துக் கொண்டிருப்பதால் என்ன பயன்? பிடித்தால் நன்று.பிடிக்காவிட்டால் அதுவும் நன்றுதான்.

 3. குணா said

  உங்கள் பக்குவமான, தெளிவான பதிலுக்கு நன்றி.
  விருப்பம் மனிதனுக்கு மனிதன் மாறுபடும் என்பது போல தான், எழுதும் எழுத்தும், வாசிக்கும் எழுத்தும்.

  நண்பர்களுக்கு ஒரு தெளிவை கொடுக்கும் என நம்புகிறேன்.
  🙂

 4. vennila said

  Nitchayamaha,
  kavithai eluthubavargal muthalali akave mudiyathu
  Mudiyave mudiyathu.
  Vennila…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: