யுகபாரதி

Archive for ஓகஸ்ட், 2009

உணவகம்

Posted by யுகபாரதி மேல் ஓகஸ்ட் 24, 2009

1

அசைவ உணவகத்தில்
எக்ஸ்ட்ரா வாங்காதவன்
தலித்தாக நடத்தப்படுகிறான்

மெல்லிய போதையோடு
வருகிறவர்களுக்கு
ராஜ மரியாதை

ஒரே ஒரு ஆம்லேட்டு
என்றதும் முகம் சுருங்கி
யாருக்கோ வைப்பது போல
வைத்துவிட்டுப் போகிறவனுக்குத்
தெரியாது

நான் வேறொரு உணவகத்தில்
கோப்பை கழுவியன் என்று

2.
சைவத்திற்குப் பேர்போன
உணவகத்தில்
நிரம்பி வழிகிறது கூட்டம்

நிற்க இடமில்லாமல்
அபகரிக்கத் துடிக்கிறார்கள்
ஒருவர் இருக்கையை
மற்றொருவர்

சொந்தக்காசில்
உண்பவனாயிருந்தாலும்
சுவைத்து உண்ண முடியா
இப்பெருநகரத்தில்
எல்லாம் வயிற்றுக்கென்ற்
எப்படிச் சொல்வது?

3.

நான்குபேர் ஒன்றிணைந்து
உணவகத்தில் நுழைய
மூவர் மகிழ்ச்சியோடு
திரும்ப நேர்ந்தால்
நாலவது நபரே
பணம் செலுத்தியதென்று
சொல்லாமலேயே
தெரிந்து கொள்ளலாம்

4

எந்த உணவகத்தில்
எது சிறப்பென்று
சிலருக்குத் தெரிந்திருக்கிறது

எல்லா உணவகத்திலும்
ஏதோ ஒன்று சிறப்பென்று
நினைத்து நுழைகிறான்
மாதச் சம்பளக்காரன்

5

கை நீட்டினாலே
தண்ணீர் வருமென்கிறார்கள்
கழுவப்படும் ஒவ்வொரு கையும்
எங்கோ ஒரு இடத்தில்
நீட்டப்பட்டதை
நினைவூட்டும் விதமாக

6

கையேந்தி பவனிலிருந்து
காஸ்ட்லி உணவகம் வரை
நல்லதைத் தீர்மானிப்பது
நாக்குதான்.

வாக்குத் தவறினாலும்
நாக்குத் தவறுவதிலலை

நாக்கை வைத்துத்தான்
நடகின்றன
அரசியலும் உணவகமும்.

7

மேலாளரும்
மேசை துடைப்பவனும்
ஒரே வயிற்றுக்காத்தான்
உழைக்கிறார்கள்

ஆயும் மகனும் ஒன்றானாலும்
வாயும் வயிறும் வேறு என்பதை
விளங்கிக் கொண்டவர்கள்
முதலாளியாக முடிவதில்லை

8

இருட்டாகவும்
தொங்குகிற விளக்கோடும்
ஒளிருகின்ற
நட்சத்திர உணவகத்தில்

எதை எதையோ கேட்கிறார்கள்
நுனிநாக்கு ஆங்கிலத்தில்

முதல் தலைமுறையில்
படித்த ஒருவன்
தனது முப்பாட்டனைத்
திட்டத் தொடங்குகிறான்
கெட்ட வார்த்தையுல்

9

சிங்கப்பூர் சிராங்கூன் வீதியில்
ஒரு தஞ்சாவூர்க்காரன்
புளிசோறு கிடைக்குமா என்றான்
சோழவள நாடு
சொறுடைத்து

10

வீட்டில்
சாப்பிடும்போது
பேசாதே என்பாள் அம்மா
பேசிக்கொண்டே சாப்பிட்டால்
செரிக்காது எனவும்

உணவகத்தில்
சாப்பிட்டப் பிறகு பேசுகிறோம்
விலை அதிகம் என்று

Advertisements

Posted in கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: | 5 Comments »