யுகபாரதி

சொல்வெட்டு

Posted by யுகபாரதி மேல் ஓகஸ்ட் 1, 2009

காற்றுக்குக் காலமில்லை. நேற்று இன்று நாளை எனும் பகுப்பும் பேதமும் அதற்குப் பொருந்தவே பொருந்தாது.
நேற்று அடித்த காற்றின் வலி நாளைய காயத்திற்கு மருந்தாகவும் மாறிப் போவதால் காற்று என்றென்றும் நமக்குள் மயக்கத்தைத் தோற்றுவிக்கும் மர்மமுடையது.
நினைவுகளைச் சுமந்த தேகம் போல பாடல்களைச் சுமக்கும் காற்றை விட்டால், நேற்றை நினைத்துப் பார்க்க நமக்கு வாய்ப்பில்லை. குறிப்பாகத் திரைப்பாடல்கள்.

ஒரு ராத்திரிக்குப்
பன்னிரண்டு
மணியா?

 

அது காதலுக்கும்
போதுமென்றால்
சரியா?

வெகுவாக நான் ரசித்த ஒரு திரைப் பாடலின் இடைவரி இது. இம்சை அரசன் 23-ம் புலிகேசி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘பஞ்சு மெத்தை கனியே’ பல்லவி தாங்கி வந்துள்ள பாடல். எழுதியவர் புலவர் புலமைப்பித்தன்.
எழுத்து லட்சணங்கள் பொருந்திய படைப்பாளிகள் எல்லா மொழியிலும்போல தமிழிலும் குறைவு. அதிலும் திரைப்பாடலாசிரியர்களில் எனக் கணக்கெடுத்தால் ஒரு சிலரே தேறுவார்கள்.
அவசர கதியில் இயற்றப்படுவதாலும், மொழி உணர்வு மிக்கவர்கள் அதைத் தீர்மானிக்கும் இடத்தில் இல்லாததாலும் இக்குறை நிகழ்வதாகக் கொண்டாலும், அதிலும் அளப்பரிய ஆக்கங்களைச் சிலரேனும் செய்திருக்கிறார்கள். அந்தச் சிலரில் புலவருக்கும் இடமுண்டு.ஐ.ஏ.எஸ் படித்துவிட்டு ப்யூன் வேலை செய்வதாக அவரே குறைபட்டுக் கொண்டாலும், அவரின் தமிழுக்குப் பல்கலைக்கழக அந்தஸ்துண்டு என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

புலவர்

புலவர்

சில பல வருடங்களுக்கு முன்பாக, என் பள்ளிப் பருவ நாட்களில் திரைப்பாடல் மீது அதீத ஆர்வங் கொண்டு அதிலேயே கரைந்த பொழுதுகளில் நாயகன் திரைப்படம் வெளிவந்தது.
அந்தத் திரைப்படத்திலுள்ள அத்தனை பாடல்களும் அத்தனை பேரையும் கவர்ந்தன. இசையும் வரிகளும் இயைந்த அழகோடு சூழலுக்குச் சற்றும் பிறழாதவாறு அமைந்திருக்கும்.

நீயொரு காதல்
சங்கீதம்
வாய்மொழி சொன்னால்
தெய்வீகம்.

விபச்சார விடுதியிலிருந்து நாயகனால் அழைத்துச் செல்லப்படும் நாயகிக்காக எழுதப் பட்ட வரிகள் இவை. காதலின் உச்சபட்ச சாத்திய மொழியாக எழுதப்பட்டது. தெய்வீகம் என்ற சொல், சொல்லாக அல்லாமல் சூட்சமம் நிரம்பிய ஒன்றின் வெளிப்பாடாக இருக்கிறது. ஆன்மீகத்தில் ஈடுபாடுடைய யாருமே தெய்வீக தரிசனத்தின் தேடலை உணருவர். ஆனால், புலவரோ நாத்திக வாதி. ஆனபோதும், அவரால் அவ்விதம் எழுத முடிந்ததற்குத் தமிழே காரணம்.

மணல் வெளி யாவும்
இருவரின் பாதம்
நடந்ததைக் காற்றே
மறைக்காதே

நவீன கவிதைகளிலும் கூட இத்தகு கம்பீரம் கிடைக்குமா? தெரியவில்லை. ஆனால், இசைக் கேற்ப எழுதப்பட்ட அந்த வரிகள் அகநானூற்று சாறை அகப்பையில் அள்ளியதுபோல இருக்கிறது.

பூவைச் சூட்டும்
கூந்தலில் ஏந்தன்
ஆவியை நீ ஏன்
சூட்டுகிறாய்…

 

தேனை எற்றும்
நிலவினில் கூட
தீயினை நீ ஏன்
ஊற்றுகிறாய்…

நாயகியிடம் நாயகன், பூவுக்குப் பதிலாக என் ஆவியைச் சூட்டுகிறாயே கூந்தலில் – எனக் கேட்கும் உவமை, வெறுமே திரைப்பாடல் சந்த நயத்திற்கு எழுதப்பட்டதாகத் தோன்றவில்லை. அந்த வரிகளுக்குப் பின்னே ஓர் இலக்கியச் சார்பு பொதிந்துள்ளது.

முருகிற் சிவந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் சூழல் மடவீர்!
செம்பொற் கபாடம் திறமினோ!

கலிங்கத்துப்பரணி கடை திறப்புப் பகுதியில் வரும் இவ்வுவமையே, மிக எளிய சொற்களில் சொல்லப்பட்டுள்ளது.
‘திரைப்பாடலுக்கு இலக்கிய அந்தஸ்து உண்டா?இல்லையா?’ என விவாதிக்கத் தேவை யில்லை. திரைப்பாடலும் இலக்கிய நயத்தை ஏற்படுத்தும் வகைகளைக் கைக்கொள்ளுகின்றன.
அதனால் ரசிகனுக்கு என்ன பயன்? எனக் கேட்கலாம் இலக்கியத்திலுள்ள நனி சிறந்த பகுதிகளை ஒரு சராசரிக்கும் கொண்டு சேர்க்க திரைப்பாடலால் மட்டுமே இன்றைய நாளில் இயலும். பயன் ரசிகனுக்கு நேராமல் போனால் கூட இலக்கியத்தின் தொடர்ச்சியை வெகுஜன ரசனைக்கு மாற்ற முடியுமே.

பதவிக்கு ஆசை வந்தால்
கொலை கூடத் தர்மம் தானே
வரலாற்றின் பக்கம் ஏல்லாம்
வழிகின்ற ரத்தம் சாட்சி

பாசங்கள் பந்தம் ஏல்லாம்
மனிதர்க்குத் தானடா!
பதவிக்கு வாழ்க்கைப் பட்டால்
அவையெல்லாம் ஏதடா?

‘நீதிக்குத் தண்டனை’ திரைப்படத்தில் ‘ஓ மனிதர்களே’ என்ற பாடலில் வந்த செய்தி இது. பதவி மோகத்தால் சொந்த சோதரர்களை வீழ்த்தும் நிலைக்குப் போன பல புராணக் கதைகள் நம்மிடம் உண்டு. நிகழ் அரசியல் காட்சியிலும் ஒரு கோரத்தை, கொப்பளிக்கும் மனிதத் துயரை வரலாற்றின் பக்கம் எல்லாம் வழிகின்ற ரத்தம் சாட்சி என வரைந்து காட்டுகிறார்.
இன்றைய தமிழ் இலக்கிய உலகில் அரசியலுக்கு இடமே இல்லை. அதாவது, அரசியல் விஷயங்களுக்கு எனப் புரிந்து கொள்ளவும்! குழு அரசியலில் ஒருவருக்கு ஒருவர் குடுமிப் பிடிக்கிறார்களே அன்றி, மக்கள் அரசியலில் கவனம் செலுத்த இயலவில்லை. அதிகபட்சமாக சுனாமி, தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களுக்குக் கவிதை புனைவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள் (கிறோம்).

 

திரைப்படங்களும் ரவுடிகளைக் கதை மாந்தர்களாகக் கொள்ளும் துர்பாக்கிய நிலையில் இருப்பதால், புரட்சிகர சிந்தனைகளுக்கோ போராட்ட முழக்கங்களுக்கோ வழியற்றுப் போகின்றன.
‘பாவேந்தரின் கவிதையிலுள்ள வேகமும் உணர்ச்சியும் புலவர் புலமைப்பித்தனிடம் காண்கிறேன்’ எனப் பேரறிஞர் அண்ணா ஒருமுறை கூறியதாகத் தகவல். அந்தத் தகவலை மெய்ப்பிக்கும் விதமாக, பல பாடல்களை யாத்துள்ளார். ‘கள்ளுக்கடை காசிலே தான்டா, கட்சிக் கொடி ஏறுது போடா’ போன்ற நறுக்கு வரிகள் தெறிக்கும் இவரிடம் நான் வசமிழந்த பாடல் ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்திலுள்ள,

பூமழை தூவி
வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கின்றது

எனும் பாடல். மேலோட்டமாகப் பார்த்தால், அண்ணன் தங்கைக்குப் பாடிய பாடல் போலத் தோன்றினாலும், அறிஞர் அண்ணாவுக்கு புலவர் எழுதியது போல இருக்கும்.
புகார் நகரிலிருந்து மறுபடியும் மதுரைக்குத் திரும்பிய கண்ணகியைப் பார்த்து, கோட்டை மதிற் சுவர்க்கொடி வராதே என அசைந்தது போல தற்குறிப்பேற்றி பாச்சுவையைக் கூட்டியது. இளங்கோவை நினைவூட்டும் முகமாக ‘பூ மழை தூவியிலும்’ ஒரு இடம்:
‘தங்கையின் கழுத்திலாடும் சங்கிலி என்ன பொருள் சொல்கிறதென்றால் அண்ணாவை மறவாதே எனும் பொருள்பட அசைகிறது’என்கிறார்.

வெண்சங்குக் கழுத்தோடு
பொன் மாலை அசைந்தாட
நான் கண்ட
பொருள் கூறவா? என்
அண்ணாவை ஒருநாளும்
என்னுள்ளம் மறவாது
என்றாடும் விதமல்லவா?

ரத்தினச் சுருக்கம் என்று தமிழில் ஒரு வசீகரிக்கும் சொல்லுண்டு. அந்தச் சொல்லுக்குப் பல உதாரணங்களை நம்முடைய இலக்கியத்திலிருந்தும் திரைப்பாடலில் இருந்தும் எடுத்துக் காட்டமுடியும்.
புலமைப்பித்தனின் இதர பாடல்களிலும் கூட இப்படியான அசாத்திய வர்ணனைகளை வியக்கலாம். சமூகப் பொறுப்புக்குச் சமூகம் செலுத்தும் மரியாதை இருக்கிறதே, அது கிடைக்கும் புகழை, பொருளை விடப் பெரிது.
நடப்பு அரசியலையும் நாட்டின் மீதுள்ள பற்றுதலையும் ஒரு பாடலிலாவது எழுத வேண்டியக் கட்டாயம் என் தலைமுறை பாடலாசிரியர்களுக்கு இருக்கிறது. பொத்தாம் பொதுவாக வெறும் காதலை மட்டுமே எழுதிக் கொண்டிராமல் வேறு வேறு கருத்துகளையும் சொல்ல வேண்டும்.
திரைப்பாடல் முழுமையும் திரைப்பாடலாசிரியன் ஒருவனால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை என்பதால் அனைவரும் இம்முயற்சிக்கு உறுதுணை புரிதல் ஊத்தமம்.
பாபநாசம் சிவன் தொடங்கி இன்று வரையுள்ள பல பாடலாசிரியர்களின் உழைப்பையும் நேர்த்தியான சுவைப் பதிவுகளாக்குவதே நேற்றைய காற்றின் அடிப்படை. இது, முழுக்க முழுக்கத் தனியொருவனின் சொல் முறைக்காக வகைப்படுத்தப்படுவதால் முன்னும் பின்னுமாக நகர்தல் தவிர்க்க முடியாதது.பாடலாசிரியர்கள் நினைத்தே செய்தது அல்லது நினைக்காமல் நெய்தது பலவும் ரசனையால் தொகுத்து இருக்கிறேன். நம்முடைய பழைய ஞாபகங்களைத் தூசி தட்டவும், பரண்களில் முடங்கிய சம்பவ அலமாரியை மீண்டும் எடுத்து அழகுற காட்சிக்கு வைக்கவும் இது உதவக்கூடும்.

(இக்கட்டுரை கல்கி வார இதழில் தொடராக வெளிவந்த நேற்றையக் காற்றுக்காக எழுதியது.இக்கட்டுரை வெளிவந்த உடன் புலவர் அவர்கள் என்னை நேரில் அழைத்து வாழ்த்தினார்.தான் யோசித்து எழுதிய நுட்பங்களைச் சரியான விதத்தில் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவனாவது புரிந்துகொண்டிருக்கிறானே என்னும் மகிழ்ச்சி என்றார்.அந்த வார்த்தைகளில் வெளிப்பட்ட நிறைவை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை.)

Advertisements

2 பதில்கள் to “சொல்வெட்டு”

  1. பகிர்வுக்கு நன்றி.
    அழகன் படத்தில் வரும் சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா பாடல் வரிகள் எனக்கு பிடிக்கும்

  2. நேற்றைய காற்று ஒரு அற்புதமான இலக்கிய அறிமுகம் பாரதி
    ஒரு கவிஞனால் மட்டுமே உணர முடிகிற பாடு பொருளை பாமரனும் உணர
    சொல்லும் எளிமை கண்ணதாசனுக்கு பிறகு உங்களிடம்தான் அலங்காரம் இல்லாமல் வெளிப்படுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: