யுகபாரதி

கருஞ்சட்டைத் தமிழர் – நேர்காணல்

Posted by யுகபாரதி மேல் ஓகஸ்ட் 11, 2009

கவிதை என்பது அறிவு சார்ந்தது இல்லை. உணர்வு சார்ந்தது.

பாரத நாடு

பழம் பெரும் நாடு

நாம் அதன் புதல்வர்

நாசமாய்ப் போவோம்”

– என எதார்த்தமான கவிதைகளோடு இலக்கிய உலகில்அறியப்படுகிறவர்.

‘பல்லாங்குழியின்
வட்டம் பார்த்தேன்
ஒற்றை நாணயம்.
புல்லாங்குழலின்
துளைகள் பார்த்தேன்
ஒற்றை நாணயம்”

– என்ற அறிமுகப்பாடலோடு சினிமாவுக்குள் நுழைந்த இவர், தமிழின் தனித்தன்மையோடும் அடையாளத்தோடும் அரசியலோடும் இயங்குபவர். இவரை ஒரு மாலை நேரத்தில் கருஞ்சட்டைத் தமிழர் இதழுக்காக சந்தித்தோம்.

கே : உங்களுக்கு கவிதை ஏன் எழுதணும்னு தோனுச்சு. முதல் கவிதை எப்போது எழுதீனீங்க…

ப : என்னுடைய குடும்ப சூழல்தான் என்னை கவிதை எழுத வைத்தது. என் அப்பா கம்யூனிஸ்ட் கட்சியிலே இருந்தார். வீட்ல எப்பவும் மனிதர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். தொடர்ந்து பேசி கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருப்பார்கள். தொடர்ந்து பேசிக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருப்பதை நேரடியாக அனுபவித்த சூழலில் அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தாலும், வீட்டின் மீது இருந்த செல்ல வெறுப்பாலும் கவிதைப் பக்கம் திரும்பிவிட்டேன். அப்போது, ஈழப்போராட்டத்திற்கான ஆதரவு தமிழகத்தில் தீவிரமாகி ஈழத்தைப் பற்றி பேசுவதும், ஈழத்தமிழர்கள் அதிகமாக இங்கு வந்து தஞ்சமடைவதும் இயல்பான தமிழ் அடையாளத்தை அரசியல் அமைப்புகள் கொண்டிருந்தன். எண்பதுகளின் பிற்பகுதி. அப்போது ஈழத்தைப் பற்றி ஒரு கவிதை எழுதினேன். அதை இன்னைக்கு கவிதைன்னு சொல்ல முடியாது. கவிதை மாதிரின்னு சொல்லாம்.

கே : உங்க கல்லூரி வாழ்க்கை கவிதை எழுதுவதற்க்கான தளமாக அமைந்ததா?

ப : பள்ளிக்கூடத்திலே படிக்கிறப்ப நிறைய கவிதைகள் அதாவது கவிதை மாதிரி எழுதியிருக்கேன். ஆனால் இப்போது கவிதைன்னு சொல்ல முடியாது. குடும்ப மலர், வாரமலரில் துணுக்குகள் மாதிரி அந்தக் கவிதைகள் பிரசுரமாயின.
ஞாயிற்றுக்கிழமைகளில் என்னுடைய நண்பர் கல்யாணராமன் வீட்டிற்கு வருவார். அவர் கோவிலில் குருக்களாக இருந்தார். அர்ச்சனைத் தட்டில் விழுகிற காசுகளை எடுத்து தஞ்சை ரயிலடியில் உண்மை, விடுதலை போன்ற பத்திரிகைகளை வாங்கிக் கொடுப்பார். அவர்தான் என்னை பெரியார் மையத்திற்கு அழைத்துச் சென்றார். வாழ்க்கை எவ்வளவு முரண்பாடாக இருக்கிறது? அவரிடம் நான் சாதி பார்க்கவோ, பார்ப்பான் என்று ஒதுங்கவோ முடியவில்லை.இயல்பான மனித சிநேகத்தோடு அவர் எனக்கு உதவினார்.
பார்ப்பனியத்தைதான் ஒதுக்கணுமே தவிர, பார்ப்பனர்களை இல்லைன்னு அப்போதுதான் நான் புரிந்து கொண்டேன்.
பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் வீட்டில் விரும்பினால் தமிழ்ப் படிக்க சொன்னார்கள். தமிழ் படித்தால் வேலைக் கிடைக்காது என்று அறந்தாங்கி பாலிடெக்னிக்கில் நானாகவே சேர்ந்தேன். கல்லூரியிலும் கவிதைகளைத்தான் எழுதினேன். கவிதை எழுதியதால் நிறைய மரியாதை, நண்பர்களும் கிடைத்தார்கள். பத்திரிகையிலும் தொடர்ந்து கவிதைகள் பிரசுரமாயின.
சரவணன் என்றொரு நண்பர்.அவர் தஞ்சை கரந்தை கல்லூரியில் படித்துவந்தார். அவர் எனக்கு இன்னொரு வகையில் பிரமிப்பைத் தந்தவர். அவருடைய அப்பா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். ஆனால் அவருக்கு திராவிடக் கொள்கைகளை விட கம்யூனிசம் அதிகம் பிடித்தது. ஆனால், எனக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளை விட திராவிட கட்சிகளைப் பிடித்தது. ஒரு விஷயத்தை அறிவுப்பூர்வமாக கம்யூனிஸ்ட் கட்சியில சொல்வாங்கன்னு சரவணன் சொல்வார். அதற்கு நான் ஒரு விஷயத்தை உணர்வுப் பூர்வமா திராவிட இயக்கங்கள்தான் அழகாக சொல்லும்மின்னு சொல்வேன்.

கே : ‘வணக்கம் காம்ரேட்’ என்ற உங்களின் கவிதைகம்யூனிஸ்ட்டுகளை தாக்குகிறது. உண்மையில் நீங்கள் அந்த கருத்தில் உடன்படுகிறீர்களா?

ப : கவிதையின் ஆகப்பெரும் பயன்பாடு குறித்து ஒரு படைப்பாளி எப்போதுமே சிந்திக்கக் கூடாது. கவிதை அல்லது கதை எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற முன்யோசனையோடு ஒரு படைப்பாளி எதுவும் எழுத முடியாதென்றே நினைக்கிறேன். அந்த கவிதை எழுதினபோது எனக்கு வயது 18. என் வீட்டில் இருந்த சூழ்நிலையைப் பார்த்தால் உங்களுக்கு புரிந்து இருக்கும்.
எங்கள் வீட்டு அடுப்பு அணையவே அணையாது. எப்போதும் வீட்டுக்கு யாராவது வந்துகொண்டே இருப்பார்கள். காபி, சாப்பாடு என்று ஏதோ ஒன்றை தயாரித்துக் கொண்டே அம்மாவிற்கு பொழுது ஓடிவிடும். எனக்கு புரட்சி மீது எந்த விதமான கோபமோ, விரக்தியோ கிடையாது. எப்போது பார்த்தாலும் அம்மா அடுப்படியிலே இருக்கிற ஆதங்கம்தான் என்னைக் கேள்வி கேட்க வைத்தது.என்னுடைய உலகத்தை நான் என் வீட்டிலிருந்து பார்க்கிறேன். உலகம் முழுவதையும் வீடாக பார்க்கிற மனநிலை எனக்கு அப்போது வரவில்லை. திடீரென்று சில தோழர்கள் வீட்டுக்கு வந்து பத்தாம் தேதி திண்டிவனத்தில் செயற்குழுக் கூட்டம் என்று சொல்லிவிட்டுப் போவார்கள். ஒன்பதாம் தேதி அம்மாவின் ஏதோ ஒரு நகை அடகு கடைக்கு போய்விடும்.
அப்பா முழுநேர கட்சி ஊழியராக இருந்தார். அதற்காக கட்சி கொடுக்கிற பணத்தையும் வாங்கமாட்டார். தார்மீக ஆசையோடுதான் ஈடுபட்டார். ஆனால் அவர் ஊதாரியோ, குடிகாரரோ இல்லை. மக்களை நேசிக்கிறார். அதனால் வேலைக்கு ஏன் செல்லவில்லை என்று கேள்வி கேட்கவும் எங்களுக்கு துணிவு இல்லை.
வீட்டில் நானும், என் தம்பியும் படித்து கொண்டிருந்த நேரம். பரிட்சைக்கு பணம் கட்டணும்னு கேட்டால் நாளைக்கு போஸ்டர் வாங்க முந்நூறு ரூபாய்தான் இருக்கிறது என்பார். பரிட்சை முக்கியமா, போஸ்டர் முக்கியமா என்றால் புரட்சி வந்துவிட்டால் இந்த கல்விமுறையெல்லாம் இருக்காது என்பார். இதைத்தான் கவிதையாக எழுதினேன். பக்கத்து வீட்டு தாத்தா இயேசு வருகிறார். இயேசு வருகிறார் என்பது போல புரட்சி வருகிறது, புரட்சி வருகிறது என்கிறீர்களே என்று எழுதினேன்.யதார்த்தம் அவருக்கும் எனக்கும் ஒரு கவிதையாக சிண்டுமுடிந்துவிட்டது. மற்றபடி கம்யூனிஸ்டுகளை நான் எங்கும் எப்போதும் தாக்குகிறவன் இல்லை.அந்தக் கவிதை தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அப்பாவை கட்சியில் இருந்து விலக்கி வைக்கிற சூழ்நிலையை உருவாக்கும் என்று நான் நினைக்கவில்லை. அப்பா என்னிடம் அந்தக் கவிதையைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. கவிதை எழுதுவது அவனின் விருப்பம். அது கருத்து சுதந்திரம் சார்ந்தது, அதே நேரம் கட்சியின் சார்பில் இந்தப் புத்தகத்தை எரிக்க வேண்டும் என்றால் நான் கூட வருவேன் என்றார்.
இப்படிப்பட்ட அப்பாவைப் பார்த்த பிறகு மார்க்சியத்தின் மீது எப்படி வெறுப்பு வரும்? என் வீட்டுச் சூழலை எப்படி கூறாமல் இருக்க முடியும்? எந்தவித பிரச்சார தொனியும் இல்லாமல் அந்த நேரத்து மொழி பயிற்சியோடு எழுதி இருந்தேன்.

கே : அரசியல் கவிதையில் பிரச்சாரம் மிகுந்து கலைத்தன்மை குறைந்து விடுகிறதே?

ப : உரைநடையை விட தமிழ்க் கவிதைக்கான மரபு நீண்ட நெடியது. உரைநடை மரபு வெறும் நூறு ஆண்டுகளுக்குள்தான் இருக்கும்.கவிதை என்பது நமக்கு மூத்த வடிவம். கவிதை எழுதுவதற்கான மனநிலை என்பதெல்லாம் இல்லை. எனக்குள் அரசியல் இருந்ததால் அரசியல் ரீதியான கவிதைகளை எழுதினேன். எனக்கு அரசியல் இல்லை என்றால் அகவயப்பட்ட கவிதைகளை, தன்வயப்பட்ட கவிதைகளை எழுதி இருப்பேன். கவிதைக்கும் பிரச்சாரத்திற்கும் மெல்லிய இடைவெளி உண்டு. இதை பாரதியிடமும், பாரதிதாசனிடமும் பார்க்கலாம்.

கே : பொதுவா நவீன கவிதைகள் புரியவில்லை என்று குற்றச்சாட்டு இருக்கிறதே…

ப : கவிதை இரண்டு வகையாகச் செயல்படுகிறது. அதில் வெளிப்படையாகவும், நேரடியாகவும் செயல்படுகிற வகை ஒன்று. இன்னொன்று இருண்மை வகை. இருண்மை அறிவுத் தளத்தில் வாசகனை செயல்பட வைக்கிறது. அது புரியாத வாக்கிய அமைப்புகளைக் கொண்டதாக பலரும் கருதுகிறார்கள்.கோணங்கி எழுத்துக்கள் அப்படித்தான் இருக்கும். அதை தொடர்ச்சியாக படிப்பதன் மூலம் அந்த தடையை நீக்கிக் கொள்ளலாம். அந்த எழுத்துக்களை ஊன்றிப் படித்தால் தமிழின் தொன்மங்கள் விளங்கும். எதையும் படித்துவுடன் புரியவேண்டும் என்ற வாசிப்புச் சோம்பலை உற்சாகப்படுத்தக்கூடாது.மேலும்,அவ்வகை எழுத்துக்களே இலக்கியத்தின் அடித்தடுத்த கட்டங்களுக்கு நம்மை இட்டு செல்லும்.

கே : மொழி பெயர்ப்பு கவிதைகளுக்கான இடம் எது?

ப : மொழி பெயர்ப்புக் கவிதைகளில் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு பெயர்க்கும் போது அந்த மொழிக்கான தனித்தன்மையும், அடையாளமும் தொலைந்துவிடும் அபாயம் உண்டு. சாராயம் என்ற சொல்லை லிக்கர் என்று பெயர்த்தால் அது சாராயம் என்றுதான் இன்னொரு மொழியில் பொருள்படுமா? ஒவ்வொரு பொருளுக்கும் தமிழில் தனித்தன்மையும் பண்பும் உண்டு. ஒரு வட்டார இலக்கியக்கியத்தை மொழிபெயர்ப்பதில் உள்ள சிக்கல் என் கவிதைகளை மலையாளத்தில் பெயர்க்கும் போது நேர்ந்தது.உலக சமாதானம், காமம், காதல் இவைகளைப் பற்றி கவிதைகளின் மொழிப் பெயர்க்கலால் அதாவது பொதுவானவற்றை மொழிபெயர்க்கலாம்.நான் தமிழ் கவிஞன் என்ற வட்டத்தோடு நின்றுகொள்வதை பெருமையாகக் கருதுகிறேன்.

கே : கவிதைகள் மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, நவீனக் கவிதை என்று வடிவங்கள் மாறுகின்றன. எதிர் காலத்தில் என்ன வடிவம் ஏற்படும்?

ப : தொல்காப்பியத்திலிருந்து நமக்கு ஒரு அணுகுமுறை அறிமுகமாகிறது. நாம் கவிதையை செய்ய முடியாது. அது ஒன்றும் கணக்கல்ல. கவிதை என்பது அறிவு சார்ந்தது இல்லை. உணர்வு சார்ந்தது. எழுதுவதுதான் கவிதை. தொல்காப்பியத்தில் உலகம் என்பது உய்ந்தோர் மாட்டே என்றொரு நூற்பா இருக்கிறது. இன்றைக்கு இது பொருந்தாது. இன்று விளிம்பு நிலை மக்களால் உலகம் நிறைந்து இருக்கிறது. காலத்தோடு கவிதை மாறிக் கொண்டே இருக்கும். மாறிக்கொண்டே இருந்தால்தான் கவிதை.

கே : இன்றைக்கு கவிஞர்களின் நிலை என்னவாக இருக்கிறது?

ப : பொதுவாக கவிதை எழுதுகின்றவனே விமர்சனமும் செய்கின்ற கேடு கெட்ட சூழ்நிலை இருக்கிறது. உலகமயமாக்கலுக்குப் பின் நுகர்வுக் கலாச்சாரம்தான் பிரதானம் என்றாகிவிட்டது. சந்தையில் என் சரக்கு நல்லது. எதிரியின் பொருள் நல்லது இல்லை என்று சொல்ல வேண்டியிருக்கிறது. இது தேவையில்லாத வேலையாகவும் இருக்கிறது. இதையே கவிதையிலும் இலக்கியத்திலும் விமர்சனம் என்ற பெயரில் செய்துவருகிறார்கள்.கவிஞர்களின் மனோபாவம் விற்பனையை முன்வைத்து விளம்பரத்தை முன்வைத்து என்ற துர்பாக்கிய நிலைமைதான்.

கே : கவிதை எழுதுகிற மனநிலை என்பது…

ப : கவிதை எழுதுவது மனநிலை சார்ந்தது இல்லை. அவசியம் சார்ந்தது. ஒரு மனநிலைக்கு ஆட்பட்டு காத்து கிடப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை. ஒரு அழகான குளிரூட்டப்பட்ட அறையில் ஊதுபத்தி வாசனையில் கவிதை வராது. தன்னியியல்பான அந்த தருணத்தை எதிர்பார்த்து ஷண நேரத்தில் எழுதுபவனே கவிஞன். அந்த தருணம்தான் மனித வாழ்க்கையில் உள்ளார்ந்தது. அந்த தருணம்தான் வாழ்க்கை முழுவதும் கவிஞன் என்று சொல்ல வைக்கிறது.
கவிதை எழுதுவது என்பது பயிற்சி. அது கடவுள் கொடுத்த வரம் இல்லை. தொடர்ச்சியான பயிற்சியின் மூலமே கவிதை எழுதமுடியும் என நம்புகிறேன். பொதுவாக இறைவன் அருள் பாலிப்பதால் மட்டுமே கவிதை வரும் என்றும் அதே நேரம் பள்ளனுக்கும், பறையனுக்கும் கவிதை வராது என்றும் சில வெந்தாடி கவிச்சித்தர்கள் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.அது,அவர்களின் அரசியல் அவ்வளவே.

கே : கவிதை, உரைநடை இதில் வசதியாக எதில் செயல்படமுடியும்?

ப : சுருக்கமாகவும், மொழியின் லாவகத்தோடும் சொல்வது கவிதை. இதில் சில படிமங்கள், திரும்ப திரும்ப வரும். வெயிலை எல்லா மாதிரியாகவும் தனது படைப்புகளில் எஸ்.ராமகிருஷ்ணன் தொடர்ச்சியாக பயன்படுத்துவார். தி.ஜானகிராமன் அக்கரஹாரத்து பெண்களின் வாளிப்பை அடிக்கடி பயன்படுத்துவார். உரைநடையிலும் கவிதை மனநிலையோடு காட்சிப் படிமங்களை உருவாக்க முடியும். கவிதை என்றால் என்ன என்ற கேள்விக்கு மொழியின் புத்திசாலித்தனம் என்று இயக்குநர் அகத்தியன் சொல்வார். மிகக் கவனமாகவும், காத்திரமாகவும் கவிதையைப் பயன்படுத்த முடியும். அலட்சியமாக பயன்படுத்த உரைநடை உதவக்கூடும். நான் அலட்சியம் என்பதை சரியாக உரைநடைக்காரர்கள் புரிந்துகொள்வார்கள்..

கே : கவிதைப் புத்தகம் வெளியிடுவது, கவிதை எழுதுவதுசினிமாவுக்கு விசிட்டிங் கார்டு மாதிரி என்ற விமர்சனம் உள்ளதே?

ப : இதைப் பற்றி எனக்கு எந்த விமர்சனமும் இல்லை. எந்த காழ்ப்பும் இல்லை. இதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை. ஒரு முந்நூறு பேர் படிக்கும் சிறுபத்திரிகையில் வருவதைவிட மூவாயிரம் பேர் பார்க்கக் கூடிய சினிமாவில் எழுதுவது சிறந்தது. எல்லாருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை என்றாலும், ஒரு ஜவுளிக்கடைக்காரர் கவிதை எழுதுவதும், ஒரு தண்டல்காரர் கவிதை எழுதுவதும் சரியென்று படும்போது ஏன், சினிமாத்துறையைச் சேர்ந்த ஒருவர் அல்லது சேர விரும்பும் ஒருவர் கவிதை எழுதக்கூடாது.ஏன், யார், எதற்கு எப்படி செய்ய வேண்டும் என்று எல்லாக் காலத்திலும் சில குடுமி வைத்தவர்கள் குதர்க்கமாக விமர்சனம் செய்து கொண்டே இருக்கிறார்கள். அதை பொருட்படுத்த வேண்டியதில்லை. ஒரு நல்ல கவிதையை தன் வாழ்நாளிற்குள் ஒரு மனிதன் எழுதிவிட முடியும் என்ற நம்பிக்கை உடைய யாரும் கவிதை எழுதலாம். காலம் கடந்து கவிதை நிற்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. காலமே கடந்த பிறகு கவிதை எதற்காக நிற்க வேண்டும்? காலத்தோடு ஒட்டி எழுதப்படும் கவிதையே சாஸ்வதமானது.
கவிதையை சினிமாவுக்காக பயன்படுத்திக் கொள்வது, அல்லது வியாபாரத்திற்காக பயன்படுத்திக் கொள்வது அல்லது புகழுக்காக பயன்படுத்திக் கொள்வது அல்லது பதவிகளுக்காக பயன்படுத்திக் கொள்வது அல்லது விளம்பரத்திற்காக பயன்படுத்திக் கொள்வது எல்லாமே தனிநபர் ஆளுமை சார்ந்த விஷயம். அதற்கும் கவிதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கே : கவிதைக்கும் பாடலுக்கும் வித்தியாசம் உண்டா?

ப : கண்டிப்பாக இருக்கிறது. திரைப்பாடல்களில் கவிதையை எழுதுவது, கவிதையில் திரைப்பாடல்களை எழுதுவது என்று எனக்கு முன்னால் இருந்த கவிஞர்கள் கட்டைக் குரலில் கர்ஜனை செய்து வருகிறார்கள். அப்படி சொல்லியே தேசிய விருது கூட வாங்கி இருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் செய்தது எல்லாம் கவிதையாக இல்லாமலும், பாடலாக இல்லாமலும் ஏதோ ஒரு புதுவகையாக எனக்குப் படுகிறது.
சினிமாவில் நாடகம் போடுவது போல் பாடலில் கவிதை எழுதுவது.கவிதை என்பது யாருக்காக?எந்த கட்டளைக்கும், எந்த நிபந்தனைக்கும், எந்த இசைக்கும் கவிதை வளையாது. ஆனால் பாடல் இசைக்காகவும், இயக்குனருக்காவும், நடிகர்களுக்காவும், மக்களுக்காகவும் வளைந்து கொண்டே இருக்கும்.
பாடல் மரபு வேறு. கவிதை மரபு வேறு. இரண்டையும் ஒன்றென எண்ணிக் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை. பாடலின் மொழியும் கவிதையின் மொழியும் வெவ்வேறு. ஒரு கவிஞன் பாடலாசிரியனாக முடியும். ஒரு காலத்தில் பாடலாசிரியனாக மட்டுமே அறியப்பட்டவர்கள் கவிஞனாக அறியப்பட்டது இல்லை.

கே : சினிமாவில் ஒரே மாதிரியான பாடல்களே வருகின்றன. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

ப : நான் சினிமாவுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. சமூக அரசியல் சார்ந்து இயங்கும் நிலை இல்லாத சூழலில் பத்து வருடங்கள் கடந்ததே தெரியவில்லை.குறைந்த பட்சம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தைப் பற்றிக்கூட தெரியாதவர்களே இயக்குனர்களாக இருக்கிறார்கள். இலக்கிய ரசனை, இலக்கிய வாசிப்பு என்பது மிகவும் குறைந்து போய் இருக்கிறது. ஒரு நான்கு, ஐந்து இயக்குனர்களைத் தவிர வேறு யாருடைய அலுவலக அறையிலும் புத்தக அலமாரி இல்லை. பல இயக்குன நண்பர்கள் வண்ணத்திரை வாசிப்பதோடு வாசிப்பை நிறுத்திக் கொள்கிறார்கள்.புதிய கதையும், புதிய சூழலும் இல்லாத போது புதிய பாடல்கள் சிறப்பாக வர வாய்ப்பு இல்லை. அதோடு ஒரு பாடலின் இறுதி வடிவம் ஒரு இயக்குனரின் ரசனையால், தரத்தால் தீர்மானிக்கப்படுகிறது. ஆகச் சிறந்த வரிகள் என்றாலும் கூட அதை அனுமதிக்கிற இடத்தில் இயக்குனர்கள் இருப்பதால் அவரே யாவற்றிக்கும் பொறுப்பாகி விடுகிறார்.

கே : மெட்டுக்கு பாட்டு எழுதுவது, பாட்டுக்கு மெட்டமைப்பது எது சரி?

ப : ஆளத் தெரிந்தவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதைப் போல மெட்டுக்கு பாட்டு எழுதுவது, பாட்டுக்கு மெட்டு அமைப்பது என்று எதுவாக இருந்தாலும் ஒரே மாதிரியாகத்தான் எனக்கு தோன்றுகிறது. மெட்டுக்கு பாட்டு எழுதுவது எனக்கு எளிதான விஷயமாக இருக்கிறது. ஏனெனில் சந்தங்களில் பாடலுக்கு தேவையான வார்த்தைகள் ஒட்டியே இருக்கும்.சந்தம் கெடாமல் எழுதுகிற இன்பம் எழுதி மெட்டமைப்பதை விட இயல்பானது. இலகுவானது. மெட்டை கையாளக்கூடிய சகஜத்தை கைகொண்டுவிட்டால் திரைப்பாடல் மிகவும் சாதாரண செயலாகிவிடும். ஒரு கவிதை எழுதுவதைவிட ஒரு பாடல் எழுதுவது தமிழை தாய்மொழியாக கொண்ட யாருக்கும் எளிதானது. ஏன் என்றால் தமிழ் மரபு இசை மரபைச் சார்ந்தது.

கே : தமிழ்த் திரைப்பாடல்களில் ஆங்கில கலப்பு இருக்கிறதே?

ப : இப்போது புதிதாக வந்திருக்கக்கூடிய இளம் கவிஞர்கள் குறிப்பாக தாமரை, கபிலன் போன்றவர்கள் தமிழ்த் தேசிய உணர்வாளர்களாக அறியப்படுவதால் அவர்களிடம் ஆங்கில கலப்பே இல்லாமல் போய்விட்டது. இன்றைக்கு வரக்கூடிய திரைப்பாடல்களில் ஆங்கிலம் கலந்து எழுதுவது ரொம்ப காலமாகவே திரைப்பாடல்களை எழுதிக் கொண்டிருக்கும் மூத்த கவிஞர்களே என்பது கண்கூடு. ஆங்கில வார்த்தைகளை மறந்தும் பயன்படுத்தி விடாதீர்கள் என்ற கட்டளையோடுதான் ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர் போன்ற இசை அமைப்பாளர்கள் மெட்டைத் தருகிறார்கள். எனவே சூழல் இப்போது மாறிவிட்டது.ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வலிந்து திணிக்கப்பட்ட ஆங்கில வார்த்தை மோகத்தை இப்போது அரிதாகக் கூடக் காண முடியவில்லை.
அங்கொன்றும், இங்கொன்றும் வருகிற வார்த்தைகளும் இனி வருங்காலத்தில் முற்றிலும் தவிர்க்கப்பட்டுவிடும் என நம்புகிறேன். நான் முந்நூறு பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள போதும் ஆங்கிலச் சொல்லை பயன்படுத்த யாரும் நிர்பந்திக்கவில்லை.

கே : சினிமா என்றாலே வியாபாரம். சினிமா கவிஞரான நீங்கள் மக்களுக்கு என்ன செய்துவிட முடியும்?

ப : சினிமா வியாபாரம்தான். ஆனால் அது வெறும் வியாபாரம் மட்டும் இல்லை. அதற்குள் கலையும் இலக்கியமும் சேர்ந்து இருக்கிறது. மிகச் சிறந்த கலை வியாபாரமாகத்தான் மாறும். ஒரு நல்ல சிற்பி தன் சிற்பத்தை கடைசியில் நல்ல விலைக்கு விற்கும் இடத்தில்தான் வைக்கிறான். ஒரு நல்ல ஓவியன் தேர்ந்த ஓவியனாக அறியப்படுவது, அவனுடைய படங்கள் பார்வையாளர்களின் சந்தையில் ஏலம் விடுகிற போதுதான்.
ஆனால் அந்த ஓவியனோ, சிற்பியோ விற்பனைக்காக மட்டும் அந்தக் கலையைப் பயன்படுத்தினால் ஒரு கட்டத்தில் சந்தைகளிலும், சக மனிதர்களாலும் நிராகரிப்புக்கு உள்ளாவான். தனக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை மக்களுக்கான பணியில் பயன்படுத்துகிற போது அந்த கலை உன்னதமாகிறது. அந்த உன்னதத்திற்காக வியாபார சினிமாவில் இருப்பது தவறாகத் தெரியவில்லை. எங்கோ தூர தேசத்தில் இருக்கிற யாரோ ஒருவனுக்காக, எழுதப்போகும் நல்ல ஒரு நல்ல கவிதைக்காக, நான் பல காகிதங்களை விரயமாக்கி கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்.

Advertisements

2 பதில்கள் to “கருஞ்சட்டைத் தமிழர் – நேர்காணல்”

 1. //அப்பா என்னிடம் அந்தக் கவிதையைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. கவிதை எழுதுவது அவனின் விருப்பம். அது கருத்து சுதந்திரம் சார்ந்தது, அதே நேரம் கட்சியின் சார்பில் இந்தப் புத்தகத்தை எரிக்க வேண்டும் என்றால் நான் கூட வருவேன் என்றார்.
  இப்படிப்பட்ட அப்பாவைப் பார்த்த பிறகு மார்க்சியத்தின் மீது எப்படி வெறுப்பு வரும்? என் வீட்டுச் சூழலை எப்படி கூறாமல் இருக்க முடியும்?//
  இந்த இடத்தில் நெஞ்சு அடைத்து கண்களில் நீர் முட்டிகொள்கிறது. என் எதிர்வினை.. ‘ஏன்??’ என்று மட்டும் எண்ணவைக்கிறது. ஒன்று மட்டும் புரிகிறது.. அனுபவம் தான் ஒரு கவிஞனை உருவாக்கிறது.. புடம் போடுகிறது… மீதியை படித்துவிட்டு வருகிறேன்.

 2. யுகபாரதி அண்ணனுக்கு,
  உங்களின் வலைத்தளத்தை இன்றுதான் கண்டுபிடித்தேன் . எனது சொந்த ஊர் மதுரை நான் ராணுவத்தில் பணிபுரிகிறேன் ஆனந்த விகடனில் வெளிவந்த தெருவாசகம்தான் என்னை உங்களின் விரும்பியாக்கியது . சமீபத்தில் நீங்கள் எழுதிய பொக்கிஷம் படப் பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது .

  எனது முதல் கவிதை தொகுப்பை வெளிபடித்தியுள்ளேன் தலைப்பு கைக்குட்டை கனவுகள் . பயணம் என்னும் சிற்றிதழில்” நிகழ்வுகள் சந்தர்ப்பமானவை பதிவுகள் நிரந்தரமானவை “என்ற தலைப்பில் பத்தி எழுதி வருகிறேன் . மனித நேயத்தை கவிதை மூலமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதே என் விருப்பம் .

  வலை தளத்தில் தொடர்ந்து எழுதுகிறேன் . உங்களது நேர்காணல் நன்றாக இருந்தது .
  http://vittalankavithaigal.blog

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: