யுகபாரதி

துணை கேட்கும் இரவுகள்

Posted by யுகபாரதி மேல் ஓகஸ்ட் 11, 2009

இரவுகளை துரத்த முடியவில்லை
அவை
என்னிலிருந்து வெளியேற
நிறைய கேட்கின்றன

துணையைக் கேட்கும்
அந்த இரவுகள்
என் தனிமையை பயன்படுத்திக் கொள்கின்றன

விலகவே மாட்டேன்
என்பது போல அழிச்சாட்டியம் பண்ணும்
இரவுகளிடமிருந்து தப்பிப்பது
பெரும்பாடாகிவிடுகிறது

இரவுகளே போ என்று
முன்பு கெஞ்சிய நான்
இரவுகளே வேண்டாம் என்று
சந்நதம் சொல்கிறேன்

இரவுகளால் தாக்கப்பட்டு
பின் அதிலிருந்து மீண்டவர்கள்
குடும்பஸ்தர்களாகி
உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்

இரவுகள் முதலில்
கொடுமைகளையும் பிறகு
குழந்தைகளையும் கொடுத்துவிடுகின்றன

குழந்தைகளுக்குப் பதில் கொடுமை
அல்லது
கொடுமைக்குப் பதில் குழந்தை

2
வேடிக்கைப் பார்த்துப்
பழகிவிட்டோம்

நிலவை முன்வைத்து தாய்
ஊட்டிய முதல் கவளச்
சோற்றிலிருந்து

பராக்கு பார்த்த படியே
நடக்கப்பழகியவர்
தகப்பனாயிருக்கிறார்

சுவரொட்டிகளை கொறித்துக் கொண்டே
சினேகிதனோடு
சிலம்பியிருக்கிறோம்

எதுவுமில்லாத போது
தொலைக்காட்சிகள்
உதவியிருக்கின்றன

வேடிக்கை பார்ப்பது
இயல்பான சொல்லாகிவிட்டது

நம்மை யாரோ பார்ப்பதும்
நாம் பிறரைப் பார்ப்பதும் கூட
நமக்குப் பிடித்துப் போகிறது

பார்க்காத தருணங்களில்
கவலைப்படுகிறொம்
குறுகுறுவென்று பார்ப்பது
கிளர்ச்சியூட்டுகிறது

விபத்தை வேடிக்கை பார்க்கிறோம்
வீதியிலும்
இன்னொருவரின் குளியலறையையும்
சுவரறியா பொழுதுகளில் வேடிக்கையாக
எட்டிப் பார்க்கிறோம்

வேடிக்கை பார்ப்பது
பிடித்துப் போனதால்
எல்லா அயோக்கியத்தனத்தையும்
வேடிக்கையாக மட்டுமே
பார்த்துக் கொள்கிறோம்

3
மருந்து கடைகள் பெருத்துவிட்டன
மக்கள் அனைவரும்
நோயின் தோணிக்குள்
சரக்குகளாக கட்டப்பட்டிருக்கிறார்கள்

மாத்திரைகளை
முழு உணவாக உட்கொண்டு
வாழ்வது சகஜமாகிவிட்டது

மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது
மருத்துவர்களுக்கு ஏக கிராக்கி

மருந்து சீட்டுகளை
ரூபாய்த் தாள்களைப் போல
மக்கள் பத்திரப்படுத்துகிறார்கள்

பரஸ்பரத்தை விசாரித்துக்கொள்ள
நலமா என்றுதான்
ஆரம்பிக்கிறார்கள்

நலமில்லாதுதான் வாழமுடியும் என
எல்லோருக்கும் தெரிந்துவிட்டது

தடைசெய்யப்பட்ட மருந்துகளும்
விற்பனையாகின்றன

உணவைப்போல நீரைப்போல
மருந்துகளும் அத்தியாவசிய பண்டங்களில்
ஒன்றாகிவிட்டன

சுகாதாரத்துறை
மக்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்களால்
ஆரோக்கியத்தோடு இருக்கிறது

நோய் கண்டார்
நோயே கண்டார்

Advertisements

3 பதில்கள் to “துணை கேட்கும் இரவுகள்”

 1. //இரவுகளே வேண்டாம் என்று
  சந்நதம் சொல்கிறேன்//
  பின் கவிதைகள் ஏப்படி
  //இரவுகளால் தாக்கப்பட்டு
  பின் அதிலிருந்து மீண்டவர்கள்
  குடும்பஸ்தர்களாகி
  உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்//
  நிதர்ஸனம்
  /இரவுகள் முதலில்
  கொடுமைகளையும் பிறகு
  குழந்தைகளையும் கொடுத்துவிடுகின்றன//
  சிச்ஸர்
  //நம்மை யாரோ பார்ப்பதும்
  நாம் பிறரைப் பார்ப்பதும் கூட
  நமக்குப் பிடித்துப் போகிறது
  பார்க்காத தருணங்களில்
  கவலைப்படுகிறொம்// 😉
  மூன்று கவிதைகளுமே வாழ்வின் இயல்பை அபத்தை பகடியாக சொல்லி நகர்கின்றன. யாதார்த்தம். மூன்றாவது கவிதையில் அனைத்து வரிகளுமே முக்கியமாய் படுகிறது.

 2. வேடிக்கைப் பார்த்துப்
  பழகிவிட்டோம்
  வேடிக்கை பார்ப்பது
  பிடித்துப் போனதால்
  எல்லா அயோக்கியத்தனத்தையும்
  வேடிக்கையாக மட்டுமே
  பார்த்துக் கொள்கிறோம்

  ஆம் வேடிக்கை மாந்தர்கள் நாம். நினைத்துப்பார்க்க கேவலமாக இருக்கிறது.

 3. //இரவுகள் முதலில்
  கொடுமைகளையும் பிறகு
  குழந்தைகளையும் கொடுத்துவிடுகின்றன

  குழந்தைகளுக்குப் பதில் கொடுமை
  அல்லது
  கொடுமைக்குப் பதில் குழந்தை//

  அட…அழகு!

  //நம்மை யாரோ பார்ப்பதும்
  நாம் பிறரைப் பார்ப்பதும் கூட
  நமக்குப் பிடித்துப் போகிறது//

  உண்மை! பல விஷயங்களில்

  //விபத்தை வேடிக்கை பார்க்கிறோம்
  வீதியிலும்
  இன்னொருவரின் குளியலறையையும்
  சுவரறியா பொழுதுகளில் வேடிக்கையாக
  எட்டிப் பார்க்கிறோம்

  வேடிக்கை பார்ப்பது
  பிடித்துப் போனதால்
  எல்லா அயோக்கியத்தனத்தையும்
  வேடிக்கையாக மட்டுமே
  பார்த்துக் கொள்கிறோம்//

  பொட்டில் அறைகிறது…

  //பரஸ்பரத்தை விசாரித்துக்கொள்ள
  நலமா என்றுதான்
  ஆரம்பிக்கிறார்கள்

  நலமில்லாதுதான் வாழமுடியும் என
  எல்லோருக்கும் தெரிந்துவிட்டது//

  உண்மைதான்

  -ப்ரியமுடன்
  சேரல்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: