யுகபாரதி

வீடு

Posted by யுகபாரதி மேல் ஓகஸ்ட் 13, 2009

1.
என் வீட்டுக்கு வருகிறவர்கள்
பற்றிய அபிப்ராயம்
பக்கத்து வீடுகளில் வேறு மாதிரியாய்
இருக்கிறது

அவர்கள் பேசிக்கொள்கிறார்கள்
வீட்டுக்கு வருகிறவர்களால் நான்
கெட்டுப் போய்க்கொண்டிருப்பதாக

அவர்கள் வீட்டுக்கு வருகிறவர்கள்
பற்றிய அபிப்ராயம்
என்னிடமுண்டு

ஏற்கன்வே கெட்டுவிட்ட நிலையில்
மேலும் கெட்டுக் கொண்டிருக்கிறார்கள்

2

அலங்காரப் படுத்தவேண்டியதில்லை
என் வீட்டை
இப்படியே வைத்திருங்கள்

எது எது எவ்விடத்தில்
இருக்க வேண்டுமென்பது
நால்வர்ணம்

எதுவும் எங்கேயும் எப்படியும்
இருப்பதால்
எந்த கேடும் வந்துவிடாது

கலைந்தும் இரைந்தும்
கிடக்கும் என் வீடு
குப்பையில் புரளட்டும்

குப்பையிலிருந்துதான்
நானும் நீங்களும்
மேலெழும்பி வந்திருக்கிறோம்

3.

உங்கள் வீட்டில்
ஏதொவொரு விசேஷமிருக்கிறது

என் வீட்டின் அழுக்கையும்
அழுமூஞ்சித் தனத்தையும்
உங்கள் வீட்டில் தரிசிப்பது
அரிதாயிருக்கிறது

தரைகள் வலுவலுப்பாகவும்
கால்களுக்கு கவுரவங்களை
ஏற்படுத்துவதாகவும்
அமைந்திருக்கின்றன

இன்னொன்று சொல்ல வேண்டும்
இரும்புச் சங்கிலியால்
கட்டப்பட்டிருந்த போதிலும்
உங்களுடைய செல்ல நாய்க்குட்டியை
முத்தமிட தோன்றியது

மீன்களும் வளர்க்கிறீர்கள்
கண்ணாடித் தொட்டிக்குள்
அவை நீந்துவதும்
இரையை எறிந்ததும்
கூடிக் கொறிப்பதும்
உற்சாகமூட்டுகிறது

4

தோழி ஒருத்தியின் பேச்சு
நம் துயரங்களை சாம்பலாக்குகிறது

தோழி ஒருத்தியின் மவ்னம்
நம் சாம்பல்களை
துயரமாக்குகிறது

தோழி ஒருத்தியே
என்னும் பட்சத்தில்
வாழ்வும் வீழ்வும் அவளுடைய
சௌகர்யங்களைப்
பொறுத்தவையாகிறது

5

ஒரு
பெரும் குடிகாரனின் ஸ்நேகம்
எல்லோரிடத்தும் பாதுகாப்பனது

அவன் உளறலில்
தத்துவங்கள் முகிழ்க்கின்றன்

அவன் தள்ளாட்டத்தில்
பூமியின் சுழற்சியை நம்மால்
புரிந்து கொள்ள முடிகிறது

அவன் உறக்கத்தில்
காட்டு விலங்குகள் மிரண்டு
ஓடுகின்றன

ஒரு
பெரும் குடிகாரன்
கவிதை எழுதாதவனாக இருந்தால்
அதைவிட பாதுகாப்பனது
வேறு எதுவுமில்லை

Advertisements

2 பதில்கள் to “வீடு”

 1. வணக்கம், யுக பாரதி, நான் உங்களுடைய ஒரு தீவிர வாசகன் என்றே சொல்லலாம் , அத்தனை கவிதைகளும் அழகு. வரிகள் தேடிக்கொண்டு இருக்கிறேன் உங்களை வாழ்த்துவதற்கு. மேலும் வளர இந்த நண்பனின் வாழ்த்துக்கள் .
  ஓ சொல்வதற்கு மறந்து விட்டேன் உங்களுடைய தொகுப்புகளில் எனக்கு மிக பிடித்து பஞ்சாரம்

 2. //ஒரு
  பெரும் குடிகாரன்
  கவிதை எழுதாதவனாக இருந்தால்
  அதைவிட பாதுகாப்பனது
  வேறு எதுவுமில்லை//

  மிக அருமை! கவிதையின் கடைசிப்புள்ளியில் தான் அதற்கான உச்சகட்ட உயிர்ப்பு இருக்கிறது என்றும் சொல்லலாம். அதுவரை உயிரைத் தாங்கி வருவதென்பது பலரால் இயலாத காரியம். அது மிக இலகுவாக உங்களுக்குக் கை வருகிறது. இக்கவிதை அதன் உச்சம்!

  //தோழி ஒருத்தியே
  என்னும் பட்சத்தில்
  வாழ்வும் வீழ்வும் அவளுடைய
  சௌகர்யங்களைப்
  பொறுத்தவையாகிறது//

  புன்னகையைக் கொடுக்கின்றன இந்த வரிகள்

  //குப்பையிலிருந்துதான்
  நானும் நீங்களும்
  மேலெழும்பி வந்திருக்கிறோம்//

  எத்தனை எளிதான உண்மை இது!

  -ப்ரியமுடன்
  சேரல்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: