யுகபாரதி

நடைவண்டி நாட்கள்: நான்கு

Posted by யுகபாரதி மேல் ஓகஸ்ட் 21, 2009

‘ஈழ ஏக்கம்’ என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதையை ஏதாவது ஒரு பத்திரிகைக்கு அனுப்பி, அக்கவிதை இதழில் பிரசுரமாக வேண்டும் என்று அம்மாவுக்கு ஆசை. உண்மையில் அக்கவிதை பிரசுரத் தகுதி உடையதுதானா என்றெல்லாம் யோசிக்காமல் என் பெயரை அச்சில் பார்க்கும் அதீத ஆர்வம் அம்மாவை ஆட்டிப்படைத்தது.எந்தப் பத்திரிகைக்கு அனுப்புவது?

எப்போதும் எங்கள் வீட்டில் இம்மாதிரியான பிரச்னைகளுக்கு சீனு அண்ணன்தான் முடிவு சொல்வார். சீனு அண்ணன் என் வளர்ச்சியில் மிகுந்த கவனம் கொண்டவர். எங்கள் வீடு அமைந்திருந்த கலைஞர் நகர் பகுதியில்தான் அவர் வீடும் இருந்தது. அப்பாவுக்கு நல்ல தோழர். என்னால் கொண்டாடப்படுபவரும் கூட.

தீவிர சாஸ்திர சம்பிரதாயங்களில் ஈடுபாடு கொண்ட வைதீக குடும்பத்தில் பிறந்திருந்த போதும், அப்பாவின் இடதுசாரிச் சிந்தனைகளின் மீது அண்ணனுக்கு அலாதியான பற்று இருந்தது.  தன் மேனியின் குறுக்கே கிடந்த நூலையும் அறுத்து கடாசிவிட்டு அப்பழுக்கற்ற மார்க்சிய வாதியாக தன்னை நிறுவிக் கொண்டவர். படிப்புதான் அவரது முழுநேர தொழில் போல இருக்கும். எப்போதும் தன்னுடைய சைக்கிள் கேரியரில் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை வைத்திருப்பார். எங்கு போனாலும் கிடைக்கிற கொஞ்ச நேரத்தை ஓய்வுக்கு விட்டுத் தராமல் வாசிப்பை தொடங்கிவிடுவார். வாசித்த நூலைப் பற்றி அப்பாவோடு விவாதிக்கவும் செய்வார். அப்பா அறியாத பல நவீன எழுத்தாளர்கள் பற்றியெல்லாம் இனிக்க இனிக்க பிரமிப்பூட்டுவார். ‘இவர் படிக்காத நூல்களே இல்லை’ என்பதுபோல பலரும் அவரைப் புகழ்வார்கள். அலமாரி நிரம்ப புத்தகங்களை அட்டைபோட்டு அடுக்கி வைத்திருப்பார். அலமாரியின் இடதுபக்கத்தின் ஓரமாக சில நூல்கள் அட்டை இல்லாமல் அடுக்கப்பட்டிருக்கும். ‘எதனால் இப்படிப் பிரித்து வைத்திருக்கிறீர்கள்?’ என்று யாராவது கேட்டால், உடனே அட்டை போட்ட நூல்கள் படித்தவை என்றும் போடாதவை படிக்க இருப்பவை என்றும் விளக்கி விட்டு மெலிதாகச் சிரிப்பார். மீசை வைக்காத, நெட்டையான, பாக்யராஜ் கண்ணாடி அணிந்த அவரை கே.கே. நகர் ரகுவரன் என்று தம்பி செல்லமாய் சீண்டுவான்.

படிப்பு ஒரு மனிதனை எந்தளவு பக்குவப்படுத்தும் என்பதற்கு நல்ல உதாரணம் அவர். அசைவப் பிரியர். கடல் நண்டை எப்படி ஓடு விலக்கிச் சாப்பிடுவது என்று எனக்கு வகுப்பெடுத்தவரே அவர்தான். வைதீக குடும்பத்தில் பிறந்து இப்படியெல்லாம் பேதம் களைந்து பழகும் அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுவோம்.
வயதில் அம்மாவைவிட அதிகம் என்றபோதும், அம்மாவை ‘வசந்தி அக்கா’ என்றே கூப்பிடுவார். ‘காரிய சமர்த்தர்’ என்று அப்பாவால் மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவார். தமிழகத்தின் அத்தனை நகரங்களுக்கும் அவரே என்னை அழைத்துப் போனவர். ஒரு பெரிய வட்டமடித்து ஒவ்வொரு ஊரின் சிறப்புகளையும் அவ்வூரில் உள்ள உணவகங்களையும், எழுத்தாளர்களையும் அவரால் விவரிக்க முடியும்.

‘ஈழ ஏக்கம்’ கவிதை முதலில் அவரால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய கவலையாக இருந்தது. ஏனெனில் மனதில் பட்டதை ‘டொப்’ பென்று உடைத்துவிடுபவர் ஆயிற்றே! எதிரில் இருப்பவரின் இதயம் எத்தனை சுக்கு நூறானாலும் அதுபற்றி வருத்தப்படாமல் சொல்வார். சொல்வது எதிராளிக்குப் பிரயோசனமாய் இருக்க வேண்டும் என்பதில்தான் அவர் குறியாக இருப்பார். அறிவு எதை உத்தேசித்தும் பேசாது. அறிவுக்குத் தெரிந்த ஒரே பாதை உண்மை. கபடு இல்லாத அறிவு கம்பீரமானது. வாய்ப்பையும் வசதியையும் கூட உதறிவிட்டு, நிராயுதபாணியாக நின்று எதிர்வரும் சவால்களை ஜெயிக்கும். எழுத்தின் கனத்தையும் எழுத்தாளர்களின் தெளிவையும் வாசிப்பு மூலமே கண்டறிந்தவர் என்பதால் சீனு அண்ணன் கைக்கு அக்கவிதை போனபோது எனக்கு உதறல் எடுத்தது. அடுக்களைக்குள் போய் பதுங்கிக் கொண்டேன்.

வீட்டு முற்றத்தில் அப்பாவுடன் அமர்ந்துதான் அதை வாசிக்கத் தொடங்கினார்.

‘நீங்க படிச்சீங்களா?’ என்று அப்பாவைக் கேட்டார்.

‘ம்…’ என்றதோடு அப்பாவும் நிறுத்திக் கொண்டார்.

மதிப்பெண் அட்டையைக் கொண்டு வந்து காட்டும்போது கூட இப்படி வியர்த்தது இல்லை. ஒரே மூச்சில் வாசித்துவிட்டு ‘எங்கே அவன்?’ என்று நிமிர்ந்தார்.

அப்பாவுக்கும் அதே பயம் போல. ‘எப்படி இருக்கு?’ என்றார்.

‘வசந்தி அக்கா’ என்று பெரும் குரலெடுத்து ‘கவிஞரை வரச்சொல்லுங்க’ என்றார்.

அப்பாவுக்குப் பெருமிதம் கண்ணிலும் முகத்திலும் வழிந்தது.

அம்மா பதுங்கிக் கொண்டிருந்த என்னை இழுத்த இழுப்பில், உற்சாகமும் கர்வமும் ஒரே நேரத்தில் தலைக்கேறி இருக்க வேண்டும்.

‘போ… அண்ணன் கூப்பிடுறான் இல்ல…’ என்ற அதட்டல் இப்பவும் என் காதில் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது.

நான் கவிஞனாவதற்கான சகல தகுதிகளையும் ஏற்படுத்தி, கருத்து ரீதியாக என்னை ஆட்கொண்டவர் žனு அண்ணன். அம்மா பெயரை பாரதியோடு இணைத்து ‘பாரதி வசந்தன்’ என்று எழுதியிருந்த புனைப்பெயரும் நன்றாக இருக்கிறது என்றார்.

புனைப்பெயருக்காக அம்மாவும் நானும் பல பெயர்களைப் பட்டியலிட்டுத் தேர்ந்தெடுத்தோம். ‘பாரதி வசந்தன்’ என்றொருவர் எழுதிக் கொண்டிருக்கும் தகவல் எங்களுக்கு அப்போது தெரியாது. அவரும் பெரிய பிரபலம் இல்லை ஆதலால் அப்பெயர் புதிதாக எங்களுக்குத் தோன்றியதாகவே அப்போது நினைத்திருந்தோம்.

கவிதையை அப்பா சார்ந்திருந்த கட்சிப் பத்திரிகையான ‘தமிழர் கண்ணோட்டம்’ இதழுக்கு அனுப்பலாம் என்று சொல்லியது அண்ணன்தான். முதல் பக்கத்தில் என்னைப் பற்றிய விவரம் முழுக்க எழுதப்பட்டது. விபரம் என்றால் வயது, முகவரி, படிப்பு போன்ற குறிப்புகள். அப்பாவின் பெயரோ, அப்பாவின் பார்வைக்கு கவிதை பட்டதாகவோ அதில் குறிக்கப்படவில்லை. காரணம் கட்சிப் பத்திரிகை என்பதால் உண்மையான தகுதி அப்பாவின் பெயரால் அறியப்படாது போகலாம் இல்லையா? அல்லது கட்சித் தோழரின் மகன் என்பதால் கவிதையை மீறி கரிசனம் மேலோங்கிவிடக் கூடும் அல்லவா?

சீனு அண்ணன் தன் கைப்பட எழுதி அக்கவிதையை அனுப்புவதாக எடுத்துப் போனார்.

அம்மாவுக்கு, ‘žனுவே நல்லா இருக்குன்டாண்டா’ என்று நாள் முழுவதும் பேசியதோடு நில்லாமல், வீட்டுக்கு வருகிற எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார். எழுதியதற்கே கொண்டாடும் என் வீடு அக்கவிதை பிரசுரமானால் எப்படிக் கொண்டாடும் என யோசித்து, சாமி மாடத்திற்குப் போய் திரு•று பூசிக் கொண்டேன்.

இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. அறிவு சூழ்ந்த பிரதேசத்தில் என் ஆன்மா எதையோ தேடத் தொடங்கிற்று என்றுதான் சொல்ல வேண்டும்.
தரையில் கால் பாவாமல் நடக்கவும், கண்களை வான்நோக்கி விரிக்கவும், நடு வகிடு எடுத்து žவிப்பார்க்கவும் ஆசையாய் இருந்தது. ஜன்னலோரத்தில் அமர்ந்துகொண்டு யாருமில்லாத வெளியை, வெறிகொண்டு காதலிக்கத் தோன்றியது. ‘மந்திரச் சக்தி’ வாய்த்துவிட்ட ஒருவரின் மனநிலைக்கு முற்றிலும் நான் இடம்பெயர்ந்திருந்தேன்.

இன்றைக்கு என்னால் விவரித்துக் கூற முடிகிற அத்தனை விஷயங்களையும் ‘அந்தக் கணமே’ எனக்குள் ஊற்றியது என்றால் தவறாகாது. சீனு அண்ணன் மேலும் என் மீது பிரியமானார். இம்முறை கூடுதலாக எனக்குக் கவிதைப் புத்தகங்களை சிபாரிசு செய்யத் தொடங்கினார். பத்திரிகைகளில் வெளிவரும் கவிதைகளைக் கத்தரித்து எனக்காக எடுத்து வருவார். கவிதைக்கு எதுஎது முக்கியம் என்பதுபோல அவரது பேச்சு அமைந்திருக்கும். பிச்சுமூர்த்தி தொடங்கி ஈரோடு தமிழன்பன் வரை எனக்காக மீளவும் ஒருமுறை படிக்கத் தொடங்கினார்.நான் எத்தனை அதிர்ஷ்டக்காரனாக இருந்திருக்க வேண்டும்? எனக்காக எல்லோரும் சேர்ந்து உழைக்கத் துவங்கினார்கள்.

அந்தச் சந்தர்ப்பத்தில்தான் அனுப்பிய கவிதை திரும்பி வந்தது.

Advertisements

2 பதில்கள் to “நடைவண்டி நாட்கள்: நான்கு”

  1. //எனக்காக எல்லோரும் சேர்ந்து உழைக்கத் துவங்கினார்கள்//

    அம்மா.. அப்பா.. சீனு அண்ணன்.., கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது.. 🙂

  2. நல்ல இடத்தில் நிறுத்தினீர்கள். அந்த கவிதை? வாசிக்க காத்திருக்கிறேன்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: