யுகபாரதி

பிரதிநிதித்துவ கம்பீரம்

Posted by யுகபாரதி மேல் ஓகஸ்ட் 22, 2009

பத்திரிகைகளில் வருகின்ற நேர்காணல்கள் குறித்து குறிப்பாக வெகுஜன ஏடுகளில் வருகிற பிரபலங்களின் நேர்காணல்கள் பெரும்பாலும் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான கேள்விகளையும் ஒரே மாதிரியான பதில்களையும் கொண்டிருக்கின்றன. கேள்வி கேட்கிறவர் தன்னை பிரபலத்திற்கு முன் நிற்கும் ரசிகனாக அல்லது தொண்டாகவே பாவித்துக்கொள்கிறார். தான் ஒரு பத்திரிகையாளன் மக்களின் சார்பாக கேள்விகளை எழுப்புகிறோம் என்ற பிரதிநிதித்துவ கம்பீரம் தென்படுவதில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக நான் கருதுகிறேன். ஒன்று பத்திரிகை சார்பில் போகிற ஒருவர் தன் பத்திரிகையை பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கிறார். தன் பத்திரிகையின் நோக்கம் குறித்த புரிதல் என்றும் சொல்லலாம். மற்றொன்று அரசியல் பார்வை அற்ற தன்மை.கேள்வி கேட்பவர் தன் அரசியலை முன்வைக்கவும் பதில் சொல்பவர் தனக்குரிய அரசியலை முன் வைக்கவும் தவறிவிடுவதால் கேள்விகள் வெற்று கேள்விகளாகவும் பதில்கள் வற்றி வதங்கிய சோடையான பதில்களாகவும் அமைந்து விடுகின்றன.

இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு பத்திரிகையாளன் தன்னை முழு பத்திரிகையாளனாக பறைசாற்றி கொண்டதற்கும் இப்போதைய பத்திரிகையாளனுக்கும் உள்ள இடைவெளியை இவ்வாறான நேர்காணல்கள் மூலம் நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. சிறு பத்திரிகைகளைப் பற்றி நான் எப்போதுமே பேச விரும்புவதில்லை. அவை குழுங்குறு மனப்பான்மையோடு மட்டுமே இயங்குவதை நியாயப்படுத்துகின்றன. தன் பத்திரிகைக்கு ஆயுள் சந்தா செலுத்திய ஒற்றைக் காரணத்துக்காகவே நூல் விமர்சனமும் பாராட்டுப் பத்திரமும் வாசித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், நேர்காணலுக்காகவே பெரும் கவனத்துக்கு உள்ளான சுபமங்களாவையும் அதன் ஆசிரியர் கோமல் சாமிநாதனையும் நாம் மறந்துவிட முடியாது. அந்த பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ள வேறு சில சிறு பத்திரிகைகள் முயன்றும் அம்முயற்சி தோல்வியிலேயே முடிந்ததாதத்தான் சொல்லத் தோன்றுகிறது.

ஒரு நேர்காணல் சம்மந்தப்பட்டவரின் முழுத் திறனையும் காட்டுவதாக அமையவில்லையே என்ற ஆதங்கத்தை வாசகன் உணர்ந்தும் அதற்கான எதிர்வினை ஏன் எழுப்பப்படுவதில்லை என்பதே புதிராக இருக்கிறது. மக்கள் அல்லது வாசகர்கள் தன் ஆர்வம் மோசடிக்கு உள்ளாகிறது என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள்.அப்படி இருப்பதையே பத்திரிகைகளும் விரும்புகின்றன. பத்திரிகைகள் விலைவாசியை கண்டித்து தலையங்கம் தீட்டுகின்றன. லஞ்ச ஊழலை எதிர்த்துக் கட்டுரைகள் வரைகின்றன. ஆனால், தன் நிலையைப் பற்றி தான் வாசகனுக்கு செய்துவரும் ஏமாற்றைப் பற்றி கிஞ்சித்தும் யோசிக்கத் தவறுகின்றன. பத்து பக்கத்திற்கு மேல் புளித்துப்போன சினிமா செய்திகள், ஒன்றுக்கும் ஆகாத உளுந்தவடை துணுக்குகள்,இரண்டோ மூன்றோ சிறுகதைகள், தவறாமல் நடிகைகளின் அந்தரங்க கிசுகிசுக்கள் என பத்திரிகை முழுக்கவும் நுகர்வு கலாசாரத்தைக் காகிதத்தின் மூலம் கௌரவித்து வருகின்றன.

எனக்கு பத்திரிகை உலகத்தோடு கடந்த பதினைந்து ஆண்டுகளாக மிக நெருங்கிய தொடர்பு உண்டு. அவற்றில் பணியாற்றும் பலரும் என் அன்புக்குரியவர்கள். ஓரிருவரைத் தவிர பத்திரிகைத்துறைக்கு தன்னை தகுதியுடையவர்களாக எவரும் மாற்றிக் கொள்ளவில்லை.மாற்று தேடி  தன்னை தயார்படுத்திக் கொள்ளக் கூட துணியவில்லை.

வேறு படிப்புக்கு இடம் கிடைக்காததால் தமிழ்ப் படிக்க விண்ணப்பிப்பது போல வேறு வேலை கிடைக்காத காரணத்தால் பத்திரிகை வேலைக்கு வந்தவர்களாக இருக்கிறார்கள். குஜராத் படுகொலையைப் பற்றி முழு புலனாய்வு நிகழ்த்திய தெகல்காவைப் போல தமிழ்ப் பத்திரிகை ஊடகமும் நிறைய செய்ய முடியும். முந்தைய காலங்களில் அப்படியான புலனாய்வுகளை சாதனையாக நம்முடைய பத்திரிகைகள் நிகழ்த்தியுமிருக்கின்றன. இடைப்பட்ட காலங்களில் ஏன் இந்த தொய்வு என்பதை வாசகர்களும் பத்திரிகை அதிபர்களும் யோசிக்க வேண்டும்.

எழுத்தாளர் சாரு நிவேதிதா தன்னுடைய வலை தளத்தில் நடிகை ஜோதிர்மயி தன் தீவிரமான ரசிகை என்றும் தொடர்ந்து புத்தகம் வாசிக்கும் பழக்கமுடையவர் என்றும் எழுதி எழுதி மாய்ந்து போகிறார். அவர் இதுவரை எழுதிய எழுத்துக்களிலேயே ஜோதிர்மயி பற்றி எழுதிய வாசகங்கள்தான் அவருக்கே பரவசமூட்டுவனாக இருக்கக்கூடும் என்னும் அளவுக்கு விடாமல் எழுதிவருகிறார். கேரளாவில் தான் ஒரு நட்சத்திர அந்தஸ்துடைய எழுத்தாளராக பார்க்கப்படுவது குறித்த  பெருமிதம் அவ்வெழுத்துக்களில் அதிகமும் வெளிப்படுகின்றன. நடிகை ஜோதிர்மயி தீவிரமான புத்தகப் பிரியையாக இருந்தும் எழுத்தாளர் சாருநிவேதிதா மூலம் அச்செய்தி பரப்பபட்டும் கூட ஒரு பத்திரிகையில் கூட ஜோதிர்மயியிடம் எடுக்கப்பட்ட நேர்காணலில் வாசிப்புப் பழக்கத்தை பற்றியோ இலக்கிய பிரியங்களைப் பற்றியோ எந்த பத்திரிகையும்

கேட்டதாகத் தெரியவில்லை. ஜோதிர்மயி வாசிப்பதைப் பற்றி தெரிந்து வாசகனுக்கு எதுவும ஆகப்போவதில்லைதான் எனினும் ஒருவரை நேர்காணும்போது வைக்கப்பட வேண்டிய கேள்விகளில் ஒன்றிலேனும் அவரை முழுமையாக வெளிப்படுத்துவதில்லையே என்பதுதான் என் சக பத்திரிகைகத் தோழர்களிடம் நான் கேட்க நினைப்பது. ஜோதிர்மயி ‘பெரியார்’ படத்தில் நடித்திருப்பவர் . சமீபத்தில் வெளிவந்த ‘அறை எண் 305ல் கடவுள்’ படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜின் தோழமைக்கு உரியவராக நடித்திருப்பவர்.சினிமா பார்க்க விரும்பாத நம்மூர் கட்டுரை வாசிப்பாளர்களுக்காகவே மேலே தரப்பட்ட மேலதிக குறிப்பு.

கேள்விகளைத் தைரியமாக முன்வைக்கும் சமூகமே வளரும் என்பார்கள். ஒருமுறை தாமஸ் ஜெஃப்பர்ஸன் சொன்னது நினைவுக்கு வருகிறது. அவர் பத்திரிகை ஆசிரியருக்கு ஒரு யோசனையைத் தந்தார். அது, என்னவெனில்  பத்திரிகை ஆசிரியர் தமது பத்திரிகையை நான்கு பகுதிகளாகப் பிரித்தக் கீழ்க் கண்டவாறு தலைப்புகள் தரலாம் என்பது. முதல் பகுதிக்கு, உரிமைகள், இரண்டாவதற்கு உண்மையாகக் கூடியவைகள், மூன்றாவதற்கு சாத்தியக் கூறுகள், நான்காவது பொய்கள், இந்த நான்கில் தற்போது சாத்தியக் கூறுகளும் பொய்களும் மாத்திரமே மிகுதியான இடத்தைப் பிடிக்கின்றன. மற்றவை அறவே தேவையற்றவையாக இருக்கின்றன. ஏன் நமக்கு கேள்வி கேட்பதில் தயக்கம் ஏற்படுகிறது என யோசிக்க வேண்டும். எவர் கேள்வியைக் கேட்க தவிர்க்கிறாரோ அவர் பதிலை விரும்பாதவர் என்று அர்த்தமாகிறது.கேள்விக் கேட்கத்  தயங்குகிற அந்த ஒருவரால் கேள்வியை மட்டுமல்ல புதிதான ஒன்றை தெரிந்து கொள்ளவும் இன்னொருவருக்கு உணர்த்தவும் வழியற்றும் போய்விடுமென்று நான் சொல்லி அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை..

வெகுசன இதழ்கள், சிறுபத்திரிகைகள் இரண்டிற்கும் அடுத்து மூன்றாவதாக நாம் கவனிக்க வேண்டிய இதழ்கள் அரசியல் ஏடுகள், அரசியல் கட்சி சார்ந்து வருகிற ஏடுகள், கட்சியின் வளர்ச்சிக்கும், தலைவரின் நிகழ்ச்சி நிரலுக்குமான ஏடுகள், அவ்வேடுகளும் எண்ணிகையில் சிறுத்துவிட்டன. திராவிட இயக்கங்களின் தொடக்க காலத்தில் இருந்ததைப்போல இப்போது இல்லை. ஏடுகளின் நோக்கமும் செயல்பாடும் குன்றிப் போய்விட்டன. முரசொலியைத் தவிர்த்து இதரக் கட்சி ஏடுகள் வருவதே பலருக்கும் தெரிவதில்லை. நேர்காணல் குறித்து எழுதத் தொடங்கி பத்திரிகைகளின் வகைப்பாட்டுக்குள் சிக்கி கொண்டதற்கு மார்ச் மாத தலித் முரசு ஏடே காரணமென்றால் நீங்கள் நம்பித்தான் அக வேண்டும். தலித்துகளைப் பற்றிய செய்திகளை விரிவாகவும் குழப்பமில்லாமலும் தொடர்ந்து அவ்வேடு வெளியிட்டு வருகிறது. சமூக நீதி திங்களிதழ். கட்சி சாயம் எதுவும் இல்லாமல் தலித்துகளின் நடுநிலை ஏடு என்னும் மட்டில் அதைப் பாராட்டத் தோன்றுகிறது.நடுநிலை என்ற ஒன்று உலகத்தில் கருத்தியல் தளத்தில் இல்லை எனினும் தமிழ்நாட்டில் உள்ள நடுநிலை கருத்தாக்கத்தை வைத்து நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்.

விளிம்பு நிலை மனிதர்கள் மீது தன் பார்வையை இடையறாமல் செலுத்திவரும் அவ்வேட்டில் மருத்துவமனையில் பணியாற்றி வரும் கூலித்தொழிலாளி ஒருவருடைய நேர்காணல் இடம்பெற்றிருக்கிறது. மருத்துவனையில் பிணம் அறுக்கும் பெண்மணியான முனியம்மா தன் வாழ்வின் கோர அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். நேர்காணலை வாசித்துவிட்டு ஒரு நாள் முழுக்க மனது வேறு வேலையில் நாட்டமில்லாது போனது. ஏறக்குறைய ஆயிரம் பிணத்திற்கு மேல் போஸ்மார்டம் செய்திருக்கும் முனியம்மா இத்தொழிலில் கடந்த பதிமூன்று வருடங்களாக இருந்து வருகிறார். கணவனை இழந்த அப்பெண்மணி தன் பிள்ளைகளை (ஒரு மகன், ஒரு மகள்) இதில் கிடைக்கும் சொற் ஊதியத்தில் வளர்த்து வருகிறார். திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் முனியம்மா வறுமை காரணமாகவே இத்தொழிலில் ஈடுபட நேர்ந்தது என்கிறார்.

பிணத்தை அறுக்கும் முன் பதற்றம் தொற்றாதிருக்க முதலில் குடிக்க ஆரம்பித்து பிறகு குடிக்காமல் இருக்க இயலாது எனும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். உறக்கத்திலும் அந்த தொந்தரவு பரவி அச்சம் ஆட்கொள்ளவே  (ஆட்கொல்லவே) வீட்டின் வெளிப்புறத்திலுள்ள மரத்தடியில் தூங்குவதாக கூறியிருக்கிறார். கையில்லாது வந்த பிண்த்தை ஒருமுறை போஸ்ட் மார்டம் செய்துவிட்டு வந்த இரவில் ‘கையில்லாத அவனுக்கு உன்கையைக் குடுடா’ என மகனை நிர்பந்திப்பது போல வந்த கனவால் தான் மரத்தடியிலேயே படுத்துக் கொள்வதாகக் கதறியிருக்கிறார். உண்மை எத்தனைக் கோரத்தோடும் வன்முறையோடும் சாதாரண ஜீவிகளை மிரட்டுகின்றது என்பதை வாசிக்க  வாசிக்க இதயம் வலித்தது.

மேலும், அந்நேர்காணலில் எட்டாவது படிக்கும் தன் மகன் மணிமாறன் அவ்வப்போது தன் தொழிலுக்கு உதவுவதாகவும் கூறியிருக்கிறார். தனியாகவே பிணத்தை அறுத்து கட்டித் தரும் அளவுக்கு பயிற்சி பெற்றுள்ளதாகவும் விளக்கியிருக்கிறார். படிக்கும் வயதில் மணிமாறனுக்கு இந்த கதியும் அவதியும் ஏன் என்பதை எண்ணவும் இயலவில்லை. வறுமையும் மருத்துவ துறையின் போதாமையுமே  இதற்கு காரணமென்று இத்துயருக்கு பதில் தேடுவதில் எந்த பிரயோசனமும் இல்லை.

இந்த நேர்காணலை வாசிக்க வாசிக்க மனதில் பற்றிய தீ இன்னும் அணையவில்லை. உடனடியாக முனியம்மாவின் குடும்பத்திற்கு அரசு ஏதாவது செய்தாக வேண்டும் என்றோ. படிக்கும் வயதில் அவ்வப்போது இத்தொழில் ஈடுபட்டு வரும் மணிமாறனை அத்தொழில் இருந்து மீட்டு உரிய கல்விக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றோ நான் சொல்வது வழக்கமாக இப்படியான நேர்காணல் எழுப்பும் உணர்வெழுச்சியினால் பேசும் வசனமாகும்.ஆனால், இதை வாசித்துவிட்டு எதுவும் செய்ய இயலாத துர்பாக்கியவாதிகளாகவே நாமிருக்க வேண்டியிருக்கிறது என்பதையாவது பதிவு செய்ய வேண்டும்.

இப்படியான குடும்பங்களைப் பற்றிய செய்திகளை உடனுக்குடன் வெகுசன ஏடுகளும் எழுதி தான் செய்துவரும் பொதுவான பாவத்திலிருந்து கொஞ்சமாவது தன்னை புனிதப்படுத்திக்கொள்ள வேண்டும். என் சக பத்திரிகையாள தோழர்களே உங்களை நான் வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் உண்மையாயிருங்கள். உண்மைக்காகப் போராடுங்கள். எர்வின் ஹேன்ராம் சொல்வதைப் போல.
‘அச்சிடப்பட்ட எழுத்தின்  அவசியம் முடிவுறும் கட்டத்தின் அறிகுறி எதுவும் தோன்றவில்லை. இன்னமும் வானொலி செய்திகள் உடனுக்குடன் மிக வேகமாகவும், தொலைக்காட்சியின் நேர்முக வர்ணனைகள் மிக தத்ரூபமாகவும இருந்த போதிலும் செய்திகளுக்குப் பொருளும் தெளிவும் சேர்த்து வெளியிடும் பணி இன்னமும் உடனடித் தேவையாகவே இருந்து வருகிறது. ஒளியின் வேகத்தில் பொருள் விளக்கங்களை மக்கள் கிரகிக்க வேண்டிய தேவையும இல்லை. கூடவும் கூடாது.

இந்த கூற்றின் அடிநாதத்தைப் புரிந்து பத்திரிகையாளர்கள் பணியாற்றுதல் நாளைய உலகில் நம் தடத்தைப் பதிக்க உதவும் அல்லது கவர்ஸ்டோரிகள் வெறும் ‘கவர்’ வாங்கியதற்கான ஸ்டோரியாகிவிடும். வணிகத்தை எழுதலாம்.உண்மையான எழுத்து வணிகமாகக் கூடாது. இப்பவும் நான் சொல்வது இதுதான்.மலையாள கவி குஞ்ஞுண்ணி மாஸ்டரின் வார்த்தையில் எழுதி ஈட்டுவது உத்தமம். உழுது ஈட்டுவது அதி உத்தமம்.

Advertisements

2 பதில்கள் to “பிரதிநிதித்துவ கம்பீரம்”

 1. அருமையான கட்டுரை. சமீப காலமாக ஊடகங்கள்
  மக்களிடம் செல்வாக்கை இழந்து விட்டன. இந்த போக்கு இப்படியே தொடர்ந்தால் திரைப்படங்கள் போல பத்திரிக்கைகளும் பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிடும். வருத்தங்களை, கொந்தளிப்புகளை, கோரிக்கைகளை இழப்புகளை வலிகளை வெறும் வார்த்தைகளாக தலைப்புகளாக மட்டுமே பார்க்கும் இவர்களுக்கு ஊதியம் பெற செய்கிற பனி தான் எழுத்து.

  உங்கள் ஆதங்கம் முழுமையாக புரிகிறது பாரதி. தொடருங்கள்,காத்திருக்கிறேன்.

  நன்றி

 2. மிகுந்த அற்புதம்.

  ஆதங்கம் புரிகின்றது?

  வணங்கா மண் கப்பல் குறித்த செய்தி ஒன்றே உங்களின் மொத்த ஆதங்கத்தில் நான் நன்றாக உணர்ந்த உள் வாங்கிய விஷயங்கள்.

  கரைக்குச் சேராதது அந்த உணவுப் பொருட்கள் மட்டுமல்ல நன்றாக பாடுபட்டு கொண்டுருக்கின்ற பவாத்மாக்களின் மனசாட்சியும்.

  தேவியர் இல்லம். திருப்பூர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: