யுகபாரதி

Archive for செப்ரெம்பர், 2009

ராகு காலக்காளி

Posted by யுகபாரதி மேல் செப்ரெம்பர் 30, 2009

1

அண்ணாந்து பார்க்கும்
கோபுரத்தில்
அமர்ந்திருக்கிறான் சிவன்

அகழிகளில்
நடந்துக் கொண்டிருப்பதோ
விபச்சாரம்

ஆடற்கலை செழித்த
அரண்மனைத் திட்டுகளில்
ஊனக் கால்களுடன்
பிச்சைக்காரிகள்

ஊரடித்து
உலையிட்டவன்
ராசராசன்

ஊரை அழித்து
வரகு நட்டான்
மாறவர்மன்

கழுதைகள் உழுத
நன்செய் நிலத்தைப்
பிழைக்கச் செய்தவள்
நிசும்பசூதனி

வெட்ட வெளி பொட்டல்
வேகாத வெயில்
நட்ட நடு நிசியில்
கொட்டும் மழையிலும்
கூரையில்லாத காளி
குடையாகிக் காக்கிராள்
பூஜை புனஸ்காரமோ
அங்காள பரமேஸ்வரிக்கு

2

கர்நாடகக் கரையில்
கமண்டலம் கவிழ்த்த காக்கை
சோழ எல்லையில்
பறக்காமலில்லை

காவிரிக்கரையோரம்
கொக்கு சுடுவதை நிறுத்தி விட்டு
காக்கைக்கு குறி வைக்கும்
உழவர்கள்

தண்டை ஒலியெழும்பத்
தகதகக்கும் விழி கருக்க
பண்டை எதிரியின்
படை திரும்பிப்
போனது

முன்னம் பகையொழிந்து
மூச்சு விடும் சமயத்தில்
கேட்கத் தொடங்கின
காற்சிலம்பின் சிணுங்கல்கள்
இன்று வரை தெரியாது
நீயும் நானும்
யாருடைய பிள்ளைகள்

3

ஆடி அடங்கிவிட்ட
அடைமழையாய் உன் பெருமை
குடிசைத் தரை போல்
குறிப்பிருக்கு கல்வெட்டில்

தேடி எடுக்காது
ஏழுமலையானை
நோன்பிருந்து வேண்டுகிறாய்

வெறுங்காலின் கொப்பளத்தில்
நானூறு வருட ராஜத் திமிர்

போக்கிடம் ஏதுமற்று
புறம் போக்கில் வீடு கட்டி
இலவசப் பட்டாவுக்கு
மனு செய்யும் சோழர் குலம்

4

பூப் பெய்திய பெண்
பூக் கொண்டு போய்
கழுத்தில் சூட்டினால்
கல்யாணமாகிறது
இன்றைக்கும்

கற்பூரம் ஏற்றினால்
கர்ப்பம் தரிக்கிறது

வகையறியாமல்
தொகைதொகையாய்
ஜனத்திரள்
காளியின் பாதத்தில்
ஊர் காக்கும் நிசும்பசூதனி
உலவுகிறாள் வெளியே

நீயோ
ஊருக்குள் கட்டுகிறாய்
அம்பாள் சந்நிதி

( எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ் அவர்களுடன் ஏற்பட்ட இலக்கிய தொடர்பால் அவர் மூலம் தஞ்சையின் தொன்ம அடையாளங்களில் ஒன்றான ராகுகாலக்காளி என்று அழைக்கப்படுகிற நிசும்பசூதனியைப் பற்றி தெரியவர அது குறித்து இக்கவிதை எழுதப்பட்டது. இந்நூலுக்கு எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ் எழுதிய முன்னுரை மருத்துவமனையிலிருந்து எழுதிய கடைசிப் பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.)

Advertisements

Posted in கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: | 1 Comment »