யுகபாரதி

பாட்டுச்சக்ரம்

Posted by யுகபாரதி மேல் செப்ரெம்பர் 1, 2009

தமிழ் சினிமாவின் போக்குகள் பற்றியும் அதன் நடத்தைகள் பற்றியும் அவ்வப்போது எனக்கேற்படும் அபிப்பாரங்களையும் பேதங்களையும்
எழுதி வந்திருக்கிறேன். வெகுசன ஊடகம் என்னும் விதத்தில் அது செய்து வரும் ஆதிக்கத்தையும் கலாசாரக் கேடுகளையும் சொல்லவேண்டி
இருக்கிறது. தற்போது தமிழ் சினிமாவுக்குத் தேவைப்படுவது நல்ல கதைகள்.ஜீவனுள்ள அதே சமயம் மக்களுக்கு பிடித்தமான எதார்த்தமான உணர்வுபூர்வமான கதைகள்.நல்ல கதை இல்லாத காரணத்தினாலேதான் இந்த  ஆண்டு தொடக்கத்தில் இருந்து வெளிவந்த அத்தனைப் படங்களும் (ஒன்றிரண்டைத் தவிர)படுதோல்வி கண்டுள்ளன. வெற்றி பெற்ற படங்களாவது நல்ல கதையம்சம் உடையனவா என்றால் அதுவும் இல்லை. எதற்கு ஒரு படம் ஓடுகிறது என்பதும் எதற்கு ஒரு படம் ஓடவில்லை என்பதும் இன்னும் திரைத்துறையின் சுவாரஸ்யதுக்கு உரிய நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது தமிழ்த் திரைப்படங்கள் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன.ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனமும் குறைந்தது பத்துப் படங்கள் என்னும் கணக்கில் தயாரிப்புக் களத்தில் இறங்கிவிட்டதால் தொழில்நுட்ப கலைஞர்கள் வாழ்வில் புது சுபிட்சம் ஏற்பட்டு இருக்கிறது. இது,வளர்ச்சியா? வீக்கமா? என்பது போகப் போகத் தெரியவரும்.இந்த அசுரத்தனமான பாய்ச்சலில் சிராய்ப்பும் சிரச்சேதமும் தவிர்க்க முடியாதவை.கலைஞர்கள் விதிக்கும் தொகையை நிறுவனங்கள் தரத்தயங்குவதில்லை.முறையான ஒப்பந்த பத்திரங்களும் அவர்களின் கட்டு திட்டங்களும் தமிழ்த் திரைப்படத்தில் பணியாற்றும் ஒரு சாரருக்குப் புதியவை.

இந்த வளர்ச்சி வேகத்தில் ஏற்பட்டிருக்கும் கதை பஞ்சத்தை சரிக்கட்ட பக்கத்து பக்கத்து மாநிலத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படங்களை உரிமம் வாங்கி தயாரிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எத்தனையோஅற்புதமான எழுத்தாளர்கள் கதை வசன கர்த்தாக்கள் இருந்த போதும் பக்கத்து மாநிலத்திடம் கையேந்த வேண்டுமா என யோசிப்பது என் வழக்கம்.அந்த வரிசையில் பக்கத்து மாநிலமான கேரளாவில் வெளிவந்து அந்த மாநிலத்து மக்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்பட்ட படமான கத பறையும் போள் என்னும் திரைப்படமே தமிழில் குசேலன் என்னுந் தலைப்பில் உருவாகி இருக்கிறது.பெரிய எதிப்பார்ப்போடு உருவாகும் அப்படத்தில் ரஜினிகாந்த நடிக்கிறார் என்பதுதான் கூடுதல் எதிர்பார்ப்புக்குக் காரணம்.படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை பசுபதி ஏற்றிருக்கிறார்.

கவிதாலயாவுக்கு ஏற்பட்டுள்ள பணநெருக்கடியை சரிசெய்யும் பொருட்டு ரஜினிகாந்த இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறுகிறார்கள். தன்னை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் கே.பாலசந்தருக்காக அவர் இந்த உதவியைச் செய்ய ஒப்புக்கொண்டதால் இப்படத்தின் வியாபாரம் கோடியை எட்டியுள்ளது. ‘கத பறையும் போள்” நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படம்.

நட்பின் மேன்மையை உணர்த்தும் உண்மையான சித்திரம்.ஆனால்,அதை தமிழில் ரஜினிக்காக சில சில திருத்தங்களைச் செய்து இருக்கிறார்கள். திருத்தங்கள் அளவுக்கு அதிகமாக வேண்டாம் என ரஜினியே சொல்லிவிட்டதாகவும் செய்திகள் வெளியாயின. படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் பசுபதியின் நடிப்பு அச்சு அசல் தமிழ்த்தனத்துடன் இருப்பதால் அவர் நடிப்பு என்னை வெகுவாக கவர்கிறது.மேலும், அவர் கூத்துப்பட்டறையில் இருந்து வந்திருப்பதால் உலகத்தரத்தை எட்டுவதற்கான சாத்தியங்களை கொண்டு இயங்கிவருகிறார். வைக்கும் அடியைத் தெளிவாக வைக்கும் அவருடைய நிதானம் பாராட்டுக்குரியது.

கதையில், முடி திருத்தும் தொழிலாளியாக இருக்கும் பசுபதியின் பால்யகால தோழனாக ரஜினி வருகிறார்.படத்திலும் ரஜினி, ரஜினியாகவே வருகிறார்.ரஜினிகாந்த்,படத்தின் பிற்பகுதியில் மட்டுமே வந்தாலும் கூட படம் முழுக்க வியாபிக்கும் கதாபாத்திரமாக ரஜினி விளம்பரங்களில் முன்நிறுத்தப் படுகிறார்.இது,வணிக சினிமாவின் வியார உத்தி என்பதை மறுப்பதற்கில்லை.

என்னுடைய ‘தெருவாசகம்’ கவிதை தொகுப்பில் விளிம்புநிலை மனிதர்கள் பற்றி எழுதி இருக்கிறேன்.அக்கவிதைகள் ஆனந்த விகடனில் தொடராகவும்
வெளியாயின. வாரந்தோறும் ஒரு கவிதை என்று எழுதப்போக அது வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி தொடரை நீட்டிக்க வேண்டி வந்தது.அந்த கவிதைகளில் ஒன்று முடிதிருத்துபவர்களின் அவலங்களைச் சொல்வது. இந்த செய்தி அறிந்த இயக்குநர் வாசு அவர்கள் கதையில் பசுபதிக்கான பாடலை என்னை எழுதச் சொல்லி பணித்தார். ஏற்கனவே அவருடைய சந்தரமுகி திரைப்படத்தில் ‘கொஞ்ச நேரம் கொஞ்சநேரம்’
பாடலுக்குப் பிறகு ரஜினிகாந்த் திரைப்படத்தில் எழுதும் வாய்ப்பு.ரஜினி படத்தில் பாடல் எழுதுவதே திரைக்கவிஞர்களின் முதன்மை அந்தஸ்தாக
கருதும் நிலையில் எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு கவிதையால் என்பதால் மிகவும் நெகிழ்கிறேன். நான் கவிதையால் பல இடங்களில் கவுரவிக்கட்டிருக்கிறேன் அவற்றில் இதுவும் ஒன்று.பாடலுக்கான சூழலை இணை இயக்குநர்கள் விளக்கி மெட்டைக் கொடுத்துவிட்டு உடனே தேவை என்றார்கள்.மிகக் குறைந்த மணித்துளிகளில் என்னால் சந்தத்தை உள்வாங்கி எழுத முடியும் என்றாலும் இப்பாடலை எளிதாக எழுதிவிட கூடாது எனத் தீர்மானித்தேன்.ஏனெனில்,விளிம்புநிலை மனிதர்களைப் பற்றிய பதிவுகள் தமிழ்த் திரைப்பாடல்களில் குறைவு என்பதால் எனக்குக் கிடைத்துள்ள
வாய்ப்பைச் சரியாக பயன்படுத்த எண்ணினேன்.அவ்விதமே தமிழ் நிலத்தில் முடியைப் பற்றி இதுவரை கொண்டுள்ள அத்தனை ஐதீக வைதீக நாத்திக
பெளதீக விஷயங்களையும் ஒருமுறை மனதில் ஓட்டிவிட்டு பாட்டெழுத உட்கார்ந்தேன். பல்லவி,ரஜினியின் நண்பனான பசுபதிக்கு என்பதால் பல்லவி
வரிகள் ரஜினியின் பெருமையைச் சொல்வதாக அமைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள்.சரணங்கள், முழுக்க ஒரு முடிவெட்டும் கலைஞனின்
புகழ் சொல்வதாக வரவேண்டும் எனச் சொன்னார்கள்.

தலையில் ஊரைக் காக்கும் சிவனை
தெய்வம் என்று சொல்வேமே
ஊரின் தலையைக் காக்கும் இவனை
என்றும் நெஞ்சில் வைப்போமே

இறைவன் காலில் முடியை வைத்து
வேண்டிக்கொள்ள எல்லாரும்
இவனின் கையை முதலில் தேடிச்
செல்கின்றோமே எந்நாளும்

இவன் கையை நம்பி
வாழ்வை வெல்லும் வாழ்வின்
அத்தாசட்சி
இவன் ஆயுதங்கள்
வைத்திருக்கும் காந்தி
அண்ணாச்சி

பிறர் தலையின் கனமெல்லாம்
இவனாலே குறையாதோ
இவன் கருப்புத் தங்கம் வெட்டியெடுக்கும்
கலைஞன் தெரியாதோ?

– கொஞ்சம் செய்தியும் கொஞ்சம் அழகுணர்வும் கலந்து முதல் சரணத்தை முடித்துவிட்டு அடுத்த சரணத்தை தொடங்கும்போது மேலும் தெளிவான மொழியில் அவனுடைய செயல்பாடுகளையும் அவனுடன் நமக்குள்ள உறவை வெளிப்படுத்த விரும்பினேன்

அடுத்த மனிதன் வளர்ச்சிகண்டு
மகிழும் மனிதன் உன்போலே
எவரும் இல்லை உலகில் என்று
தலையும் தருவார் தன்னாலே
– என்று பாடலை எனக்கு தெரிந்த தமிழில் எனக்கு தெரிந்த அழகுணர்வோடு தயாரித்துக்கொடுத்தேன்.பாடல் தயாரிப்பு என்றுதான் நான் சொல்கிறேன்.எழுத்தில் வடித்தாலும் அது தயாரிப்புதான். கவிதைபோல இயல்பாக வருவது அல்ல. கூட்டாகச் சேர்ந்து கதையின்
தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப தயாரிக்க படுவதுதான். ஓசையும் ஒழுங்கும் கலந்து செய்யப்படுவது ஒருபோதும் கவிதை ஆகாது என்று பலமுறை
சொல்லியும் எழுதியும் இருக்கிறேன். இப்பாடலுக்கான இசையை ஜி.வி.பிரகாஷ்குமார் செய்திருக்கிறார். இவர் ஏ.ஆர்.ரகுமானின் பட்டறையில்
உருவானவர். ரகுமானின் சகோதரி மகன் என்பது அவருக்குரிய தகுதிகளில் ஒன்று.ஆர்வமான முனைப்பான இளைஞன்.புதிய தேடலும் புதிய முயற்சிகளும் அவரிடம் நான் காணும் சிறப்புகள்.பாடல் வெளியீட்டு விழாசமீபத்தில் நடந்தது.அதில் ரஜினிகாந்த் பிரகாஷை ரகுமான் – இளையராஜா
இருவரின் கலப்பாக இருப்பதாக பேசியது கவனிக்க வேண்டியது. விழாவில் இயக்குநர் வாசு இப்படத்தில் வரும் லாபத்தொகையை பணியாற்றிய கலைஞர்களுக்கு பகிர்ந்தளிக்க போவதாகச் சொன்னதும் பாராட்டுக்குரிய அம்சம். இப்படியான உணர்வுகள் மேலோங்கி வருவது தமிழ்ச்சினிமாவின்
ஆரோகியத்தை அதிகப்படுத்தும்.விழாவில் நடிகர் ரஜினிகாந்த வெகு இயல்பான தொனியில் தன் ஆரோக்கியத்திற்கும் இளமைக்கும் காரணம் வெள்ளை உணவுகளை நீக்குவதுதான் என்றது ரசிகர்களுக்குப் புதுத்தகவல்.

ஒருபாடல் உருவாக்கத்தில் எத்தனையோ விதமான அணுகுமுறை இருக்கின்றன. கதாநாயகனின் விருப்பத்திற்கு ஏற்ப வரிகளை மாற்றச் சொல்வார்கள் என்றெல்லாம் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால்,நான் எழுதும் பாடல்களில் அப்படியான அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்பட்டதில்லை.
இயக்குநர்,இசையமைப்பாளரின் விருப்பத்தை முடிந்தவரை திருப்திபடுத்திவிடுகிறேன்.அதே அளவுக்கு ரசிகர்களும் திருப்தி அடைகிறார்களா எனத் தெரியவில்லை.ஒரு பாடலை எழுது அது வெளிவரும் சமயத்தில் அல்லது அது வெற்றியடையும் தருணத்தை விட அப்பாடலை
எழுதும்போது அனுபவிக்கும் இன்பம் இதமாகிறது.’பேரின்பப் பேச்சுக்காரன்’ என்னும் இப்பாடலை எனக்கு முன்னும் சில பாடலாசிரியர்கள் எழுத முயன்று சரியாக வராததால் நான் அழைக்கப்பட்டேன் என்னும் செய்தி பாடல் முடிந்த உடன் கேட்க சங்கடமாக இருந்தது. திரைப்பாடல்களில் நான் செல்லும் தடத்தைப்பற்றி இன்னும் சொல்லும் ஆசையைக் காலம் வரும்வரை ஒத்திவைக்கிறேன். உள் மனதில் என்னை ஆட்டிப்படைக்கும் ஆயிரமாயிரம் விஷயங்களை விரைவில் ஒரு புத்தகமாக எழுத வேண்டும்.திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு அப்புத்தகம் பாடல் குறித்த புரிதலை ஏற்படுத்தும் விதமாகவும் திரைப்பாடல்களில் நாம் கடந்து வந்திருக்கும் பாதையைப் பின்னோக்கிப் பார்க்கும் விதமாகவும் அந்நூல் அமையவேண்டும்.ஒரு நூலாசிரியர்,தன் சொந்த தலைமுறையின் இளைஞருக்காகவும் அடுத்த தலைமுறையின் திறனாய்வாளருக்காகவும் வருங்காலத்தில் என்றென்றும் வரப்போகும் பள்ளி ஆசிரியர்க்காகவும் எழுத வேண்டும் என ஃபிரான்ஸில் ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட் சொல்வதைப் போல பெரிய கனவுகளோடு அந்நூலை எழுத எப்போது நேரம் வாய்க்குமோ?வாய்க்கும் என்று நம்புகிறேன்.

(அதாவது என்ற எனது கட்டுரைத் தொகுதியிலிருந்து)

Advertisements

ஒரு பதில் to “பாட்டுச்சக்ரம்”

 1. soundr said

  //அடுத்த மனிதன் வளர்ச்சிகண்டு
  மகிழும் மனிதன் உன்போலே
  எவரும் இல்லை உலகில் என்று
  தலையும் தருவார் தன்னாலே//

  அருமை

  “சொந்தமும் இல்லே ‍ ஒரு
  பந்தமும் இல்லே
  சொன்ன இடத்தில்
  அமர்ந்து கொள்கிறார்
  நாங்கள் மன்னரு மில்லே ஒரு
  மந்திரி இல்லே
  வண்க்கம் போட்டு
  தலையை சாய்க்கிறார்”

  என்ற‌ பழைய பாடலுக்கு பின்
  possibly yours is the only song that speaks about barbers. i tried for the old song in net. but couldn’t find it.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: