யுகபாரதி

அதிகாரத்தின் நர்த்தனங்கள்

Posted by யுகபாரதி மேல் செப்ரெம்பர் 8, 2009

ஒவ்வொரு முகூர்த்த நாளிலும் ஓரிரு படத்துக்காவது பூஜை போடுகிறார்கள். அவ்வாறு பூஜை போடப்படுவதனால் அப்படம் நினைத்தவாறு எடுக்கப்பட்டு
மக்களுடமுள்ள காசை வசூலாகப் பறித்துவிடலாம் என்றொரு நம்பிக்கை.நல்ல படம் எடுப்பதற்காக பூஜை போடப்படுவதில்லை.நல்ல படத்தின் மீது
நம்பிக்கை உடையோர் பூஜை புனஸ்காரங்களில் ஈடுவதில்லை.நடிகர்களின் கால்ஷீட்டுக்காக காத்திருந்து அவர்களுக்கு சேவகம் செய்து லாபத்தை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்படுவோர் என்றொரு வகை தமிழ்ச் சினிமா வட்டாரத்தில் உண்டு.அந்த வரிசையில் நிற்க விரும்பாமல்
தன்னை நம்பி தன்னிடமுள்ள நம்பிக்கையை நம்பி வெளிப்படும் கலைஞர்களே நெடுங்காலமாக ஜெயித்திருக்கிறார்கள்.கடந்த மூன்றாண்டுகளில் குறிப்பட்டு சொல்லத்தக்க வெற்றி படங்கள் குறைவு,விரல்களுக்குள் அடங்கிவிடும். வெற்றி பெற்ற படங்கள் எதிலும் பெரிய நடிகர்கள் இல்லை.பெரிய என்று நான் சொல்வது குண்டான அல்லது உயரமான என்ற அர்த்தத்தில் இல்லை.சினிமா விநியோகஸ்தர்கள் சொல்லும் கலெக்‌ஷன் கண்மணிகளைக் குறிப்பதற்கே.

ஒரு காதல் ஒரு பருத்திவீரன் ஒரு சென்னை 28 ஒரு வெய்யில் என்பதோடு அந்த கணக்கு முடிந்துவிடுகிறது. மேலே குறிப்பட்டுள்ள படங்கள்
எல்லாமே புதுமுக நடிகர்களை நம்பி எடுக்கப்பட்ட படங்கள்.பரத்தும் பசுபதியும் புதுமுகம் இல்லை என்றாலும் அந்தப் படங்கள் வெளிவரும் சமயத்தில் அவர்களுக்கு மக்கள் மத்தியில் தனித்த அடையாளமில்லை.முதல் படத்தை சொதப்பிய சாமுராய் பாலாஜி சகதிவேலும் ஆல்பம் வசந்தபாலனும் தன் குருநாதரின் கடைகண் பார்வையால் மீண்டும் உயிர்த்தெழுந்தார்கள்.குரு பெயர்ச்சி என்பது இதுதானோ என்னவோ?தான் எடுக்க விரும்பும் தரமான
படங்களுக்குக்காக தான் எடுத்துக்கொண்டிருக்கும் தரமில்லாத படங்கள் மூலம் வரும் வருவாயை செலவிடுவதாக ஒரு நேர்காணலில் இயக்குநர் ஷங்கர் கூறியிருந்தார்.காதலும் வெய்யிலும் அந்த வகையில் மக்களுக்கு ஓரளவு திருப்தியளித்த படங்கள்.மாற்று சினிமா மீது அதிக அக்கறை உடையவர்களாலும் அப்படங்கள் விமர்சனத்தோடு ஏற்கப்பட்டன.இப்போது வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் சுப்ரமணியபுரம்.சசிக்குமார் என்ற இளைஞர் தன் கைக்காசைப் போட்டு கஷ்டப்பட்டு இயக்கி நடித்தும் இருக்கிறார்.அவருடன் பாடல் எழுதும் பொருட்டு எனக்கு அறிமுகம் ஏற்பட்டது.

இசை சின்னத்திரையில் நல்ல தமிழை உச்சரித்து நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்கி வந்த ஜேம்ஸ்வசந்தன்.என் ஆரம்பகால சினிமா வாழ்க்கைக்குப் பெரிதும் உதவிய ஜேம்ஸ், அடையாளப்படுவதற்கு இத்தனை வருடம் காத்திருக்க வேண்டியதாயிற்று. நுட்பமான மனிதர் என்பதிலும் பார்க்க நல்ல தமிழும் ரசனையும் உடையவர் என்பதால் அவர் மீது எனக்கு பிரியமுண்டு.அவரால் தமிழ்த்திரை உலகிற்கு நல்ல பாடல்களைத் தரமுடியும்.சசிக்குமார் மாற்று சினிமாக்காரர். சோதனை முயற்சிகளில் நம்பிக்கை உடையவர்.அவர் படத்தைத் தொடங்க பூஜை போடவில்லை.வெட்டி செலவுகளுக்காக பணத்தை விரயமாக்கவில்லை.திட்டமிட்டபடி காட்சிகளுக்காக மட்டுமே செலவிட்டார்.படத்திற்கு தேவையான விளம்பரங்களை மட்டுமே செய்தார்.ஆடம்பரமோ பகட்டான வியாபார உத்திகளையோ கையாளவில்லை.எல்லா உறவுகளையும் பணமும் அதிகாரமுமே தீர்மானிக்கின்றன என்ற உண்மையை இளைஞர்களுக்கான மொழியில் எடுத்துக்காட்டியிருக்கிறார். குரூரமும் வஞ்சகமும் நிரம்பிய மனித வாழ்வை கொஞ்சம் சினிமாத்தனங்களை கலந்தும் சொல்ல முயன்றிருக்கிறார்.

காதலியே காதலனைக் காட்டிக்கொடுத்து கொன்றுவிடுகிறாள் என்ற கதையை மக்கள் ஏற்பார்களா? இதுகாரும் தமிழ்ச்சினிமா சித்திரித்துவந்த காதலிகள் மரபை எந்த விதத்திலும் மீறாமலிருக்கும் போது இப்படியான அனுகுமுறை சரியா என்றெல்லாம் குழப்பிக்கொள்ளாமல் தன் உணர்வை தான் ஸ்தாபிக்க விரும்பிய துணிச்சலைப் பாராட்டத் தோன்றுகிறது. எனினும்,அக்கதை பின்னணிக்காக காட்டப்பட்ட கொலைகார கூட்டம் மிகக் கொடூர பாவிகளாக
உணர்த்தப்பட்ட விதம் வழக்கமான சினிமா குரூரத்தை தன் பங்கிற்கு பயன்படுத்திக் கொண்டது என்றே சொல்ல வேண்டும்.மதுரை திரையரங்குகளில் நடிகர் சமுத்திரகனி கொல்லப்பட்டதும் அவளையும் கொல்லு அவளையும் கொல்லு என்று கதாநாயகியைக் காட்டி எழுந்த கூச்சலை சினிமா ரசிகர்களின் அறியாமையைக் காட்டுவதாகவே எனக்குப் படுகிறது. ஏனிந்த வன்மம்? ஏனிந்த கொலைவெறி? எதற்கிந்த சித்திரிப்புகள்?
பணம்.பணத்தை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்கிற அவதி.

வெளிவந்த திரைப்படம் மக்களிடம் செல்வாக்கு பெறவில்லையென்றால் செலவழித்த பணத்தில் சில்லறை கூட மிஞ்சாது என்பதால் எப்படியாவது மக்களை திருப்திபடுத்த வேண்டிய கட்டாயமிருக்கிறது.சுப்ரமணியபுரத்தில்
வரும் கதாபாத்திரங்கள் எல்லாமே அசலான முகத்தின் மிகை உணர்ச்சிக்காரர்களாக இருக்கிறார்கள்.அதைத்தான் சினிமா மொழியாக மக்கள்
பாவிக்கிறார்கள்.அதிகாரத்தைக் குறிவைத்தே அத்தனை சம்பவங்களும் நிகழ்கின்றன.இடையில் அப்பாவி மனிதர்கள் சிக்கி சீரழிந்து சின்னபின்னமாகிவிடுகிறார்கள்.

ரெத்தக்கறைபடிந்த கொலைகாரர்களும் ரவுடிகளும் அரசியல் புரோக்கர்களும் அந்தரங்க மனிதர்களும் விளிம்புநிலை
அபலைகளும் ஓட்டுப் பொறுக்கிகளும் மட்டுமே இப்போதைய சினிமாவுக்கு
கச்சா பொருளாகிவிட்டார்கள். மொழி மாதிரியான மென்மையை பிரதிபலிக்கும்
படங்கள் வியாபார வெற்றியை எட்டுவதில்லை.சசிக்குமார் கட்டமைக்கும் சினிமாமொழி பருத்திவீரனைப் போல குறிப்பிட்ட சாதி அடையாளத்தைச் சுட்டவில்லை.பொறுப்பற்ற இளைஞர்கள் வாழ்வில் நிகழும் அசம்பாவிதங்களை
அடுக்கியிருக்கிறார் அவ்வளவே.ஆனாலும் அந்த அடுக்குதலில் இயல்பான தொனியைக் கொண்டுவந்திருக்கிறார்.கதை 1980-ல் நடப்பதாக அவர் கையாண்ட உத்தி மூலம் ரொம்பவே மக்களை கவர்ந்திருக்கிறார்.முற்காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை எத்தனை மிகை உணர்வோடும் சொல்லலாம் என்ற சகாயத்தை
தாமாகவே அக்கதை எடுத்துக்கொள்வதால் ரசிகனுக்கு அதில் எந்த சிக்கலும் இல்லாமல் போய்விட்டது.

கட்சித் தலைவர் பதவிக்காக சகல தீங்கையும் மேற்கொள்ளும் அண்ணன் தம்பிகள் ஒன்றினைந்து ஒரு கொலை செய்யத் தூண்ட, அதையே பிழைப்பாக்கிக்கொள்ளும் இளைஞர்கள் பற்றிய இக்கதையில் எண்பதுகளில் நடந்த பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன.அப்போதைய மதுரை மேயராக பாலகிருஷ்ணன் இருந்தது தொடங்கி சிகை மற்றும் உடை அலங்காரங்கள் வரை நம்மை எண்பதுக்கே கூட்டிப்போக சசிக்குமார் மிகவும்
உழைத்திருக்கிறார்.கூலிப்படையினர் கைது என்னும் தலைப்பிட்டு உள்ளாடையோடு அமர்ந்திருக்கும் நான்கு அல்லது ஐந்து இளைஞர்களின் புகைப்படத்தை தினசரிகளில் நாம் பார்த்திருக்கிறோம். அந்த இளைஞர்கள் பற்றிய கதையாக சுப்ரமணியபுரம் அமைந்திருக்கிறது.படத்தின் மிகப்பெரிய பலமாக எனக்குப்படுவது ஒளிப்பதிவாளர் கதிர்.ஏற்கனவே கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டவர்.

மாற்று சினிமாக்காரர்கள் என்ற புதுவகை தமிழித் திரையுலகில் கவனம்பெறுவது ஆரோக்கியமானது.இன்னும் தரமான இன்னும்
மக்களுக்கு நெருக்கமான திரைப்படங்கள் அதன்மூலம் வர வாய்ப்பு ஏற்படும்.
அதிக முதலீட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களை விட குறைந்த முதலீட்டில்
எடுக்கப்படும் படங்களே தமிழ்ச் சினிமாவை வாழவைக்கும்.மசாலா படங்கள்
அரசின் கேளிக்கை வரிக்கு உதவுமே தவிர வேறு எதற்கும் பயன்படப்போவதில்லை.கார்ப்பரேட் நிறுவனங்கள் அந்த புரிதலை உள்வாங்கிக்கொண்டு செயல்பட்டால் நல்லது.மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்.எப்போதெல்லாம் சினிமா படுபாதாள தோல்வியில் வீழ்கிறதோ
அப்போதெல்லாம் நல்ல படங்களை மக்களை ஆதரிக்கவே செய்கிறார்கள்.

ரஜினிகாந்த் நடித்தாலும் கமல்ஹாசன் நடித்தாலும் அது தரமாக
இருந்தாலன்றி அது தங்களுக்கு பிடித்தமானதாக இருந்தாலன்றி சீந்தக்கூட மாட்டார்கள்.சீனப்பழமொழி சொல்வது போல ஆயிரம் மைல் பயணமும்,அடி ஒன்று எடுத்து வைப்பதில்தான் இருக்கிறது.முயற்சி மேற்கொள்ள வெற்றி பற்றிய எதிர்பார்ப்பு அவசியமில்லை.முயற்சியில் தொடர்ந்து முனைய,வெற்றி காணவேண்டும் என்றும் அவசியமில்லை.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: