யுகபாரதி

நடைவண்டி நாட்கள்: ஆறு

Posted by யுகபாரதி மேல் செப்ரெம்பர் 10, 2009

பத்திரிகைக்கு அனுப்பிய கவிதை திரும்பி வந்தது பெரிய துக்கமாக இருந்தது. என்னைவிட அம்மாவுக்கு இரட்டிப்பு துக்கம். கவிதை திரும்பிய காரணத்தைக் காட்டிலும் என்னைத் தேற்றுவதற்கு அம்மா கூறிய பொய்க் காரணங்கள் என்னை மேலும் நோகடித்தது. பொதுவாக சீனு அண்ணன் மாலை வேளைகளில் வீட்டுக்கு வருவதுதான் வழக்கம். ஆனால் அன்று மட்டுமேனும் அவர் சீக்கிரமாய் வந்தால் தேவலாம் போலிருந்தது. வேறொரு நண்பர் மூலம் சீனு அண்ணனை அப்பா வரச்சொல்லி அனுப்பினார்.

பத்திரிகைக்கு இரண்டு அலுவலகம் இருந்தது. தலைமை அலுவலகம் சென்னையிலும் படைப்புகளைப் பரிசீலிக்கும் அலுவலகம் சிதம்பரம் என்பதையும் கவனிக்காமல் சென்னை முகவரிக்கு படைப்பை அனுப்பியதால்தான் திரும்பி வந்திருக்கிறது என்று சீனு அண்ணன் சமாதானம் சொன்னார்.
என்றாலும் என் ஆர்வம் அல்லது கோளாறு இந்தக் காரணத்தை நம்ப மறுத்தது. நாம் நிராகரிக்கப்பட்டுவிட்டோம் என்ற ஆழமான துயரை அடிநெஞ்சில் அனுமதித்துவிட்டோமேயானால் பிறகு எதனாலும் அதை சரிசெய்ய முடியாது. மறுபடியும் கவிதை அனுப்பப்பட்டது. மாதக்கடைசியில் பத்திரிகை ஆசிரியரிடமிருந்து வாழ்த்துபோல ஒரு கடிதம் வந்தது. கவிதை தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், என் படைப்புகளை தொடர்ந்து நான் அனுப்பி பத்திரிக்கைக்கு ஆதரவு தரவேண்டுமெனவும் கடிதத்தில் ஆசிரியர் கேட்டிருந்தார். வானுக்கும் பூமிக்கும் கால்மாற்றி கால்மாற்றி ஆடத் தொடங்கினேன்.
தரையில் கால்பாவாமல் தோள்களில் சிறகு சூடிக் கொண்டேன். சீனு அண்ணன் என்னைக் கர்வமாய் பார்த்தார். அம்மாவுக்கும் உதட்டிலும் கண்ணிலும் உற்சாகம் பெருகி வழிந்தது. இரண்டு மூன்று கவளம் உணவை அதிகமாய் பரிமாறியதிலிருந்து அம்மாவின் பெருமிதத்தை உணர முடிந்தது.
வீடு முழுக்க சந்தோஷம் பரவி, தெருக்கோடியிலிருந்த கடைக்காரர் வரை விசாரிக்கத் தொடங்கிவிட்டார். அந்த மாத பத்திரிகை அப்பாவின் நண்பர்களால் அதிகமாய் விற்பனை ஆனது. மாதந்தோறும் என் கவிதை பத்திரிகையில் வெளிவந்தால் விற்பனை கூடிவிடும் என்று நானே நினைத்துக் கொண்டேன். தன்னால்தான் பூமியே சூழல்வதுபோல நினைத்துக்கொள்வது எத்தனை இன்பம் உடையது என அனுபவிப்பவர்க்கே தெரியக்கூடும்.
ஒருமாத காலமாய் பத்திரிகையைப் பார்ப்பவர்கள் எல்லாம் வாழ்த்துச் சொன்னார்கள். என்னை வாழ்த்துவதற்கு அவர்களுக்குக் கிடைத்த ஒரே செய்தி அப்போது கவிதையாய் இருந்தது. தோழரின் மகன் என்பதால் மட்டுமல்ல, என்னையும் அவர்கள் தோழராகவே மதிக்கத் தொடங்கினார்கள். தோழர் மகன் கவிதை எழுதுவார் என்பதுபோல அவர்களாகப் பேசிக் கொள்வதை காதில் விழாததுபோல கேட்டுக் கொள்வேன்.

வீட்டுக்கு யார் வந்தாலும் இரண்டு வேலை தொடங்கிவிடும். ஒன்று பத்திரிகையை எடுத்துக் காட்டுவது, அடுத்தது காபி தருவது. பத்திரிகையை வாசித்து வாழ்த்து தெரிவிக்காதவர்களுக்கு காபி தரமாட்டாளோ என்று சந்தேகிக்கும் அளவு அம்மா நடந்து கொள்வாள். அம்மாக்கள் பிரியத்தின் பிரதிநிதிகள்.
அவர்களுக்கு என்று தனி உலகம் கிடையாது. ஆயிரம் செல்வம், அன்பான கணவன் கிடைத்தாலும்கூட, அவர்களுக்குத் தங்கள் பிள்ளைகளே பெரிதாகப் படுவார்கள். அதிலும் என் அம்மா கூடுதல் விசேஷம்.

கவிதை வெளியான செய்தி எங்கள் வீட்டுக்கு வருகிற அத்தனை பேருக்கும் தெரிந்துவிட்டது. வெளிவந்த கவிதையின் தரம் குறித்துப் புகழ, சீனு அண்ணன் மாதிரி விவரித்துச் சொல்ல கிடைத்தவர் செல்லகணேசன். புலவர் என்றுதான் அவரை எல்லோரும் அடையாளப்படுத்துவார்கள். மரபுக்கவிதை ஆர்வலர். ஆர்வலர் என்று சொல்வதைக் காட்டிலும் மரபுக்கவிதைக்காக தன்னை முழுமையாக தயாரித்துக் கொண்டவர் எனலாம்.
யாப்பிலக்கண மேதையாகவே அவரை நான் கருதுவேன். எழுத்து,சீர், அடி, தொடை, தளை என்பதெல்லாம் அவருக்கு வாய்திறந்தால் கொட்டிவிடும் வசத்தில் இருக்கும். அவர்தான் என்னைக் கவிதையின் நுண்மையை உணரப் பழக்கியவர். மரபுக்கவிதையைப் பயின்று கொண்டாலன்றி எழுத்து செம்மையுராது என்று அறிவுறுத்தியவர். யாப்பு என்றால் என்னவென்று நான் கேட்க, “திருக்குறள் இருக்கிறது இல்லையா… அதை ஒரு அளவில் வள்ளுவர் எழுதியிருக்கிறார். அதாவது குறள் வெண்பா என்ற வடிவத்தில்…! அதை எழுதுவதற்கு கவிதை மனது மட்டும் போகாது. கணக்கும் தெரியவேண்டும். நேர் நேர் தேமா என்று வாய்ப்பாடு இருக்கிறது. அதைப் பயின்றால் மேலும் கவிதையை எளிதாகக் கையாளலாம்” என விளக்கப்படுத்தினார்.

“நானும் திருவள்ளுவர் ஆகிவிடுவேனா?” என்று கேட்டேன். சிரித்துக் கொண்டார்.

சீனு அண்ணன் சொல்லாத ஆனால் தெரிந்து வைத்திருந்த புலவரின் வார்த்தைகள் எங்கள் அனைவரையும் வேறொரு முற்றத்திற்குக் கூட்டிப் போனது.
ஓராசிரியர் பள்ளியில் பணிபுரிந்து கொண்டிருந்த புலவர், மாலை வேளையில் அவர் வீட்டுக்கு என்னை வரும்படி கேட்டுக்கொண்டார்.
புலவரின் வீடு எங்கள் வீட்டிலிருந்து சற்றே மூன்று மைல் தொலைவில் இருந்தது. பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததும், உடனே கிளம்பி புலவர் வீட்டுக்குப் போய்விடுவேன். அவர் வீட்டுக்குப் போவதற்காகவே எனக்கொரு மிதிவண்டி அப்பாவால் வாங்கித் தரப்பட்டது.
பள்ளிப் பாடங்களைப் படிப்பதைவிடவும், கவிதை நூல்களை வாசிக்கும் ஆர்வமே மேலோங்கி நின்றது. புலவரின் வீடு பெரிய பாடசாலை!
ஒரு பல்கலைக்கழகத்துக்குத் தேவையான நூல்களை தன் சின்னஞ்சிறிய வீட்டில் சேமித்து வைத்திருந்தார். ஓராசிரியர் பள்ளி புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்திருந்தது. பள்ளி முடித்து அவர் வீடு வந்து சேர தாமதமாகிவிடும். அதுவரை நூல்களை குறித்துக் கொண்டு அத்தையிடம் பேசிக் கொண்டிருப்பேன். புலவரின் மனைவியை அத்தை என்றுதான் அழைக்கப் பழகியிருந்தேன். அத்தைக்கு என் மீது அலாதி பிரியம். கவிதையை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் என்பதால், கவிதையின் இண்டு இடுக்கெல்லாம் அவருக்கும் அத்துப்படி. முதல்நாள் படிக்கக் கொடுத்த நூலைப் பற்றி மறுநாள் பேசி, பாராட்டும் விளக்கமும் பெறுவேன். அங்குதான் வைரமுத்துவும் மேத்தாவும் எனக்கு அறிமுகமானார்கள். நூல்களின் வாயிகாக இன்குலாப்பும் கலாபிரியாவும் கல்யாண்ஜியும் என்னை வசீகரித்தார்கள். மரபு பயிற்சியின் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் முழுதாக கழிந்தன.

பத்தாம் வகுப்பை எட்டிவிட்டதால் பொதுத்தேர்வு பயம் ஒருபுறம் கவ்வியது. இருந்தாலும் வீடும் என்னைச் சுற்றியிருந்தவர்களும் கவிதையில் நான் கொண்டிருந்த ஆர்வத்தினால், அந்த ஆர்வத்தைக் கெடுத்துவிட வேண்டாமென, என் போக்கை மேலும் ருசிப்படுத்தினார்கள். ஓரளவு மரபில் நான் தேறியிருக்கிறேன் என அப்பாவிடம் புலவர் பெருமையோடு கூறுவார். வெண்பாவில் வீட்டு முகவரியை எழுதிக்காட்டுமளவுக்கு வளர்ந்திருந்தேன். எதையும் ஓசையோடு எழுதிப் பழகிக் கொண்டேன். கடிதம் எழுதுதென்றால் கூட ஆசிரியப்பாவை தேடுமளவுக்கு எனது மரபுக்கிறுக்கு தலைக்கேறியது.
புதுக்கவிதை மட்டுமே கவிதை இல்லை. மரபை அறியாமல் புதிது எழுதுவது அவ்வளவு உயர்வில்லை என்று பேசித் திரிந்தேன். புலவர் என்னுள் முழுதாக வியாபிக்கத் தொடங்கினார்.  ‘திசாதா’ எனும் புனைப்பெயரில் அவர் எழுதி வந்த கவிதைகளையெல்லாம் மனனம் செய்து ஒப்புவித்தேன். ‘என் கவிதைகளைவிட பாரதி, பாரதிதாசன் கவிதைகளை மனனம் செய்துகொள்’ என்பார்.

‘மனனம் செய்வதற்கு ஏற்றன மரபுக் கவிதைகளே! ஒருமுறை மனனம் செய்துவிட்டால் பிறகு நாமே மறக்க முயன்றாலும் அக்கவிதைகள் ஓசை நயத்தால் நம்மிடமிருந்து ஒருபோதும் தொலையாது’ என்பார். ‘மரபுக்கவிதைகளின் பயிற்சியே சாலச்சிறந்த புதுக்கவிதை இயற்றுவதற்கான பயிற்சியைக் கொடுக்கும்’ என்பார்.

உண்மையை எளிமையாகவும் இன்பமாகவும் வெளிப்படுத்தி உணர்த்துவதற்கு புலவர் போல் சிலர் இன்னமும் இருக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் என் நண்பர்கள் என்னை வேறு மாதிரி பார்ப்பார்கள். அவர்களைவிட நான் சற்று கூடுதல் பலம் உள்ளவன் என்பதாகப் பாவிப்பார்கள். ஆசிரியர்களிடமும் எனக்கான தகுதி மதிக்கத்தக்கதாய் இருந்தது. காரணம் படிப்பிலும் நான் கவனம் சிதறாவதனாக என்னை உருவாக்கிக் கொண்டேன். ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் கட்டுப்பாடுகளை ஏற்காத, ஆனால் மீறிவிடாத பக்குவம் எனக்கு இருந்தது. என் கவிதைகளை வகுப்பறையில் வாசிக்கச் சொல்லி ஆசிரியர்கள் பாராட்டுவார்கள். அப்படியொரு நாள் பாராட்டிக் கொண்டிருக்கையில் பள்ளியின் தாளாளர் என்னை அழைத்து, ‘உன் அப்பாவை வந்து என்னைப் பார்க்கச் சொல்’ என்றார். பாராட்டு அடங்கி பயம் தொற்றிற்று. சக மாணவர்கள் என் பயத்தைக் கவனித்து அவர்களும் சோர்ந்து போனார்கள்.
அந்தச் சம்பவம் கணக்கு வகுப்பில் நடந்தபடியால், ஆசிரியர் மணிசேகரனுக்கு ‘மெமோ’வோ வேலை நீக்கமோ உறுதி என்றார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: