யுகபாரதி

நடைவண்டி நாட்கள்: ஏழு

Posted by யுகபாரதி மேல் செப்ரெம்பர் 15, 2009

முந்தின நாள் இரவு எங்களுக்கு சகாயம் செய்த வாட்ச்மேனை என்ன காரணத்துக்காக தாக்குகிறார்கள் என்ற மர்மத்தோடு வாயிலுக்குள் நுழைந்தோம். நுழையவே அச்சமாய் இருந்தது.ஒருவேளை அத்துமீறி எங்களை விடுதியில் தங்க அனுமதித்ததால் தாக்கப்படுகிறாரோ என்றும் எண்ணத் தோன்றியது.தாக்குகிறவர்கள் கொச்சை வார்த்தையில் வாட்ச்மேனை திட்டினார்கள்.விடுதியில் தங்கியிருப்போர் பலரும் குழுமியிருந்தார்கள். கூட்டத்தில் யாரோபோல நாங்களும் நின்றிருந்தோம்.பிறகு புத்தனின் வருகைக்காக விடுதியின் வெளி வாயிலில் நிமிர்ந்திருந்த நெட்லிங்க மரத்தின் அருகே காத்திருக்கும்படி ஆயிற்று. வாட்ச்மேன் தாக்கப்பட்ட விவகாரம் அங்கிருந்தவர்களுக்குப் பேசுபொருள் ஆனது. இரவு நேரங்களில் வாட்ச்மேன் விடுதியின் பின்புற அறை வழியாக தகாத பெண்களை அனுமதிப்பதாகவும், விடுதியை வேறு காரியங்களுக்கு காப்பாளர் இல்லாத சமயத்தில் பயன்படுத்துவதாகவும் எழுந்த சிக்கலுக்காகத்தான் வாட்ச்மேன் தாக்கப்பட்டிருந்தார். பெருங்குரல் எடுத்து வாட்ச்மேன் அலறினாரே தவிர, அப்படியேதும் நடக்கவில்லை என்றோ, அல்லது தனக்கு தெரியாது என்றோ அவர் கூறவில்லை. பிரச்னை முடிந்து அடித்தவர்களே வாட்ச்மேனை மருத்துவமனைக்கு அழைத்துப் போயிருக்க வேண்டும். கிசுகிசுப்பு மட்டும் அடங்கியபாடில்லை.

புத்தன் வருவதுபோல தெரிந்தது. இயல்பான சூழல் இல்லை என்பதை மட்டும் அவரால் யூகிக்க முடிந்தது. நடந்ததை எங்களுக்குத் தெரிந்த மொழியில் உளறிக்கொட்டினோம். வழக்கத்துக்கு மாறாக அவர் முகத்தில் பதற்றமும் சங்கடமும் பரவத் தொடங்கின. “இருங்கள் வருகிறேன்” என மேல்தளத்துக்குப் போனார்.

விடுதியின் காப்பாளர் போத்திராஜா அறைக்கு எங்களைக் கூட்டிப் போனார். போத்திராஜ் என்பதுதான் அவர் பெயரா என்பது சரியாக நினைவில்லை. அவரோடு பெரிய பரிச்சயமும் ஏற்படவில்லை. பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஃபில் சேரும் திட்டம் சரவணனுக்கு இருந்தது. படித்துக் கொண்டே தனது சினிமா கனவுகளை ஈடேற்றிக் கொள்ளும் எண்ணத்தில் இருந்தான். புத்தன் மிகுந்த சாதுரியத்தோடும் சகஜமாகவும் போத்திராஜனிடம் சில நாட்கள் தங்கிக் கொள்ள அனுமதி வாங்கினார். போத்திராஜனுக்கு புத்தன் மேல் பிரியமும் அளவு கடந்த மரியாதையும் இருந்தது. ‘தங்கமணி’, ஒரு அரசியல் பிரமுகருக்கு வேண்டப்பட்டவர் என்பதாலும் அரசியலை தீர்மானிக்கும் இடத்தில் சம்பந்தப்பட்ட பிரமுகர் இருப்பதாலும் போத்திராஜுக்கு பயம்கலந்த மரியாதை இருந்திருக்கலாம்.எம்.ஃபில் வகுப்பை பச்சையப்பன் கல்லூரியில் தொடங்குவதற்கு போத்திராஜ் ஏற்பாடு செய்வதாகவும் புத்தனிடம் வாக்களித்து அவ்விதமே மறுமூன்று தினங்களும் தங்கிக் கொள்ளவும் அனுமதி அளித்தார்.

பத்து நாட்கள் எப்படியோ கழிந்துவிட்டன.ரயில்வே ஸ்ரீனிவாசன், கடற்கரை, சென்னை நகர வீதிகள், பாவாணர் நூலகம், பச்சையப்பன் கல்லூரி எம்.ஃபில் மாணவர்கள் தொடர்பினால் பத்தாவது நாள் சென்னை கொஞ்சம் நம்பிக்கை அளித்தது. சரவணன் மாலைநேர வகுப்பில் சேர்ந்திருந்தபடியால் பகல் முழுவதும் என்னோடு இருந்துவிட்டு, கல்லூரிக்குப் போகும்போது என்னை நூலகத்திற்குள் உட்கார்த்திவிடுவான். பத்திரிகை வேலைக்காக பத்து நாளும் அலைந்ததுதான் மிச்சம். புத்தனுக்குப் பட்டயப் பொறியியல் படித்த நான் பத்திரிக்கை வேலை தேடுவதை விட்டுவிட்டு வேறு ஏதாவது பொறியியல் நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாமே என்று யோசனை. கவிதை ஆல்பத்தை கையில் வைத்துக் கொண்டு பத்திரிகையில் வேலை தேடுவதை போல அவமானமான விஷயம் ஒன்று இருக்க முடியாது என்று எனக்கும் விளங்கிப் போனது.

பத்திரிகை துறைக்கும் கவிதைத் துறைக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. பத்திரிகையாளனாக வரவேண்டும் என்றால் பத்திரிகை அறிவை பயின்றிருக்க வேண்டுமே அல்லாது கவிதை தெரிந்து பிரயோசனமில்லை. மேலும் பத்திரிகை துறைக்கு தேவையான சுறுசுறுப்பு கவிதை இயற்றுபவர்களுக்கு இருப்பதில்லை. எதையும் சற்றே மிதமான மனநிலையோடு அணுகும் போக்கு பத்திரிகைக்கு உதவாது. பத்திரிகைகள் என்னைப் புறக்கணிக்கும்வரை பத்திரிகையின் மீது அவ்வளவு காதல் எனக்கு இருக்கவில்லை. புறக்கணிப்பு கூடக்கூட பத்திரிகையில் சேரும் வெறி கூடிக்கொண்டே இருந்தது. தினத்தந்தி தொடங்கி தினத்தூது வரை அத்தனை பத்திரிகை அலுவலகங்களும் அங்கு பணியாற்றுபவர்களின் முகவரிகளும் எனக்குத் தெரிந்துவிட்டது. ஆனால் வேலை இல்லாமல் உழளும் வாழ்க்கை கசந்துவிட்டது. கையில் வைத்திருந்த காசும் பெருமளவு கரைந்துபோனது. மேலும் மேலும் கடத்த வேண்டிய நாட்கள் மீது குவிய வேண்டிய நம்பிக்கை கேள்விக்குறியானது. விடுதியிலிருந்தும் வெளியேற வேண்டிய நிலை.

அப்போதுதான் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சரவணனுக்கு உதவ முன்வந்தார்கள். கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கார் அரசு மாணவர் விடுதியில் சில நாள் தங்கிக்கொள்ள முடியும் என்றார்கள். சரவணன் என்மீது செலுத்திய அன்பிற்கு குறைவில்லாமல் அவர்களும் என்னைத் தூக்கிச் சுமக்க துணிந்தார்கள். காலம், நம்மை இக்கட்டுகளிலிருந்து மீட்பதற்காகவே அப்படியான நண்பர்களை அறிமுகப்படுத்துகிறதுபோல!

பாலா, எட்வின், பழினியாபிள்ளை, ரகுபதி ஆகியோரை என்னால் எந்தச் சந்தர்ப்பத்திலும் மறந்துவிட முடியாது. நால்வருக்கும் வேறுவேறு கனவு இருந்தது. வறுமை அவர்களைக் கசக்கிப் பிழிந்திருந்தது. வீட்டின் உதவியில்லாமல் தாங்களாகவே வாழ்வின் இருண்ட பிரதேசத்தில் உருண்டு கொண்டிருந்தார்கள். என்றாலும் அவர்கள் இதயம் நிரம்ப அன்பு இருந்தது. வழிய வழிய பிறர்க்கு அன்பு செலுத்தும் இயல்பைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அறைக்கு வந்து சேர்ந்தபோது சரவணனும் நானும் முழு பராரிகள் ஆகிவிட்டோம். விடுதி உணவில் வயிறு கழுவி, விடுதியின் அழுக்குத் திட்டுக்களில் பதுங்கிக் கொள்ள வேண்டியிருந்தது.

விடுதியில் சகலரும் தங்கியிருப்பார்கள். திரையரங்கில் பிளாக் டிக்கெட் விற்பவர், கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு அதிலிருந்து தப்பிக்க தலைமறைவாகியிருப்பவர், கல்யாண மண்டபத்தில் பணியாற்றுகிறவர், கொத்தனார் வேலைக்குப் போகிறவர், ஒயின் ஷோப்பில் மது ஊற்றிக் கொடுப்பவர் என விடுதியில் மாணவர்கள் அல்லாத பேரும் தங்கியிருந்தார்கள். எங்களுக்குத் தெரிந்த நான்கு நபர்களைத் தவிர, ஏனையோரின் அறைகள் இப்படியான மனிதர்களால் நிரம்பி வழிந்தது.

அருகில்தான் ‘ராகவேந்திரா திருமண மண்டபம்’. நடிகர் ரஜினிகாந்துக்கு சொந்தமான மண்டபம் என்பதால் முக்கியமான திருமண நாளில் அந்தத் தெருவே அல்லோகலப்படும்.

திருமண மண்டபத்தின் சமையல் அறை விடுதியின் பின்கட்டுக்கு அருகில் இருக்கும். சாப்பாட்டு வாசம் மூக்கை துளைக்கும். விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் திருமண நாட்களில் கல்லூரிக்கு விடுப்பு கொடுத்துவிட்டு, உணவைப் பரிமாறும் பணி செய்ய போவார்கள். வறிய நிலையில் கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் மாணவர்களுக்கு இன்னும் திருமண மண்டபங்களே உதவிக் கொண்டிருக்கின்றன.ஸ்காலர் ஆக ஆசைப்படும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஸ்காலர்ஷ’ப்பையும், இம்மாதிரியான கல்யாண மண்டபங்களையும் நம்ப வேண்டியிருக்கிறது.

விடுதி மொட்டை மாடியிலிருந்து எட்டிப் பார்த்தால், திருமண மண்டபத்தின் சமையற்கட்டில் மாணவர்கள் உழைத்துக் கொண்டிருப்பது தெரியும். மாலை மங்கும்போது திடீரென்று சமையற்கட்டிலிருந்து பொட்டலங்களை விடுதிக்குள் வீசுவார்கள். சூடான வடை அல்லது இனிப்பு வகையறாக்கள் அப்பொட்டலத்தில் அடங்கியிருக்கும்.

பொட்டலம் கைக்கு கிடைப்பவரே அன்றைய அதிர்ஷ்டக்காரர்.யார் கையில் கிடைத்தாலும் பாலாவுக்கும் எட்வினுக்கும் அவர்களோடு இருப்பதால் எங்களுக்கும் பங்கு கிடைக்கும். பாலாவும் எட்வினும் அந்த மாணவர்கள் மத்தியில் தலைவர்கள்போல செயல்படுவார்கள். விடுதியின் காப்பாளர் செய்து வரும் அட்டூழியங்களைத் தட்டிக்கேட்கும் வீரர்களாக அறியப்பட்டார்கள். சரவணனோடு அவர்கள் புகைக்கும்போது அதுகுறித்தெல்லாம் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பேன். விளிம்பு நிலை வாழ்க்கையின் முழுமையும் எங்களுக்கு விளங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்! இரண்டே ரூபாயில் ஒரு நாளை துரத்தும் அளவுக்கு தேறிவிட்டோம். சரவலணனுக்கு சிகரெட் பழக்கம் போய் பீடி புகைக்கும் பழக்கம் ஏற்பட்டது. இரண்டு ரூபாய்க்கு பத்து பீடியை 1998ஆம் வருடம் வாங்க முடியும் என்பது புரிந்தது. திருமண மண்டபத்தில் பாட்டுக் கச்சேரிக்கு குறைவிருக்காது. அப்போதெல்லாம் மாடியில் மல்லாந்து கொண்டு ‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்’ என்ற பாடலைக் கேட்டுக் கொண்டிருப்போம்.

Advertisements

ஒரு பதில் to “நடைவண்டி நாட்கள்: ஏழு”

  1. அன்புள்ள யுகபாரதி,
    சென்னை உங்களை நிறையத்தான் படுத்தியிருக்கிறது… ஆனாலும் சென்னை எவரையும் கைவிட்டதில்லை என்றே நினைக்கிறேன்.
    நன்றி…
    சுப்பு

    பின்குறிப்பு – என்னை உங்களுக்குத் தெரியும். ஓர்மையுண்டா என்பது தெரியவில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: