யுகபாரதி

நடைவண்டி நாட்கள்:எட்டு

Posted by யுகபாரதி மேல் செப்ரெம்பர் 18, 2009

மணிசேகரன் சார், கணக்குப் பாடம் நடத்துகிறவராக இருந்தபோதும், தமிழாசிரியர் நாகேந்திரன் ஐயாவின் நெருக்கமான நண்பர்களில் ஒருவராக அறியப்பட்டார். இரண்டு பேரும் மாணவர்கள் மத்தியில் புகழ் வாய்ந்தவர்கள். அவர்களுடைய வகுப்பு என்றால், சோர்வு தட்டாது என்று உற்சாகமிவிடுவார்கள். பாடத்தை முதல் கால்மணி நேரத்திலேயே முடித்துவிட்டு, மீதமுள்ள நேரத்தில் கலை, இலக்கியம் என்று எங்களை சந்தோஷப்படுத்துவார்கள். அவரவர் படித்த விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளும் சுதந்திரமான வெளியை இரண்டு ஆசிரியர்களும் ஏற்படுத்தி இருந்ததால், இதர ஆசிரியர் வகுப்பிலும் அதே மாதிரியான சுதந்திரத்தை மாணவர்கள் எதிர்பார்த்தார்கள்.

பள்ளி தாளாளர் என் அப்பாவை வந்து பார்க்கச் சொன்ன சேதி, பள்ளிக்கூடம் முழுக்க பரவிவிட்டது. நாங்கள் பயந்ததுபோல, மணிசேகரன் சாருக்கு மெமோவோ பணிநீக்கமோ கிடைக்கவில்லை. எப்போதும்போல் அவர் சிரித்துக்கொண்டே வகுப்பறைக்கு வந்தார். அப்பாவிடம் தாளாளர் வரச்சொன்னதை அச்சம் கலந்த குரலில் தெரிவித்தேன். ஏதாவது தப்பு செய்தாயா? என்பதுபோல் இருந்தது அப்பாவின் பார்வை. அப்பாவின் கண்கள் தீட்சண்யம் நிரம்பியவை. எளிதில் யாரையும் சரண் அடைய வைத்துவிடும். அவர் கண்களைப் பார்க்காமல் சொல்லிவிட்டு, வராண்டாவுக்கு ஓடிப்போய்விட்டேன். அம்மாவுக்கு தாளாளர் கூப்பிட்டிருப்பது என்ன காரணத்துக்காக என்று அறிந்து கொள்வதில் இருந்த கூடுதல் ஆர்வம் என்னைக் கோபப்படுத்தியது. நான் தவறு செய்ததால் அழைத்திருப்பார் போல என்பதாக அம்மாவின் கேள்விகள் அமைந்திருந்ததால் என் கோபம் அம்மாவையும் கோபப்படுத்தியது. அடிவாங்கிப் பழக்கமில்லை. ஆனால், அந்த நாள் அடிவாங்குவதற்கான தயாரிப்புகள் நிறைந்ததாய் தோன்றியது.

காலை என்னுடனேயே அப்பா பள்ளிக்கு வந்தார், என்னை வகுப்பறைக்குப் போகச் சொல்லிவிட்டு, தாளாளர் அறைக்கு அப்பா போய்விட்டார். காலை வகுப்புகளில் கவனம் குவியவில்லை. அப்பா விடைபெற்றுப் போய்விட்டாரா என்று முதல் இரு வகுப்புகள் முடிந்ததும் விடப்படும் சிறிய இடைவேளையில் வந்து எட்டிப் பார்த்தேன். தாளாளரும் அப்பாவும் கண்ணாடிக் கதவுக்குள் இருந்து பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. பிறகு அப்பா வீட்டுக்குக் கிளம்பிய விவரத்தை தாளாளர் அறைக்குப் பக்கத்து அறையில் இருக்கும் டேவிட் மாஸ்டரிடம் கேட்டுக் கொண்டேன். மதிய உணவு இடைவேளையில் அப்பா வந்துவிட்டுப் போனதுபற்றி வகுப்பு தோழர்கள் பகடி பண்ணினார்கள். வீட்டுக்குப் போனதும் முதுகில் விழப்போகிறது என்றார்கள். நாளை வந்து முதுகை காட்டு. காயத்தை எண்ணிச் சொல்கிறோம் என்றார்கள். எனக்கு அவர்கள் பேசுவது எரிச்சலூட்டவே அங்கிருந்து வேறோரு தனித்த இடத்துக்குப் போய்விட்டேன். கவிதை எழுதி வகுப்பறையில் பாராட்டுதானே வாங்கினேன்? பள்ளிக்கூட வயதில் கவிதை எழுதுவது கூடாத செயலா? என்றெல்லாம் யோசித்து, கவிதை பாம்பு என்னைக் கொத்திவிடுமோ என்று அஞ்சினேன்.

மாலை வீட்டுக்கு விதிர்விதிர்த்த கண்களோடு வாசலை எட்டும்போது அம்மா ஓடிவந்து கட்டியணைத்து முத்தமிட்டாள். அப்படியொரு முத்தத்தை இதற்கு முன்னோ பின்னோ அவள் வழங்கவில்லை என்பது மட்டும் நினைவில் இருக்கிறது. அப்பா, தாளாளரைப் பார்க்க வந்ததும், அதன் பின் நடந்த காரியங்களும் ஒரு முத்தத்தை தந்திருக்கிறது. ஆனால், அந்த முத்தத்தின் பொருளை அம்மா எனக்கு சொல்லவே இல்லை. சீனு அண்ணனின் விஜயத்திற்குப் பிறகு தெரியவரும் என நானும் கேட்கவில்லை.

“வேறு மாணவர்களிடம் இல்லாத தனித்திறமை உங்கள் மகனிடம் இருக்கிறது. ஆங்கிலப் பள்ளியில் படித்தாலும் அவனுக்கு தமிழ்க் கவிதைகளில் ஈடுபாடு வந்திருப்பது நல்ல விஷயம். படிப்பிலும் அவன் சோடையில்லை. எனவே வீட்டில் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கச் சொல்லி அவனைக் கண்டிக்க வேண்டாம். அவன் இயல்பிலேயே நல்ல மாணவன். நல்ல கவிஞனாகவும் வரக்கூடும். என் ஆசை அவனுக்கு எழுதும் ஆர்வத்தை மேலும் தூண்டும் விதமாக வீட்டுச் சூழலை வைத்துக் கொள்ளுங்கள்.” இதுதான் தாளாளர் அப்பாவிடம் சொல்லி அனுப்பியது. நான் முன்பே சொல்லியதுபோல, வேறொரு கவிஞனுக்கு இப்படியான சூழல் வாய்த்திருக்காது. தாளாளர் தொடங்கி தகப்பனார் வரை எல்லோரும் என் கவிதை ஆர்வத்தை வளர்த்திருக்கிறார்கள். எந்த இடத்திலும் என் கவிதைக்கு கேடு வராதபடி பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இப்பவும் நான் நெகிழ்ந்து போகும் சம்பவங்களில் ஒன்றாக தாளாளரின் அணுகுமுறையைத்தான் கருதுகிறேன். என் எல்லா வெற்றிக்கும் முதல் காரணமாகக்கூட அவரை வணங்குகிறேன்.
ஹாரிஸ் எனும் பெயரை உடைய அவரைப் பற்றி தஞ்சை மாவட்டத்தில் இன்றும் பலர் பேசிக் கொண்டிருப்பதற்கு காரணம் அவருடைய இப்படியான நடவடிக்கைகள்தான். அந்தப் பள்ளியை குறிப்பிடத்தக்க பள்ளியாக்கிய பெருமை அவரையே சாரும். பள்ளியில் நடைபெறும் அத்தனை நிகழ்ச்சிகளிலும் ஹாரிஸ் சார் முன்னிலையில் என் கவிதை அரங்கேறும். அவர் பேச வரும்போது என் கவிதையை உதாரணம் காட்டி பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டார். என் பேச்சில் அல்லது கவிதையில் உதாரணம் காட்டும் பகுதிகள் இல்லையென்றாலும் கூட என்னை தவறாமல் பாராட்டுவது போல தன் பேச்சை அமைத்துக் கொள்வார். மூளையில் சலங்கை கட்டிவிட்டதுபோல இருக்கும். வீட்டில், பள்ளியில், செல்லகணேசனின் அன்பில் என என் கவிதை பறவை கால்முளைத்து, கை முளைத்து, சிறகுமுளைத்து பறந்துகொண்டே இருந்தது. வருடங்கள் கடந்தன. பொதுத் தேர்வுக்கு தயாராக வேண்டிய கட்டம். என்னதான் கவிதை எனக்கு இன்பமளிப்பதாக இருந்தாலும்கூட, தேர்வை உதாசீனப்படுத்த முடியாது இல்லையா?!

அந்த வருடத்தில் என் கவனம் முழுக்க படிப்பிலும், தேர்வுக்கான தயாரிப்பினும் என்பதாக மாறியது. மனசளவில் படிப்பை நேசித்த போதிலும், அவ்வப்போது கவிதையும் எழுதிக்கொண்டுதான் இருந்தேன். அன்று அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அலாரம் வைத்து அம்மா எழுப்பிவிட்டாள். அறிவியல் பரீட்சை! எழுந்துபோய் உள் அறையில் படிக்கப் பண்ணினாள். அந்த அறைக்கதவு அலுவலகக் கதவுபோல் சதுர வடிவில் நடுவில் கண்ணாடி வைக்கப்பட்டிருக்கும். உள்ளே நடப்பவற்றை வெளியில் இருந்து கவனிக்கலாம். காபி எடுத்துக் கொண்டு அம்மா அறைக்கு அம்மா வரும்போது நான் எழுதிக் கொண்டிருந்தேன். படிக்காமல் எழுதுவது அம்மாவுக்கு வருத்தம் அளித்திருக்க வேண்டும். தேர்வுக்கு ‘பிட்’ எழுதுகிறேனோ என்று அம்மாவுக்குச் சந்தேகம் என்றுதான் நினைக்கிறேன். உண்மையில், நான் கவிதை எழுதிக் கொண்டிருந்தேன். அம்மாவுக்கு எழுதியது என்ன என்று அறியும் ஆவலில் புத்தகத்தைப் பிடுங்கினாள். உள்ளே கவிதை கிறுக்கி வைத்திருந்ததைப் பார்த்ததும் அவளுக்கு மடமடவென்று கண்ணீர் கொட்டியது.

கவிதை எழுதுவதற்குத் தடையில்லை. ஆனால் பரீட்சை நேரத்தில் கூட இப்படிச் செய்யலாமா?’ என்பதுபோல அந்தக் கண்ணீரை நான் புரிந்து கொண்டேன். படிப்பதற்கான சூழலை நானாக கெடுத்துக் கொண்டேன் என்றே தோன்றியது. அப்பாவின் கண்கள்போல அம்மாவின் கண்ணீரும் என்னை எளிதாகச் சலனப்படுத்தியது. குற்ற உணர்வை அம்மாவின் கண்ணீர் என் மீது திணித்துவிட்டது. அம்மாவுக்கு வார்த்தைகள் தடித்து விழுந்தது. கொஞ்சம் அதிகமான திட்டுதான். மேலும், சூழல் கலவர கதிக்கு மாறுவதற்குள் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வேறு அறைக்கு ஓடிவிட்டேன். உள்ளே போய் கதவை இறுக தாளிட்டு அமைதியானேன். எக்கேடும் கெட்டுப்போ என அம்மா மீண்டும் காபியை எடுத்து வரவே இல்லை.

தேர்வுக் கூடத்திற்குப் போனபிறகும் காலையில் நான் நடந்துகொண்ட விதம் என்னை உறுத்தியது. படித்தது ஒன்றுகூட வினாவாக கேட்கப்படாததுபோல் இருந்தது. மூளையை முழுதாக கழுவிப் போட்டதுபோல வெள்ளைக் காகிதங்கள், வெள்ளைக் காகிதங்களாகவே வெகுநேரம் இருந்தன. பள்ளிக்கு பொதுத்தேர்வு நடத்தும் அனுமதி கிட்டாதபடியால் அந்த வருடம் வேறு ஒரு பள்ளியில்தான் தேர்வு நடந்தது. அது அரசினர் உயர்நிலைப்பள்ளி. தனிப்பயிற்சி மாணவர்களும் எங்களோடு பரீட்சை எழுத வந்திருந்தார்கள். வினாத்தாள், நான் பொதுத்தேர்வில் தேர்ச்சிபெறப் போவதில்லை என்பதை சொல்லாமல் சொல்லியது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: