யுகபாரதி

நடைவண்டி நாட்கள்: ஒன்பது

Posted by யுகபாரதி மேல் செப்ரெம்பர் 22, 2009

திருமண மண்டபத்தில் இருந்து மிதந்து வரும் பாட்டுக்கள், கவலையை குறைப்பதற்கு உதவியதைப்போல மகிழ்ச்சியை அதிகப்படுத்தவும் உதவியிருக்கின்றன. பல நாள்கள் அப்பாடல்களின் கேட்பில் பசியடங்கி உறங்கிப் போயிருக்கிறோம்.

வறுமை தள்ளாட வைத்தது. பகல்பொழுதில் சரவணன் கல்லூரி நணபர்களோடு சென்று விடுவதால் நான் கவிதை ஆல்பத்தை தூக்கிக் கொண்டு வேலைக்காக அலையத் தொடங்கினேன். வேலை கிடைத்தாலன்றி மேலும் சென்னையில் வாழ்வைத் தொடர முடியாது என்றாகிவிட்டது. கவிதைக்குப் பத்திரிகை அலுவலகங்களில் வேலை கிடைக்காது எனத் தெரிந்தும் வேறு வழியறியாமல் திணறிக் கொண்டிருந்தேன்.

அன்று மாலை வெகு நேரமாகியும் சரவணன் வரவில்லை. யாரிடமாவது பணம் பெற்று வருவதாகச் சொல்லியிருந்தான். பாலாவும் எட்வினும் ஏதோ ஊரில் விசேசமென்று போய் மூன்று நாட்கள் ஆகியிருந்தது. அறையில் என்னுடன் பழனியாப்பிள்ளை மட்டும் தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருந்தான். மனம் சும்மாயிருந்தாலும் வயிறு சும்மாயிருப்பதில்லை. இன்றும் நான் பசியோடு கிடக்கும் அவஸ்தையைப் பற்றி எழுதுவதற்கு அந்நாள்கள் உதவிவருகின்றன. உடம்பு முழுக்க சோர்வு அப்பிக்கொண்டது. காலையில் இருந்து சென்னை நகரை குறுக்கும் நெடுக்குமாக தனித்து நடந்ததூன் பாக்கி.

சில பத்திரிகை அலுவலகங்களில் அன்பின் காரணமாக வருகிறவர்களுக்கு தரப்படும் இலவச தேநீரும், தண்ணீரும் தவிர வயிறு வேறெதையும் எடுத்துக்கொள்வில்லை. மனசு சவால்களை எதிர்கொள்வதில் திருப்தி அடைந்து விடுகிறது. ஆனால்,வயிறு அப்படியில்லையே! வயிறு கருணையற்றது. நிலைமை புரியாமல் நிம்மதி பறிப்பது.

பழனியாப்பிள்ளை அறைக்கு வந்த என்னை கவனித்து விட்டு. மீண்டும் படிப்பில் மும்முரமானான். மணி எட்டோ ஒன்பதோ இருக்கலாம. சரவணன் வரவில்லையா என்று கேட்டான். என்னுடனே சரவணன் பெரும்பாலும் இருப்பதால் அப்படிக் கேட்டிருக்கலாம். இல்லை என்று சொல்லி விட்டு படுத்துக்கொள்ளப் போனேன். என்ன தோழரே உடம்புக்கு ஆகலையா என்றான். மெல்லத் தலையசைத்து விட்டு கொஞ்சம் அசதி என்றேன்.

படுத்துக்கொள்வதென்றால் அம்சதூளிகா மஞ்சத்தில் படுத்துக் கொள்வது போலல்ல. இலவம் பஞ்சு மெத்தையில் இரு கால்களையும் செம்மாந்து நீட்டி படுத்துக் கொள்வது போலல்ல. கோரைப் பாயில் படுத்துக்கொள்வது போலல்ல. வெறும் படுக்கை. செய்தித்தாளை விரித்தோ அல்லது பழைய துண்டை விரித்தோதான் படுக்க வேண்டும். வெளியே மழை கொட்டோ கொட்டென்று கொட்டத் தொடங்கியது. அரசு விடுதியின் அத்தனை சுவர்களும் ஈரம் பூத்தன.. ஜன்னல் கண்ணாடிகள் நொருங்கிப் போயிருந்த படியால் சாரல் அறைந்தது. குளிர் ஊசியாய் உடம்பில் இறங்கியது. அறைக்குள்ளும் மழை வீச்சமெடுத்தது. பழனியாப்பிள்ளை புத்தகத்தை மூடிவைத்துவிட்டு என்னோடு மழை பார்க்கத் தொடங்கினான்.

மழையை நான் முதல்முதலாக வெறுத்தது அப்போதுதான். ஒரு நடைபாதைவாசி மழையை என்னென்ன கெட்வார்த்தையில் திட்டுவானோ? அதை நிகர்த்த அல்லது அதற்கு மேலான கெட்ட வார்த்தைகளைக் கொண்டு மழையைச் சபித்தேன். இத்தனைக்கும் மழையை நம்பிய விவசாய பூமியில் இருந்து வந்தவன் நான். “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்ற மழைப்பதிகம் பாடவேண்டிய கவிமனம் வேதனையால் வெதும்பிற்று.

பழனியாப்பிள்ளை என் பசி முகத்தை உணர்ந்து கொண்டான் போல எனக்கு உணவு தர வேண்டும் எனத்தோன்றியும் அடிக்கும் கடுமழையில் கடைக்குப்போய் எதுவும் வாங்கிவர இயலாத நிலை. விடுதியில் ஒரு விநோதப் பழக்கம் உண்டு. அதாவது, தங்கியிருக்கும் மாணவர்கள் எதன்பொருட்டாவது வெளியே போயிருந்தால் அவர்களுக்காக அறையில் இருக்கும் மாணவர்கள் மெஸ் ஹாலில் இருந்து உணவு வாங்கி வைப்பார்கள். குளியல் வாளியில் சாதத்தையும் குழம்பை மக்கிலும் வாங்கி வைப்பார்கள். கூட்டு இதர இத்தியாதிகளை சாதத்திற்கு மேலோ அல்லது சாதத்தை ஒதுக்கியோ வாங்குவார்கள்.

நானும் சரவணனும் அந்த உணவைத் தவிர்த்து வந்தோம். கையில் கொஞ்சம்போலிருந்த பணத்தில் ஒருவேளையோ,இருவேளையோ கையேந்திபவனில் உண்டு வந்தோம். கையேந்திபவன் என்றால் வேறொன்றுமில்லை, தள்ளுவண்டியில் வைத்துவிற்கப்படும் உணவு. மீன்குழம்பு, கோழிக்குழம்பு என்று இரண்டொரு மாமிசத் துண்டுகளோடு தரப்படும் உணவின் விலை அப்போது எட்டே ரூபாய்தான்.

பழனியாப்பிள்ளை படிப்பில் கவனம் செலுத்தியதால் உணவு வாங்கி வைக்க மறந்து போயிருந்தான். இருந்தும், வாளியையும் மக்கையும் கையில் எடுத்துக்கொண்டு மற்ற மற்ற அறையில் வாங்கி வைக்கப்பட்டிருக்கும் உணவில் கொஞ்சம் இரவல் கேட்டுவரப் போனான். ஒவ்வொரு அறையிலும் மீதப்பட்ட உணவை வாங்கி வந்து குளித்தட்டில் வைத்து என்னிடம் நீட்டினான். எனக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. பிச்சைக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட என் வாழ்வையும் துயரையும் நினைத்து வெகுநேரம் அரற்றினேன். சரவணன் வரவில்லை பழணியாப்பிள்ளை என்னைத்தேற்றுவதில் நேரத்தை இழக்கவேண்டியிருந்தது. பரீட்சைக்குத் தயாராக வேண்டிய சூழலில் எனக்காகப் பரிந்தும் ஆறுதலாகவும் இருக்கவேண்டிய கட்டாயத்தில் உழன்றான்.

உணவு செல்லவில்லை. பசி அறவே மரத்துப்போனது. பின் மழை எப்போது விட்டது? எப்போது தூங்கினேன்? என்பது நினைவிலில்லை. அறையில் ஒரு ஓரமாய் ஈரம் கசியாத இடத்தில் படுத்துக்கிடந்தேன். எழுந்தபோது நன்றாக விடிந்திருந்தது. நண்பர்கள் அறைமுழுக்க வழிந்தார்கள். பாலாவும் எட்வினும் வந்திருந்தார்கள். சரவணன் முகம் மழித்துக்கொண்டிருந்தான். தன் கல்லூரித்தோழர் ஒருவர் நூறு ரூபாய் கடன் கொடுத்ததாகச் சொல்லியபடி முழுதும் மழிப்பதற்குள் 90 ரூபாயைக் கையில் திணித்தான். அலமாரியில் கிடந்த என் சட்டையை எடுத்தப்போய அயர்ன் செய்து வைத்திருந்தான்.

பாலாவும் நானும் கவிஞர் வித்யாசங்கரை சந்திப்பதாக திட்டம். வித்யாசங்கர் என் ஆதர்ச கவிஞர்களில் ஒருவர். “சந்நதம்” கவிதைத் தொகுப்பு மூலம் என்னை வெகுவாகக் கவர்ந்தவர். நக்கீரன் புலனாய்வு வார இதழில் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றியவர். நக்கீரனின் முதல் ஆசரியர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. புலவர் செல்லகணேசன் வீட்டில் வைத்து, அவர் தொகுப்பை வாசித்திருந்தேன். முதல் வாசிப்பிலேயே அந்தப் புத்தகம் போல வேறோரு புத்தகம் என்னைக் கவர்ந்ததில்லை. என்றேனும் சென்னைக்குப்போனால் வித்யாசங்கரை சந்திக்க வேண்டும் என் நினைத்திருந்தேன். மழை மீண்டும் தூற ஆரம்பித்தது.

பாலாவுக்கு வித்யாசங்கர் தற்போது பணிபுரியும் பத்திரிகை அலுவலகம் தெரிந்திருந்தது. பாலாவுக்கு அண்ணன் அறிவுமதி மூலம், பலரும் அறிமுகமாகியிருந்தார்கள். அண்ணன் அறிவுமதி அறைக்கு எங்களைக் கூட்டிக்கொண்டு போனதும் பாலாதான். அங்குதான் பழனிபாரதியை முத்துக்குமாரை வாசனை கபிலனை சீமானை தபூ சங்கரை செல்வபாரதியை சுந்தர்.சியை நான் சந்தித்தேன். வாசன் தஞ்சாவூரில் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் குடியிருந்தபடியாலும் தமிழ்த்தாய் இலக்கியப் பேரவையில் கலந்து கொண்டு கவிதை வாசித்ததாலும் முன்னமே அறிமுகம். கவிஞர் வாசன்தான் அப்போது தமிழ்த்திரை உலகின் முன்னணிப் பாடலாசிரியர்.

இளையராஜாவாலும் தேவாவாலும் அதிகம் விரும்பப்படுகிற பாடலாசிரியராக இருந்தார். புன்னகையோடு வாசன் நடந்து வரும் அழகும் எளிதாக மெட்டுக்கு வார்த்தைகளை இட்டு நிரப்பும் விதமும் யாரையும் கவர்ந்துவிடும் என்பார்கள். முத்துக்குமார், அண்ணனிடம் பயிற்சியில் இருந்தார். அண்ணன் அறிவுமதி பரந்துபட்ட உறவுகளின் வேடந்தாங்கல். யாரையும் கையிலேந்தி அன்பு செலுத்தும் ஆண்தாய். உணவுப் பொட்டலத்தில் இருந்து கவிதைப் புத்தகங்கள் வரை எதையும் பகிர்ந்து கொடுத்தே பழக்கப்பட்டவர்.

மழை விடாது போலிருந்தது. விடுதியிலேயே பேசிக்கொண்டிருந்தோம். முதல் நாள் வறுமை, வாங்கி வந்த நூறு ரூபாயில் செழுமையாகிவிட்டது. சரவணன் சிகரட்டை விரும்பிப் புகைத்தான். ரகுபதிக்கு டி.ராஜேந்தர் மாதிரிப்பேசுவதில் தனித்திறமை உண்டு. ரகுபதியைப் பேசவைத்து ரசித்துக்கொண்டிருந்தோம். ரகுபதி எம்பில் முடித்து பி.எச்.டிக்கு தயாராகிக்க கொண்டிருந்தார். எனினும் சினிமாவில் வரவேண்டும் என்பதே அவர் ஆசையாய் இருந்தது. மழைவிட்டபாடில்லை வித்யாசங்கரை நாளை பார்ப்போம் என ஒத்திவைத்தோம்.

நாள் முடிந்தது. விடிந்தபோது ஊரே கலவரப்பட்டுக்கொண்டிருந்தது. ஆங்காங்கே கொடிக்கம்பங்கள் சாய்ந்தன. பேரூந்துகள் எரிக்கப்பட்டன.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: