யுகபாரதி

தெருவாசகம் எனும் நவீன காவியம் – நாகூர் ரூமி

Posted by யுகபாரதி மேல் செப்ரெம்பர் 24, 2009

பிரதமர், ஜனாதிபதி போன்ற மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்களிடமிருந்தோ, திரைப்படத் துறையைப் போல, மக்கள் மத்தியில் பிரபலமாக எப்போதுமே இருக்கின்ற துறையைச் சார்ந்தவர்களிடமிருந்தோ, ஒரு புத்தம் அல்லது ஒரு கவிதைத் தொகுப்பு வெளிவருமானால் உடனே அது நாடு தழுவிய கவனம் பெற்றுவிடும். அதன் உடனடிக் காரணம் அந்த பதவியாகவோ அல்லது புகழாகவோ இருக்கும். ஆனால் இதெல்லாம் கொஞ்சகாலம்தான். மக்களுக்குத் தேவை ஒரு பிரதமர் நல்ல பிரதமராக இருப்பதுதான். அவர் ஒரு நல்ல கவிஞராகவோ எழுத்தாளராகவோ இருப்பது இரண்டாம் பட்சம்தான்.

திரைப்படப் பாடலாசிரியராக அறியப்படும் கவிஞர் யுகபாரதியும் இந்த வரிசையில் வைக்கப்படுபவர்தான் என்று நாம் நினைத்தால் அது தலைகீழாக நின்று கொண்டு அவரைப் பார்ப்பதுப்போல் ஆகிவிடும். இப்படிப்பட்ட சிரசாசனப் பார்வைகளை மீறி, ஒரு உறுதியான, அசைக்க முடியாத அடித்தளத்தை தனக்கென்று ஏற்கனவே அமைத்துக்கொண்டுவிட்டவர் அவர்.

திரைப்படப் பாடலாசிரியராக அவர் அறியப்பட்டிருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் ஒரு ஜனாதிபதி கவிதை எழுதுவதற்கும், ஒரு திரைப்படப் பாடலாசிரியர் கவிதை எழுதுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஒரு மேடைப் பேச்சாளன் திடீரென்று தனக்கு பரத நாட்டியம் தெரியும் என்று சொல்வதைப் போன்றது முன்னது. ஒரு கஜல் பாடகன் ஹிந்துஸ்தானி பாடுவதைப் போன்றது பின்னது.

கவிதை கறந்த பாலெனில் திரைப்படப் பாடல் தண்ணீர் கலந்த பால், அவ்வளவுதான். இரண்டுக்குமிடையில் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே ஒரு திரைப்படப் பாடலாசிரியர் கவிதை எழுதுவதென்பது தன்னுடைய சொந்த வீட்டின் வாசலில் இருந்து தனது பூஜை அறை அல்லது தியான அறைக்குப் போவது போன்றதுதான்.

ஆனால் இந்த விஷயத்திலும் யுகபாரதி வித்தியாசப் படுகிறார். அம்மி கொத்திக் கொண்டிருக்கும்போதே ஆங்காங்கு தேவைப்படும் இடங்களில் சின்னச் சின்ன சிற்பங்களையும் வடித்துக் கொடுத்துவிடுபவர் அவர். ஏனெனில் அவர் அடிப்படையில் ஒரு சிற்பி.

ஒரு உதாரணம் சொல்கிறேன். “காதல் பிசாசே” என்று ஒரு பாடல் ‘ரன்’ படத்துக்காக அவர் எழுதியது. மிகப்பிரபலபான அந்தப் பாடலில் ‘என் தாயோடும் பேசாத மௌனத்தை நீயே தந்தாய்’ என்று ஒரு வரி வரும். அப்பட்டமான வாழ்க்கை நிஜத்தைத் தொட்டுப் பாடுகிறது இந்த வரி. காதல் முத்தம் தரும் சந்தோஷ மௌனத்தை இதைவிடச் சிறப்பாக எந்த கவிதையும் இதுவரை சொன்னதாக எனக்குத் தெரியவில்லை. பல சுதந்திரப் பிடுங்கல்களுக்கு மத்தியில் இப்படி எழுதுபவரை ஒரு திரைப்படப் பாடலாசிரியர் என்று எப்படிச் சொல்ல முடியும்?

எளிமையான, அதேசமயம் நிஜங்களை முகத்தில் அறைந்து கூறும் அருமையான கவிதைகளைக் கொண்ட ‘மனப்பத்தாயம்’, ‘பஞ்சாரம்’ ‘தெப்பக்கட்டை’ ஆகிய மண்வாசனை வீசும் மூன்று தொகுப்புகளைக் கொடுத்து, ஒரு முக்கியமான நவீன தமிழ்க்கவிஞனாக தன்னை ஏற்கனவே ஸ்தாபித்துக் கொண்டவர் அவர். சோழநாடு சோறுடைத்து மட்டுமல்ல, கவிதையும் உடைத்து என்பதை மறுமடியும் உறுதி செய்த தஞ்சாவூர் கவிஞர். அத்தொகுப்புகளுக்காக தமிழக அரசின் விருதும் பெற்றவர்.

திரைப்படப் பாடல்கள் எழுதும் போதெல்லாம், அப்பாடல்களின் இடுக்குகளிலெல்லாம் அற்புதமான கற்பனை வளம் கொண்ட கவிதா வரிகளால் நிரப்பும் இவர், தமிழர்களாகிய நாம் பெருமைப் பட்டுக்கொள்ள வேண்டிய இன்னொரு காரியத்தை இப்போது செய்திருக்கிறார்.

கவனிக்கப்படாத மனிதர்களைப் பற்றி ஒரு காவியம் இயற்றியிருக்கிறார். இப்படிச் சொல்வது கொஞ்சம் அதிகமாகத் தெரியலாம். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இது முற்றிலும் உண்மை என்பது தெரியும். இதுவரை கவிதையில் பாடப்படாத, ஆனால் பாடவேண்டிய மனிதர்களையும் அவர்களின் துயரங்களையும் பற்றி விடாப்பிடியாக, தொடர்ந்து இதுவரை யாரும் எழுதவில்லை. ‘மாமாப்பய’ என்று இகழப்படும் தொழிலைச் செய்பவனின் உணர்ச்சிகளைப் பற்றி நாம் என்றைக்காவது கவலைப்பட்டிருக்கிறோமா? ஆனால் யுகபாரதி அவனுக்காக ‘ஏற்பாடு செய்பவன்’ என்று ஒரு கவிதையே எழுதியிருக்கிறார்.

ரோடு ரோலர் ஓட்டுபவர், கரகாட்டக்காரி, துணை நடிகை, உதவி இயக்குனர், போஸ்டர் ஒட்டுபவன், மின்கணக்காளன், போக்குவரத்துக் காவலர், பலூன்காரன், ரயில் பாடகன், மேஜை துடைப்பவன், பாம்பாட்டி, சிகை அலங்காரன், பழைய புத்தக வியாபாரி, இஸ்திரிக்காரன், குறிசொல்பவன், கழைக்கூத்தாடி, தபால்காரர், பாதரட்சகன், நடத்துனர் என நாம் அன்றாடம் பார்த்துக்கொண்டே இருக்கும், ஆனால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் மனிதர்கள் இவர்கள். உண்மையில் நவீன இலக்கியத்தின் நாயகர்களாக இருக்க வேண்டியவர்கள் இவர்களே. இவர்களை ஒதுக்கிவிட்டு நம் வாழ்க்கையால் ஒரு அடிகூட நகரமுடியாது.

ஆனால் இவர்களை சிலாகிக்க தமிழ் இலக்கிய உலகில் ஒரு நாதி கிடையாது. இவர்களைப் பாடியதன் மூலம் தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு புதிய, முக்கியமான அத்தியாயத்தை யுகபாரதி துவங்கி வைத்திருக்கிறார்.தமிழ்க்கவிதையும் மரபும், மரபுக் கவிதையும் நன்கறிந்தவர் யுகபாரதி. ‘திருவாசகம்’ நம்மிடையே மதிப்பும் மரியாதையும் உடைய ஒரு பாடல் தொகுப்பு. ஆனால் இவர் ‘திரு’வைத் ‘தெரு’வாக்கியிருக்கிறார்! அதில்தான் எத்தனைப் பொருத்தம்!

இந்தத் தெருவாசகத்தின் உள்ளடக்கம் எவ்வளவு முக்கியமானதோ அவ்வளவு முக்கியமானது இதன் வடிவம். வேண்டுமென்றே யுகபாரதி மரபுக் கவிதை வடிவத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். (ஒரு சில புதுக்கவிதைகளைத் தவிர). அதன் மூலம் இரண்டு காரியங்களை அவர் செய்திருக்கிறார். ஒன்று, மரபுக்கவிதை என்பது பலர் நினைப்பதுபோல இக்காலத்துக்கு ஒவ்வாதது அல்ல என்று நிரூபித்திருக்கிறார். மரபுக்கவிதை எழுதத் தெரியாத காரணத்தால் புதுக்கவிதைப் பக்கம் ஒதுங்கும் என்னைப் போன்றவர்களைப் பார்த்து இதன் வடிவம் நகைக்கிறது. ஏனெனில், மரபில் பொதுவாக இருக்கும் இறுக்கத்தைத் தளர்த்தி, அனைவருக்கும் புரியக்கூடிய எளிமையான மொழியில் எழுதியிருக்கிறார். ஒரு புதிய மரபை உருவாக்கியிருக்கிறார் என்று கூறவேண்டும்.

ஆலையிட்ட கரும்பென
ஆக்கிய உவமையை இனி
ரோலரிட்ட எறும்பென
கூறுதல் நவீனம் (ரோடு ரோலர் ட்ரைவர்)

ராணிகள் கைவசமிருந்தும்
ஆளத் துணியாதவன்…

சகல சௌகரியங்களோடும்
ஒரு தேசத்திற்கு உங்களை
நாடு கடத்துவான் எனினும்
மூடிய கதவுகளுக்கு அப்பால்
இவன் அகதி. (ஏற்பாடு செய்பவன்)

இந்த வரிகள் சொல்லும் சோகம்தான் எத்தனை!

வாட்டி வதைக்கும்
வாழ்வின் பிணிபோக்க
காட்டிக் கொடுக்கிறான்
காமத்தை

இங்கே ‘கூட்டிக் கொடுக்கிறான்’ என்பது அதி அற்புதமாக ‘காட்டிக் கொடுக்கிறா’னாக மாற்றப்பட்டிருக்கிறது. எதிர்மறையான ஒரு விஷயம் அதன் எதிர்மறைத் தன்மையிலிருந்து இலக்கிய நயத்தோடு விடுவிக்கப்பட்டிருக்கிறது. இப்படிச் செய்வது பெரிய கவிஞர்களுக்கே சாத்தியம்.

வேர்வை வருவதற்குள்
விடைபெறும் பரதத்தை
வேர்வை வழிய வழிய
விரட்டுகிறாள் கோபத்துடன் (கரகாட்டக்காரி)

பரதம் ஒரு அற்புதமான நடனக்கலைதான். ஆனால் அது முழுக்க முழுக்க மூன்று வேளையும் மூக்குப்பிடிக்க அல்லது மூக்குப் பிடிக்காமல் உண்ணக் கொடுத்துவைத்த மக்களின் கலையாக உள்ளது. பரதத்தின் அடிப்படை ருசி. கரகாட்டத்தின் அடிப்படையோ பசி. ‘வேர்வை வருவதற்குள் விடைபெறும்’ பரதம் என்ற விமர்சனத்தில், கராகாட்டத்தின் விடைபெறாத வேர்வை பற்றிய உட்குறிப்பு உள்ளது.

வயிற்றுக்கு மிகநெருங்கி
வருகின்ற கேமராவில்
தெரியாது இவள் பசியும்
தெய்வத்தில் வஞ்சகமும் (துணை நடிகை)

வயிற்றின் ‘க்ளோசப்’பிலிருந்து பசியின் ‘லாங் ஷாட்’டுக்கு நம்மைக் கொண்டு போகின்றன வரிகள்.

ஒட்டாமல் இருப்பவர்கள்
உலவுகின்ற வீதிகளின்
ஒட்டுவதால் இருக்கின்றான்
உண்மைகளைக் கிழிக்கின்றான் (போஸ்டர் ஒட்டுபவன்)

ஒட்டுதலுக்கு ஒட்டாமைக்கும் புதிய பரிமாணங்கள் இவ்வரிகளில் கொடுக்கப்படுகின்றன.

ஆலய வாசல் முன்பே
அனுதினம் இருந்தாலும்
சாமிகள் இவளுடைய
சங்கடத்தைத் தீர்ப்பதில்லை (பூக்காரி)

இருக்கும் இடத்தை வைத்து எழுப்பப்படும் அங்கதம் (contextual irony) இங்கே விளையாடுகிறது. இலக்கிய நீதிமன்றத்தின் கூண்டில் சாமிகளும் ஏற்றப்படுவார்கள்.

கம்மலுக்கு வட்டியாக
காதினை வாங்கிக்கொண்டு
விம்மலைக் கொடுத்தனுப்பும்
விசித்திர உதவிக்காரன் (அடகுக் கடைக்காரன்)

கம்மலுக்கு வட்டியாக காது என்ற கற்பனையின் அழகு வட்டித்தொழிலின் கொடூரத்தை மிக அழகாகவும் வலிமையாகவும் மனதில் பதிக்கிறது.

இடுப்புப் பாவாடையோ
பிழைப்பு ராட்டினம் (கரகாட்டக்காரி)

ஒட்டு மொத்த வாழ்க்கையையும் ‘ராட்டினம்’ என்ற ஒற்றைச்சொல்லின் கற்பனை அடக்கிவிடுகிறது. ‘பிழைப்பு ராட்டினம்’, ‘ஆண்குலத்து அகலிகை’ ‘வேர்வை வேடன்’ போன்ற பல பிரயோகங்கள் இப்படிப்பட்டவை.

அங்கங்கே நம்மை நிறுத்திவிடும் வரிகள் நிறைந்த தொகுப்பு இது. இத்தொகுப்பின் கவிதைகள் புரிய வைக்கும், புன்னகைக்க வைக்கும், வியர்க்க வைக்கும், வியக்க வைக்கும். ‘தெருவாசகம்’ தமிழ்க்கவிதை உலகில் போடப்பட்ட ஒரு புதிய பாதை. இனி இந்தப் பாதையில் நடக்கும் பாதங்களெல்லாம் யுகபாரதிக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டவை.

எனக்குப் பிடித்த சில வரிகள்:

பாழடைந்த கண்ணிமையில்
படுத்திருக்கும் எதிர்காலம்
கூன்விழுந்த புன்னகையில்
கொண்டிருப்பான் தவக்கோலம் (உதவி இயக்குநர்)

வேலைக்குப் போவதாக
வீடுவிட்டுக் கிளம்பினாலும்
சாலைகளே இவனுக்கு
சபையாகும் அரசோச்ச

கண்ணிமைக்கும் சமயத்தில்
கனவுவந்து ஸ்தம்பிக்கும்
முன்நிமிர்ந்து ஞானம் பெற
மூவிளக்கு போதிமரம் (போக்குவரத்துக் காவலர்)

விதிவண்டி இவன்மீது
வெறிகொண்டு ஏறியதா
மிதிவண்டி மீது இவன்
நடத்துகிறான் நகர்வலத்தை

கழுவுதற்கு மறந்துவிட்ட
குவளைகளின் கறைபோல
அழுந்தப் பதிந்த நிஜம்
அடிமனத்தில் பழுப்பு நிறம்

ஆறாத தேநீராய்
அனலிருக்கும் மனமெங்கும் (சைக்கிள் டீக்காரன்)

மாதக்கடைசியில்லை
மாதமெல்லாம் கடைசியென்று
ஊதிப்பெருக்குகிறான்
உள்ளிருக்கும் வேதனையை

ஓதுவதால் ஆய பயன்
ஒன்றுமில்லை என அறிந்து
ஊதுகிறான் ஓயாமல்
உயிர் மூச்சை விற்பதற்கு

காற்றைச் சிறைவைக்க
இயலாது என்பவரின்
கூற்றைப் பொய்யாக்கி
காட்டுகிறான் உண்மைகளை (பலூன்காரன்)

என்னிடம் இருப்பவைகள்
ஏழையின் புன்னகைகள்
என்பதை உரக்கச் சொல்லும்
இவனொரு வேர்வை வேடன்

சொல்லில் நஞ்சுணரும்
சூட்சுமம் புரிந்ததனால்
பல்லில் விஷமிருக்கும்
பாம்பிடத்தில் இவன் பிரியம்

சிவனுடைய கழுத்துவரை
செல்வாக்கு பெற்ற பாம்பு
இவனுடைய சொல்கேட்டு
மண்டியிடும் தலைகவிழ்ந்து

பள்ளிகொண்ட திருமாலின்
பாயாக விரிந்த பாம்பு
துள்ளாமல் இவன் விரலில்
தொங்குமொரு சணல் போல

நெளிந்துபோன கனவுகளை
நேராக்க முயலுமிவன்
வைத்திருக்கும் கூடைக்குள்
சைத்தானின் நிழலுருவம் (பாம்பாட்டி)

குப்பைகள் குழந்தை போல
குறுநகை புரியும் மண்ணில்
அப்புறப் படுத்தாவிட்டால்
அழவைக்கும், அசிங்கம் செய்யும் (துப்புரவாளன்)

ஆண்களின் வாடை மட்டும்
அடிக்கிற தேசம்; அறையின்
தூண்களாலே ஏனோ பெண்கள்
துணியின்றி தொங்கும் காட்சி

முடிவில்லா இவனின் பந்தம்
முடியோடு முடிவதில்லை
அடிப்பது மொட்டை எனினும்
அரசியல் இவனுக்கில்லை

தலைக்கு மேல் வேலை என்று
தலைவிதி நொந்ததில்லை
தலைக்கு மேல் போயிற்றென்பான்
ஜாணில்லை, முழமுமில்லை (சிகை அலங்காரன்)

வெளுத்து வாங்கு என்பதிவன்
விளங்கிக் கொண்ட வாழ்வுமுறை
கொளுத்துகின்ற பசி நெருப்பில்
குளிர்காயும் தூயதிரை

கறைகளை விலக்குமிவன்
கரையேற மடிக்கிறவன்
சுருக்கமுள்ள இடங்களுக்கு
சூடுவைத்துப் பிழைக்கிறவன் (இஸ்திரிக்காரன்)

கையிலொரு கோலிருக்கும்
காலத்தை அடிப்பதற்கு
பொய்யிலிவள் வாழ்விருக்கும்
போதாமையை முடிப்பதற்கு

எமன் வந்து கேட்டாலும்
எதிர்காலம் விளக்குமிவள்
அமர்ந்தயிடம் ஒருவகையில்
ஆகக்கூடும் எருமையாக. (குறி சொல்பவள்)

ஆட்டுவிக்கும் பரம்பொருளை
அவ்வப்போது அறிவதுபோல
காட்டி நிற்கும் இவன் சிரிப்பு
கவலைகளின் மறுபதிப்பு (கழைக்கூத்தாடி)

தெருவாசகம்.
-யுகபாரதி.
விகடன் பிரசுரம்.

Advertisements

3 பதில்கள் to “தெருவாசகம் எனும் நவீன காவியம் – நாகூர் ரூமி”

 1. யுகபாரதி கவிதைகள் மிக அருமை.

  அதுமட்டுமன்றி நான் உங்கள் பாடல்கள் கவிதைகளின் தீவிர ரசிகன்.

  உங்கள் கலை தொண்டு மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.

  – செல்வகுமார்இனியன்!!!

 2. vaazhthukkaL yukapaarathi

 3. Thomas said

  திரு யுகா,

  இக்கவிதைகள் விகடனில் வெளி வந்த போதே ஒரு அதிர்வை ஏற்படுத்தியவை.

  நாகூர் ரூமி அவர்கள் இதை ஒரு அழகிய பதிவாக எழுதி சிலகிதிருகிறார், நல்ல பதிவு…

  அருமையான கவிதை தொகுப்பு……

  வாழ்த்துக்கள்….!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: