யுகபாரதி

நடைவண்டி நாட்கள்: பத்து

Posted by யுகபாரதி மேல் செப்ரெம்பர் 25, 2009

பொதுத்தேர்வுக்கூடத்தில் அமர்ந்து வினாத்தாளை வாங்கி, வாசிக்கத் தொடங்கியதில் இருந்து என்னை எனக்குப் பிடிக்காமல் போனது. கவிதை மீது அல்லது கலைகள் மீதுமாணவப்பருவத்தில் ஆர்வம் செலுத்துபவர்கள் படிப்பில் கோட்டை விட்டுவிடுவார்களென்று சொல்வதைக் காலம் மீண்டும் ஒருமுறை என்னை நிரூபித்துக் கொள்ளுமோ என்று தோன்றியது.

ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் பேரமைதி. காகிதங்கள் புரட்டுப்படும் சரக் சரக் ஓசை. இன்னும் கொஞ்சம் உற்றுக் கேட்டால் இதயத்தின் லப்டப் எகிறும் இரைச்சலைக்உணரலாம். அந்தக் கூடம் நீளமாகவும் விஸ்தாரமாகவும் இருந்தது. முன்வரிசையின்இடது ஓரத்தில் என் இருக்கையும் வலது ஓரத்தில் என்னைப் போலவேஇன்னொருவனின் இருக்கையும் அமைத்திருந்தன.அந்த இன்னொருவனும் என்னைப்போலவே வெகுநேரமாக வினாத்தாளை உற்றுப்பார்த்து மேல்மூச்சு வாங்கிக்கொண்டிருந்தான். அந்த இருக்கை,ஜன்னலோரத்தில் கிடத்தப்பட்டிருந்தது.ஜன்னலைத் தொட்டுக்கொள்ளும்படி புங்கமரமும் வேறொரு மரமும் காற்றை உமிழ்ந்து கொண்டிருந்தன.விட்டும் விடாமலும் மரத்தில் குந்தியிருந்த குயில்கள் மறந்துபோன பாடலை கிறீச்சிட்டன.அந்தக் கிறீச்சிடலின் ஓசை ரசிக்கும்படியில்லை.கத்தும் குயிலோசை காதில் குத்தல் எடுக்கிறது என பாரதி சொல்லியதைப்போல குயில்களின்பாடல்கள் எரிச்சலூட்டின.

தெரிந்த பதில்களைக் கொஞ்சம் போல கிறுக்கத் தொடங்கியதும் அதிகாலை சம்பவம்மெல்ல விலகுவதாகப்பட்டது.மீண்டும் சகஜ நிலைக்கு வந்துவிட இயலும் போலவே தோன்றியது.முதல் மணி அடித்தது.மூன்றாவது மணி அடித்தால் தேர்வு நேரம் முடிவதாக அர்த்தம்.அதன்பிறகும் நன்றாகப் படிக்கும் மாணவர்களின் விடைத்தாளை ஆசிரியர்கள் பலவந்தமாக பிடுங்க நேர்வதும் உண்டுதான். வருடத்தில் ஏனைய நாள்களில் படிப்பதை விடவும் தேர்வுக்கு முன்வாரங்களில் படிப்பது தேர்வுக்கு உதவி புரியும் என்பதை நான் அறியாதவனல்ல.ஆனாலும்,ஏதோ ஒரு அலட்சியம் என்னில் கடந்த சில வாரங்களாகத் தத்து கொண்டிருந்தது.வகுப்பில் கூட எனக்கு கிடைத்த வெளிச்சம் கவிதை எழுதுவதற்கு பாதி என்றால் மீதம் என் படிப்புக்காக என்பதை ஏனோ மறந்துபோயிக்கிறேன். எனக்கு முன்னால் கவிதை மீது ஆர்வம் கொண்டிருந்த்வர்களையும் இப்படியான அலட்சியம் அல்லது மறதிதான் காயப்பட்டுத்தியதோ தெரியவில்லை.என் சூழல் எனக்களித்த உற்சாகத்தையும் தைரியத்தையும் இந்தப் பொது தேர்வு பொய்யாக்கி விடுமோ என்று உள்ளுக்குள் உதறலெடுத்தது.முதல் மணி அடித்த பிறகு மாணவர்களுக்கு தண்ணீர் வழங்குவார்கள்.ஆசிரியர்களுக்கு தேநீர்த் தரப்படும்.
எல்லாப் பள்ளியிலும் இந்த நடைமுறையில்லை,எங்கள் பள்ளியில் தண்ணீரும் கிடையாது.தேநீரும் கிடையாது.இப்போது தேர்வெழுதும் பள்ளி அரசினர் பள்ளி என்பதால் இந்த நடைமுறை புதிதாகப்பட்டது.

தண்ணீர் வாளியைத் தூக்கிக்கொண்டு ஒரு வயதானவர் கூடத்துக்கு உள்ளே நுழைந்தார்.கையில் பிளாஸ்டிக் கோப்பைகள். வேட்டி கட்டும் பழக்கமுடையவர்.சட்டை கசங்கியிருந்தது.தோளில் நாலாக மடித்து கிடத்தப்பட்ட காடாத் துண்டு. தண்ணீர் கொடுக்க வந்தவரின் கண்கள் இயல்பாக இல்லை. சுழன்றுகொண்டிருந்தன.கலங்கரை விளக்கு போல என வசதிக்காக உவமை கூறலாம்.முன்வரிசையில் நான் இருப்பதால் என்னில் இருந்தே அவர் தண்ணீர் உபசரிப்பை தொடங்கும்படியாயிற்று.  கோப்பையை நீட்டியபடி குமாரா? என்றார். ஆம், என்றேன். வீட்டில் என்னை குமாரென்றே அழைப்பார்கள்.எனவே குமாரா என்றதும் என் தலை அனிச்சையாய் அசைந்து உதடு ஆம் சொல்லிற்று.வாளியைக் கீழே வைத்துவிட்டு நீரை கோப்பையில் அள்ளுவது போல குனிந்து இடுப்பில் பதினாறாக மடித்து வைத்திருந்த காகிதத்தை டொப்பென்று என் மேசையில் எறிந்தார்.நான் நிமிர்வதற்குள் பின் இருக்கைக்குப் போய்விட்டார்.

எனக்கு பயமும் நடுக்கமும் பரவ, முகம் இறுகி வேர்க்க ஆரம்பித்தது.கூடத்தை திருப்பிப் பார்த்தேன். தேநீர் குடிக்க போன ஆசிரியர்கள் திரும்பியிருக்கவில்லை.காகிதத்தைப் பிரித்துப்பார்க்க கை சில்லிட்டது.முதல் காதல் கடித்ததைப் பிரிப்பதுபார்க்கையில் எப்படி இருக்குமோ அதுமாதியாயென்று வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்கள் கற்பனைக்கு வேறு மாதிரி எதையாவது யூகித்துக் கொள்ளுங்கள், அந்த நொடியை எப்படி விவரிப்பது?

காகிதத்தில் சின்ன சின்ன எழுத்தில் ஒருவரி பதில்கள்.பொது தேர்வில் நாற்பது மதிப்பெண் வாங்கினால் தேர்ச்சி பெற்றுவிடலாம்.அக்காகிதம் நான் தேர்ச்சி பெறுவதற்கான பதில்களை கொண்டிருந்தது.இதற்கு முன்புவரை பிட் அடித்து பழக்கவில்லையாததால், என் சட்டையின் பின்பகுதி தொப்பலாக நனைவதை தவிர்க்க முடியவில்லை.முதுகு பகுதியில் யாரோ தட்டுவதை போல பிரமை ஏற்பட்டது.அத்தனை இக்கட்டிலும் காகிதத்தை பிரித்து வரிசையாக ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதப்பட்டிருந்த விடைகளை ஏற்கனவே நான் எழுதியிருந்த விடைகளோடு ஒப்பிட்ட போதுதான் தெரிந்தன எழுதியிருந்ததில் பெரும்பகுதி பிழையானவையென்று. அவசர அவசரமாக சரி செய்தேன். வலது ஓரத்தில் அமர்ந்திருந்தவன் என்னை முறைத்துக் கொண்டிருந்தான்.துண்டு காகிதத்தைத் தன்னிடம் தர ஜாடையில் மிரட்டினான்.அவன் ஜாடை ஆசிரியரிடம் என்னை காட்டிக் கொடுத்துவிடும் போல எச்சரிக்கை தொனியைவெளிப்படுத்திற்று.வயதானவர் கூடத்தின் நடுவில் நின்றிருந்தார். நொடிகள் அச்சத்தோடும் அதீத கவலையோடும் விரைந்து கொண்டிருக்கையில் நடுவில் நின்றிருந்த வயதானவர் மீண்டும் என்னை நோக்கி வருவது தெரிந்தது. முன்வரிசைக்கு வந்து என்னிடம் இருந்த துண்டுக் காகிதத்தை வெகு இயல்பாக வாங்கிக் கொண்டு வலது ஓரத்தில் இருந்து தண்ணீரைக் கொடுக்க ஆரம்பித்தார். யாவும் சில நிமிடங்களில் முடிந்தன. புங்கமரக் காற்றில் என் சட்டை உலரத் தொடங்கியது. குயில்கள் ரசிக்கும்படி பாடல்களை எழுப்பின.

தேனீர் குடித்துவிட்டு ஆசிரியர்கள் கூடத்திற்குள் நுழைந்தார்கள். கூடம் முழுக்க தண்ணீரைக் கொடுத்துவிட்டு துண்டுக் காகிதத்தை வைத்திருந்த வயதானவர் வெளியேறினார். மீண்டும் நிசப்தம் இரண்டாவது மணியடித்தது. வலது ஓரத்தில் எழுதிக்கொண்டிருந்தவன் விடைத்தாளை அப்படியே வைத்துவிட்டு யார் அனுமதியும் கோராமல் விருட்டென்று புறப்பட்டான். மூன்றாவது மணி அடிக்கும் வரை காத்திருந்து, எழுதியவற்றை நிதானமாக சரிபார்த்துவிட்டு வெளியே வந்தபோது வலது ஓரத்தில் அமர்ந்திருந்தவன் தண்ணீர் கொடுத்தவரை கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தான். அவனோடு நாலைந்து பேர் சூழ்ந்திருந்தார்கள். கடுமையான வார்த்தைகள், பெரியவரைக் குறுக வைத்தன.

“காசை வாங்கி விட்டு கவுத்திட்டியேடா” என்பது போன்ற மரியாதைக் குறைச்சலாக பெரியவரை அவர்கள் நடத்தினார்கள். நான் பிரேம்குமார். அவன் பிரதீப்குமார். இரண்டு பேரும் குமாராகவே வீட்டில் அழைக்கப்படுகிறவர்கள். அவன் தனிப்பயிற்சிப் பள்ளி மூலம் தேர்வெழுத வந்திருந்தவன். ஏற்கனவே விடுபட்ட பாடத்தை எழுதி இம்முறையாவது தேர்ச்சி பெறாலாமென கருதியிருப்பான் போல, அதற்காக பெரியவருக்குப் பணம் கொடுத்து ‘பிட்’டுக்கு ஏற்பாடு செய்திருக்கிறான். தனிப்பயிற்சிப் பள்ளி நடத்துபவர்கள், தேர்வு ஆரம்பித்ததும் வெளியில் இருந்து பதில்களை எழுதி தண்ணீர் இடைவெளியில் முதியவரிடம் கொடுத்தனுப்பியருக்கிறார்கள். உள்ளே எழுதிக் கொண்டிருப்பவனைப் பெரியவருக்குத் தெரியாததால், பிரதீப்குமாருக்குச் சேரவேணிடிய துண்டுக் காகிதம் பிரேம்குமாருக்கு வந்து விட்டது. இப்போது பிரேம்குமார் அதிர்ஷ்டக்காரனாகவும், பிரதீப்குமார் துரதிர்ஷ்டக்காரனாகவும் போய்விட நேர்ந்து விட்டது.

எத்தனை முயன்றும் சிலர் தங்கள் வாழ்வை எதிர்கொள்வதில் கோட்டை விட்டு விடுகிறார்கள். சிலர் எதுவும் முயலாமலேயே வாழ்வை இயல்பாக வெற்றி கொண்டுவிடுகிறாரகள். எனக்குப் பெரியவரையோ, ‘பிட்’டடிக்க ஏற்பாடு செய்பவர்களையோ தெரிந்திருக்கவில்லை. ஆனால், இத்தனையும் தெரிந்திருந்த பிரதீப்குமாருக்கு ஏனோ காலம் உதவி செய்ய யோசித்து விட்டது. தேர்வை வெற்றிகரமாக எழுதிவிட்ட திருப்தி இன்றும் எனக்கு ஏற்படுவதில்லை. அதிகாலையில் கவிதை எழுதிவிட்டு பரிட்சைக்கு வந்தவனுக்கு காலம் செய்த உதவியாகவே கருதிக் கொள்வேன். கவிதை என்னை தேர்வுக்கூடத்தில் இருந்தும் எளிதாக தப்பிக்க வைத்தது. நன்றாகப் படித்து என்பதைக் காட்டிலும், நன்றாக அடித்து தேர்ச்சி பெற்றுவிட எனக்கு யார் உதவினார்கள்! தனிப்பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்தவர்களா, தண்ணீர் கொடுக்க வந்த பெரியவரா, இல்லை.. என் அம்மாவின் பிரார்த்தனை, அப்பாவின் கருணை, ஆசிரியர்களின் நம்பிக்கை. கூடத்தில் இருந்து வெளியே வந்த என்னை, வலது ஓரத்தில் இருந்தவன் அடையாளம் கண்டுகொண்டு விரட்டத் தொடங்கினான். அவர்களிடமிருந்து தப்பிப்பதற்கு கண்ணாடி குத்தி காயப்பட்டிருந்த என் கால்கள் உதவவில்லை. ஆனாலும், நகரத்தின் மையத்தில் இருந்து வெகுண்டு ஓடி அரண்மனை வளாகத்திற்குள் பதுங்கினேன். அவர்கள் விரட்டிக்கொண்டே தொடர்ந்தார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: