யுகபாரதி

Archive for ஒக்ரோபர், 2009

நடைவண்டி நாட்கள்: பதினாறு

Posted by யுகபாரதி மேல் ஒக்ரோபர் 30, 2009

முதல் நாள் பள்ளிக்கூடத்தைப் போல முதல்நாள் கல்லூரியும் எனக்கு அச்சமே மூட்டியது. வீட்டை விட்டுப் பிரிந்து வாழப் போகிறேன் என்ற தயக்கமே அச்சத்தின் முதல் காரணம் என்றாலும், அந்தக் காரணத்தை யாரிடமும் காட்டிக் கொள்ளாமல் கிளம்பினேன்.முதல் நாள் கல்லூரி ஆசிரியர் பெற்றோர் சந்திப்போடு தொடங்கியது. வழக்கமான பல்லவிகள்தான். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கூடுதல் அக்கறையுடன் கண்காணிக்க வேண்டும் என்று ஆசிரியர்களும், ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளைக் கூடுதல் அன்போடு நடத்த வேண்டும் எனப் பெற்றோரும் மாறிமாறி உரையாற்றி முடிக்க, மதியம் ஆகிவிட்டது. உணவு முடித்து விடுதியில் தங்கிக் கொள்ளும் படிவங்களை வழங்கினார்கள். அறைக்கு மூவர் எனும் கணக்கில் வெளியூர் மாணவர்கள் தங்கிக்கொள்ள அந்த விடுதி போதுமானதாகவே இருந்தது. நல்ல கட்டிடம். காற்றும் சூரிய வெளிச்சமும் ஜன்னல் வழியே ஊடுருவும். குறைந்த அளவே பெண்கள் என்பதால் அவர்களுக்கு விடுதி ஏற்பாடுகள் இல்லை. தனித்தனியாக அவர்கள் தங்கள் சொந்த முயற்சியில் தங்கிக் கொள்ள வேண்டும்.
இன்னும் பெருவளர்ச்சி கண்டிராத அவ்வூரில் இந்தக் கல்லூரி அமைந்திருப்பது கிராமப் பகுதி மாணவர்கள் படிக்க வசதியாக இருக்கிறது. முதல் தலைமுறை படிப்பாளிகளின் உள்ளமும் ஏக்கமும் என்னை அடிக்கடி யோசிக்க வைப்பதுண்டு. தன் படிப்பால்தான் தன் குடும்பமே தலைநிமிரப் போகிறது என்ற எண்ணமே என் அறையில் இருந்த காரை சௌந்தர்ராஜனையும் திருச்சி ரகுபதியையும் என்னைவிட படிப்பில் அதிக கவனம் செலுத்த வைத்தது.

சௌந்தர்ராஜன் அறையைச் சுத்தமாக வைத்திருப்பான். ரகுபதிக்கு பாடப் புத்தகம் போலவே இதர புத்தகத்திலும் ஆர்வம் அதிகம். முதல்வாரம் முழுக்க ராகிங் எனும் வினோத பழக்கத்தில் கழிந்தது. இரண்டாம் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் முதலாமாண்டு மாணவர்களை அறிமுகப்படுத்திக் கொள்ள ராகிங் சரியான வாய்ப்பு என்பார்கள். எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் ராகிங் வளையத்தில் சிக்காமல் தப்பிக்க முடியவில்லை. ஆனால் முதல் வாரத்திலேயே கல்லூரி முழுக்க என் கவிதை ஆர்வ செய்தி பரவியிருந்தது. அதனால் இரண்டாம் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பெரும்பாலும் ராகிங்கில் என்னிடம் கவிதை சொல் என்றுதான் கேட்பார்கள். நான் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடி அவர்களை மகிழ்ச்சிபடுத்த, இரண்டாவது சந்திப்பிலேயே அவர்களில் பலரும் நண்பர்களாகிவிட்டார்கள்.

வெள்ளிக்கிழமை மதியம் வரைதான் கல்லூரி வாசம். பிறகு ஊருக்குக் கிளம்பிவிடுவேன். அங்கிருந்து இரண்டு மணிநேரப் பயணத்தில் தஞ்சைக்கு வந்துவிட முடியும் என்பதால் அம்மாவும் நான் வாரக்கடைசியில் வீட்டுக்கு வருவதையே விரும்பினாள். இரண்டு நாளும் வீட்டில் போடாத ஆட்டமெல்லாம் போட்டுவிட்டு மீண்டும் திங்கட்கிழமை அதிகாலை கிளம்பி அறந்தாங்கிக்குப் போய்ச்சேருவேன்.என்னுடன் தஞ்சையில் இருந்து ராதாகிருஷ்ணனும், சீனிவாசனும் அதே கல்லூரியில் படித்தபடியால், பயணத்தில் மூவரும் நல்ல நண்பர்களாக இருக்க நேர்ந்தது. சீனிவாசனின் தந்தை கண்ணபிரான் என் அப்பாவின் சினேகிதர். நாங்கள் இணைந்தே கல்லூரிக்குப் போய் வருவது, அவருக்கும் அப்பாவுக்கும் ஒருமித்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

என் படிப்பு காலத்தில் நான் தவறவிடக்கூடாத பெயர் ஒன்று இருக்கிறது. என் வாழ்நாளில் நான் தவறியும் அந்தப் பெயரை மறந்துவிடுவேனாயின் என் தேகத்தின் செல்கள் சிதிலமடையும். எளிமையான அன்புதான் எல்லாவற்றிலும் தனித்து நிற்பது.கல்யாணராமன் எளிமையான அன்பாளர். ஆனால் அவருடைய அன்பு எளிமையானதல்ல. பூச்சந்தை முருகன் கோவில் புரோகிதராகப் பணியாற்றி வந்த அவர், என் அப்பாவின் சொல்லுக்கு எப்போதும் மதிப்பு தருபவர். மதிப்பு என்றால் அப்படியொரு மதிப்பு. சுப்பிரமணிய கடவுளைப் போல அப்பாவை வணங்குவார்.என்னைவிட ஆறேழு வயதே மூத்தவரான அவர், என்னையும் அவர் தம்பி போலவே நடத்துவார். கோவில் அர்ச்சனை தட்டில் விழும் சில்லறைக் காசுகளை திருநீர் வாடையோடு எடுத்துவந்து, என் கவிதை வெளிவரும் இதழ்களை வாங்கித் தருவார்.அவர் வாங்கித் தரும் இதழ்கள் பிராமணர்களை மிகக் கேவலாக விமர்சிப்பதாகக் கூட இருக்கும். என்றாலும் அதைப் பற்றியெல்லாம் அவர் பெரிதுபடுத்துவதில்லை.தம்பி கவிதை வந்திருக்கிறது… எனவே அந்தப் பத்திரிகை சிறப்பானது எனக் கொண்டாடுவார்.

ஒருமுறை, வருடம் நினைவில்லை…. ஒரத்தநாடு பகுதியில் தலித் ஒருவரின் கைக் கட்டை விரலைத் துண்டித்த சம்பவம் நிகழ்ந்தது. ஒரத்தநாடு தஞ்சையிலிருந்து சில தொலைவில் அமைந்திருக்கும் ஊர்.பிரச்னை தஞ்சை மாவட்டத்தையே உலுக்கிவிட்டது!அதைக் கண்டித்து ‘தப்போசை’ என்றொரு கவிதை எழுதி உண்மை இதழுக்கு அனுப்பி வைத்தேன். கவிதை முதல் பக்கத்தில் அச்சாகியிருந்தது.உண்மை பத்திரிகை திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ ஏடு. அதில் கவிதை வெளிவந்தபடியால், தஞ்சை முழுவதும் என் பெயர் ஒருமுறை அழுந்தப் பதிந்தது. அந்தக் கவிதை வெளிவந்த இதழை தன் தடதடக்கும் மிதிவண்டியில் போய் திருநீறு காசில் வாங்கி வந்தவர் கல்யாணராமன்தான்.எத்தனை அதிசயமான மனிதர்கள் நம்மிடையே வாழ்ந்து வருகிறார்கள்!

சாதியும் மதமும் சடங்கும் ஆச்சாரங்களும் அவர்கள் அன்பு மனதை எதுவும் செய்துவிடுவதில்லை. நேயமற்ற பெயரால் உணராமல் தினசரி நிகழ்வாகக் கொண்டிருக்கிறார்கள். கல்யாணராமன் பெரும்பாலும் திங்கட்கிழமை அதிகாலை வந்து என்னைக் கல்லூரிக்குப் பயணப்படுத்த உதவுவார்.
தன்னிடம் இருக்கும் திருநீறு ரொக்கத்தை வீட்டில் யாருக்கும் தெரியாமல் என் பாக்கெட்டில் திணிப்பார். வீட்டில் பயணத்திற்கு மட்டுமே பணம் தருவார்கள். இதர செலவுகளுக்கு கல்யாணராமனே கருணை புரிவார். திடீரென்று ஏதாவது ஒரு புதன்கிழமையோ, வியாழக்கிழமையோ மதியவாக்கில் கல்லூரிக்கும் வந்து அதிர்ச்சி தருவார். கைநிறைய பொட்டலங்களோடு அவர் வருவதால் விடுதி முழுக்க கல்யாணராமன் விசேஷ நபராக அறியப்படுவார்.அவர் அன்பை சிலாகிக்க தொடங்கினால், எத்தனை அத்தியாயம் பிடிக்குமோ?

அவர்களை எல்லாம் நான் இன்றுவரை இழக்கவில்லை. அவர்களும் என் சின்ன உயரம் குறித்த பெருமிதத்தை உள்ளூர ரசித்து வருகிறார்கள்.
கல்லூரியில் எனக்குக் கிடைத்த இன்னொருவர் தேனி கணேசன். அப்போது ஜூனியர் போஸ்டில் அனுசன் என்ற பெயரில் நிறைய எழுதிக் கொண்டு வந்தார். நல்ல சுறுசுறுப்பான எழுத்து அவருக்கு இயல்பாக வாய்த்திருந்தது. இரண்டாம் ஆண்டு மாணவர் என்றாலும், முதலாம் ஆண்டு படித்த என்னுடனேயே அவருடைய பொழுதுகளை அதிகமும் செலவிடுவார்.பத்திரிகை துறையில் முக்கியமான இடத்தை எட்டவேண்டும் என்பது அவர் கனவாக இருந்தது. அதற்கான உழைப்பில் சதா உழல்வார். மாணவர்களிடம் கருத்து கேட்டு, பல்வேறு விஷயங்களை பல பத்திகளை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பார்.அவர், அப்படி எழுதி யதேச்சையாக ஒருமுறை எனக்குப் பெண்வேடமிட்ட புகைப்படம் ஒன்று சிறுகதைக் கதிரில் வெளியாகிவிட்டது. கல்லூரியில் பயிலும் பெண்கள் எல்லாம் என்னைப் பார்த்து துப்பட்டாவால், வாய்மூடி சிரித்தது நல்ல நகைச்சுவை.
அந்தச் செய்தியால் பின்வரும் காலங்களில் கல்லூரியில் உள்ள பெண்கள் அத்தனை பேருக்கும் நான் காதலனாகும் வாய்ப்பு ஏற்படாமலேயே போனது. அனுசன் எழுதிய செய்திகளிலேயே மிக முக்கியமான செய்தி போல அது அமைந்துவிட்டது. தினசரி இரவு எங்கள் கல்லூரி விடுதியின் மொட்டைமாடியில், கவிதை விளையாட்டுகள்தான். நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை மாணவர்கள் சூழ அமர்ந்து ரசிப்பார்கள். அந்த ரசனைக்கு இடையிடையே துணுக்குகளும் கிண்டல் பேச்சுக்களும் தொடர்ந்தபடி இருக்கும்.நான்கு ஆண்கள் ஒன்று கூடினால் ஒரு பெண்ணின் அந்தரங்கம் பேசுபொருளாகிறது என்ற கரிகாலனின் கவிதையை நான் சொல்லிக் கொண்டிருக்கையில், கூட்டத்திலிருந்து எழுந்த சந்திரபாபு, எங்கள் விடுதிக் காப்பாளரின் பெண் சினேகித விஷயம் ஒன்றை அவிழ்க்கத் தொடங்கினான்.

Advertisements

Posted in தொடர்பதிவு | குறிச்சொல்லிடப்பட்டது: | Leave a Comment »