யுகபாரதி

மனதின் பக்குவம் – வெங்கட் சுவாமிநாதன்

Posted by யுகபாரதி மேல் ஒக்ரோபர் 2, 2009

1998 ஆரம்பத்தில் வெளிவந்த மனப்பத்தாயம் கவிதை தொகுப்பில், யுகபாரதிக்கு வயது 22 என்று அவருடைய நெருங்கிய நண்பர் சரவணன் சொல்கிறார். பிறந்த மண் தஞ்சை. யுகபாரதிக்கும் செங்கொடிக்கும் அது வளர்கொடி. இளம் வயதின் ரத்தச் சூட்டின் கொதிப்பில் கம்யூனிஸ்ட் ஆகாதவன் ஒருத்தன் இருப்பானாகில் அவனுக்கு இருதயம் இருக்கிறதா என்று சந்தேகப் படவெண்டும். நாற்பது வயது முதிர்ச்சிக்கும் அப்பால் அவன் கம்யூனிஸ்டாகவே இருப்பானாகில் அவனுக்கு மூளை இருக்கிறதா என்று சந்தேகிக்கவேண்டும் என்பார்கள். வயது 22. அப்பா கம்யுனிஸ்ட். செங்கொடிகள் விளையும் தஞ்சை செம்மண். இருப்பினும் வணக்கம் காம்ரேட் என்னும் விமர்சனமும், கேலியுமான கவிதை யுகபாரதியிடமிருந்து வெளிவருகிறது. இதைவிடக் கேவலமான நிலைமை ஒரு கட்சிக்கு வரக்கூடுமா? தமிநாட்டு கம்யூனிஸ்ட்களைக் கண்டால் யுகபாரத்திக்கு கோபம் அதிகமா? கிண்டல் அதிகமா? என்று என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியாது.6ம் தேதி செயர்குழு கூட்டத்திற்கு 5ம் தேதியே அம்மாவின் நகைகளை அடகுக்கடைக்கு எடுத்துச் சென்று 10ம் தேதி புரட்சி வரும் என்று காத்திருக்கும் அப்பாக்கள் இருக்கும் போது கோபம்தான் வரும். நாள்கள் கழிய நல்ல காலங்களில் இக்கோபம் தணியும். ஆனால் இது அப்பாவின் மனநிலையை பொருத்த விசியம்மல்ல. 50வருடங்களாகப் பக்கத்து வீட்டு கிறிஸ்த்தவத் தாத்தா சொல்லிவரும் “இயேசு வருகிறார் இதோ” போலத்தான் கம்யூனிஸ்ட்களின் புரட்சி வருகையும் என்ற கேலி. விவரம் தந்த புத்தி தந்த தெளிவு. 22 வயது இளம் வாலிபனிடம் கூட தன் ரொமாண்டிக் கனவுகளை விற்கமுடியாமல் போய்விட்ட பரிதாப விதி இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் இன்றைய நிலை.

இங்கு நான் சொல்ல வந்தது கம்யூனிஸ்ட் கட்சியின் கேலிக்கிடமாகிவிட்ட சரித்திரத்தை அல்ல. 22வயதின் உணர்ச்சிக் கொதியில்கூட எதன் தோற்றத்தையும் நம்பாத ஒரு மனதின் பக்குவத்தைப் பற்றிதான். இந்த மனதிற்குத் தன்னைச் சுற்றிக் காணும் எதைக் கண்டாலும் கேலியாகத் தான் இருக்கிறது. கேலி செய்யும் இந்த மனதும் முனைப்பும் மிக ஆரோக்கியமானவை. ஏனெனில் இவரையும் நமையும் சேர்த்து சுற்றியுள்ள எல்லோரும் உண்மையில் கேலிக்குரியவை தான். ஆனால் அவை உன்னதமான போற்றப்படுகின்றனவே என்றால், அப்போற்றுதலும் போற்றும் நாமுன் கேலிக்குரியவர்தாம்.எலியின் நகல்கள் என்னும் கவிதையில் தமிழ் வாழ்க்கை எங்கும் , மந்திரி வீடு, அதிக வட்டி தருவதாகச் சொல்லிம் நிதி நிறுவனங்கள் என எல்லாத் தளங்களிலும் பரவிக்கிடக்கும், அதிகாரக் கோலோச்சும் எலிகள் பேசப்படுகின்றன. இந்தக் கேலி சமூக விமர்சனமாக யுகபாரதியின் கவிதைகள் அனைத்திலும் பற்பல ரூபங்களில் வெளிப்படுகின்றன. பல இடங்களில் நகைச்சுவைத் துணுக்குகளாகக் கூட.

இருவர் பையிலும்
பணமில்லை.

இப்போதைக்கு
சொல்லிக்கொண்டு
தப்பிப்போம்
தேநீர் பழக்கம்
தேவையற்றதென

இம்மாதிரியான விடலைப் பிள்ளை சேட்டைகள் நிறையவே உண்டு. எதையும் நக்கல் செய்யும் ஆரம்பங்களிலிருந்துதான் கேலி, சமூக விமர்சனமாகவும், வெற்றுப் பெருமை கண்டு ஏளனமும் பொது வாழ்க்கை அனைத்திலும் காணும் விடம்பனமுன் இலகுவாக, இயல்பாக, இவர் கவிதைகளில் வெளிப்படுகின்றன. யுகபாரதியின் மிகச் சிறந்த இயல்பு இந்த விடம்பனம் தான். அது சமூக விமர்சனமாகவும் கவிதையாகவும் கிளைக்கும்போது அது இன்றைய தமிழுக்குச் சிறப்பான வருகையாகிறது. இந்தக் கேலியும், விடம்பனமும் வாழ்க்கையின் எல்லா மட்டங்களையும் தளங்களையும் சுட்டிச் செல்கிறது.

குடும்பத்தில் அம்மாக்களிடம் அப்பாமார்கள் செய்யும் குருட்டு அதிகாரத்திலிருந்து

நோய் கொண்ட
வைப்பாட்டியை
நெருங்கும் போதும்
அப்பாமார்களுக்கு
அவசியப்படுவதில்லை சுத்தம்.

நாட்டின் சீரழிவும், பழம் பெருமை பேசியே பதவி காக்கும் அரசியலும், சாதி ஒழிப்பு பேசும் பொய்ம்மையும், இப்படி எத்தனையோ.

சோறுடைத்த
சோழ வள நாடு
சோத்துக்கில்லாமல்
பக்கத்தூர்
பனியன் கம்பெனிகளில்

வறுமையை மாத்திரம் சொல்லவில்லை. சோறுடைத்த சோழ வள நாடு என்னும் பழம் பாடல்வரி ஒரு அரசியல் கருத்து வெளியீடாகவே( ஆகிறது. அதில் பழம் பெருமை பேசும் குணத்தை சுட்டுதலும் மறைந்துள்ளது. அடுத்ததாக் இது சோழ நாடு மாத்திரமல்ல, தமிழ் நாட்டிற்கே குறியீடாகவும் ஆகிறது. இதகைய சொல்லாட்சியை யுகபாரதியின் கவிதைகளில் நிறையக் காணலாம். இக்கவிதையின் வேகம், இதில் காணும் மரபார்ந்த எதுகை நயத்தால் மட்டும் பிறந்ததல்ல. இதற்கும் மேலாக பிரந்த கருத்தமைதியில் பிறந்தது. இக்கருத்தமைதிதான் இதன் சிறப்பான விடம்பனத்திற்கு இட்டுச் செல்கிறது.

கீதையும்
காம சூத்ராவும்
வெவ்வேறல்ல
கரையான்களுக்கு

என்னும் போது மரபான யாப்பு யுகபாரதிக்கு கைகொடுக்கின்றதென்றாலும், அது கீ, கா என்ற தேர்வினால் அல்ல. கீதையும் காமசூத்ராவும் சுட்டி நிற்கும் கருத்து தேர்வு தான் முடிவானதாகிறது. விடம்பனத்திற்கு இட்டுச் செல்கிறது. கரையான்கள், இன்றைய அரசியல்வாதிகளுக்கும் வியாபாரிகளுக்கும் குறியீடானால், இக் கரையான்களுக்கு வெங்காய மூட்டைக்கும், திருவெண்காடு வெண்கல சிலைக்கும் வித்தியாசம் தெரியாத, எல்லாமே கள்ள வியாபாரத்திர்கு, பணம் பண்ணுவதற்கு என்ற்ய் கொள்ளலாமே. இது வாழ்க்கையின் நிதர்சனம் தானே. அப்பா, குடும்பம், வறுமை, கட்சி, பழம் பெருமை பேசும் அரசியல், காட்சிக்குக் காட்சி பொய் வேடம் தரிக்கும் சமூக அலைகள் எல்லாம் நம்மை வருத்துவது போல, யுகபாரதியையும் வருத்தியுள்ளன. அவை அவரிடம் சீறலாக வெளிப்படுவதில்லை. விடம்பனமாக வெளிப்பாடு பெறும் போது அது பல தளங்களில் இயங்குகிறது.

பலநேரங்களில் யுகபாரதி எனக்குப் புதுமைப்பித்தனையும் பிச்சமூர்த்தியையும் நினைவுபடுத்துகிறார். ஒருவரிடத்தில் கேலியும் மற்றவரிடத்தில் விடம்பனமும் இரண்டிலுமே சமூக விமர்சனம். இருவரிடமும் கவிதை, யாப்பை, சந்தத்தை, முற்றாக ஒதுக்கியதாகச் சொல்லமுடியாது. அதற்காக அதையே கட்டுயழுது, கருத்தையும், கவிதையும் கோட்டைவிட்டவர்களும் இல்லை. சீர் பற்றிய கவலை இல்லாத ஒரு மெல்லிய ஓசை நயம் தொடர்ந்து வர இரண்டிரண்டு வார்த்தைகளாக, ஒரு கருத்தின் முழுமையாக கவிதையில் வேகத்தைக் கொணரும் பாங்கு. இப்படி நிரைய நான் சொல்லிக் கொண்டுபோகலாம். ஆனால் அவர்கள் இருவரிடமும் இல்லாதது, யுகபாரதியிடம் மாத்திரம் காணும் குணம். இந்த வாலிப வயதிற்கு உரிய விடலைத் தனம். நகைச்சுவைத் துணுக்களாகக் காணும் கவிதைகளின் விடலைத்தனம். இதிலிருந்து பெற்ற வளர்ச்சிதான் விடம்பனம். விடலைத்தனத்தில் எதையும் மதிக்க மறுக்கும் துணிவு காணும். அது “தேர்தல்” “பலி” “பொய்ப் புராணம்” “வணக்கம் காம்ரேட்”போன்ற கவிதைகளில், நிறைய கவிதைகளில், ஆரோக்கியமான உதாசீனம், பொக்கையான பவிஷீகளையும், போலியான டாம்பீகங்களையும் கண்டு மலைக்க, வணங்க மறுத்தல், அது அப்பாவோ, கட்சியோ கொள்கையோ, தமிழ் வாழ்க்கையோ, நாம் இன்று போற்றும் பொய்யான எத்தனையோ. அத்தனையும் இருக்கும். வாலிபப் பருவத்து சேட்டைகளின் கேலித் துணுக்கோ என்று சொன்ன எல்லாம் அப்படி இல்லை. அதற்கு மேல், அவற்றில் காண ஒரு ரசிக்கத் தக்க புதிய கோணமும் தென்படுகிறது.

கொடியில் காய்ந்த
துணியெடுக்கும்
அவசரத்தில்
ஒருமுறையேனும்
மழையை
முழுதாய்
ரசித்ததில்லை
அவள்

இதில் “ஒருமுறையேனும்” “முழுதாய்” இரண்டும் அநாவசியமாகப்பட்டது. இருப்பினும் மழையின் ரசனையைப் பற்றிய எனக்கு சுவாரஷ்யமாக இருந்தது. மழையை அடுத்து “முழுதாய்” வரவேண்டுமெந்தற்காகவே, எனினும் இப்படிச் சில இடங்களில் வார்த்தைகள் அவசியமில்லையோ என்று எனக்குப்படும். இதே போல, “அப்பா” என்ற கவிதையில் , அப்பா வெற்றிலை போடுவதும் இவர் கவிதை எழுதுவதும் இணைத்துப் பேசப்பட்டுள்ளது மிக அழகாய் வந்துள்ளது. கவிதையின் வெளிப்பாடும் சரி, வெளிப்பட்ட பார்வையும் சரி, யுகபாரதியின் கவிதையாக்கலின் சிறப்பிற்கு இரண்டு பத்திகளையாவது கோடி காட்டவேண்டும். ராகு கால காளி கவிதையிலிருந்து:

ஆடி அடங்கிவிட்ட
அடை மழையாய்
உன் பெருமை
குடிசை தரை போல
குறிப்பிருக்குக்
கல்வெட்டில்

பேசிப் பேசியே
கழிந்தன
ஐம்பதாண்டுகள்
பேசியவை
பிழையென இனிப்
பேசலாம்

கட்சிச் சூழலில் பிறந்து, மரபும் யாப்பும் கற்று, வெளிவந்த இளைஞன் இத்தகைய கவிதையாற்றும் பார்வையும், விமரிசனமும் விடம்பனமும் கொண்ட யுகபாரதியானது ஆச்சிரியம்தான்.

(வெங்கட் சுவாமிநாதன் அவர்கள் கணையாழியில் எழுதிய இக்கட்டுரை வெளிவந்த சமயத்தில் பெரும் கவனம் பெற்றது. )

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: