யுகபாரதி

நடைவண்டி நாட்கள்: பதினொன்று

Posted by யுகபாரதி மேல் ஒக்ரோபர் 3, 2009

நான் இதற்கு முன் கேள்விப்பட்டிருந்த ஆனால், பார்த்திராத கலவர பூமியாய் சென்னை மாநகரம் மாறிப்போன நாள் அது. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் செல்வி.ஜெயலலிதாவின் கைதுக்காக எதிர்கட்சிகளும் பத்திரிகைகளும் செய்தி பரிமாறின. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு. ஒரு ரூபாய் சம்பளம் பெற்றுவந்த முன்னாள் முதல்வருக்கு எப்படி இத்தனை கோடி சொத்து சேர்ந்தது? நினைத்தால், அரசியல் சதுரங்கத்தில் மக்கள் வெட்டுப்படும் போதெல்லாம் காய்கள் நகர்த்தப்படுகின்றன.

பாலாவோடு அன்று வித்யாசங்கரை சந்திக்க வைத்திருந்த திட்டத்தை சரவணன் மீண்டும் நினைவுபடுத்திக் கிளம்பச் சொன்னான். ஊரே அமளி துமளி பட்டாலும் கூட எங்களுக்கு எங்கள் பிரச்சனை. சொத்து சேர்த்த வழக்கு ஒருவர் மீது தொடுக்கப்பட்டு கைது செய்யப்படுகையில் இன்னொரு புறம் சோத்துக்கு வழியில்லாமல் வாழும் ஒருவனின் பிரச்சனை. நடந்தே போய்விடலாம் என்றான் பாலா. அலுவலகம் தி.நகரில் இருந்தது.நாங்கள் போய்ச்சேர்ந்த போது தி.நகரில் உள்ள கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. அமைதி, அச்சத்தால் வரவழைக்கப்பட்டிருந்தது. பெரிய பெரிய கடைகள். வியாபார மையமாக இன்று மாறியிருக்கிற தி.நகர் அப்போதுதான் வளர்ச்சியை நோக்கி விரைந்து கொண்டிருந்த தருணம்.ஊரே மூடப்பட்டிருக்கையில் ‘ராஜரிஷி’ அலுவலகம் திறந்திருக்குமா என்றேன் பாலாவிடம். அது, பத்திரிகை அலுவலகம். இம்மாதிரியான நேரங்கள் தானே அவர்களுக்கு முக்கியம். எனவே, கண்டிப்பாக திறந்திருக்கும் என்றான்.

ராஜரிஷி அலுவலகம், ஒரு குறுகலான சந்தில் முதல் கட்டிடத்தின் மேல்தளத்தில் அமைந்திருந்தது. படிக்கட்டுகளில் ஏறும்போது கொஞ்சம் படபடப்பாகவும் நடுக்கமாகவும் இருந்தது. வரவேற்பறையில் ஆசிரியரைச் சந்திக்க விரும்புவதாக கூறினோம். காத்திருக்கச் சொன்னார்கள். அழைப்பு வந்ததும் உள்ளே போனால் கண்ணாடிக் கூண்டுக்குள் வித்யாசங்கர்.’சந்நதம்’ நூல் பின்னட்டையில் ஏற்கனவே நான் பலமுறை பார்த்திருந்த பரவச முகம். முகம் தெளிந்திருந்தது. லேசான் தாடி. நரைகள் ஆங்காங்கே பூத்திருந்தன. ஏறு நெற்றி. புன்னகை சிதற வரவேற்றார். சின்ன அறிமுகம்.பின் என் கையில் இருந்த கவிதை ஆல்பத்தை நீட்டினேன். பரபரப்பில்லாமல் பக்கம் பக்கமாகப் புரட்டிக் கொண்டே என் விபரம் முழுக்க விசாரித்தார். எனக்கு அவர் கவிதைகளை அவரிடம் சொல்லிக்காட்டும் ஆர்வம். அவருடைய கவிதைகள் எனக்குள் எறிந்துவிட்டுப் போயிருந்த எறிகுண்டை எப்படியாவது என் வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்த துடித்தேன். நமக்கு பிடித்த ஒருவரின் எழுத்தை அவரிடமே உட்கார்ந்து பகிர்ந்து கொள்வது தனி இன்பம். தொகுப்பு முழுக்க எனக்கு மனப்பாடம் என்பதால் அத்தனைக் கவிதைகளையும் வரிசைக் கிரமமாக அவரிடம் ஒப்புவித்தேன். அவர், பெரிதாக எந்த உணர்வையும் வெளிப்படுத்த விரும்பவில்லை. ஒரு நிலையை எட்டிவிட்ட பிறகு அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் போல.

“என்ன செய்கிறீர்கள்?” என்றார். அக்கேள்விக்கு என்னால் பதில் சொல்ல இயலாமல் தவித்ததைப் புரிந்து கொண்டார். இடையிடையே என் பேச்சிலிருந்தே என்னைப் பற்றிய தகவல்களையும் சேகரித்துக் கொண்டார்.செய்தித்தாள் பார்த்திருப்பீர்களே! அதைப்பற்றி எழுதிக் கொடுங்கள் என்றார். கைது பற்றித்தான் சொல்கிறார் என உணர்ந்தும், ஆதரித்தா? எதிர்த்தா? என்று கேட்டேன். என் கேள்வி அவரைப் புன்னகைக்க வைத்தது. நாடே ஆதரிக்கும் ஒரு கைதை எப்படி எதிர்த்து சொல்வீர்கள் என்றார். நீண்ட அமைதிக்குப் பின் நம்முடைய பத்திரிகைக்கு என்று ஒரு பாலிஸி இருக்குமே, அதற்காகக் கேட்டேன் என்றேன். சரிதான் என்பது பொல தலையசைத்தார்.

கண்ணாடிக்கூண்டுக்கு வெளியே இடுங்கலான ஒரு பகுதியில் சின்ன மேஜை போடப்பட்டிருந்தது. பாலாவுக்கு என் முனைப்பும் அவர் உபசரிப்பும் ரொம்பவே பிடித்துப்போனது. நீ எழுது பாரதி, நான் அமர்ந்து கொள்கிறேன் என வரவேற்பறைக்குப் போய் செய்தித்தாள்களைப் புரட்டத் தொடங்கினான்.முதல் முதலாக பத்திரிகை அலுவலகத்தில் உட்கார்ந்து நான் எழுதிய கட்டுரை அது. ஒரு மாபெரும் அரசியல் கட்சித் தலைவரை காத்திரமான சொற்களால் என்னாலும் கண்டிக்க முடிந்தது. எழுத்தினால் சாத்தியமாகும் கோபத்தை வைத்து சமுதாயத்தை அங்குலமேனும் அசைத்து விடமுடியும் என்ற நம்பிக்கையை அந்த எழுத்தும், அந்த மேஜையும் எனக்குள் ஏற்படுத்தின.

கட்டுரையை முடித்து அவரிடம் நீட்டினேன். ஒரே மூச்சில் வாசித்து நிமிர்ந்தார். பெரிதாக எதையும் காட்டிக்கொள்ளவில்லை. பாராட்டுவது போல சின்ன புன்முறுவல் கூட அவரிடமிருந்து வெளிப்படவில்லை. “நாளை வருகிறீர்களா?” என்று மட்டும் கேட்டார். ஏன் என்று கேட்குமளவுக்கு துணிச்சல் வரவில்லை. சரியென்று தலையசைத்துவிட்டு பாலாவுடன் விடுதிக்குத் திரும்பினேன். பாலாவுக்கும் குழப்பம்தான். எழுதியதைப்பற்றி எதுவுமே சொல்லாமல் எதற்காக நாளையும் வரச்சொல்கிறார் என்பது புதிர்மேல் விழுந்த புதிராக இருந்தது. ஆனாலும், பரவாயில்லை பாரதி, அவர் அழைக்கிறார் நாளையும் வருவோம் என்றான்.

சரவணனிடம் வித்யா சங்கரைப்பற்றி வாயாலேயே விவரணப்படம் எடுத்தேன். இழுத்து விட்ட புகையோடு அவன் சிலாகித்தான். எழுதிய விஷயங்கள் பற்றியும் அரசியல் கட்டுரைகளின் அவசியம் பற்றியும் பேச்சில் ஆழ்ந்து போனான். பாலாவும், எட்வினும், ரகுபதியும் கூட அவர்கள் அறிந்த அரசியல் கட்டுரைகளைப்பற்றி பகிர்ந்து கொண்டார்கள். ஒரு விளக்கிலிருந்து ஓராயிரம் விளக்குகள் கிளைப்பது போல.

மறுநாளும் போனோம். அன்றும் செய்தித்தாள்களைக் கையில் கொடுத்து அதே மேஜையில் அமர்த்தினார். அலுவலகப் பையனை அழைத்து தேனீர் கொடுக்கச் சொன்னார். இரண்டாவது சந்திப்பு பெரும்பாலும் நெருக்கத்தை கூட்டிவிடுகிறது. இணக்கமும், உரிமையும் ஏற்கனவே தெரிந்தவர் என்கிற பாவனையும் கூடுதல் மகிழ்ச்சியை நமக்குள் ஏற்படுத்தி விடுகிறது. வழக்கம்போல பாலா செய்தித்தாள்களைப் புரட்டி களைக்கும் நேரத்தில் எழுதி முடித்து வித்யாசங்கரிடம் காட்டிவிட்டேன். ம்… சரியாயிருக்கு, நாளை வாங்க என்றார். அப்போதும் எனக்குள்ள தயக்கத்தில் தலையசைத்தேன்.

பாலாவுடன் நடந்து விடுதி திரும்புகையில் கலவரம் குறைந்ததற்கான அறிகுறியை திறந்திருந்த கடைகள் காட்டின. பசி, பணமில்லை ஆனாலும் வாழ்வை நகர்த்திவிட இயலும் என்ற நம்பிக்கை முளைத்தது. நம்மை எழுத வைத்து வாங்கிக் கொள்கிறார். உண்மையில், அது பயிற்சியா, பிரசுரத்திற்காக வாங்கிக் கொள்கிறாரா தெரியவில்லை. என்றாலும் அந்த அனுபவம் ருசிகரமானதாகவே இருந்தது.மேஜையில் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கையில் நமக்காக ஒருவர் தேனீர் கோப்பையை நீட்டுவதும், எழுதிக்கொண்டே ஜாடையில் வைத்து விட்டுப்போங்கள் என்பதும் கூட நன்றாயிருக்கிறது. சமூகத்திற்காக உழைக்கிறோம். எனவே, சமூகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் நம்மால் பயனைடையப் போகிறான் என்பது போன்ற செல்லக் கர்வம் அது.

சுந்தரபுத்தன், நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு அருகிலேயே ஒரு மேன்சனுக்கு குடிபெயர்ந்திருப்பதாகவும், நாமும் அங்கே தங்கிக் கொள்ளலாம் என்று விருப்பம் தெரிவித்ததாகவும் சரவணன் கூறினான்.அம்பேத்கர் விடுதி பழகி விட்டது. நண்பர்கள் அன்பால் செளகர்யப் படுத்திக் கொண்டிருந்தார்கள். எப்பவும் அரட்டை அடிக்க, படித்ததைப் பற்றி விவாதிக்க யாராவது துணையிருப்பதால் மேன்ஷனுக்குப் போகத்தான் வேண்டுமா? என்றேன். இல்லை பாரதி, நாம் தங்கியிருப்பது சட்ட விரோதம். அதாவது, விடுதி சட்டத்திற்கு விரோதமானது. நண்பர்கள் செய்த உதவிக்கு பதில் மரியாதை அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டுமே தவிர, இடைஞ்சலாகி விடக்கூடாது என்றான். சரவணன் சாதாரணகப் பேசினாலே சரியாகத்தான் பேசுவான்.. அதுவும், சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே பேசினால் சொல்ல வேண்டியதில்லை. மேன்ஷனுக்குப் போவதென்றால் பணம் வேண்டுமே.. அதான் யோசனை என்று முகத்தை இறுக்கினான்.

மறுநாளும் ராஜரிஷிக்குப் போக வேண்டியிருந்தது. வறுமையோடு போராடி வாழ்வைத் தொலைத்து விடுவோமோ என்ற அச்சம் கூடின அந்த நாட்களை என் இதயத்திலிருந்து அழிக்கவே முடியாது. ஒவ்வொரு பத்திரிகை அலுவலகத்தில் இருந்தும் என்னைச் சந்திக்க வருகிற நிருபர்கள், உதவி ஆசிரியர்கள், என்னுடைய அந்த நாட்களை நினைத்துப்பார்க்க உதவுகிறார்கள். பணக்கஷ்டம் என்ற சொல்லை முழுதாக நானும் சரவணனும் உணர்ந்து விட்டோம். பணம்தான் எங்களிடம் இல்லையே தவிர கஷ்டம் இல்லாமல் இல்லை. பணமும் கஷ்டமும் வேறு வேறு எனப் புரிந்தது. மேன்ஷனுக்கு நகர வேண்டிய கெடுவும் துரத்திக் கொண்டிருந்தது. ராஜரிஷிக்குப் போவதும் தேனீர் குடித்து திரும்புவதுமாக இடையில் பத்து நாள் கழிந்து விட்டது. அலுவலகத்திற்கு நுழையும் போது ஆசிரியர் சந்திக்கச் சொன்னதாக அலுவலகப் பையன் பதட்டத்தோடு கூறினான். உங்களிடம் பேச வேண்டுமென்றான். நானும் பேச வேண்டும் என நினைத்ததைச் சொல்லவில்லை.

“அலுவலகத்தில் உங்கள் மீது புகார் கூறுகிறார்கள்” என்றார்.

“என்ன புகார்?” என்றேன்.

“நீங்கள் அலுவலகத்தில் அமராமல் உடனே கிளம்பி விடுகிறீர்களாமே” என்றார். நான் ஏன் அலுவலகத்தில் அமர வேண்டும் என்பதுபோலப் பார்த்தேன்.

“வேலைக்குச் சேர்ந்த பத்து நாட்களும் இப்படியே இருந்தால் எப்படி?” என்றார்.

“நான் வேலைக்குச் சேர்ந்ததாக இப்போதுதானே சொல்கிறீர்கள்” என்றேன். சிரித்துக்கொண்டே கை குலுக்கினார். அலுவலகத் தனியறைக்குள் நுழைந்தேன். கை அலம்பும் இடத்திலுள்ள கண்ணாடியில் என்னைப் பார்த்து கண்கள் விரிய பெருமிதத்தோடு தலையைக் கோதிக் கொண்டேன்.

Advertisements

ஒரு பதில் to “நடைவண்டி நாட்கள்: பதினொன்று”

  1. “பணக்கஷ்டம் என்ற சொல்லை முழுதாக நானும் சரவணனும் உணர்ந்து விட்டோம். பணம்தான் எங்களிடம் இல்லையே தவிர கஷ்டம் இல்லாமல் இல்லை. பணமும் கஷ்டமும் வேறு வேறு எனப் புரிந்தது. ”

    சூப்பர் !

    கட்டுரை பெரியதாக இருந்தாலும் கட்டிப்போட்டு உட்கார வைக்கிறது உங்கள் நடை!

    தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைத்தால், பலரும் படிக்க ஏதுவாய் இருக்கும் : )

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: