யுகபாரதி

யுகபாரதியின் ‘தெப்பக்கட்டை’ – சேவியர்

Posted by யுகபாரதி மேல் ஒக்ரோபர் 7, 2009

நவீன கவிதைகள் குறித்த பயம் இப்போது பெருமளவுக்கு நீர்த்துப் போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டும். பிரக்ஞையிலிருந்து விடுபட்ட பிரபஞ்சத்தின் நிதர்சன இருப்பு – என்றெல்லாம் பயமுறுத்தி வந்த நவீன கவிதைகளுக்குப் போட்டியாக எளிமையான மொழியில் சொல்லப்படும் வலிமையான கவிதைகளை இப்போது எங்கும் பரவலாய்க் காண முடிகிறது. புரியாத மொழிகளில் எழுதப்படும் நவீன கவிதைகளை சாதாரண வாசகன் புறக்கணிப்பதும், புரியும் நவீன கவிதைகளை நெஞ்சோடணைத்துக் கொள்வதுமான இன்றைய நிலையே அத்தகைய கவிதைகள் தழைக்கக் காரணம் எனலாம். இது ஒரு ஆரோக்கியமான போக்கு. புரிந்து கொள்ளக் கடினமான மரபுக் கவிதைகளை விட்டு விட்டு அதைவிடக் கடினமான நவீன கவிதைகள் எழுதுவதால் என்ன பயன் விளையப்போகிறது சமூகத்திற்கு ? மட்டுமல்ல வலிமையான பட்டாடைகளும் மென்மையான பட்டுப்பூச்சிகளிடமிருந்து தான் வருகின்றன. எனில், வலிமையான பட்டாடைகள் தயாரிக்க இரும்பாலான இழை தேவையில்லை என்பது நிரூபணம். பின் ஏன் அழகிய கவிதைக்கு மட்டும் அத்தனை உடைபடா வார்த்தைகள்.

இப்படிப்பட்ட ஒரு மனநிலை இருந்ததால் தான் என்னால் யுகபாரதி கவிதைகளை ஆரம்பம் முதலே ரசிக்க முடிந்தது. மனப்பத்தாயம், பஞ்சாரம் போன்ற அழகிய தொகுப்புகளை ஆழமாய் நேசிக்க முடிந்தது. அப்படித்தான் வாங்கினேன் தெப்பக்கட்டையை. ரஜினிகாந்த் படத்தை முதல் நாளே பார்த்து விடவேண்டுமென ஆசைப்பட்டு காத்திருக்கும் ரசிகன் போல புத்தகக் கண்காட்சியிலேயே சென்று காத்திருந்து வாங்கிய மிகச் சில புத்தகங்களில் அதுவும் ஒன்று.

தெப்பக்கட்டையை வாசித்தபோது ஒன்று புலப்பட்டது. யுகபாரதியின் நடை இன்னும் கொஞ்சம் நின்று நிதானித்திருக்கிறது. மனப்பத்தாயத்திலிருந்த துள்ளல் நடையை அப்படியே உரைநடைக்கு வார்த்துக் கொடுத்து விட்டு புதிய ஒரு நடையை அறிமுகப் படுத்தியிருக்கிறார் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. எடுத்த வகிடிலிருந்து சீப்புக்குத் தாவுகிற நீர்த்துளி போல, இழந்தவற்றிலிருந்து தன்னை எழுதிக்கொள்கிறது இலக்கியம் – என்று உரை நடையைக் கவிதையாய் செதுக்கத் துவங்கியதால், அவர் கவிதையை இன்னும் கொஞ்சம் வலிமையாக்கியிருக்கிறார்.

ஒவ்வொன்றிலும் நான்
உன்னோடிருக்கிறேன்,

ஆனபோதும்
என்னைக் கண்டதும்
சடாரெனக் கதவு சாத்தும்
உன் வீட்டுக் கைவிரல்களில்
எது உன்னுடையது ?

என்று கேட்கையில் அவருடைய மொழியும் அதன் சுகமும் மனசுக்குள் கவலையில்லாமல் ஒரு கலவரத்தை உருவாக்கிச் செல்கின்றன.

சோகை பிடித்தாலும்
பரவாயில்லை
குழந்தைகளைத் திட்டாதே
மண்ணள்ளித் தின்னட்டும்
சொரணை வர…

என்று மென்மையாய்ச் சொல்லும் கவிதைகள் இலக்கியப் படித்தம் இல்லாதவனுக்கும் பிடித்தமானதாகிப் போகிறது. கவிதைக்கும் , திரைப்பாடலுக்கும் இடையே யுகபாரதியின் கவிதைகள் அழுத்தமான கோடுகிழித்திருக்கின்றன. அந்தக் கோட்டைத் தாண்டி கவிதைகளின் மேல் திரைப்படப் பாடல்களின் பூச்சு விழுந்து விடக் கூடாது எனும் கவனம் அவரது கவிதைகளில் தெளிகிறது.

வீடு பெருக்குகிறவள்
நகருங்கள் என்பதற்குள்
எழுந்துகொள்ள
மனம் வராத நீதான்
கோஷம் போட்டுக்
கொடி தூக்குகிறாய்
பெண் விடுதலைக்கு

என்பன போன்ற சில கவிதைகள் பழைய பாணியையே கை பிடித்து நடக்கின்றன என்பதும், எனினும் அவை சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதும் கவனிக்கத் தக்கவை.

கைதொட்டுத் தூக்கியதும்
கதறத் தொடங்கும்
குழந்தையைப் போன்றது
உன் காதல்

கை தொட்டுத் தூக்கும் வரை
கதறி அடங்கும்
தொலைபேசியைப் போன்றது
என் காதல்.

என்றும்,

அந்தத் தெருவின் முடிவில்
பூந்தோட்டமிருக்கிறது
அடுத்தத் தெருவின் முடிவில்
உன் வீடிருக்கிறது.

எந்தத் தெருவுக்குள்
இடம்மாறி நுழைந்தாலும்
மனசு நிரம்ப
பறித்துத் திரும்பலாம்
பூக்களை.

என்றும் காதலைச் சொல்லுமிடங்களில் பளிச்சிடுகிறார். தமிழ்க்கவிதையைப் படிக்கவோ புரிந்து கொள்ளவோ தமிழ் தெரிந்திருந்தால் போதுமே !

என்னவோ, இந்த நவீன கவிதைகளில் பெரும்பாலும் வரும் ஒரு விஷயம் தான் என்னை வியப்பிலாழ்த்துகிறது. அது பாலியல். பாலியல் குறித்தோ, கள்ளத் தொடர்பு குறித்தோ, பிதுங்கித் தெறிக்கும் காமத்தைக் குறித்தோ அபரிமிதமாக குறிப்பிடப்படாத கவிதைத் தொகுப்புகள் நான் சமீபத்தில் வாசித்த நினைவில்லை. பாலியலை அதிகமாய்ச் சொல்வதினால் கவிதைக்கு நவீன அந்தஸ்து கிடைத்து விடும் என்ற நினைப்பில் எழுதுகிறார்களோ எனும் சந்தேகம் கூட எனக்குண்டு.

சாதம் பரிமாறுகையில்
நழுவுகிற முந்தியை,
செலவுப் பெட்டி எடுக்கையில்
திமிருகிற இடையை என
எதையாவது
பார்த்துத் தொலைக்கின்றன
எனது கண்கள்.

தனது மூணாவது
காதலனோடு குடும்பம் நடத்துகிற

புஷ்பலதாவுக்கு
எந்தக் கவலையுமில்லை
மடிப்பு விழுந்த
இடையைப் பற்றி.

***

நினைத்தவள்
வராது போன நிமிடங்களில்
நினைக்கப் படுகிறார்கள்
ஜமுனா, அபிதா சசி

***

மக்கி மண்ணாய்ப் போக
மனமின்றி உன்னிடம்
சிக்கிச் சீரழிகிறதென்
காமம்.

இவையெல்லாம் சில உதாரணக் கவிதைகள். இவைகள் கவிதைகள் இல்லையென்றோ, கவிதை இலக்கணத்தை மீறி முளைத்தவை என்றோ நான் சொல்லவரவில்லை. தெப்பக்கட்டை கூட நவீனகவிதையின் சொல்லப்படாத இலக்கண விதிகளை மீறவில்லை என்பது மட்டுமே நான் கோடிட்டுக் காட்ட விரும்புவது.

சங்கூதும் கண்ணனை
ஆண்டாள் அழைப்பது
பாட்டுக்காக அல்ல
உதட்டுக்காக.

***

உடம்பை அறிவி
பேணி உடுத்துவதற்கு
கற்பொன்றும் உடையில்லை.

***

பருவ மாற்றத்தைப்
பறைசாற்று
தைரியமிருந்தால்
கொச்சையாகவும்.

சமீப காலமாக சிற்றிதழ்களிலும், இணைய இதழ்களிலும், இணையக் குழுக்களிலும், அதிகமாய் கருத்து மோதலுக்குள்ளான, பெண்கவிகள் உடலுறுப்புகளை வைத்துக் கவிதை எழுதலாமா ? என்னும், விவாதத்துக்கு தன்னுடைய பக்கத்திலிருந்து ஆதரவுக் கரம் நீட்டுகிறார். வெறும் அதிர்ச்சிக்காகவே அத்தகையவை பதிவு செய்யப்படுகின்றன என்றும் பெரும் அதிர்ச்சியின் விளைவாகவே பதிவு செய்யப்படுகின்றன என்றும் இரு கூட்டம் வாதிடும் மேடையில் தன்னை ஆதரவாளனாய்க் காட்டிக் கொள்வது அவருடைய சொந்தக் கருத்து. எனக்கு அதில் அதிக உடன்பாடில்லை என்பது இங்கே அவசியமற்றது.

எல்லோரும் பசியாற
படியளந்த நன்னிலம்
கிழிந்த பையோடு
வரிசையில் நிற்கிறது
இலவச அரிசிக்கு

என்று தஞ்சையைக் குறித்துப் பாடும் போதும்,

பாம்பைக் கண்டு
தடியெடுத்தது போக
தடியெடுத்து வருகின்றன
காவி நிறப் பாம்புகள்.

என்று மதவாதத்தையே ஆன்மீகம் என்று நம்பிக்கொண்டிருப்போரை நோக்கிச் சிரிக்கும் போதும் தன்னுடைய சமூகப் பங்களிப்பை மறக்காத, கம்பீரமாயிருக்கிறது எழுதிப் பெறுகிற கூலியில் /சட்டை தைத்துப் போட்டால், என்று வெளிப்படையாய்ச் சொல்கிற ஒரு பிரஜை விழித்திருப்பது புலனாகிறது.

தெப்பக்கட்டை, கொடி போன்ற நல்ல கவிதைகளைத் தவிர்த்து என்னை மிகவும் கவர்ந்த கவிதையாக கையெழுத்து கவிதையைச் சொல்வேன்.

எங்கோ தூரதேசத்தில் மேடையேறிய ஒரு எழுத்தாளன், முன் வரிசையில் அமர்ந்திருக்கும் பெண்ணைக் காமக் கண்ணோடு அளைந்து கொண்டிருக்கிறான். விழா முடிந்ததும் நேரடியாக எழுத்தாளனிடம் செல்லும் அந்த அழகுப் பெண், நான் உங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை, உங்கள் அத்தனை எழுத்துக்களையும் நேசித்து வாசித்திருக்கிறேன் எனக்கு ஆட்டோகிராஃப் தாருங்கள் என்று கேட்கும் போது அந்த எழுத்தாளனுக்குள் எத்தகைய குற்ற உணர்ச்சி பீறிடும் ? எத்தகைய எண்ண ஓட்டங்கள் அவனை வெட்கமுறச் செய்யும் ? என்பனவற்றைக் கவிதை துல்லியமாய்ப் படம் பிடித்திருக்கிறது.

எனது கையெழுத்து
என்ன தரப் போகிறது
உனக்கு.

பதட்டமும் பிரியமும்
பரவும் நெரிசலிடையே
நீளும்
உனது குறிப்பேட்டில்
எதைக் கக்குவது.

எனது புகழையா
எனது திமிரையா

மேடையேறியது முதல்
உனது அழகுகளை
உனது அவயங்களை
கொடூரப் பசியோடு
குடித்தவனிடமா ….

என்று நீளும் கவிதையை….

….

குழந்தைத் தனமான
உனது கைகளை விடவா
கெளரவமானது
எனது கையெழுத்து ?

என்று முடிக்கும் போது எழுத்தாளன் என்னும் கர்வம் அழிந்து அங்கே மிளிர்கிற மனித நேயத்தில் கவிஞன் அடையாளம் காணப்படுகிறான்.

நன்றி: http://www.thinnai.com/?module=displaystory&story_id=60403045&format=html

Advertisements

ஒரு பதில் to “யுகபாரதியின் ‘தெப்பக்கட்டை’ – சேவியர்”

  1. vennila said

    sila neram yosippathu undu. ippothu thelivaga purikirathu
    Tamil kavithayai padikka, puriya Tamil therinthale pothume.
    Arumai
    Vennila…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: