யுகபாரதி

மெளனத்தில் முத்தம்

Posted by யுகபாரதி மேல் ஒக்ரோபர் 8, 2009

இன்பத்தின் வகை இரண்டென்கிறார்கள். முதலாவது சிற்றின்பம்; மற்றது பேரின்பம். ஒன்றில் ஒட்டிக்கிடப்பது சிற்றின்பம். ஒன்றிலும் ஒட்டாதிருப்பது பேரின்பம். பேரின்ப வாசலை அடைவதற்கு சிற்றின்ப வீதியைக் கடந்தாக வேண்டும். கடந்தவர்கள் ஞானிகள்.

ஒன்றின்மீது அளவுக்கதிகமான பற்றைவைக்கும் போது அதை இழக்க நேர்வதுண்டு. அத்தகைய இழப்பால் அடைகிற துயரம் அளவில்லாதது. நினைக்கும் போது பற்றற்று நிற்கும் திறமை நம்மிடத்தில் இருக்குமானால் துயரம் அண்டாது என்பார் விவேகானந்தர். ஆனால், பற்றற்றுப் போகிறதுபோதுதான் காதலில் துயரம் நுழைகிறது. ஆண்டவனிடத்தில் பற்று கொண்டு எழுதப்பட்ட பக்தி இலக்கியத்தில் மோகனத்தின் உச்சமும் ஞானத்தின் மிச்சமும் நிரம்பிக் கிடக்கின்றன.

நம் வானத்தில்
எப்போதும்
மூன்று நட்சத்திரங்கள்
ஒன்று நான்
ஒன்று நீ
ஒன்று யாரென்று அறிய
ஒரு போதும் விட்டதில்லை
உன்னை நானும்
என்னை நீயும்

அந்த மூன்றாவது நட்சத்திரம் இதை எழுதிய வஸந்த் செந்திலுக்கு மட்டுமல்ல யாருக்குமே அகப்படாத ஒன்றுதான். ஒன்றிலிருந்து ஒன்றை கண்டுபிடிக்கிற முயற்சி விஞ்ஞானத்தில் சாத்தியம். ஒன்றிலிருந்து ஒன்று தொலைந்து போவது காதலின் பாக்கியம். எங்கிருந்து தொடங்குவது இந்தக் கடிதத்தை? எதிலிருந்து தீட்டுவது இந்த ஓவியத்தை? எந்தப் பக்கத்திலிருந்து செதுக்குவது இந்தப் பாறையை? யாதெரும் புள்ளியும் அகப்படாமல் ஏங்குகிற நிமிடங்கள் காதல் வயப்படும் அற்புத நிமிடங்கள். ஒரு கைக்குட்டையைக் கொடுத்துவிட்டு மொத்த இதயத்தையும் எடுத்துக் கொண்டு போனவள் மறுபடியும் இந்த வீதியில் எப்போது வருவா?

என்னுயிர்நீ என்னுயிர்க்கோர் உயிரும் நீஎன்
இன்னுயிர்க்குத் துணைவன்நீ என்னை ஈன்ற
அன்னைநீ என்னுடைய அப்பன் நீஎன்
அரும்பொருள்நீ என் இதயத்து அன்பும் நீ
நன்னெறிநீ எனக்குரிய உறவு நீஎன்
நற்குருநீ எனைக்கலந்த நட்பும் நீஎன்
தன்னுடைய வாழ்வு நீ என்னைக் காக்கும்
தலைவன்நீ கண்மூன்று தழைத்த தேவே
(திருவருட்பா மகாதேவமாலை)

இறைவனுக்கு மூன்று கண்கள். காதலுக்கோ நான்கு. அந்த நான்கு கண்களும் ஒரே திசையைப் பார்க்கும் தீவிரம் கொண்டவை. உயிருக்குள் உயிராகும் இன்னுயிரை உனக்கென்று தந்துவிட்டேன். இதைக் காப்பாற்றுவதும் கரைத்துப் போவதும் உன் பொறுப்பு என்று விட்டுவிட முடிகிறதா? பார்க்கும் திசையெல்லாம் நின்னையே பார்க்கின்ற, கேட்கும் மொழியெல்லாம் நின்மொழியைக் கேட்கின்ற நிலையைக் காதல் உண்டாக்குகிறது.

எங்கேயோ பார்த்தது போல் தோன்றுகின்ற முகமாகப் பார்த்தவுடன் தோன்றும். நேரம் கேட்பது போல் கடிகாரமில்லாத அவளிடத்தில் நெருங்குவான் ஒருவன். கேட்க நினைத்தது நேரமில்லை. அவள் பதில் பேசாமல் திரும்பிப் போனது கோபமுமில்லை. அதற்கிடையில் ஒன்று ஒளிந்திருக்கிறது. அந்த ஒன்றை நட்பென்று, உறவென்று, பிரியமென்று எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம். பிறிதொரு சந்தர்ப்பத்தில் நேரம் சொல்லாது முகம் திருப்பி போனவள் நேரம் கேட்க வருவாள். நேரத்திற்குப் பதிலாக வேறொன்றும் கேட்பாள்.

எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம்
என்ன பொருத்தமோ – இந்தப்
பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்தமோ?

நினைக்க நினைக்கத்
தித்திப் பெனது நினைவிற் கொடுக்குதே
நின்பா லன்றிப் ஒஇறர்பாற்
செல்ல நெஞ்சம் நடுக்குதே
எனைத்துன் பொழித்தாட் கொண்ட
நின்னை அன்னை யென்பேனா
எந்தா யன்பிலேனெஇன் நடிக்கு
முன்னை யன்பனோ
(திருவருட்பா, மெய்யருள் விளிப்பு)
ஒருவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் போது தொலைபேசி அலறுகிறது. எடுத்தால் நினைத்தவர் பேசுகிறார். மனசில் ஒருவிதப் பரவசம் எதனால் வருகிறது? ஒருவரைப்பற்றி நினைத்தவாறே நடந்து போகிறோம். வீதியில் சட்டென்று எதிர்ப்படுகிறார். முகமுழுவதும் மலர்களை அள்ளித் தெளிப்பதைப் போலொரு உணர்வு. அந்த உணர்வுக்கு என்ன பெயர்? நாம் நினைப்பது போலெல்லாம் நடந்துவிட்டால் தெய்வமில்லை என்கிற திரைப்பாடல் ஞாபகத்தை மூட்டுகிறது.

எனக்கும் உனக்குமான உறவு முடிச்சைக் காலம் போடுகிரது. பிறகு காலமே அவிழ்க்கிறது. பிரியப்பட்டு நாமும் அந்த முடிச்சில் சிக்கிக் கொள்வதில் ஆனந்தப்படுகிறோம். நினைக்க நினைக்கத் தித்திக்கின்ற நினைவு தொட்டுக் கொள்ளாத தேவ ரகசியத்தைப் பக்தி இலக்கியம் எங்கிலும் பார்க்க முடிகிறது.

இன்பம் வேண்டித்
துன்புறல் அறிவு
துன்பம் வேண்டி
இன்புறல் அன்பு

ச.து.சு யோகியாரின் காதல் தேன், சுவைக்க சுவைக்கத் திகட்டாதது. சுத்தமான எழுத்துக்கும் வித்தக எழுத்துக்கும் உதாரணமாகத் திகழ்ந்தவர் அவர்,

இருப்பது இல்லதும்
காதலின் இழைவு
இருப்பதும் இல்லதும்
கழிந்திடில் இன்பம்

இருப்பதும் இல்லதும் என்கிற இரண்டுமே காதலின் இழைவு என்றெழுதும் யோகியார் இன்னொரு இடத்தில் உமர்கய்யாமின் ரூபாயத்தை இப்படி வடித்துக் காட்டுகிறார்.

உள்ளதுவும் இல்லதுவும்
உள்ளும் புறமும் எலாம்
தெள்ளத் தெளியத்
தெரிவிப்பேன் என்றாலும்
உள்ளத்தாலே ஒருவன்
உண்ரும் கலைகளிலே
கள்ளைப் போல் வேறொன்றில்
ஆழ்ந்தில்லேன், காணீரோ!

காதலின்பத்தை கடைசியில் கள்ளில் தேடிப் போகிறவன் மெய்யான காதலனா? காதலின்பத்தைக் காணாத பெண் என்ன அருந்துகிறாள்? மெல்ல மெல்ல மரித்துப் போகச் செய்யும் மதுவைவிட மொத்தமாய் மரித்துப் போகவே விரும்புகிறாள் காதலி. அது அரளி விதையா? தூக்கு மாத்திரையா? பால்டாயிலா? தூக்குக் கயிறா? ஏதோவொன்று கிடைத்துவிடுகிறது. காதல் கைகூடாவிட்டால் செத்துப் போக வேண்டுமா? ஒரே ஒரு முறைதான் காதல் பூக்குமா? ஒரு தடவை மட்டுமே பூக்குமெனில் அது காதலில்லை என்போம். பிசாசுகளின் கைகளில் காதலிருக்கிறது. கைகளற்ற காதலில் பிசாசுகளின் நகக் கீறல்கள். அந்தக் கீறல்கள் ஓவியமாகத் தெரிவதுதான் காதலில் கெளரவம்.

( இந்தக் கட்டுரை, கல்கி வார இதழில் “காதல் பிசாசு” என்ற தலைப்பில் தொடராக வெளிவந்து பெரும் வாசக கவனம் பெற்றது. பின்னால் இக்கட்டுரைகள், அதே பெயரில் மித்ர பதிப்பகத்தாலும்,  “நானொருவன் மட்டிலும்” என்ற தலைப்பில் நேர்நிறை பதிப்பகத்தாலும்   தொகுப்பட்டுள்ளது  என்பதும் குறிப்பிடத் தகுந்தது . )

Advertisements

ஒரு பதில் to “மெளனத்தில் முத்தம்”

  1. uumm said

    மிக மிக அருமையான பதிவு தோழரே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: