யுகபாரதி

நடைவண்டி நாட்கள் : பனிரெண்டு

Posted by யுகபாரதி மேல் ஒக்ரோபர் 9, 2009

நாம் இன்னொருவரால் விரட்டப்படுகிறோம் எனும் உண்மை, மூளையை உந்தித் தள்ளும்போது கை, கால்கள் தனக்குரிய சக்தியை மேலும் கூட்டிக் கொள்கின்றன.அரண்மனை வளாகத்திற்குள் பதுங்கியிருந்த என்னை, விரட்டிக் கொண்டு வந்தவர்கள் திரும்புவதை கைதூணுக்குப் பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.எதேச்சையாக எனக்குக் கிடைத்த துண்டுக் காகிதம் தனக்குக் கிடைக்காமல் போன துக்கம் வலது ஓரத்தில் இருந்தவனையும், அவனைச் சேர்ந்தவர்களையும் என்னைத் துரத்த வைத்தது. மற்றபடி என்னைத் துரத்தியோ, அல்லது துன்புறுத்தியோ அவர்களுக்கு எதுவும் ஆகப்போவதில்லை. அன்று அதிகாலையில் இருந்து எனக்கு எல்லாமே நினைத்தபடி அல்லாமல் இன்னொரு சந்தர்ப்பத்தை நினைக்கத் தக்கனவாக மாறிப் போயின.

தேர்வை வெற்றிகரமாக முடித்துவிட்ட தைரியத்துடன் வீட்டுக்குப் போக, மதிய வெயில் உச்சிக்கு ஏறிவிட்டது. இயல்பாய் இல்லை. மனது குற்ற உணர்வில் புரண்டது.முகத்தில் கவ்வியிருந்த பதற்றத்தை பார்த்து அம்மா எதுவும் கேட்கவில்லை. தேர்வை சரியாக எழுதவில்லை என்பதுபோல கருதியிருக்கலாம். சலனமே இல்லாமல் யாரோடும் பேசாமல் படுக்கையில் போய் சுருண்டு கொண்டேன். சீனு அண்ணன் வந்து எழுப்பினார். மாலை இருள் கவியத் தொடங்கியிருந்தது. நடந்தவற்றை அழுகையோடு அவரிடம் கூறினேன். அவரும் எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டார். என் மீது அவருக்குக் கோபம் மூண்டதை கண்களில் வெளிப்படுத்தினார்.

பள்ளி விடுமுறை. இரண்டொரு நாள் தேர்வு மனநிலையில் அல்லாடிய மனது விடுமுறைக்குத் தயாரானது. கவிதைதான் எனக்கு விடுமுறை கொண்டாட்டம். செல்லகணேசனின் வீட்டுப் புத்தக அலமாரியே எனது பொழுதுகளைப் போக்கிக் கொண்டிருந்தன. இல்லை, போக்கிக் கொண்டிருக்கவில்லை, ஆக்கிக் கொண்டிருந்தன!நீண்ட நெடிய வாசிப்பு! ஆழமும் ஆசையும் கூடின வாசிப்பு! வால்காவிலிருந்து கங்கைவரை என்பதைப் போல வானத்திலிருந்து பூமிவரை என் வாசிப்பு வேறு வேறு திசைகளை திக்குகளை நோக்கி விரிந்தன. என் வயதுக்குப் பிடிபடாத பல விஷயங்களை வாசிப்பு மூலம் எட்டிப்பிடிக்க ஆசை கொண்டவனாய் இருந்திருக்கிறேன்.
எழுதுவதில் கூட எனக்கு சோர்வு ஏற்படுவதுண்டு. ஆனால் வாசிப்பதில் ஒருபோதும் சோர்வு ஏற்பட்டதில்லை. ஒரு நூலை வாசித்துவிட்டு அந்த நூலை வாசித்த வேறொருவரோடு விவாதிப்பதிலும் நாட்டம் உடையவனாக அலைவேன். விவாதம் மேலும் என்னைச் செம்மைப்படுத்தும் என்பதை நம்புவேன். குறிப்பிட்ட நூலில் கவனிக்கத் தவறியதை பிறர் சொல்லும்போது அதை ஏற்கவும் இதயத்தில் வாங்கிக் கொள்ளவும் ஆர்வம் காட்டுவேன்.

கவிதை நூல்களில் ஆரம்பத்தில் என் கவனம் முழுவதும் மரபுக் கவிதைகள் பக்கமே இருந்தது. ஓசைகளை உள்வாங்கி பெரும் ஆவேசத்தோடு அவற்றை உச்சரித்து எனக்குள் போதை ஏற்றிக் கொள்ளும் வெறியோடு செயல்படுவேன். நாவல்கள் என்றால் தொடக்கத்தில் ரஷ்ய நாவல்கள்தான்!அழகான அழகான அச்சில் வெளிவரும் அந்நூல்களின் விலை மிகமிக மலிவாக இருக்கும். உயர்ந்த விஷயம் மலிவாகக் கிடைக்கும் ஆச்சரியம் நூல்கள் மீது அதீத அன்பைக் கூட்டிவிடும்.கிளைகிளையாக விரிந்து, என் ஆர்வச் சிறகுகள் வாசிப்பு சுகத்தை வான்வரை முட்டத் தொடங்கின!வீட்டில் உணவுக்காக மட்டுமே என் பேச்சிருக்கும்! மற்றபடி வாசிப்பு மட்டுமே என் முழுநேரத் தொழிலானது.

தேர்வு முடிவு வந்தது.அப்போதுதான் வீட்டில் அடுத்து நான் பதினொன்றாவது படிக்கப் போகிறேனா அல்லது பாலிடெக்னிக் தொழில்நுட்ப படிப்பில் சேரப் போகிறேனா என்ற கேள்வியும் சர்ச்சையும் பிறந்தன.எனக்குத் தொழில்நுட்பக் கல்வியில் சேரவே விருப்பம். பதினொன்றாம் வகுப்பு முடிந்து பனிரெண்டு சென்றதும் மீண்டும் பொதுத் தேர்வு பிரச்னை இருப்பதால் தொழில்நுட்பக் கல்வியில் சேர்ந்தவிட்டால் கல்லூரிபோல பாடங்களை செமஸ்டர்களாக எழுதிக் கொள்ளலாம் என எண்ணினேன்.
அம்மாவுக்கு என் முடிவு பிடித்திருந்தது. அப்பாவுக்குப் பெரிதாக நாட்டமில்லை.

படிப்பை நான் அனுபவித்தேன். ஆனால் அது பாடப்புத்தகப் படிப்பாக இல்லாமல், பரந்து விரிந்த சிந்தனைப் புத்தகங்களாக இருக்க வேண்டும் என விரும்பினேன்.ஒருவழியாக அப்பாவும் சம்மதித்தார். என் மேற்படிப்பு விஷயத்தில் அப்பா விதித்த நிபந்தனை ஒன்றே ஒன்றுதான். மேற்படிப்புக்காக தனியார் கல்லூரிக்கு லட்சம் லட்சமாகப் பணம் கொடுத்து வாய்ப்பு பெறக்கூடாது. அரசுக்கு கல்லூரிகளில்தான் என் படிப்பு தொடர வேண்டும். அம்மாவுக்கு உள்ளூரில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் பணம் கொடுத்தாவது சேர்ப்பிக்க ஆசை. ஆனால் எத்தனை சொல்லியும் அப்பா அம்மாவின் ஆசைக்கு இணங்க மறுத்தார்.

அறந்தாங்கி அரசு தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து அழைப்பு வந்தது. காத்திருப்போர் பட்டியலில் என் பெயர் இருபத்து இரண்டாவது இடத்தில் இருந்தது. வாய்ப்பு மிகக் குறைவு என்பதால் சீனு அண்ணன் தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரியை அணுகலாம் என்றார். சீனு அண்ணன் ஆலோசனையைக் கூட அப்பா புறந்தள்ளினார். அப்பா ஒரு விஷயத்தில் முடிவெடுத்துவிட்டால் பிறகு அதிலிருந்து பின்வாங்குவதை இழுக்காகக் கதுருபவர்.

அரசு தொழில்நுட்பக் கல்லூரிக்குப் புறப்படடோம். விடியற்காலையில் கிளம்பி அறந்தாங்கிக்கு போய்ச் சேர இரண்டு மணிநேரம் பிடிக்கும். நெற்றியில் அம்மா திருநீறைக் கொண்டு வந்து பூசிவிட்டாள். அப்பாவுக்குச் சிரிப்பு வந்தது. தன் தோளில் கிடந்த ஊதா நிற சால்வையை பொத்திக் கொண்டு வாயிலிருந்து வந்த சிரிப்பை மறைத்ததை தம்பி பார்த்துக் கொண்டிருந்தான். ஓடிவந்து இறுக அணைத்து என் நெற்றியில் முத்தமிட்டான். கட்டாயம் இடம் கிடைக்கும் என்றான்.பேருந்திலா கல்லூரியிலா? என அப்பா சிரித்துக் கொண்டே கேட்டார்.

கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த மாத்திரத்திலேயே அந்த இடம் ரொம்பவும் பழகிய இடம்போல் இருந்தது.கல்லூரியின் அமைப்பு மட்டுமில்லாமல் அங்கிருந்த மரங்களும் அருகிலிருந்த கிராமங்களும் என்னை வெகுவாக ஈர்த்தன. கல்லூரியின் வழியேதான் ஆவுடையார் கோவில் போக வேண்டும். ஆவுடையார் கோவில் சிறப்புமிக்க சிவஸ்தலங்களுள் ஒன்று. கல்லூரி வளாகத்தில் நிறைய மாணவர்கள் என்போலவே தன் பெற்றோருடன் நின்றுகொண்டிருந்தார்கள்.எல்லோருடைய முகத்தில் சின்னதாய் ஏக்கம் தென்பட்டது. சிலர் முகத்தில் மகிழ்ச்சி.மகிழ்ச்சியான முகங்கள் இடம் கிடைத்த திருப்தியை வெளிக்காட்டின.ஏக்கமான முகங்கள், காத்திருப்போர் பட்டியல் முகங்கள் என்பதை யார் சொல்லாமலும் புரிந்துகொள்ள முடிந்தது.

காத்திருப்போர் பட்டியலில் இருந்து ஒவ்வொருவராக அழைக்கப்பட்டார்கள். பெரிய கூடத்தில் இறுத்தி வைக்கப்பட்டு ஒவ்வொருவராக அழைக்கப்படும் போதெல்லாம் என் பெயர் அழைக்கப்படாத என்றிருக்கும்.இதயம் கூடுதலாக இயங்குவதைப் போலவும், பதற்றம் பல மடங்கு அதிகமாவது போலவும் தோன்றும். இன்று காத்திருப்போர் பட்டியலிலிருந்து பதினெட்டு பேர் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். மீதமுள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களில் யாரேனும் தொடர விருப்பம் இல்லாது விடுபட்டால் அன்றி சேரும் வாய்ப்பு குறைவு என்று குழுவிலிருந்த பேராசிரியர் நிகழ்ச்சி நிரலை முடிக்கும் தொனியில் கூறினார்.அப்பாவுக்கு முகம் வெளிறிப் போனது!என் கண்ணில் இருந்து மடமடவென கண்ணீர் பெருகி வழிந்தது.அப்பாவை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் இல்லாமல் குனிந்து கொண்டே பின்தொடர்ந்தேன். ஒரு கோழையின் தோல்வியைப் போல! அப்பாவுக்கு என்னைத் தேற்றுவது பெரும்பாடாகிவிட்டது.இன்னும் பத்து மதிப்பெண் அதிகமாகப் பெற்றிருந்தால் இப்படி அழத் தேவையில்லை எனக் கண்டிக்கக்கூட இல்லை. அப்பா பெரிய மனிதர்! எனக்கு ஆறுதலை உற்பத்தி செய்தார்.

‘இங்கில்லை என்றால் என்ன, தஞ்சாவூரில் தனியார் கல்லூரியில் பணம் கொடுத்தாவது வாங்கிக் கொள்ளலாம்.கவலைப்படாதே’ என்றார்.

ஒரு தகப்பனின் ஸ்தானம் என்பது அதுதான்!தன் பிள்ளையைத் தேற்றுவதற்காக அவர் எந்த நிபந்தனையையும் மீறத் தயாராகிவிட வேண்டும். எனக்கு வெட்கமாய் இருந்தது. கடைசி நேரத்தில் என் கவனம் கவிதை மீது திரும்பியதால்தான் அப்பாவுக்கு இந்த இக்கட்டு நேர்ந்துவிட்டது.வரும் வழியெல்லாம் அப்பா என்னை என்னென்னவோ சொல்லி என் சோகத்தை மடைமாற்ற முற்பட்டார். நான் உடைந்த மண்பானையைப் போல ஒட்ட வாய்ப்பே இல்லாது பேருந்தில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். வீடு வந்து நேர மணி ஆறாகிவிட்டது.

அம்மா மகிழ்ச்சியோடு ‘கிடைத்துவிட்டதா?’ எனக் கேட்டாள்.
‘கிடைக்கும்’ என்றார் அப்பா.

‘கிடைக்கலம்மா’ என்று நான் கேவிக்கேவி உடைந்தேன்.அம்மாவும் தேற்றினாள்.

‘வரும் வியாழக்கிழமை போகவேண்டும். அன்று கட்டாயம் கிடைத்துவிடும்’ என்றார் அப்பா.

‘ஜோசியரிடம் போனேங்க… அவரும் கிடைத்துவிடும் என்றுதான் சொன்னார்’ என்றதும் அப்பா காலையில் திருநீறு பூசும்போது சிரித்ததைப் போலவே சிரித்தார்.

‘ஜோசியம் சமயத்தில் எனக்குச் சாதகமாக அமைந்துவிடுவதால், ‘என்னம்மா ஜோசியர் கிடைக்கும்னு சொன்னாரா?’ என்றேன்.

அழுகையை மீறி நான் அப்படிக் கேட்டதும் மார்பில் தாங்கிக் கொண்டு, ‘கட்டாயம் கிடைக்கும்பா’ என்றாள்.வியாழக்கிழமை கிளம்பினோம்

Advertisements

2 பதில்கள் to “நடைவண்டி நாட்கள் : பனிரெண்டு”

 1. தோல்வியை தாங்கி கொண்டவன்தான் வெற்றியாளன் ஆகிறான் .
  என்னை கவர்ந்த கவிஞரே நீங்களும் இதில் அடக்கம் தொடரட்டும்
  உங்கள் நடை வண்டி பயணம் நானும் கூடவே தொற்றி கொள்கிறேன் .

  http://vittalankavithaigal.blogspot.com/

  தேவராஜ் விட்டலன்
  இந்திய இராணுவம்
  அஸ்ஸாம்

 2. உங்களுடைய எழுத்துக்கு சராசரி வார்த்தைகளால் விமர்சிப்பது கடினம். நல்ல உள்வாங்குதல் உள்ளவர்களால் மட்டுமே உங்களை விமர்சிக்க முடியும். அறந்தாங்கி என்றதும் ஆர்வம் பல மடங்கு அதிகமானது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: