யுகபாரதி

மனப்பத்தாயம்

Posted by யுகபாரதி மேல் ஒக்ரோபர் 13, 2009

1.

முப்போகமும்
முங்கித் திளைத்த
மகசூலால்
வைப்பதற்கு இடமற்ற
நிறை வாழ்வு

மினுக்கும், ஷோக்கும்
மேலோங்க
குதிரை வண்டிகளில்
சேக்காளி சகிதம்
கூத்தியாளை வாழவைக்க
கழுத்து நிரம்பிய
காசு பணத்தைக்
காமத்துக் கழித்த
கதைகள் கோடி

காவிரிப் பாசனம்
கரை புரண்டோட
வருஷம் முழுக்க
வற்றாத வாழ்க்கை

வருமானத்தை பத்தாயத்திற்குள்
பதுக்கின ஜமீன் குடில்கள்

இஷ்டத்துக்கு இறைத்த கேணி
ஊற்றுக்கண் அடைபட
பூசிய சாயம் பொய்யென்றாகக்
கதியானதோ கந்தல் துணி
கக்கடைசியில்

சோறுடைத்த சோழநாடு
சோத்துக்கில்லாமல்
பக்கத்தூர் பனியன் கம்பெனிகளில்

2.

இரண்டாள் ஒசரமிருக்கும்
பத்தாயத்தின் மீதேறிப்
படுத்துறங்கும் பூனை

வெற்றுப் பத்தாயத்தை
விட்டொழித்துத்
தற்போதவைகள்
அடுப்பில்

3.

முக்கமெங்கும் சிவ ஸ்தலம்
முத்தாய்ப்பாய் பிரகதீஸ்வரர்
ஒற்றைக் கல்லால்
உயர்ந்த கோபுரம்
நாளும் பெருகும் நந்தி
சமயத்துக்கேத்த பேச்சில் மயங்கி
பத்து ரூபாய் இனாம் தருவான்
வெளிநாட்டுக்காரன்

4.

கற்பூரம் விற்கும் கடையிலேயே
ஏகமாய் விற்பனையாகும்
பான்பராக் வஸ்துகள்

நாலணா நப்பாசைக்குத்
தும்பிக்கையேந்தும்
போரடித்த யானை
கோயில் வாசலில்

5.

உலகோச்சினான் முப்பாட்டன்
நாடு நகரென
நலிந்து தேய்ந்து
எட்டாந் தலைமுறையில்
எடுபிடியாக நான்

6.

சிதந்த ஸ்தலங்களைப்
புனரமைக்கப் புனரமைக்க
இயல்பைத் தொலைத்த
சோகத்தோடு
சிரிக்க மறுக்கிறான் சிவன்.

(இக்கவிதை தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியில் இளங்கலைக்குப் படமாக வைக்கப்பட்டுள்ளது.)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: