யுகபாரதி

கல்கண்டு காய்ச்ச மரம்

Posted by யுகபாரதி மேல் ஒக்ரோபர் 14, 2009

மொழிச் செழுமை உண்டாவதற்கு முன்பே பாடல் பிறந்துவிட்டது. ஓரளவு பேசக்கற்றதுமே மனிதன் தன் அஸ்திவாரமாகப் பயன்படுத்திக் கொண்டது பாடலை என்பது, மூத்தோர் வாக்கு. பின்னால் உருவான இலக்கியங்களைவிடவும் மிகச் சிறப்பாக மக்களால் வடிக்கப்பட்ட அல்லது மொழியப்பட்ட நாட்டுப்புறப் பாடல் தொகுப்பை புரட்டிக் கொண்டிருந்தேன்.

ரசமான கற்பனை எப்படியிருக்கும் என்பதற்கு ஓராயிரம் உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் வசமான கற்பனை எனும்போது இயல்பாகவே மக்களிடத்தில் புழக்கத்திலுள்ள விஷ்யங்கள் முன்னுக்கு வந்துவிடும் போல.

மனிதன் இயற்கையோடு பேசிக்கொண்டிருக்கிறான். இயற்கையை வியந்து அதன், சாதக பாதங்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எழுதிவைக்கிறான். இயற்கை பேசுமா? இயற்கை என்ன மொழியில் பேசும்? குயில் கூவுகிறது என வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கூவல் என்ன செய்தியைத் தருகிறது? தனக்கும் தன் சக குயிலுக்கும் உள்ள வாழ்வியல் தேவைகளைப்பற்றி கூவுகிறதா? மனிதர்களே, கொஞ்சம் சும்மா இருங்கள் என்கிறதா? உண்மையில், இன்னொரு மனிதன் அதுவும் தன் மொழியில் பேசுகிறவனின் வார்த்தைகளையே உணர நம்மால் முடியாதபோது குயில் பாட்டை எப்படி புரிந்துகொள்வது?

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவருக்குப் பறவையோடும் விலங்குகளோடும் பேசும் மொழி தெரிந்திருந்ததாத் தகவல். தெய்வ வல்லமையோ, கட்டுக்கதையோ? அது, முக்கியமில்லை. பறவைகளோடு பேசமுடியும் என்ற தகவல் இன்பமளிக்கிறது. சேரமான் பெருமான் நாயனார் தன் தவவலிமையாலும் ஞான முக்தியாலும் அப்படியொரு சக்தியைப் பெற்றிருந்தார் என்கிறது புராணம். கழற்றறிவார் என்ற பெயரால் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.

நாட்டுப்புற பாடல்களின் த்வனியும் இம்மாதிரியானதுதான். வயல்வெளியில் நாற்றுகளோடு பேசவும் நந்தவனத்தில் பூக்களோடு பேசவும் எதோ ஒரு ராகத்தை மனிதன் தானே கண்டு பிடித்து, தானே பாடி பரவசப்பட்டிருக்கிறான்.

சபையில் ரசிகர்கள் இருந்தால்தான் சிக்கல். இல்லையென்றால் ரொம்ப நல்லது. குறுக்கே பேசவோ, எழுந்து வெளியேறவோ வழியில்லாமல் வெற்று நாற்காலிகளுடன் உறவாடிக் கொண்டிருக்கலாம். என்ன ராகம்? என்ன உச்சரிப்பு? என்பது மாதிரி குறுக்கு விசாரணை இன்றி நோக்கம் போலப் பாடிவிடலாம். நோக்கம் போல் பாடுவதுதான் பாடல். இலக்கணச் சுத்தத்தை உத்தேசித்து எழுதப்படும் அசைச் சொற்களில் கவிதை தொலைந்து விடுவதுபோல் ராக ஆலாபனையில் உண்மையான மனக்கசிவை ஒரு போதும் காணமுடியாது.

நாட்டுப்புற பாடல்களில் என்னை மிகவும் கவர்வது, அப்பாடல்களிலுள்ள நையாண்டித்தனம்,  உப்பு, புளி, மிளகாய், வைகோல், பசு, மூங்கீல், கூரை, திண்ணை என எதனோடாவது தன்னை, தன் சகாவை ஒப்பிட்டு வெளுத்து வாங்கி விடுகின்றன அப்பாடல்கள். நையாண்டித் தனத்தைப் போல மற்றொன்று, சோகம். மனித உயிர்களின் உச்சபட்ச இலக்கிய ரசம் என்னவென்று தாகூரிடம் கேட்டபோது அவர் சொன்னார், சோகரசமே சூட்சமமான வாழ்வின் சூத்திரம். எனவே தான், என் கவிதைகளில் தூக்கலாகத் தெரிகிறது.

மெழுகி வைத்த வீட்டுக்குள்ளே
விளையாடப் பிள்ளையில்லை
கூட்டி வைத்த வீட்டுக்குள்ளே
குப்பை போடப் பிள்ளையில்லை

மலடி என்ற சொல் தரும் துயரை இதை விட வெளிப்படுத்த மொழியில்லை என்பதே போல் தோன்றுகிறது. பிள்ளை விளையாட வழியில்லாத வீட்டை மெழுகி வைத்து என்ன பயன்? சூழ் கொண்ட உலகம் தனக்குப் பின்னுள்ள தலைமுறையைக் கருத்திற் கொண்டுதான் நகர்ந்திருக்கிறது. தானும் கணவனும் நிம்மதியாக வாழ்ந்துவிட்டு இருப்பைச் செலவு செய்துவிட்டு போய்ச் சேர நினையாமல் தன்னைத் தொடர்ந்து இந்த வீட்டில், இந்த வயலில், இந்த திட்டில், இந்த உறவுகளில் தன்னுடைய வம்சத்துச் சுவடுகள் பதிய வேண்டும் என ஏன் நினைக்கிறாள், பெண்? பெண் மட்டுமா? ஆணும். ஆணும் மலட்டுத்தனம் உடைய சாத்தியங்கள் ஏனோ, நாட்டுப்புறப் பாடல்களில் இல்லை அல்லது எனக்குத் தெரியவில்லை. பிள்ளையில்லை என வருத்தமுற்று ஆண் பாடிய பாடலிருந்தால் தெரிவியுங்கள்.

கன்று போற வழியிலே நான்
கல் கிணறு கட்டி வைக்க
மலடி கைத் தருமமென்று
மாடு தண்ணீர் குடிக்கலையே

உவமைகளாலும் உணர்ச்சித் ததும்பலிலும் இப்பாடல் நம்மை உறைய வைக்கிறது. இந்த வேதனை மிக்க சொல்லாடல் இன்னும் ஒரு படி மேலே போய்,  சொத்தை பாதுகாக்கும் எண்ணம்தான் பிள்ளை வரம் வேண்டுவதன் பிரதான நோக்கமா எனவும் கேள்வி எழுப்புகிறது. குழந்தைகள் அற்ற வீட்டை நரகமென்று வர்ணித்து, குழந்தை பெற இயலாதவளைப் பாக்கியமற்றவள் எனச் சமூகம் சித்திரிப்பது எதற்காக?

இப்போதே பூமிப்பரப்பில் ஜனத் தொகை நெருக்கடி தாங்க முடியவில்லை. காற்றுக்கும் நீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காலப் போக்கில் மனித இனம் பிள்ளை பெறுவதையே தடை செய்து கொள்ளும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். நாட்டுப்புறப் பாடல்கள் எனத் தொகுக்கப்பட்ட பாடல்கள் யாவும் குறிப்பிட்ட காலத்தோடு முடிவைடைந்துவிட்டன. சமீபத்திய பாடல்கள் என்று ஒன்றைத் தொகுக்க வேண்டும். அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்குப் பின்னர் அப்பாடல்களில் முக்கிய இடம் வகிக்கும் விஷயங்களை அதன் மூலம் தெரிந்து கொள்ள வாய்ப்பு வரும்.

கட்டைப் புளியமரம்
கல்கண்டு காய்ச்சமரம்

இரண்டே வரிகளில் எத்துணை பெரிய சிலாகிப்பு! கல்கண்டு மரத்தில் காய்த்துத் தொங்குகிறது என்ற கற்பனை வசீகரிக்கிறது.

வானமாமலையும், கி.வா.ஜ.வும் மற்றும் சிலரும் நாட்டப்புறப் பாடல் தொகுப்புப் பணியில் அளப்பரிய சாதனை நிகழ்த்தியிருக்கிறார்கள். பின்னாளில் வந்த பெருமக்கள் அப்பணியை ரொக்க மீட்டும் தொழிலாக்கிக் கொண்டது துர்பாக்கியம். ஆராய்ந்த பாடல்களை அல்லது அவர்களாலேயே நாட்டுப் பாடல்களைப்போல் எழுதி இசையமைக்கப்பட்ட பாடல்களை ஒலி நாடாவாக்கி அத்துறையின் மேன்மையை குலைத்துவிட்டனர் என்பது மறைக்கமுடியாத உண்மை.

சீரழிந்து போன சமூகத்தில் ஒவ்வொரு துறையும் தன் அந்தஸ்தை இழந்த அதல பாதாளத்தில் விழும் என்பதற்கான அத்தாட்சிகள் இவை.

நாட்டுப்புறப் பாடல்களின் தனித்தன்மை, இன்றைக்கு என்னாலும் பிறராலும் எழுதப்படும் ஜோடனை மிக்க திரைப்பாடல்போல் வெளிப்படையானதில்லை. உதாரணமாக ஒரு பாடல். அவனும் அவளும் காதலர்கள். குனிந்த தலை நிமிராத பெண் என்றாலும். அவன் முகத்தைப் பார்க்க வேண்டும், தானும் நிமிராமல் தன்னுடைய காதலன் தன்னைப் பார்க்க என்ன வழி என யோசிக்கிறாள். யோசனை பாட்டாகிறது. காதல் உத்திகள் நிறைந்த மரபுக்கவிதை. விழுந்து விடுவானோ, விழுந்து விடுவானோ என்ற அச்சமும் விழுந்து விடவில்லை என்ற தெளிவும் தான் சர்க்கஸ் பார்வையாளகளின் ஆர்வம். வேடிக்கை பார்க்கும் மனோபாவம் மாத்திரம் இல்லாமல் போயிருந்தால் இந்த பூமி என்றைக்கோ அழிந்து  பட்டிருக்கும்.

ஓடையிண்ணா நல்ல ஓடை
ஒளிந்திருக்கப் பூஞ்சோலை
தங்கக் கொழுந்தனுக்குத்
தலைபார்க்க நல்ல ஓடை

அண்ணியாரின் முகத்தைப் பார்க்க கூசும் கொழுந்தன் ஓடையில் பிம்பமாய் விழும் தன் முகத்தைப் பார்த்துக்கொள்ளட்டும் என்பது மாதிரி போகிறது பாட்டு.

குறிப்பால் உணர்த்துவதும் கொண்டிருக்கும் மனத்துயரைப் பாடல் மூலம் விரட்டுவதும் அசாத்திய கற்பனையுடன் இயைந்த நாட்டுப் புறப் பாடல்கள் எனக்கு கடவுள் போலத் தோன்றுகின்றன. எழுதியது, பாடியது.. எந்தக் குறிப்பும் இல்லாமல் யாருக்கு வேன்டுமானாலும் சொந்தமாகும் லட்சியமுடையதாக அப்பாடல்கள் அமைந்திருக்கின்றன. கேட்கிறவர்களின் செவி மூலம் பரவும் இவை கடைசிமனிதன் உள்ள மட்டும் நீளும்.

கடவுளென்று கற்பித்தைத் தகர்க்க டார்வின் செய்த ஆய்வும் கண்டுபிடிப்பும் இன்றைக்கு மாற்று உருவாக்கத்துக்கும் மறு பரீசீலனைக்கும் வந்துவிட்டன. குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால் குரங்கின் ரத்தம் ஏன் மனித ரத்தத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது? குரங்கிலிருந்து மனிதன் பரிணாமம் பெற்றான் என்றால் ஏன் மனித இதயம் பன்றியின் இதயத்தோடு பொருந்திப்போகிறது? கடவுளை மறுக்கவே, டார்வின் செய்த சூழ்ச்சியாக அவருடைய ஆய்வுகள் நிகழ்ந்திருக்கின்றன என்கிறார்கள்.

எனில், உலகம் தோன்றக் கடவுளா காரணம் என்றால் அதுவுமில்லை. குரங்கிலிந்ருது தோன்றியதாகச்  சொல்லும் அனுமானம் தவறு. அவ்வளவுதான்.

யாரிலிருந்து யார் வந்தோம் என்ற மரபணுச் சோதனையில் மனிதன் வெகுவாக முன்னேறியிருக்கும் இக்காலகட்டத்துக் கேள்விகள் பழைய சிந்தனைகளைப் பதிப்பிப்பதல்ல. புதுப்பிப்பது. நாட்டுப்புற பாடல் வரிகள் வெறும் எதுகை மோனை சிபாரிசு அல்ல. அவற்றுள் சித்தர்களின் மருத்துவ ஞானத்தை போல விஞ்ஞான கூற்றுகளும், மனிதர்களின் அனுபவக் கூற்றுகளும் அநேகம். கழுதையும், குதிரையும், பூனையும், புலியும் ஏறக்குறைய ஒற்றுமையான உருவ அமைப்புடையன ஆனால் தன்மைகள் வேறு. படித்தவர்களின் செயலும், படிக்காதவர்களின் செயலும் அவ்வாறுதான் அமைகின்றன. படிக்காதவர்கள் சிறப்பான செயலை எய்துகிறார்கள் என்று சொல்லவும் படித்திருக்க வேண்டும்.

நாட்டுப்புற பாடல்கள் மனித ரகசியத்தை வெளிப்படையாகவும் தெய்வ ரகசியத்தை சூசகமாகவும் இயற்கை ரகசியத்தை குழப்பமாகவும் கூறுவன. யானைக்குத் தும்பிக்கை நீண்டதுபோல், கங்காருவுக்கு பை முளைத்ததுபோல், ஒட்டகத்துக்கு கழுத்து வளைந்ததுபோல், ஓணானுக்குச் சதை தடித்தது போல், நத்தைக்கு கூடு கிடைத்தது போல் நாட்டுப்புற பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றைக் கொடுக்கும். எனக்குக் கொடுத்ததையே உங்களுக்கும் கொடுக்கும் என்பதில்லை. என்னைவிட மேலான ஒன்று உங்களுக்குக் கிடைக்கலாம்.

திரைப்படப் பாடல்களின் சிறுமையை ஓரளவுக்கு குறைக்க கிடைத்த, நாட்டுப்புற பாடல்களை பரவலாக பகிர்ந்து கொள்ளுதல் அவசியம், நல்லது என்பது வேறு. உள்ளது என்பது வேறு.

கறுத்த பிள்ளை உன் ஆசை
கழுத்தளவு தண்ணியில
சிவந்த பிள்ளை பேராசை
செத்தாலும் மறப்பதில்லை

கூடிக் கலைவது ஒரு புறமும் ஊடிக் களைவது  மறுபுறமும் நிகழ்ந்து வருகிற விஞ்ஞான உலகம் எப்படி இருக்கிறது என்று விவரிப்பதல்ல இலக்கியம். எப்படி இருக்க வேண்டும் என மாற்றியமைப்பது. அவை நாட்டுப்புற பாடல்கள் என நானும் சொல்லிவைக்கிறேன்.

Advertisements

ஒரு பதில் to “கல்கண்டு காய்ச்ச மரம்”

  1. Thomas said

    அருமையான கட்டுரை …

    படிக்கும் போது பழமையை இழந்த தவிப்பும் ஆதங்கமும் ஏற்படுகிறது .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: