யுகபாரதி

நடைவண்டி நாட்கள்: பதினான்கு

Posted by யுகபாரதி மேல் ஒக்ரோபர் 28, 2009

ஒன்றை எதிர்பார்த்துக்காத்திருப்பதைப் போன்ற அவஸ்தை எதுவுமில்லை. கிடைக்குமோ கிடைக்காதோ என்ற கவலை ஏற்படுத்தும் குழப்பம் காத்திருப்பை நரக வேதனையாக்கிவிடுகிறது. மீண்டும் வியாழக்கிழமை கல்லூரிக்குப்போய்ச் சேரும்போது, வளாகத்திலுள்ள மரங்கள் வசீகரிக்க வில்லை உள்ளத்தில் ஒளியின்றிப்போயின் உலகமே சூனியமென உணர முடிந்ததது.காத்திருப்போர் பட்டியலில் இன்றும் என் பெயர் அழைக்கப்படும் என்ற நிச்சயமில்லை. ஆனாலும் ஒரு குருட்டு நம்பிக்கை. நம்பிக்கை எனக்கு அறவே இல்லாத போதும் அப்பாவுக்கும் அப்பாவின் நண்பர் விஸ்வநாதனுக்கும் அதிகமாய் இருந்தது. விஸ்வநாதன் ஏற்கனவே கொஞ்சகாலம் அறந்தாங்கிப் பகுதியில் வசித்தவர். தற்போது தஞ்சையில் எங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருந்து வருகிறார். சிறிய அளவில் மளிகை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்பா கேட்டுக்கொண்டதற்காகவும் என் மீதுள்ள அன்பின் காரணமாகவும் உடன் வந்திருந்தார்.

நானும் அப்பாவும் முதல்முறை காத்திருந்த கல்லூரி வளாக அறையில் உட்கார்ந்து கொண்டோம். குறித்த நேரத்தில் ஆசிரியர்கள் வந்திருக்கவில்லை. நாங்கள் சற்று முன்பாகவே வந்துவிட்டோம். விஸ்வநாதன் எங்கோ அவசரமாக கிளம்பினார். அரைமணியில் வந்துவிடுகிறேன் என்று அப்பாவிடம் கூறினார். நான் எதுவும் செய்ய முடியாதவனாக ஜன்னலை வெறுமனே வெறித்துக்கொண்டிருந்தேன். பேராசிரியர்கள் வந்தார்கள். அப்பா என் மதிப்பெண் விபரங்களைக் காட்டி உடைந்த குரலில் பேராசிரியர்களோடு உரையாடத் தொடங்கினார்.இரண்டு மாணவர்களுக்கு வாய்ப்பு இருக்கிறது சார், ஆனால் உங்கள் பையன் மூன்றாம் இடத்தில் இருக்கிறான். அவர்களில் யாரேனும் வரத் தவறினால் உங்கள் பையனுக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்றார்கள். அவர்கள் வந்துவிட்டால் எங்களால் எதுவும் செய்ய முடியாது. அந்த இரண்டு பேரும் வரக்கூடாது என்று மனசுக்குள் பிரார்த்திக்க வேண்டியிருந்தது. பாவம் அந்த இரண்டு பேரும். எனக்காக வராமல் இருந்தால் என் ஆயுசுக்கும் அவர்களை நினைத்து வழிபடுவேன். அந்த இரண்டு பேரில் ஒருவருடைய பெயர் சாமிநாதன் என்பதாக பேராசிரியர் கூறிப்போக சாமிநாதா எனக்காக உன் வாழ்வை விட்டுக்கொடு. எனக்காக உன் ஆர்வத்தை விட்டுவிடு. எனக்காக உன் எதிர்காலத்தை மறந்துவிடு என்றெல்லாம் முணுமுணுத்தேன். வராந்தாவில் அப்பா குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார். அவரால் நிலைகொள்ள முடியவில்லை மூன்று நான்கு முறைக்கு மேல் வெற்றிலையை அதக்குவதும் துப்புவதுமாய் இருந்தார். அதிக முறை வெற்றிலையை அப்பா பயன்படுத்தினால் அவரது மனநிலை பதட்டமாக இருக்கிறதென்று பொருள். அப்பாவின் மனநிலையையும் முகத்தையும் பேராசிரியர்கள் புரிந்து கொண்டார்கள். அப்பாவின் முகத்தில் தென்படும் உண்மையின் ரேகைகள் அவர்களை உறுத்தியிருக்கவேண்டும் .

பன்னிரண்டு மணிவரை காத்திருக்கச் சொன்னவர்கள் பத்தேமுக்காலுக்கு எங்களை அழைத்துவிட்டார்கள். உங்கள் உணர்வு எங்களுக்குப் புரிகிறது. ஒன்று செய்யலாம் உங்கள் படிவங்களை எங்களிடம் கொடுங்கள் நாம் எதிர்பார்க்கும் அந்த இருவரும் வர வாய்ப்பில்லை அப்படியே வந்துவிட்டாலும் தாமதமாக வந்த காரணத்தை சொல்லி சமாளித்துக்கொள்ளலாம். இது, உறுதியான முயற்சி அல்ல உங்களுக்காக நாங்கள் செய்யும் சகாயம். உங்கள் பையனுக்காக அளிக்கப்படும் இவ்வாய்ப்பு உங்கள் பண்புக்காகவும் நடத்தைக்காகவும் வழங்கப்படுகிறது. இவ்வாய்ப்பை அவன் சிறப்பாக பயன்படுத்தி எதிர்காலத்தை வெற்றிகொள்ள வேண்டும் என்றார்கள். அப்பா,அவனிடமே உங்கள் அறிவுரையை சொல்லுங்கள் என்றார். அதீத சோகம் படர்ந்த முகத்தோடு அவர்கள் முன் நிற்பது எனக்கு அவமானமாக இருந்தது. பிறகு கல்லூரியில் சேர்வதற்கான வழிமுறைகளில் ஒன்றான என் மதிப்பெண் சான்றிதழ் பரிசோதனையையும் இதர செயல்களையும் அரங்கேற்றினார்கள் இந்த நடைமுறைகள் ஈடேறுவதற்குள் விஸ்வநாதன் வேர்க்க விறுவிறுக்க நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். அவர் நெற்றி மீதிருந்த திருநீறுக்கீற்று வேர்வையில் புரண்டிருந்தது.வந்ததும் வராததுமாக அப்பாவிடம் என்ன ஆச்சு தோழர் என்று கேட்டார். அப்பாவை தோழர் என்றே அவர் அழைக்கப்பழகியிருந்தார். விஸ்வநாதன் கட்சித் தோழர் இல்லையென்றாலும் அவர் அப்படி அழைப்பதையே அப்பாவும் பெருமையாக் கருதுவார். நடந்தவற்றையெல்லாம் முழுதாக அப்பா அவரிடம் விளங்கப் படுத்தினார். எல்லாம் சாமியின் கருணை என்றார் விஸ்வநாதன் ஆமாம் சாமிநாதனின் கருணை தான் என்றார் அப்பா. இல்லைத்தோழர் கல்லூரிக்கருகிலேயெ ஒரு கோயில் இருக்கிறது இந்தப்பகுதி மக்களால் சக்திமிக்க கோயிலாகவும் அது கருதப்படுகிறது “செருப்படி சாமி” என்று அழைப்பார்கள். அந்தக் கோயிலுக்குப்போனால் திரும்பும்போது செருப்பை அங்கேயே விட்டு விட்டு வரவேண்டும். வேண்டுதலை சொல்லி காலில் அணிந்திருக்கும் செருப்பை கழற்றி மாடம்போல் இருக்கும் இடத்தில் இரண்டு தட்டுத்தட்டி வீசிவிட்டு வரவேண்டும் அந்த சாமியின் கருணைதான் தம்பிக்கு கல்லூரியில் இடம்கிடைக்க உதவி செய்திருக்கிறது என்றார். அப்பாவுக்கு மெல்ல சிரிப்பு அரும்பியது.அப்போ செருப்பு கண்டுபிடிக்கப்பட்டப் பிறகு உருவான சாமின்னு சொல்லுங்க. செருப்பில்லாதவர்கள் அந்த சாமியை வேண்டிக்கொள்ள இயலாது அப்படித்தானே? இப்போ என்காலுக்கு செருப்பு வேணும்னு வேற ஒரு சாமிகிட்ட வேண்டிகிட்டு இந்த சாமிக்கிட்டவந்து செருப்பை விட்டுடணும். எனன் விஸ்வநாதன் தொண்ணூறுகளில் போய் இதெல்லாம் நம்பிக்கிட்டிருக்கீங்க என்றார். அப்பா எப்பவும் இப்படிப்பேசுவார் என்று விஸ்வநாதனுக்குத் தெரியும் எனவே எந்த சலனமும் இல்லாமல் தலைகுனிந்து தன்இடுப்பு வேட்டியில் மடித்து வைத்திருந்த திருநீறை எடுத்து என் நெற்றியில் பூசிவிட்டார். நோயில் இருந்து மீண்டது போல என்னையும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. தனியாக ஒருமுறை கல்லூரி முழுக்க உலவினேன்.

யாரோ ஒருவரின் உண்மையான பிரார்த்தனை யாரோ இன்னொருவரின் வாழ்வுக்கு உதவுகிறது என்பதை நான் நம்புவதைப்போல அப்பா நம்புவதில்லை. யாரோ ஒருவரின் உழைப்பை வேறு யாரோ ஒரு முதலாளி சுரண்டும் செயல்போலவே பக்தியையும் அதற்கான சடங்கு சம்பிரதாங்களையும் மறுத்துக்கொண்டிருப்பார். ஆனால் பிறர் மனம் நோகுமளவுக்கு அவர் வாதம் ஒருபோதும் போனதில்லை.

அன்று முதல் அறந்தாங்கித் தொழில் நுட்பக் கல்லூரிக்கும் எனக்குமான உறவு தொடங்கியது. இந்தக்கல்லூரி உன் மேற்படிப்புக்கு ஏதுவானது. விஸ்தாரமான பிரமிக்கத்தக்க இந்தக் கட்டிடங்களை நீ படிப்பதற்காக மட்டுமே செலவிடவேண்டும் என்றார் அப்பா. ஒரு வாரம் கழித்துத்தான் வகுப்புகள் தொடங்க இருக்கிறது என்பதால் ஊருக்கு கிளம்பலாம் என்றார் அப்பா. விஸ்வநாதன் அவருடைய உறவினர் வீட்டிற்கு அழைத்துப்போனார். என்னை அவர்களிற்கு அறிமுகம் செய்வித்தார் தம்பிக்கு என்ன தேவை என்றாலும் செய்து கொடுங்கள் அன்பொழுக அவர்கள் பழகிய விதம் என்னையும் கவர்ந்தது. ரொம்பவே கவர்ந்து விடுகிறவர்களிடம் உதவி கேட்கக் கூடாது என்பதால் மூன்றாண்டு கல்லூரி வாழ்வில் அவர்களிடம் நான் என் தேவை எதற்காகவும் அவர்களைச் சிரமப் படுத்தவில்லை. அவ்வப்போது அவர்களை சந்திப்பதும் நலம் விசாரிப்பதுமாக அந்த உறவை கௌரவப்படுத்தினேன். அந்த வீட்டில் அன்புசெலுத்த ஓர் அழகான பெண்ணும் இருந்தாள்.

வீட்டுக்கு வந்தததும் எங்கள் முகத்தைப்பார்த்து கல்லூரியில் இடம் கிடைத்த விசயத்தை தானாகவே அம்மா புரிந்து கொண்டாள் “எப்ப காலேஜ் தொடங்குது” என்றாள். விலாவாரியாக அப்பா சொல்லி முடித்தார். விஸ்வநாதன் வீட்டின் கொல்லைப்புறத்திலிருந்த மஞ்சனத்தி மரத்தருகே உட்கார்ந்து கொண்டார். அப்பா தொடர்ந்து, வசந்தி வர்ற திங்கக் கிழமை நீயும் காலேஜுக்கு வா தம்பிய அங்க விட்டுட்டு ஹாஸ்டல் ஏற்பாடெல்லாம் செய்து கொடுத்திட்டு திரும்பி வருவோம் அப்புறம் கிளம்புறப்போ மறந்திராம இரண்டு ஜோடி செருப்பெடுத்துக்கோ என்று குபீர் சிரிப்போடு வெளிப்படுத்த, விஸ்வநாதன் அண்ணன் பேசத்தொடங்கினார்.செருப்படிசாமியின் சேம பலன்களை பற்றியெல்லாம் விபரிக்க விபரிக்க அப்பா கொட்டாவி விடவும் அம்மா வியந்து கேட்கவும் சூழல் நெகிழ்ந்து போனது. செருப்பை வைத்து ஆட்சி செய்ததை நம்புகிற சமூகத்தில் அம்மா மாதிரியானவர்கள் அந்த நம்பிக்கையைக் கொண்டிருப்பதால் எந்த தீங்கும் வந்து விடப்போவதில்லை நம்பிக்கை செருப்பு சார்ந்ததாக இருந்தாலும். சிறப்பு சார்ந்தததாக இருந்தாலும் அது இருப்பு சார்ந்த நம்பிக்கை என்பதால் அம்மாவுக்கு பக்தி பரவசப்படுத்தியது. திருநள்ளாறுக்குப் போய் அணிந்திருக்கும் சட்டைத்துணிகளை ஆற்றிலே விடுவதைப்போல இந்த சாமிக்கு செருப்பை தரவேண்டும் என்பதை புரிந்து கொண்டாள். அது முதல் ஒவ்வொரு தேர்வு சமயத்திலும் தேர்வுக் கட்டணத்தோடு புதிதாக வாங்கப்போகும் செருப்புக்கான கட்டணமும் அம்மாவால் எனக்கு வழங்கப்பட்டது. இப்போதும் நண்பர்கள் நீ செருப்படி வாங்கப் போகிறாய் என செல்லமாய்த்திட்டும் போது சாமியாகிவிட்டதைப்போல நினைக்கத் தோன்றும். இன்னொரு முறை அறந்தாங்கிக்குப் போய் வரவேண்டும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: