யுகபாரதி

Archive for நவம்பர், 2009

சிவப்பதிகாரம் – திரைப்படப் பாடல்

Posted by யுகபாரதி மேல் நவம்பர் 30, 2009

சினிமா பரபரப்பு நிறைந்தது.பரபரப்பை நூறு சதவீதம் உணர வேண்டுமானால் சினிமாவில் ஏதாவது ஒரு துறையோடு சம்பந்தப்பட்டால் எளிதாகப் புரிந்துபோகும். விடிந்தால் திருமணம் பிடி பாக்கு வெற்றிலை என மாப்பிள்ளைக்கே அவசரநிலையைப் பிரகடனப் படுத்துவார்கள்.இதை தவிர்க்கவும் முடியாது .தடுக்கவும் இயலாது.வைக்கோல் கன்றுகளை காட்டி பசுவின் மடியை கபளீகரம் செய்வதுபோல எதையாவது காரணம் காட்டி உழைப்பைக் கோருவார்கள்.நாளை மறுநாள் படிப்பிடிப்பு உடனே பாடல் எழுத வேண்டுமென இயக்குநர் கரு.பழநியப்பன் கேட்க அவருடைய ‘சிவப்பதிகாரம்’ படத்துக்காக எழுதிய பாடல் வரிகளிவை

பல்லவி

அற்றை திங்கள் வானிடம்
அல்லிச் செண்டோ நீரிடம்
சுற்றும் தென்றல் பூவிடம்
சொக்கும் ராகம் யாழிடம்

காணுகின்ற காதல்
என்னிடம் – நான்
தேடுகின்ற யாவும்
உன்னிடம்

சரணம்:ஒன்று

அடிதொட முடிதொட
ஆசை பெருகிட
நேரும் பலவித பரிபாஷை

பொடிபட பொடிபட
நாணம் பொடிபட
கேட்கும் மனதினில் உயிரோசை

முடிதொட முகந்தொட
மோகம் முழுகிட
வேர்க்கும் முதுகினில் இதிகாசம்

உருகிட பருகிட
ஏக்கம் இளகிட
கூடும் அனலிது குளிர்வீசும்

தளும்பினேன் எனைநீதொட
மயங்கினேன் சுகம்சேர்ந்திட
குலுங்கினேன் உடல்கூசிட
கிறங்கினேன் விரல்மேய்ந்திட
பாய்ந்திட ஆய்ந்திட

காணுகின்ற காதல்
என்னிடம் – நான்
தேடுகின்ற யாவும்
உன்னிடம்

சரணம்:இரண்டு

உடலெது உடையெது
தேடும் நிலையிது
காதல் கடனிது அடையாது

இரவெது பகலெது
தேங்கும் சுகமிது
சாகும் வரையிலும் முடியாது

கனவெது நினைவெது
கேட்கும் பொழுதிது
காமப் பசிவர அடங்காது

வலமெது இடமெது
வாட்டும் கதையிது
தீண்டும் வரையிலும் விளங்காது

உறங்கலாம் அதிகாலையில்
ஒதுங்கலாம் இனிமாலையில்
தயங்கலாம் இடைவேளையில்
நிரம்பலாம் உயிர்ச்சோலையில்
கூடலில் ஊடலில்

காணுகின்ற காதல்
என்னிடம் – நான்
தேடுகின்ற யாவும்
உன்னிடம்

Advertisements

Posted in திரைப்பாடல் | குறிச்சொல்லிடப்பட்டது: | 7 Comments »