யுகபாரதி

படைப்பு தரிசனம்

Posted by யுகபாரதி மேல் நவம்பர் 4, 2009

எப்போது ஒரு படைப்பு வெற்றி பெருகிறது? எல்லோராலும் வாசிக்கப்படும்போதா? அல்லது எல்லோராலும் வாழ்த்தப்படும் போதா?

வாசிக்கப்படுவதால் அதற்கு வெற்றி கிடைக்குமாயின் செய்தித்தாள்களில் வரும் துணுக்குகள் சிறந்த படைப்பகளாகிவிடும்.

வாழ்த்தப்படும்போது அதற்கு வெற்றி கிடைக்குமானால் அந்தப் படைப்பு வாசகனின் மேலான மதிப்பீடு எனக் கருதப்படும். எனவே , இரண்டுமே இல்லை.

படைப்பின் வெற்றி என்பது குறித்து என் சிந்தனையில் தோன்றுவது வெளிப்படையானது. அது என்னவென்றால் படைப்புகளுக்கு வெற்றியுமில்லை; தோல்வியுமில்லை.

சிறந்தது – சிறப்பில்லாதது என்று வகுக்கலாமே தவிர வெற்றி பெற்றது, தோல்வியுற்றது என வகுக்க முடியாது. வகுக்கவும் கூடாது.

இக்காலத்து இனிமைகள் அடுத்த காலத்தில் கேள்விக்கு உட்படும். கேள்விக்கு உட்படும் படைப்பு, பிறிதொரு காலத்தில் சிலாகிக்கப்படும். காலத்தை கருத்திற்கொண்டு படைத்தல் சிறப்பு.

கடைசியில் வீழ்ச்சி பெற்றுவிட்ட எழுத்தாளனின் ஆரம்ப கால வெற்றி பெற்ற படைப்புகளின் ஆத்மாவின் அழகை ரசிப்பவனே முதல் தரமான விமர்சகன் – பொம்மைப் பாடகி நூலில் நா.காமராசன் சொல்லியிருக்கும் வாக்கியம் இது.

தொடர்ந்து செயல்படாத போதிலும் அவரது தொடக்ககால விளக்குகள் ஏற்றிய வெளிச்சத்தில் இன்னும் அவர் தெரிகிறார். அவர் படைப்புகள் வெற்றி நோக்கியவையல்ல; விழாத உண்மைகளின் வேர்க்கால்கள்.

என் பதினேழாவது வயதில் முதல்முதலாக கருப்பு மலர்கள் எனக்கேற்ப்படுத்திய பிரமிப்பு இன்று குறைந்திருக்கலாம். ஆனால் சிதையவில்லை.

சிறு வயதில், வீடு பெரியதாகவும் நாம் சிறியதாகவும் தெரிவோம். பின்னாளில், நாம் பெரியதாகவும் வீடு சிறியதாகவும் மாறிவிடும். இதற்கு கண்களின் வளர்ச்சியல்ல காரணம். தெளிவு. இதர நபர்களுடன் அவரைப் பொருத்திப் பார்த்த ஒப்புமை உணர்வு.

புதுக்கவிதையின் தொடக்க காலம் மிக மிக இனிமையானது. வார்த்தை வசந்தங்களில் கவிதை வண்டுகள் திளைக்க திளைக்க தேனுண்ட தருணங்கள். ஒவ்வொரு முதல் தொகுப்பிலும் புதிய புதிய ஈட்டிகளை சமூக கேட்டின் மீது வீசிய காலம்.

இன்றைய மதிப்பீடுகள், இன்றைய கவிதை மரபுகள் முற்றிலும் மாறிவிட்டன.உலகத்தின் கண்கள் அகல விரியும் போது பழைய வீட்டைப் போல இவை சிறுத்துவிட்டன. எனினும் அந்த வீடுகள் உண்மை. அந்த வீட்டில் வசித்தது உண்மை.தலை வாசலில் கோலமும் கொல்லையில் முளைத்த கீரைப் பாத்திகளும் உண்மை.

பண தரித்திரம் இல்லாதவனுக்கு
மன தரித்திரம் இருக்கிறது
மன தரித்திரம் இல்லாதவனுக்கு
பண தரித்திரம் இருக்கிறது

கலைஞனும் கலையும் பொருளாதாரம் என்கிற செங்கல் சூளையில் பொசுங்கிக் கிடப்பதை இதை விடவும் இணக்கமாக சொல்ல முடியுமா என்ன?

சடார், சடார் என முகத்தில் முட்டி நம்மைத் தலை குனிய வாக்கியங்களில்தலை நிமிர்ந்துவிடுகிறார், நா காமராசர்.

திரைப்பட பாடலாசிரியராக அவரை  நான் தரிசிப்பதை விடவும் கவிஞனாக அவரை நான் தரிசிக்கும் பகுதிகள் அனேகம். சொல்லில் புதிதல்ல சொல் முறையில் புதிரைப் புகுத்தியவர். அடடே என வியக்கும் அற்புத சொற்குவியல்.

உரைநடைத் தமிழ்மீது அவருக்குள்ள வசீகர பாசம் திராவிட இயக்கத் தலைவர்களின் தழுவல் அன்று. மேலை இலக்கியத்தின் மீதுள்ள பிணைப்பு

பூமிக்கு அழகாய்
இருப்பதெல்லாம் நன்மை
செய்வதில்லை ஆனால்
நன்மையாய் இருப்பதெல்லாம்
பூமியை அழகு செய்கிறது

வெறும் வார்த்தைகளை மடக்கிப் போட்ட வித்தையாக இதைப் புரிந்து கொள்பவன் மூடன். வார்த்தைகளின் இடுக்குகளைத் தெளிவாக புரிந்துணர முடியாத யாராலும் இலக்கிய மாளிகைக்குள் இடம் பெற முடியாது.

பூமியின் அழகு நன்மையா? நன்மை பயப்பது மட்டும்தான் பூமியின் அழகா? தெரியவில்லை.

அழகு மதுவைவிட
ஆபத்தானது. அது,
விற்பவனையும்
வாங்குபவனையும்
மயங்க வைக்கிறது

அழகுக் குளத்தில் கல்லெறியாத படைப்பாளியைக் காண்பது அரிது. அழகால் கல்லடி படாத படைப்பாளியைக் காண்பதும் அரிது. நவீன யுகத்தின் அவசரங்களில் கிடைக்காத புன்னகைக்காக, கிடைக்காத நிம்மதிக்காக அலைவதுதான் கலைஞனின் கதியென்று ஆகிவிட்டது.

அழகுணர்ச்சிதான் படைபாளிகளின் அரியனை. ஆனால் அழகுணர்ச்சி மட்டுமே படைப்பாகிவிடாது.

வாழ்பனுவத்தின் தேர்தலில் படைப்பாளி தோற்றுவிடலாம்.படைப்பு தோல்வியுறாது. தொடர்ந்து தன் இருப்பை தக்க வைக்க நா கா விசேஷ விளம்பரங்களில் ஈடுபடாது போயிருக்கலாம். ஆளுயுர கட் அவுட்களை விரும்பாது போயிருக்கலாம். ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களோடு நெருக்கமில்லாது போயிருக்கலாம். அரசு அளிக்கிற மாலை மரியாதைகளைத் தேடிப் பெறாது போயிருக்கலாம். தேசிய விருது, ஞானபீட விருது போன்றவற்றுக்கு முனைப்புக் காட்டாதிருக்கலாம்.  எனினும் அவர் முயற்சிகள் சிலரையேனும் சென்றடைந்திருக்கும். ஓரிரவு முழுக்க அவரது படைப்புகளை வாசித்துவிட்டு பிறகு ஏன், இவரை எழுதாமல் போனோம் என என்னைப் போல் இன்னொருவன் மட்டுமேனும் கலங்கி கண்கள் கசிந்திருக்கலாம்.

மத்திய தர வர்க்கத்து அன்றாட அழுகையை இவரது சகாராவைத் தாண்டாத ஒட்டகங்களை வாசித்தவருக்குத் தெரியும். சமூக மனிதனின் அவஸ்தையை இன்றைய படைப்பாளிகள் எட்டிக்காயாக விலக்கி வைப்பதன் காரணம் என்னவோ? விற்கிற பொருளுக்குத்தான் சந்தையில் கிராக்கி அதிகம் என்பதுபோல தனிமனித சார்புகளை விட்டொழிக்க மனிமில்லாது திரும்பத் திரும்ப மூத்த படைப்பாளிகள் மட்டுமன்று, இளையவர்களும் தொடர்வது துர்பாக்கியம்.

கலை வாழ்க்கையைக்
காதலிக்க வேண்டும். அதைத்
திருமணம் செய்து
கொள்ளவேன்டும். ஆனால், இந்தச்
சமூகத்தில் கலைஞன் திருமணம்
செய்து கொண்டால் கலை அவனை
விவகாரத்து செய்து விடுகிறது
கலையின் சுய பலம்
வாழ்வின் அனுபவம்

வயிறு முட்ட புசித்த பிறகு கொஞ்சம் உறங்கினால் தேவலாம் என்று தோன்றுகிறபோது மேஸ்திரி அழைக்க, ஓடிப்போய் கல் அடிக்கிற ஒரு சித்தாளின் மன இயல்பை கலைஞன் கைக் கொள்ளமுடியுமா? எட்டு மணிக்கு குரல் பதிவு சீக்கிரம் எழுதிக் கொடுங்கள் எனக் கட்டளை பிறப்பிக்கும் இசையமைப்பாளருக்கு எழுதுவதன் அவஸ்தை புரியுமா?

கலி காலத்தோடிணைந்த பிறப்பென்று சொன்னாலும் அதற்குரிய கால அவகாசத்தை மனிதர்களே தீர்மானிக்கிறார்கள். தேவை கருதியும் தொழில் லாபத்தை முன்வைத்தும் படைக்கப் படுவது கலையாகாது. வியாபாரம். இந்த வியாபாரத்தில் விரைவாகவும், விலை குறைவாகவும் செயல் படுபவனே நிற்க முடியும். நிற்பது மட்டுமல்ல நிலை பெறவும் முடியும்.

நா. கா. இந்த இயல்புக்கு உடன்படாதவர்போல. குழம்பைத் தாளிக்கும்போது அம்மாக்கள் கொள்கிற பரபரப்புக்கு நிகரானது படைப்பு மனம் என்னும் பாடத்தை ஏற்காதவர் போல.

திரும்புகிற பக்கத்தில் இருந்து கை தட்டு வரவேண்டும் என நினைக்காதவர் போல. தன்னியல்பும், மனத்தடையும் காரணம் என அவரை விமர்சித்த என் புத்தி சாதுர்யத்தை நான் பறை சாற்றிக்கொள்ள விரும்ப வில்லை.

திறமை என்பது
படுக்கையறைப் போர்வை
மேலே இழுத்தால்
கால்கள் நிர்வாணமாகும்
கிழே இழுத்தால்
மார்பு மலை தெரியும்

நீண்ட காலமாக நாட்டைக் காப்பாற்றுவதற்காக  தலைமறைவாக வாழ்ந்து வந்த அரசன் திடீரென்று நாட்டுமக்களின் நிலையறிய மாறு வேடத்தில் ஊருக்குள் நுழைகிறான். அப்போது ஓர் ஏழைத் தளபதி வீட்டுத் திண்ணையில் இரவு உறங்க நேர்கிறது.

அந்த நள்ளிரவில் தளபதியின் மனைவி தன் மகனுக்கு அப்பா போருக்குப் போயிருக்கிறார் வேற்றியோடு திரும்பி வரும் வரை நீ அழக்கூடாது. நீ அழுதால் அப்பாவுக்கு மன சஞ்சலம் ஏற்படும். ஏற்பட்டால் போரை எதிர் கொள்ளும் வலிமை குறைந்துவிடும். அங்ஙனம் குறைந்தால் அந்த இழுக்கு நல்லவரான நம் ராஜாவுக்குச் சேரும் எனச் சொல்லி ஆற்றுப்படுத்துகிறார்.

ஊர்மக்கள் தன் மீது வைத்திருக்கும் அன்பைக் கண்டு மனமுருகுகிறான். காலம் கழிகிறது போர் வெற்றியடைகிறது. சுபிட்ச வாழ்க்கை நெருங்கி வந்த பிறகு ராஜா மறுபடியும் ஊர் எப்படி இருக்கிறதெனத் தெரிந்து கொள்ள மாறு வேடத்தில் அதே வீட்டுத் திண்ணையில் அடைக்கலமாகிறான்.

வந்தவன் சும்மா இருக்காமல் கதவைத் தட்டி விடுகிறான். தளபதிக்குக் கோபம் வருகிறது. நான் போருக்குப் போன சமயத்தில் இப்படித்தான் நிகழ்ந்ததா என மனைவியைப் பார்க்கிற தளபதி கோபத்தோடு கதவைத் திறக்கிறான். அப்போது கதவைத் தட்டியது யாரெனத் தெரியாத வண்ணம் மறைந்து விடுகிறான் மன்னன்.

தளபதி மனைவியை சந்தேகப்பட்டு குடும்பம் சிதைந்து விடுமோ என எல்லோர் வீட்டுக் கதவையும் மன்னன் தட்டி விடுகிறான். ஊர் மக்கள் கூடி விடுகிறார்கள்.

அமைதியாக ஆட்சி புரிகிற தன் அரசனின் தேசத்தில் இப்படி ஓர் அட்டுழியம் நடக்கலமா என வெகுண்டெழுந்து அரசவைக்கு விரைகிறான் தளபதி. முறையிடுகிறான். அப்படியா? அவனை என்ன செய்யலாம் என்கிறான் மன்னன்.

திறமையானவர்களுக்கு வாழ்க்கையில் நிகழும் சங்கடங்களைச் சொல்லும் இக்கதை ஒரு வழக்குக் கதை. இந்தக் கதையின் முழுப்பொருளும் நா கா வின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது.

எழுத்து என்று வருகிற போது திறமை, செயல், வெளிப்பாடு ஆகியவற்றை கவனித்தே ஆக வேண்டும். இம்மூன்ரை வைத்தே அவன் அடைந்திருக்கும் உயரங்களைக் கணக்கிட வேண்டும்.

நெடுநாட்களாக என் மனதில் கிடந்த அத்தனை ஆர்வத்தோடும் நா காவை சந்திக்க அவர் வீட்டுகுப் போயிருந்தேன். வெளியில் போயிருப்பதாகச் சொன்னார்கள். எங்கே என்று கேட்டேன். தெரு முக்கிற்கு என்றார்கள். வரும் வழியில் அவரை பார்க்க முடிந்தது. தள்ளாடிய படியே வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

ஆயிரமாயிரம் வணக்கங்களுக்குரிய அவரை ஒற்றை வணக்கத்தோடு எதிர் கொண்டு யாரோ போல் எதுவுமே பேசாமல் திரும்பி விட்டேன். எழுத்து எழுத்தோடு மட்டும் முடிவடைந்து விடுவதில்லை.

நமக்கு ஒருவரை பிடிக்கும் போது அவரது பலவீனங்கள் உறுத்துகின்றன. எல்லா பலவீனங்களோடும் ஒருவரை ஏற்றுக் கொள்வதே சிறந்த அன்பு. எம் அன்பு நா காமராசனின் படைப்பு மட்டுமன்று. அவருடைய வார்த்தைகளிலே இதை முடிக்கலாம்.

முதலில் தனது பலத்தை தரிசித்துவிட்டுச் செயல்படுபவன் திறமைசாலி அல்லன். அவன் தனது பலவீனத்தை விமர்சித்து விட்டுச் செயல்பட வேண்டும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: