யுகபாரதி

எனவே

Posted by யுகபாரதி மேல் நவம்பர் 6, 2009

வண்ணத்துப் பூச்சிகள் பற்றித்தான் தமிழில் எத்தனை கவிதைகள்? காதல் எழுதத் துணிகிற யார் ஒருவரும் வண்ணத்து பூச்சியை சொல் வடிவிலேனும் தொடர்ந்திருக்கிறார்கள். துரத்திக் கொண்டோடிப் பிடிப்பதை விடவும் அதன் அழுகு நம்மைத் துரத்தியது, துரத்துவது உண்மை.

வானம்படிக் கவிதைகளில் புரட்சியும் துப்பாக்கியும் எவ்விதப் பிரபலமுற்றதோ அதே பிரபலத்தை அல்லது அதற்கு அதிகமான இடத்தை வண்ணத்திபூச்சிகள், இந்த இருபது முப்பதாண்டு நவீனக் கவிதைகளில் பெற்றிருக்கின்றன. தவறில்லை. மழையை எத்தனை வார்த்தைகளில் எழுதினாலும் புதிதாகவே கிடைக்கிறது சுகம்.

பூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதையின் இடைவெளியிலிருந்து உணர்த்தப்படுகிறது முயற்சி. அவரது “கடற்கரைக் கால்கள்” தொகுப்பில் முகப்பும் கவிதைகளும் வண்ணத்துப்பூச்சியின் வண்ணங்க்களை நிகர்த்தன.

முதல் வரிகளில் புகுந்து
கவிதைகளின்
கடைசி வரிகளில் வெளியே
பறந்து வந்தது
ஒரு வண்ணத்துப் பூச்சி

என்கிறார். மிதமான பனி பெய்யும் ஒரு மார்கழியின் கதகதப்பூடு கூடிய வாக்கிய அமைப்புகள். சொற்கலுக்குப் பாத்தி கட்டி சுற்றி வரும் பொருளைத் தனிமையில் சுகிக்கிற தன்மையைத் தரவல்ல கவிதைகள். கடற்கரைக் கால்கள் வாசிப்பதற்கு முன்பே காதலை காதலென்றும் சொல்லலாம் வாசித்திருந்தேன்.

மெல்லவே
அமிழ்ந்து ஆழத்தில்
வண்ணத்துப் பூச்சியின்
மனம் சுமந்த மீன்
கூடின அமைதியுடன்
கண்ணகலப் பார்த்துப்
பார்த்து
நேரம் வந்ததும்
மெல்லவே விளிம்புக்கு நகர்ந்து
கண் திறந்து
படுக்கை நீங்கும்
புதுக் கனவுகளுடன்
மறு வாசிப்பில்
வேறு என்னவோ சொல்லும்
ஒரு கவிதை

முதல் வாசிப்புக்கும் இரண்டாம் வாசிப்புக்கும் உள்ள இடைவெளியில் கவிதை புது பொலிவு பெற்று விடுகிறது. முதல் தொகுப்புக்கும் இரண்டாம் தொகுப்புக்கும் உள்ள இடைவெளி போல. நீயும் நானும் விரும்புகிற உலகம் ஒரே த்வனியைக் கொண்டிருந்தாலும் அத்தகைய மாற்றம் நேர்ந்து விட்டாலும் அது எடுத்துக் கொள்ளும் இடைவெளியில் இருவருமே மாறிவிடுகிறோமில்லையா?

பளிங்குக் கற்களால் அலங்காரிக்கப்பட்ட எத்தனையோ கட்டடங்கள் கண்களுக்கு அழகூட்டுவதில்லை. வெறும் அழகு ஒரு போதும் வியக்கத்தக்கதல்ல. பூமா ஈஸ்வரமூர்த்தியின் அழகுகள் அர்த்தம் பொதிந்தவை. மிக நீண்ட கவிதைகளாக இடம் பெருவனவற்றிலுள்ள தேவையும் செழுமையும் குறுங்க்கவிதையிலும் தென்படுகின்றன. நினைத்தைச் சொல்லமுடியாமல் முடிந்தைச் சொல்கிற லாவகம் தான் கவிதை. சொல்வதிலும் பார்க்க, உள் நுழையும் மெல்லுணர்வே சிறப்பு. அத்தகைய மெல்லுணர்வைத் தன்னிடமிருந்து கண்டெடுத்து இன்னொருவனுக்கு அர்ப்பணிக்கிற செயலை பூமா ஈஸ்வரமூர்த்தி தயக்கமில்லாமல் செய்திருக்கிறார்.

கலந்த ஆடை
மிரண்ட கண்களுடன்
புதரின் உள்ளிருந்து
காதலனுடன் வெளியெறும்
இந்த
இளம் பெண்ணிற்கு
ரொம்பக் காலமாய்
நான் தேடியே வரும்
என் இளளமையை அங்கீகரித்த
அந்த
முதல் பெண்ணின்
சாயல்

ஒரு பெண்ணின் தொடுதலுக்குள் மூளும் உணர்வுக்குப் பொதுவான பெயர் காமம். காமமென்று சொல்வதற்கு வேறு வார்த்தை இல்லாதிருப்பதே காரணம். பின் நவீனத்துவக்காரர்கள் கட்டுடைப்பை முன் வைக்கிறார்கள். அதாவது, குடும்ப அமைப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளுதல் என்கிறான் வாசகன். குடும்ப அமைப்பிலிருந்து விடுவித்துக் கொள்ளுதல் என்பதற்கும் உணர்ச்சிகளிடமிருந்து தவிர்த்துக் கொள்ளுதல் என்பதற்கும் பெரிதான வித்தியாசமுள்ளது.

பெண்ணை ஆணும், ஆணைப் பெண்ணும் தேடுதல் எல்லாத் தத்துவங்களுக்கும் அப்பார்பட்டது குறுகிய மனத்தொடு தெருவில் பிரயோகிக்கும் கெட்ட வார்த்தைகளில் இதன் குரூரத்தையும் கோமளித்தனத்தையும் அறியலாம்.

மீற முடியாத உணர்ச்சிப் பிரவாகத்தில் மூழ்கி அழித்துக் கொள்கிற அடையாளத்தை உள் மனம் விரும்பும். வெளியில் பயந்து – அருவருப்பென – ஆகாதென சமூகத் தளத்தில் தன்னை நிரூபிக்க முயலும். கடற்கரைக் கால்கள் தொகுப்பில் இரண்டு விதமான கருத்துக்கு இடமில்லை. ஒன்று தான் உன் பாதை, என் பாதை. ஒன்றுதான் உன் நகரம், ஒன்றுதான் என் நகரம்.

எது
எழுதின கவிதை
எது எழுதாதக் கவிதை
திகைக்கும்
ஒரு உறங்காத தகப்பனருகே
முன்னிரவில்
கான நேர்ந்த
கார்ட்டூனைக் கட்டியணைத்தபடி
கனவுக்குள்
விழித்திருக்கும்
ஒரு உறங்க்கும் சிறுவன்

சிறுவர்களின் உலகத்தை வாங்கமுடியாது நம்மால். தன்னியல்போடு ஓடும் நதியை ஒத்தது. அவர்களது உலகம். புத்தகங்க்களைச் சுமந்த முதுகுகளோடு வாழப் பழக்கி வைத்தாலும், நன் நினைவுச் சிமிழுக்குள் பதுக்கி வைத்த பால்யத்தின் பசுமைகளைப் பின்னாள்கள் தொலைத்துவிட்டன. கசடுகளைச் சந்திக்க நேர்ந்தபின் கனிவின் பிற்பகுதியை இழந்துவிட்டோம் எனலாமா?

தண்டவாளத்தில் அமர்ந்து தேனெடுக்க நினைக்கும் வண்ணத்துப் பூச்சியைக் கண்டிக்க மனசில்லை. பார்த்துவிட்டு ஏமாந்து திரும்பும் அவை பூவைத் தேடி அடையும்.

ஒரே வாசிப்பில் முடித்துவிடக் கூடிய சிறிய தொகுப்பு. இவரது முந்தைய தொகுப்புகளைப் போலவே. அளவில் இவர் கைக்கொள்ளும் சுருக்கம் கவிதைகளில் இல்லாதிருப்பது ஆறுதல். மேலும், இத்தகைய சுருக்கமான சொல்லாடல்கள் நவீனத் தன்மையைக் குலைத்து விடாது. ஒரேயொரு எச்சரிக்கை. துணுக்காகும் அபாயமிருக்கிறது. தேர்ந்த படைப்பாளியின் கைக்குள் அவை சிதறிப் போகாதென நம்பாலம்.

நவம்பர் மாத தொடக்கத்திலிருந்து ஐயப்பனுக்குப் பக்தர்கள் உருவாகிறார்கள். இடைப்பட்ட ஒரு வருட கால இருந்தும் செய்து வந்த பாவங்க்களில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள மாலை போட்டு விரதம் இருக்கிறார்கள். விரதம் என்றால் மது, மாது நீக்குதல் என்று பொருல். புகைப்பிடிப்பது பெரிவதில்லை. ஒலி நாடாக்கள் நாலாதிசையும் ஒலிக்கும். கருப்பு வேட்டிகள் மஞ்சள் நிறத் துண்டுகள் விற்பனை கூடும். முதல் வருடம் போனால் தொடர்ந்து மூன்று வருடம் போகவேண்டும். கன்னிசாமிகளுக்கு ஒரு குருசாமி கிடைப்பார். திரைப்பட நடிகர்களுக்கு இதில் நம்பிக்கை அதிகம். பத்திரிக்கைகளில் அவர்கள் மலைக்குக் கிளம்புகிற நாளில் பெரிதான புகைப்படங்கள் பிரசுரிக்கப்படுகின்றன. எல்லாமுணர்ந்த ஐயப்பன் பெண்களை மட்டும் அனுமதிப்பதில்லை. ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பக்திமிக்கவராய் இருந்தாலும் பெண்கள் என்றால் ஐயப்பனுக்கு இஷ்டமில்லை. மாதவிலக்கு தடைபட்ட பிறகு பெண்களை அனுமதிப்பாராம். பழனிக்குப் போகாகாதவர்களும் ஐயப்பனை விரும்புவது என்ன காரணமோ தெரியவில்லை. சக்தி மிக்கவெரென்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஈஸ்வரமூர்த்தி எழுதுகிறார்:

விடுபடுதல் வேண்டி
விரதம் இருந்து இருமுடி கட்டி
மலையேறி மணிகண்டனைத் தேடிப்
போனால்
அவன் கேட்கிறான் ஏன் இங்கு வந்தாய்
எல்லாம் சமவெளியிலே
கிடைக்கும் போது
உனக்கு ஏன் இந்த மலையேற்றம்

………..

இனி என்ன செய்யப் போகிறாய்
கிழே தானே இறங்கப் போகிறாய்

அப்படியொன்றும் நாத்திகத்தை வலுவாக நம்புகிறவராகத் தெரியவில்லை. பக்தியின் பொருட்டு அவர் கொண்டிருக்கும் ஆத்மத் தேடல், சிலைகளை வழிபடுவதில் இல்லை. சுயம் தேடும் முயற்சியில் இந்த வரிகள் வந்திருக்க்கலாம். வள்ளலாரின் பேருண்மைப் புரிதலாய் இதை நான் உண்ர்கிறேன்.

தமிழில் ஒரு விசித்திரமான அணுகுமுறை என்னவெனில், ஒரு கவிஞ்ன் முப்பது வருடங்களாகப் பத்திரிக்கையில் எழுதி வந்தாலும் ஒரு தொகுப்பாகக் கொண்டு வராத வரை கணக்குக்குள் வரமுடியாது. மில்லினியத்தின் கடைசி இருபது வருடங்க்களில் தொகுப்புக் கொண்டு வரமுடியாதவர்கள் அநேகம். கத்தைக் கத்தையாய் எழுதியிருந்தாலும் பொறுக்கி எடுத்து பத்தோ பதினைந்தோ கவிதைகளைச் சேர்த்தேனும் ஒரு புத்தகம் கொண்டு வருதல் அவசியம். இந்த அவசியத்தை உணர்ந்து கொண்டவர்களில் நாகூர் ரூமியைச் சொல்லலாம். எண்பதுகளின் தொடக்கத்திலிருந்தே எழுதிவரும் ரூமி மிகத் தாமதமாக நதியின் கால்களை கொண்டு வந்திருக்கிறார். சிற்றிதழ்களின் வாயிலாக அவ்வப்போது தன் இருப்பை உணர்த்தியவர்.

நதியின் கால்களைப் பொறுத்தமட்டிலும் நாகூர் ரூமி கையாண்டிருக்கும் மொழிநடை யதார்த்தப் பூர்வமானது. வாசகனிடம் ஒரு நேரடிப் பரிச்சயத்தை உருவாக்கிக் கொள்வது. தொடர்ந்து எழுதி வந்திருந்த போதிலும் ஒத்த தன்மையைக் காணமுடிகிறது. ஒத்த தன்மை உள்ள கவிதைகளுக்கு ஆயுள் கெட்டி. அது நல்லதா கெட்டதா? தெரியாது.வளர்ச்சி விகிதத்தைக் கணக்கிட்டு உருவாக்கப்படும் அபிப்ராயத்தில் எனக்கு உடன்பாடில்லை. ரூமியின் கவிதைகளில் நகுலனுக்குப் பிடித்ததாக இதைச் சொல்கிறார்.

நான் ஏழையல்ல
ஏனெனில்
நான் பணக்காரன் அல்ல

ஒரு மனிதனின் வாசிப்பு, எழுத்து மற்றும் வாழ்க்கை அனுபவங்களுக்கு ஏற்றவாறு ஒரு குறிப்பிட்ட தருணத்திய கவிதை, அந்த மனிதன் மூலமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. ஒரு மனிதனின் வயதுக்கும் அவருடைய கவிதையின் வயதுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என முன்னுரையில் சொல்லிவைக்கிறார் ரூமி. ஆங்க்கிலப் பேராசிரியராகப் பணி. சிற்றிதழ்களுக்குப் பரிச்சியமானவர்.

முதல் வாசிப்பில் பாதிக்காத பல கவிதைகள் இரண்டாம் மூன்றாம் வாசிப்புகளில் உன்னததைக் காட்டிவிடுகின்றன. அந்த விதத்தில் ரூமியின் கவிதைகளும், கவர்ந்திழுத்து பின் ஏமாற்றும் ரகமில்லை. ஆழ்ந்து போவதற்கு ஏற்றவை. நடைப் பிணம் போல் என்றொரு சொல்லை அம்மாச்சி அடிக்கடி சொல்லும். மூன்று மகள் பெற்று கட்டிக் கொடுத்தும் பூரண வாழ்வை மேற் கொண்டும் பாட்டியின் வாயிலிருந்து வந்த நடைப் பிணம் என்கிற சொல் என்னை மிரட்டியது. ஆண் பிள்ளைகள் இல்லாததுதான் அதற்குக் காரணம். ஆண் பிள்ளைகள் இருந்திருந்தாலும் அதே வார்த்தயை உச்சரிக்கக் கேட்டிருப்பேன். இயல்பு வாழ்க்கையோடு இரண்டறக் கலக்கமுடியாத சோகம் கலைஞனுக்குண்டு. புராணங்க்களில் இதிகாசப் புனைகதைகளில் எல்லாக் காலத்தும் வெளிப்படும் சோகம் அது.

ஆண்மகன் வாடையின்றி
அவதரித்தாராம் ஏசு
கிழவனாகவே பிறந்தாரம்
லாட்சு
சிரித்துக் கொண்டே பிறந்தாராம்
ஜரதுஷ்ற்றன்
செத்துக் கொண்டே வாழ்கிறேன் நான்

தனித்தனி வாக்கியத்தில் என்னைக் கவர்ந்தது சிரித்துக் கொண்டே பிறந்த ஜரதுற்றன் தான். அழாத குழந்தைகளைத் தான் கொஞ்ச்ச பிடிக்கும். ரூமீயின் அணுமுறையில் ஒரு கறார்த்தன்மை தென் படவில்லை. கறார் தன்மைகள் தென்பட்டால் கவிதையாகாது என்பதாலோ என்னவோ அந்தந்தச் சமய உணர்வுகளுக்கு ஆட்படும் வெகுளியாகத் தெரிகிறது. சுபமங்களாவில் பிரசுரமான என் சட்டைகள் கவிதைகளில் அதைக் காணலாம். சட்டைகள் குறித்து அதிதிருப்தி கொண்டிருக்கும் இளைஞர்களை நானறிவேன்.பிடித்ததாக எடுத்து பார்த்தும் தைத்து முடித்து போட்டுப் பார்க்க பிடிக்காமல் போன சட்டைகளைத் தம்பிகளுக்குத் தந்துவிடுகிற அனுபவம் என்னிடமுண்டு.

கவிதைகளும் சட்டைகளைப் போலத்தான் எழுதி முடித்த பின்னால் பிடிக்காமல் போய்விடுகின்றன. கோட்பாடோ, கொள்கையோ பரபரப்புச் செய்தியோ கவிதையாகாது என்பதில் தீர்க்கமாக இருப்பவர் அவ்விதமும் ஒன்றிரண்டு எழுதிப் பார்க்கிறார். எழுதிப் பார்த்துவிட்டுச் சொல்லியதாலேயே அதிலுள்ள உண்மையை ஏற்க வேண்டியுள்ளது.

ஈஸ்வரமூர்த்தியிடம் கண்ட அதே தொனியை உன் கோயில் என்னும் கவிதையில் ருமீ எழுதுகிறார்.

நேற்றுதான் போனேன்
இத்தனை வருசங்க்களில்
இந்தக் கோயிலுக்கு
மந்திரங்களின்றி
மாலைகளின்றி
புலம்பல்கள் இன்றி
வேதங்களின்றி
வாதங்க்களின்றி
கடவுளையும் கண்டேன்
என்னைப் போலவே
இருந்தார்

இருவரும் இதைத்தான் சொல்கிறார்கள். ஆனால் வெவ்வேறு மாதிரியான சொற்களில்,

ஒவ்வொரு முறை
இந்த சிகரெட்டை
சுவைக்கும் போதும்
பால் குடிக்கிறேன்
என் தாயிடம்

சிகரெட்டும் தாய்ப்பாலும் சமமா? தாய்ப்பால் ஒருவனின் தேவை சார்ந்த, வயிறு கேட்கும் பிச்சை, சிகரெட் அப்படியில்லை. ஆனாலும் சிகரெட்டை விடமுடியாதவர்கள். செயின் ஸ்மொக்கர்கள் ஆறாவது விரலாய் சிகரெட்டை கருதுகிறவர்கள். மலைக்கு மாலை போட்டும் சிகரெட்டை விட மனமில்லாதவர்கள். உச்ச போதையில் சிகரெட் கேட்டு நச்சரிப்பவர்கள் உண்டுதான்.

குழந்தைக்கு பசிக்காவிட்டாலும் பால் கொடுக்கவேண்டும். கொடுக்கத் தவறினால் மார் கட்டிக் கொள்ளும் பெரிய அவஸ்தை. பழகிக் கொண்டுவிட்டால் சிகரெட்டும் அப்படித்தான். தவிர்க்க முடியாத அவஸ்தை. இந்தக் கவிதையில் மேலும் சில உள்ளீடான விஷயங்களை உங்களிடமே விட்டுவிடுகிறேன். உதட்டுக்குச் சம்பந்தமான இதையும் உரைக்க விருப்பமில்லை.

கிழ்ப்படியில் காதலியும்
மேல்படியில் கடவுளும்
காத்திருக்கிறார்கள்
எனக்காக

மேலே போக வேண்டும் நான்
கிழிருந்து

கிழிருந்து என்கிற சொல் இல்லா விட்டாலும் கவிதை முழுமை அடையும். மேலே போக வேண்டும் என்பதே கிழிருந்து தான் என்பது பூடகம். உச்சத்தில் இருக்கிறார் கடவுள். அவரை விட கொஞ்சம் கிழே இருக்கிறாள் காதலி. இருவருமே ஒருவனுக்காக காத்திருக்கிறார்கள். ரூமீ யாரிடம் போகப் பிரியப்படுகிறார் என்பதே கேள்வி. அப்போதுதான் கிழிருந்து என்னும் சொல்லின் தேவை புரிகிறது. ஆகவே, காதலியிடன் இருக்கிற ரூமி கடவுளிடம் போக வேண்டும். இரண்டு பேரின் காத்திருத்தலில் எனக்குத் தோன்றுவது கடைசியில் கடவுள் ஏற்றுக்கொள்வார். காதலிகள் கடைசியில் பெரும்பாலும் ஏற்றுக் கொள்வதில்லை.

ரூமி கணித வரையறைகள் மீது விசேஷக் கவனம் செலுத்துகிறார். அறிவியல் தெரிவுகளைக் கையாண்டு பார்க்கிறார். இதுவும் தமிழில் நல்ல அம்சங்களைச் சேர்க்கும் தடம் தான். பிரம்மராஜன் முன்னுரையில்,” ரூமீயின் கவிதைகள் நவீனத்துவத் தன்மை கொண்டவை. அவை என்ன மாதிரி நவீனத்துவம் – அமெரிக்க நவீனத்துவமா அல்லது ஐரோப்பிய நவீனத்துவமா என்பதை விவரிப்பதற்கான இடமில்லை இது. என்பதுகளின் தொடக்கத்தில் எழுதிய பலரைப் போல சற்றே நூலுக்கான படிமப் பிரயோகத்துடன் எழுதினார். கம்ப்யூட்டரில் பேஸிக் மொழியில் முதல் முதலாகக் கவிதை எழுதியது ரூமீதான் என்று உறுதியாகச் சொல்லமுடியும்” என்கிறார்.

அறிவுக்கும் மனதுக்கும் உள்ள இடைவெளியில் மனசு சார்ந்த கவிதைகளே தமிழில் அதிகம். அதுதான் கவிதை என்று நம்புகிறவர்களில் என்னையும் சேர்த்து வைக்கலாம். மிக எளிதான அனுபவக் கவிதைகள் ஏற்கப்படும். எக்காலத்துக்கும் நிற்கும், சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணமாவைப் போல. அறிவு சார்ந்த கவிதைகள் தமிழில் தேவை. அந்த வெற்றிடத்தை பூர்த்தியாக்கும் முயற்சியாக ரூமீயின் கவிதைகளைக் கொள்ளலாம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: