யுகபாரதி

ஒற்றைத் தன்மை

Posted by யுகபாரதி மேல் நவம்பர் 9, 2009

என்னை ஞாபகமிருக்கிறதா? எனக் கேட்டு சிலர் நம்மைச் சங்கடப்படுத்துவதுண்டு. அன்பாலும் உரிமையாலும் இக்கேள்வி நம்மை நோக்கி வீசப்படும்போது வேறு வழியில்லாமல் ‘ஏன் இல்லை, உங்களை மறக்கமுடியுமா?’ என பொய் பதிலை சொல்லி தப்பித்துவிட முயல்கிறோம். உண்மையில் பெயர்கள் மறந்துவிட ஏதுவானவை. குறைந்த பட்சம் இரண்டு முறையேனும் ஒருவரைச் சந்திக்க வாய்ப்பு கிட்டினால்தான் பெயர்கள் இதயத்துடன் ஒட்டிக்கொள்ளும். இல்லையேல் இருப்பதில்லை ஞாபகம். எனினும், கேட்பவரை நம்மால் என்ன சொல்லித் தேற்ற முடியும்? கேள்விகளின் எதிர்பார்ப்பு ஒரு புறமிருக்க பதில்களின் தடுமாற்றம் பாவத்துக்குரியது. இது போல் தமிழ் இலக்கியத்தில் இதுகாறும் நாம் மறந்த அல்லது மறக்கடிக்கப்பட்ட பெயர்கள் அநேகம்.

எதேச்சையாக அலமாரியை சீர் செய்யும் போது தென்படும் சில புத்தகங்கள் இதே மாதிரியான கேள்வியை எழுப்புகின்றன. என்னை ஞாபகம் இருக்கிறதா? இப்போது எழுதுவதில்லை. முதல் தொகுப்புடன் என் எழுத்தார்வம் தடைபட்டுவிட்டது. மேலும் எழுத காலம் கருணை செய்யவில்லை. கசங்கியும், கிழிந்தும் போயிருக்கலாம் என்றாலும் என் பதிவுகள் நிரந்தரமானவை. மறக்கப்பட்டும் நினைவிலிருந்து அகற்றப்படாமல் போயிருக்கலாம். ஆனாலும், என் எழுத்துக்கள் ஜீவிதமானவை.

சமீத்தில் அப்படியொரு நூல் என் கையில் சிக்கியது. கவிஞர் பாரதி கண்ணம்மாவின் கவிதைகள். 80களில் மிகத் தீவிரமாக இயங்கிய பெண்ணிய சிந்தனையாளர். பெண் மொழியின் சகல பரிணாமத்தையும் தலித் பார்வையோடு முன் வைத்தவர். காத்திரமான எழுத்து என்போமே அதற்கு சாட்சியாக விளங்கியவர். குடும்ப சிக்கல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். புரட்சிகர இயக்கத்தில் தன்னையும் தன் எழுத்துக்களையும் சமர்பித்த பாரதி கண்ணம்மா இப்போது இல்லை. எனினும், இவரது கவிதைகள் காலத்தைப் பார்த்து கேட்கின்றன ‘ என்னை ஞாபகம் இருக்கிறதா? ‘

எல்லோரும்
கைகொட்டி நகைக்க வேண்டும்
என்பதற்காக
– நான்
தடுக்கி விழும் வைபவத்தை
எதிர்பார்த்து
தயங்காமல் காத்திருக்கும்
தனிப்பண்பு உங்களுக்கு

காலம் கடந்தும் ஒரு படைப்பு நிற்க வேண்டும் அங்கனம் நிற்கதக்க படைப்புகளை நம் முன்னோர்கள் நமக்குத் தந்திருக்கிறார்கள். நமக்கு முன்னோர்கள் தந்ததுபோல நாம் நமக்குப் பின் வருபவரைக் கணக்கிலெடுத்துச் செயல்பட வேண்டும் என்கிறார்கள். எனக்கு இக்கூற்றில் துளியும் உடன் பாடில்லை. காலம் கடந்து நிற்பது நம் கையில் இல்லை. அது காலத்தின் கையில்தான் இருக்கிறது. காலம் கடந்து எது நிற்கும் என யாருக்குத் தெரியும்? இயற்கை, சீற்றம் கொண்டு எல்லா நகல்களையும் அழித்துவிட்டால் எப்படி நிற்கும் நமது படைப்புகள் காலம் கடந்து? ஏன் – பாரதி, கம்பன், இளங்கோ, வள்ளுவன் இல்லையா எனலாம். உண்மைதான். ஒரு போதும் அவர்கள் காலம் கடந்து நிற்குமென எழுதியிருக்க மாட்டார்கள் என்பதே தாழ்மையான கருத்து. எழுத்து சிறப்பாக இருந்தால் நிற்கும். நிற்காவிட்டாலும் பிழையில்லை. சம காலத்தில் இயங்கும் சிலரோடு நாமும் இயங்கினோம் என்பதன்றி வேறொன்றும் சிறப்பில்லை. காலங்கள் மாறவேண்டும். கருத்தும், வடிவமும் ஏற்றம் பெறவேண்டும் என்பதே எளியோரின் எண்ணம். அந்த எண்ணம் வாய்க்கப் பெற்ற யாருக்கும் எல்லாக் காலத்துக்கும் பொருந்துகிற படைப்பு மீது நம்பிக்கையிருக்காதென்றே எண்ணுகிறேன்.

அறம் சார்ந்த, அறத்தை வலியுறுத்துகிற கருத்துக்கு மட்டுமே ஒற்றைத் தன்மையோடு நிலைக்கும் சக்தி உண்டு. ஆனால், முழுவதும் நுகர் பொருள் கலாச்சாரத்தோடு நொருங்கிக்கொண்டிருக்கையில் மிஞ்சப் போவது எழுத்தா? சக்கையா? அதேபோல பொதுத்தன்மை. இங்கிலாந்தில் இருப்பவனும் இந்தியாவில் இருப்பவனும் ஒரே மாதிரி ஆளுமை கொள்ள வேண்டும் என்பது. இதுவும் சாத்தியமில்லை. எலியட்டின் வரையறைகளை ஏழைத் தமிழ் படைப்பாளியின் மீது திணிப்பதும் அறிவீனம். மண்ணுக்கேற்ற விளைச்சல் விளைச்சலுக்கேற்ற தரம் என்பதே சரி. தமிழ் அடையாளங்கள் அற்ற படைப்புகள் காலம் கடந்து நிற்பதால் என்ன பயன்? உலகமயமாக்கலின் உற்பத்தி தந்திரத்தைக் கலை இலக்கியத்திற்கு பொருத்துவது கேவலமானது.

ஒரு படைப்பாளி இன்னோரு படைப்பாளியைக் குறித்த காழ்ப்பு விமர்சனமும் தற்போது அதிகமாகி வருகிறது. இதுவும் தன் பொருள் உயர்வென்று பறைசாற்றும் தற்குறித்தனமின்றி வேறில்லை. எழுதுதல் யாருக்கும் எளிது. அறியவாம் எழுதிய வண்ணம் செயல். பெண் கவிஞர்களின் பட்டியலொன்று தயாரிக்கப்படுகையில் நிச்சயமாக பாரதி கண்ணம்மாவின் பெயர் இருக்கும். மீண்டும் மீண்டும் நினைக்கப்பட வேண்டிய இப்பெயரை ஏனோ ஞாபகப் பிசகாக சிலர் மறந்து விடுவது வேதனையளிக்கிறது. பத்து, பன்னிரண்டு முன் வரிசைப் பெண் கவிஞர்களில் சிலரை முன் மொழிய விரும்பாத அது தந்திரமானது. பெண் கவிஞர்கள் என வகைப்பிரிப்பதில் எனக்கு விருப்பமில்லையாயினும் இறந்து போனால் அவரது படைப்பும் எரிக்கப்பட வேண்டுமா, என்ன? குடும்பச் சுழலில் எழுத்து பெண்களுக்கு அசெளகர்யம். வளர்த்தெடுக்கப்படாத பொதுப் பண்புகளால் ஓர் ஆண் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது கண்டனத்திற்கும் கவலைக்கும் உரியது. மீறி இரண்டொருவர் எழுத்தை தவம் போல செய்து வருகையில் ஒழுக்கச் சாட்டைகளால் அவர்களை உள் காயப்படுத்துகிறது சமூகம்.

கோலமுறு திருமிடறில்
கத்தி வைத்து
கூறிவிட்ட சொற்பதத்தில்
வத்தி வைத்து
நீளக்குறியை
நெஞ்சுக்குக் கொண்டு வந்த
புரூட்டஸ் நீங்கள்
அதனால், இன்று
நாந்தான் சீஸர்
ஜூலியஸ் சீசர்
-இந்த வரிகளை வியாக்யானம் செய்வதில் பலனில்லை. ஏனெனில் வெப்பக் காற்றை உமிழும் கந்தகக் கவிதைகளை வெகு இயல்பாக வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார் பாரதி கண்ணம்மா. யார் துரோகி? கோலமுறு திருமிடறில் கத்தி வைத்த அறியாமையே நீ எப்போது போவாய் கல்லறைக்கு? கூறி விட்ட சொற்பதத்தில் வத்தி வைத்த ஆதிக்கமே நீ மரிக்கவே மாட்டாயா? பாரதிகண்ணமாவின் இனொரு கவிதை என்னைக் கலங்கடித்தது. மணந்துகொண்டவன் தன்னை கற்பமாக்கியதுகூட சுதந்திரமாய் வெளியே போக இயலாமல் செய்வதற்கான உத்தி என்ற கவிதை. குழந்தைகள் மீது பெண்களுக்குள்ள பிரியத்தை ஆதிக்கத்திற்குப் பயன்படுத்தும் அற்பத்தைச் சொல்லிக் காட்டும் கவிதை. என்னளவில் இப்படியொரு கவிதை இதற்கு முன் வேறுயாரும் எழுதியிருப்பார்களா எனத் தெரியவில்லை. கண்ணம்மா பாரதியின் கனவு. இந்தக் கண்ணமா காலத்தின் சிறகு. உங்களை ஞாபகமிருக்கிறது. ஒரு போதும் மறக்கமுடியாத, மறக்கக் கூடாத பெயர் உங்களுடையது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: