யுகபாரதி

கவிதைக் குதிரை

Posted by யுகபாரதி மேல் நவம்பர் 10, 2009

திரைப்பாடல் எழுதுவதற்கு அடிப்படையான தேவை என்று எனக்குத் தோன்றுவது கவிதை மனம். கவிதை மனம் இருக்கும் யார் ஒருவரும் பாடல் துறையில் பெரிதாக பிரகாசிக்க முடியும். உதாரணமாக, கண்ணதாசனின் ஆரம்ப கால திரை வாழ்க்கை வசனகர்த்தாவாகவே தொடங்கிற்று. ஆனால், இன்று அவர் மூகம் தலைசிறந்த திரைப்பாடல் ஆசிரியர் எனும் விதமாக முந்தி நிற்கிறது. காரணம், அவரிடமிருந்த கவிதை மனமேயாகும். சரி, கவிதை மனம் என்றால் என்ன?

இந்த பூமியிலே மிகவும் சிக்கலான, விடை காணமுடியாத அல்லது விடையே இல்லாத கேள்வி இதுவாகத்தான் இருக்கும் என நான் நினைக்கிறேன். எழில் சூழ்ந்த உலகத்தை குழந்தைகளின் விழிகளில் பார்ப்பது என்றும் மனத்தில் பதிந்த காட்சிகளைக் கலாபூர்வமாகப் பிறருக்குச் சொல்வதென்றும் கவிதை மனம் என்பதை நம் வசதிக்காக புரிந்து கொள்வோம். ஏனெனில், முன்னமே சொன்னது போல சரியான விடை இல்லாத கேள்விக்கு எதுவும் பதிலாகி விடுவது இயற்கை. மேலும், இந்த சுவாரஸ்யமும், சூட்சுமமுமே கவிதையின் பலம் அல்லது பலவீனம்.

கவிதை மனம் எல்லோருக்கும் இயல்பிலே வாய்த்திருப்பது தான். விசேஷ வகுப்புகளுக்குப் போய் அதைக் கற்றுவர வேண்டியதில்லை. நீங்கள் போட்டிருக்கும் சட்டை அழகாக இருக்கிறது. அடடா, இந்தப் பறவைகளைப் பார்த்தால் இதயமே பறப்பது போலத் தோன்றுகிறது இப்படியான வாக்கியங்களை வெகு சாதரணமாக ஒரு சராசரிகூட சொல்ல முடிகிறது என்றால் அதைவிட மேலதிகமான ரசனை கவிதையை ரசிக்கத் தேவையென்று நான் சொல்ல மாட்டேன். ரசனைதான் கவிதை மனம் என்று நீங்கள் புரிந்து கொண்டு விட்டால் என் பணி மிகச் சுலபம்.

சின்னச் சின்னக் கிறுக்கல்களில் இருந்து ஒர் ஒவியத்தை நாம் வரையப் பழகுவது போல தப்பும் தவறுமான வாக்கியப் பிழைகளில் இருந்தே ஒவ்வொரு கவிஞர்களும் உருவாகி இருக்கிறார்கள். சிறு பொறிதான் பெருந்தீயாய் சினந்தோங்கும் என்பதுபோல் நம்முடைய சின்னச் சின்ன சிந்தனைகளே பின்னாளில் கவிதை எழுதும் சாத்தியத்தை உண்டாக்கும். தொடங்கும்போது எழுதுவது கவிதையல்ல. கவிதை மாதிரி. அதோடே நின்று விடுகிறவர்களும் உண்டு. ஆனால், மிக உயரமான் இடத்தை எட்டிப் பிடிக்க ஆசைப்படுகிறவர்கள் மேலும் மேலும் தன்னைப் பட்டை தீட்டிக் கொள்ள நல்ல நூல்களைத் தேடிப் பிடித்து வாசிக்க வேண்டும்.

பொதுவாக, கவிதை எழுதுகிறவர்கள் பெரும்பாலோர்க்கு ஒரு கெட்ட குணம் உண்டு. அது வேறொன்றுமில்லை. கவிதை நூல்கள் தவிர வேறெதும் வாசியாதிருப்பது. அவ்வாறில்லாமல் நல்ல நாவல், சிறுகதைகள், திறனாய்வுக்கட்டுரைகளை, வரலாற்று நூல்களை வாசிப்பதன் மூலம் மொழிப்பிரயோகம் மிக லாவகமாக வரும். வார்த்தைகள் வசப்பட்டுவிட்டால் அப்புறமென்ன?

திரைப்பட பாடல் எழுதுவதற்கான முன் தயாரிப்பு அல்ல இது. கவிதை எழுதுவதற்கான தயாரிப்புகளையே முதலில் சொல்லியிருக்கிறேன். ஏன் என்றால், தமிழ் சினிமாவில் பாடல் எழுத தேவையான முதல் தகுதி நீங்கள் கவிதைகளோடு பரிச்சையமானவராக இருப்பதேயாகும். இரண்டாவது தகுதி, ஒரு கவிதை நூலாவது வெளியிட்டிருக்க வேண்டும். கண்ணதாசன், பட்டுக் கோட்டை, உடுமலை, மருதகாசி இவர்களெல்லாம் புத்தகம் வெளியிட்ட பிறகுதான் வந்தார்களா? என கேட்கக்கூடாது. இந்தக் காலத்து இயக்குனர்களும் இசையமைப்பாளர்களும் அதை பெரிதும் விரும்புகிறார்கள். நான், முத்துக்குமார், கபிலன், தாமரை எல்லோரும் அவ்வாறே அறிமுகமாயிருக்கிறோம். ஓரளவு கவிதைகளோடு பரிச்சயம், பொதுமான மொழியறிவு, இவற்றோடு சேர்த்து இடையறாத முயற்சியும் வேண்டும். முயற்சி என்று நான் சொல்வது கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்குவதல்ல. தொடர்ச்சியாக எரிந்து கொண்டிருக்கும் கவிதை நெருப்பை எக்காரணத்தினாலும் அணைய விடாமல் பார்த்துக் கொள்வது. கவிதை மனம், ரசனை, நூல்கள் வாசிப்பது, கவிதை நூல் வெளியிடுவது, சிந்தனைக்கும் பிறகு மிக முக்கியமானது சந்தத்திற்கு எழுதும் பயிற்சி. கவிதைகளைப் பிழையறக் கற்றுவிட்டாலே அந்தப் பயிற்சி வந்துவிடும். குறிப்பாக, மரபுக்கவிதை இலக்கணத்தைப் பயின்றிருப்பது நல்லது. தளை, சீர், அடி, தொடை, குறில், நெடில், ஒற்றெழுத்து, மாத்திரை அளவு போன்றவை தெரிந்திருந்தால் சந்தம் உங்களுக்கு சர்க்கரை மாதிரி. எந்த மெட்டுக் கொடுத்தாலும் அதற்குப் பொருத்தமான வார்த்தைகளை நிரப்ப மனதளவில் பயிற்சி மேற்கொண்டாலே போதுமானது. இந்தப் பயிற்சி போதுமா? இசைப்பயிற்சி தேவையில்லையா? என என்னைப் போலவே உங்களுக்கும் ஆரம்ப கால சந்தேகம் வருகிறது இல்லையா? அதற்குப் பதில் தேவையில்லை. கட்டாயமுமில்லை. ஓரளவு முணுமுணுக்கும் தன்மையும் மெட்டைப் பிரித்து எழுதும் போது ஒட்டி வருகிறதா எனச் சோதிக்கும் இயல்பையும் பெற்றிருந்தால் போதும்.

மெட்டை எப்படித் தருவார்கள்? இதைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து வைத்திருப்பது உதவிகரமானதாக  இருக்கும். லலலா, தனனா, தான, னான, லீலீ, இப்படி எதையாவது வைத்துக் கொண்டு இசையமைப்பாளர் நீட்டியும் குறுக்கியும் பாடியிருப்பார். இப்போதெல்லாம் ஒலி நாடாவில் பதிவு செய்து தந்துவிடுவதால் ஆற அமர்ந்து வீட்டில் இருந்தே அந்தச் சந்தங்களை உள்வாங்கி எழுதும் வாய்ப்பிருகிறது. முன்பெல்லாம் ஒலிப்பதிவு கூடத்திலே எழுத வேண்டியிருந்தது. இதைத்தான் தத்தகாரம் என்று அழைக்கிறார்கள்.

லலலா என்பதில் இரண்டு குறில் எழுத்தும் ஒரு நெடில் எழுத்தும் இருக்கின்றன. இதற்கு இணையான வேறு இரண்டு குறில் எழுத்தையும் ஒரு நெடில் எழுத்தையும் பொருத்தினால் தத்தகார சிரமம் தகர்ந்துவிடும். உதாரணமாக லலலா – என்பதற்கு மாற்றாக கனவா, உயிரே, பறவை, எதனால் போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம். உங்கள் வசதிக்கும் சிந்தனைக்கும் ஏற்ப இது மாறுபடும். வறுமையின் நிறம் சிகப்பு திரைப்படத்தில் கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் சிப்பியிருக்கு முத்துமிருக்குது பாடல் பாடுவார்களே அந்தப் பாடலில் இதைக் காட்சி பூர்வமாக விளக்கியிருப்பதால் இயக்குனர் கே பாலசந்தருக்கும், கண்ணதாசனுக்கும் என் சாஷ்டாங்க நமஸ்காரம்.

பாடலை அணுகுவதில் உள்ள சிக்கலைத் தீர்த்தாயிற்று. பிறகு என்ன செய்வது? சூழலுக்கு ஏற்ப அவ்வார்த்தைகளை எப்படி இட்டு நிரப்புவது என்கிறீர்களா? அது உங்களுடைய தனிப்பட்ட சாமர்த்தியம். இந்த சாமர்த்தியத்தால்தான் ஒவ்வொரு கவிஞரும் தனித்துவம் பெறுவார்கள். வெகுஜன ரச்னையோடு கவித்துவ அழகோடு, மேலோட்டமான அணுகுமுறையோடு என ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு மாதிரியான அடையாளத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

கருத்து ரீதியாகவும், எழுத்து ரீதியாகவும் நீங்கள் யாரை வேண்டுமானாலும் பின்பற்றலாம். உங்கள் ரசனைக்கு உகந்த தேர்வுதான் சரியானது. தத்தகார பயிற்சி என்பது மறந்து போன பழைய பாடல்வரிகளுக்கு குளிக்கும்போது, தனித்திருக்கும் போது நாமாக சில வார்த்தைகளை இட்டு நிரப்பிப்பாடுகிறோமே அம்மாதிரியான செயல்தான்.

தன்ன னான
தன்ன னான
தன்ன னான னானானா

தன்ன னான
தன்ன னான
தன்ன னான னானானா

உன்னை போல
உன்னை போல
இங்கு யாரு பூமானே

அன்னை போல
தந்தை போல
இங்கு யாவும் நீதானே

கொடுக்கப்பட்டுள்ள சந்தங்களுக்கு வார்த்தைகளை எப்படி பொருத்துவது என்பதற்காகவே இந்த உதாரணம். இதே சந்தம் ரஜினிகாந்த் நடிக்க வித்யாசாகர் இசையமைக்க, இயங்குனர் வாசு சூழலை விளக்க எப்படியாகிறது பாருங்கள்

கொஞ்ச நேரம்
கொஞ்ச நேரம்
கொஞ்சிப் பேசக் கூடாதா

அந்த நேரம்
அந்த நேரம்
அன்புத் தூறல் போடாதா?

பாடல்களுக்கு நுழைவதற்கு முன்பே அந்த சந்தம் அதாவது கொடுக்கப்பட்ட சந்தம் உங்களுக்கு முழுதாக மனத்தில் பதியும்படி பார்த்துக் கொண்டால்தான் வார்த்தைகள் இடறாமலும் சிந்தனைகள் பிறழாமலும் எழுதமுடியும். யார் சாயலும் இல்லாமல் தனியாக முத்திரைகளைப் பதிக்க விரும்புகிறவர்கள் முன்னோர்களின் வரலாற்றையும் அவர்களின் சாதனைகளையும் முற்று முழுதாகத் தெரிந்திருந்தால் அன்றி சோபிக்க வாய்ப்பில்லை.

கூறியது கூறல் குற்றம் என்று தொற்காப்பிய நூற்ப சொல்லியிருப்பதால் குறைந்த பட்சம் பயன் படுத்திய சொற்களை ஒரே மாதிரியான உவமைகளைத் தவிர்ப்பது நல்லது. எப்போதும் பாடலைக் கேட்பதும், எந்தப் பாடலைக் கேட்டாலும் அதற்கு நாம் எப்படி சிந்திப்போம் என்றும் ஓய்வில்லாமல் மானசீக உழைப்பை செய்து வந்தாலே வெற்றி கிட்டும். வருகிற வெற்றி முக்கியமில்லை. வந்த வெற்றியை நாம் தக்க வைக்க செய்யும் முயற்சியும் பயிற்சியுமே பாடல் துறையில் மிக முக்கியம்.

கவிதைக்கு குதிரைகளுக்குக் கடிவாளம் கிடையாது. என்றாலும் தறிகெட்டு ஓடாமல் பார்த்துக் கொள்வது நம்முடைய சமர்த்து. சுழலுக்கு பொருத்தமான வாக்கிய அமைப்பே பாடலுக்கு பிரதானம். கவிதையில் தொடங்கி பாடலில் முடியும் உங்கள் பயணத்தில் நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவெனில், பாடல் வேறு. கவிதை வேறு. ஓசைக்கு பொருத்தமான வார்த்தைகளைக் கட்டுவதால் பாடல் செய்யப்படுவது. கவிதை செய்யப்படுவது அல்ல. உய்யப்படுவது.  பாடலுக்கான மனநிலையும் கவிதைக்கான மனநிலையும் ஒன்றுபோல் தோன்றினாலும் ஒன்றல்ல. பாலும் கள்ளும் நிறத்தால் ஒன்று குணத்தால் வேறு என்பதைப்போல.

Advertisements

2 பதில்கள் to “கவிதைக் குதிரை”

  1. Karthick said

    arumaiyaana padhippu thozhare….

  2. அருமையான கட்டுரை யுகபாரதி. தனக்குப் போட்டியாக எவரும் வந்துவிடுவார்களோ என்ற ஐயமே இல்லாமல் கலை நுணுக்கங்களைத் தான் கண்டதுபோலவே அவிழ்த்து விரிக்கும் கலைஞர்களே உண்மையான கலைஞர்கள். நீங்கள் நிரூபிக்கிறீர்கள். வாழ்க! வளர்க!

    அன்புடன் புகாரி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: