யுகபாரதி

வணிகச் சொல்

Posted by யுகபாரதி மேல் நவம்பர் 16, 2009

நாவில் எலும்பில்லாதவர்களுக்கு முதுகெலும்பு முடங்கிவிடும். இதை யார் எழுதியது தெரியுமா? குஞ்ஞுண்ணி. அந்தப் பெயர் எனக்கு அறிமுகமானது சில வருடங்களுக்கு முன்புதான். இவர் மலையாளத்துப் பெருங்கவி என்பதையோ எனக்கு விருப்பமான பல கவிதைகளுக்குச் சொந்தமானவர் என்பதையோ அதுவரை நானறியேன்.

என்னுடைய ‘மனப்பத்தாயம்’ கவிதை தொகுப்பு வெளிவந்த காலத்தில் என் கவிதைகள் பலவும் அவர் சாயலை ஒத்திருப்பதாக ஒரு வார இதழ் எழுதியிருந்தது. உண்மையில், என் சாயல் யாருடையதாக இருக்கிறதென்று தெரிந்து கொள்ளும் ஆர்வமில்லாததால் யாரந்தக் குஞ்ஞுண்ணி என்பதோடு நிறுத்திக் கொண்டேன்.

அவரது தொகுப்புகள் எங்கேயாவது கிடைக்குமா எனச் சம்பந்தப்பட்ட பத்திரிக்கையிடமே கேட்டேன். எழுதியவருக்கு அது குறித்து விவரம் எதுவும் தெரிந்திருக்கவில்லை. கிடைத்தால் சொல்கிறேன் என்றார்.

அவர் சொல்லவேயில்லை. திடீரென ஒருவரோடு நான் ஒப்பிடப்படும்போது ஏற்படும் தடுமாற்றம் நெஞ்சை அரித்தது. அவருக்கு அது பெருமைதரும் விஷயமில்லை. ஆனால், எனக்கோ? எந்ததெந்த விதத்தில் அவருக்கு நெருக்கமானவன் என்று தெரியவேண்டுமல்லவா?

மிகச் சாதரணமான கூற்று எவ்வளவு வலிமை உடையதாக மாறும் என்பதை அப்போதுதான் உணரமுடிந்தது. காலப்போக்கில், என்னை அவரோ அவரை நானோ சந்திக்கக் கூடும் எனும் விதமாக என் தேடல் முடிவுற்றபோது அவர் கிடைத்தார். தெருவோரத்துப் பழைய புத்தகக் கடையில்.

பா ஆனந்தகுமார் மொழி பெயர்த்து “குஞ்ஞுண்ணி கவிதைகள்” மதுரை மகிழகம் பதிப்பகத்தால் 1990ல் வெளிவந்தது. கருப்பு நிறத்தில் சில மலையாள எழுத்துக்களோடான முகப்பு. அந்த எழுத்து அவர் பெயரையோ அல்லது புத்தகத்தின் தலைப்பையோ குறிக்கலாம்.

கிடைத்த உடனே, வாசிக்கத் தோன்றிற்று. வீட்டுக்குப் போய் ஆற அமர்ந்து வாசிக்கப் பொறுமையில்லாமல் அந்தப் பகல் நேரத்தில் ஆளில்லாத ஒரு பேருந்து நிலையத்தில் அமர்ந்து நூலைப் பிரித்தேன். அந்த நூல் ஒரு ஆச்சரியமான மொழிபெயர்ப்பு நூல். ஒரு பக்கத்தில் மலையாள வரிகளின் தமிழ் உச்சரிப்பு முறைகளை பிரசுரித்து அடுத்தப் பக்கத்தில் தமிழில் மொழி பெயர்த்திருந்தனர். அதுபோன்ற முயற்சி, மொழியைப் பயிலக்கூட உதவும்.

வாசிக்க வாசிக்க வசமிழந்தேன். என் கவிதைகளுடன் எந்த விதத்திலும் அது பொருந்தவில்லை. ஆனால், அவர் போல தமிழில் யாருமே எழுத முடியாதோ என்றுகூடத் தோன்றியது.

நறுக்குகள் என்று கவிஞர் காசி ஆனந்தன் சொல்வாரே அது மாதிரி, சடார் என நெற்றிப் பொட்டைத் தகர்த்தன அவர் வார்த்தைகள்.

எழுதி ஈட்டுவது உத்தமம்
உழுது ஈட்டுவது அதிஉத்தமம்

எழுத்துக்கு காசு வாங்கலாமா? எழுத்தால் உயிர் வாழ்தல் சாத்தியமா? எந்தச் சமரசமும் இல்லாமல் எழுதுவதற்கு பணம் தருவார்களா? மேலும் எழுத்தை நம்பி வாழ்வதோ, எழுத்துக்காக வாழ்வதோ சரியானது தானா?

தமிழ்ப் பதிப்பகச் சூழலில் புத்தகம் எழுதி ஒர் எழுத்தாளன் குடும்பம் நடத்த முடியுமா? குறைந்தபட்சம்,  அழுக்கில்லாத சட்டையோடு கூட்டத்திற்குப் போக இயலுமா?

இரண்டு வரிகளில் எவ்வளவு சேதிகள்! எழுத்தும் வாழ்வும் ஒன்றெனக் கருதுதல் பாரதிக்கு சங்கடம். பாரதிக்கே சங்கடமான ஒரு விஷயம் என் போன்ற பாமரனுக்கு எப்படி பொருந்தும்?

சினிமாவில் பாட்டெழுதியிராவிட்டால் என் கதி அதோகதிதான். சினிமா பாட்டெல்லாம் இலக்கியமா? அதற்கு வாங்குகிற ஊதியம் இலக்கியத் தகுதிக்கு ஈடாகுமா என்பதெல்லாம் வேறு இடத்தில் விவாதிக்க வேண்டியன. எனினும், பாட்டுதான் என் ஜீவனம். பாட்டுதான் என் அறிமுகம். பாட்டுதான் இப்போது என் வாழ்வின் ஆதாரம்.

குஞ்ஞுண்ணியின் இன்னொரு கவிதை

அகத்திலுள்ளது புறத்திலாகும்
புறத்திலுள்ளது அகத்திலாகும்
அகத்தும் புறத்துமில்லாதது
கவிதையிலாகும்

விமர்சனத்தில் போகிற போக்கில் அந்தப் பத்திரிக்கை தெரிவித்த ஒரு பெயர் என் அகத்தை என்ன பாடுபடுத்தியதோ, அதே போல அவர் கவிதைகள் என்னைப் படுத்தாமல் மேம்படுத்தியிருக்கின்றன. கவிதையின் மையப் புள்ளியை நோக்கி நகரவும் மேலும் மேலும் தெளிவுறவும் அவர் கவிதைகள் உதவும்.

புறமில்லாத அகமும் அகமில்லாத புறமும் கவிதையின் ஆகுபொருள் என்கிறார்.  அது ஆத்மாவை நோக்கிய விசாரணையோ என்னவோ? இலக்கிய வகைகளிலேயே கவிதைக்குத்தான் உயர்ந்த ஸ்தானம் தந்திருக்கிறார்கள்.

குஞ்ஞுண்ணி போல எழுதுகிற சிலரால்தான் அந்த ஸ்தானம் கெளரவமடைகிறது. அந்தப் பத்திரிக்கை எதற்காக இவ்விதம் என்னை இவருடன் ஒப்பிட்டது எனக் கேட்கலாம். ஆனால், அந்தப் பத்திரிக்கை இப்போது வருவதில்லை. இறுதியாகவும் அவரது கவிதை வரிகளிலேயே இந்தப் பத்தியை முடிக்கலாம்.

காலம் இல்லாதாகிறது
தேசம் இல்லாதாகிறது
கவிதையே நீ வரும்போது
நானும் இல்லாமல்
போகிறேன்

………………………

இலக்கியம் பிடிப்பதற்கும் இலக்கியவாதியைப் பிடிப்பதற்கும் உள்ள பெரும் பள்ளத்தில் நானும் விழுந்து எழுந்திருக்கிறேன். என்றென்றும் புதிய காயங்களோடு, எழுதுவதா, வேண்டாமா என்று தயக்கத்தின் நிதர்சனத்தை மீறியும் –  இந்த அனுபவ வார்த்தைகளை முன்னுரையாக அள்ளித் தெளித்திருப்பவர் ஆனந்தா. ”நிறங்களின் கூடு” என்ற கவிதை தொகுப்பு. காவ்யா வெளியீடு.

ஒருவரின் இலக்கியம் பிடிக்கிற அளவுக்கு அவரை நமக்குப் பிடிப்பதில்லை. எழுத்து உண்டாக்கி வைத்திருக்கும் பிம்பம் வேறு.

எழுத்து போலத்தான் அவரும் தூய்மையாக, நேர்மையாக பாசாங்கற்று இருக்க வேண்டுமா? ஏன், எழுத்து ஒரு மாதிரியாகவும் அவர் ஒரு மாதிரியாகவும் இருக்க கூடாது? எழுத்தை நாம் தெய்வமாகப் பார்க்கிறோம். எனவே, எழுதுகிறவன் வாக்கு பலிக்குமென்று நம்புகிறோம். எழுத்து என் தெய்வம் என்பான் பாரதி.

ரொம்பவும் பிடித்துப்போன ஓர் இலக்கிய கர்த்தாவை கடைசி வரை அவனது ரசிகன் அல்லது வாசகன் சந்திக்காமல் இருப்பதே நல்லது. எழுத்தாளனின் வாழ்வும் வாசகனின் வாழ்வும் முரணான திசை கொண்டவை. இந்தத் திசைகள் ஒன்றோடொன்று முட்டும் போது கலகமும் கருத்துப் பிறழ்வும் தவிர்க்க முடியாதவை.

ஆனந்தாவுக்கு என்ன மாதிரி அனுபவமோ? நிறங்களின் கூடு என்று தலைப்பிட்டிருக்கிறார். எல்லா நிறங்களும் அழகுக்குரியன. அவர் கவிதைகளில் அந்தத் தன்மை வெளிப்படுகிறது.

என் நாக்கை விட அறிவுமிக்கது
எனது வாகனம்

உனது வாகனம் செல்லும்
தடத்தை நானும்
எனது வாகனம் செல்லும்
தடத்தை நீயும்
ஒரே சமயத்தில் பின்பற்றிவிட
முடியாதபடி எண்ணிலடங்காப்
பயணங்கள் நிகழ்ந்துவிட்டன
என்பதையறிந்திருக்கிறான்
நொண்டிப் பிசசைக்காரன்

இரண்டு கரைகளுக்கு இடையேதான் ஒரு நதி இருக்கும். இரண்டு கருத்துக்களுக்கு இடையே தான் வாழ்வும் கவிதையும். ஆனந்தாவின் கவிதைகள் மிகுதியும் வாழ்வியலை நோக்கிய சாட்டை என்றால் ஏற்பாரா? ஏற்காமல் போனாலும் பரவாயில்லை. இரண்டாவது கரையாக இரண்டாவது கருத்தாக எடுத்துக் கொள்ளட்டும்.

ஆங்கிலத் துறைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார் எனப் பின்னட்டைக் குறிப்பு சொல்கிறது.

நல்ல கவிதைகளை அறிமுகப்படுத்தும் போது கருத்துக்களைவிட கவிதையனுபவமே மேலோங்க வேண்டும். அத்தகு அனுபவத்தைத் தரத்தக்க கவிதைகளுக்கு ஒரு போதும் விமர்சனமே தேவையில்லை. மல்லிகைப் பூவுக்கு விளம்பரம் எதற்கென்ற பாழாய்ப் போன பழைய உவமை மாதிரி.

நெரிசல் நிரம்பிய நகர வீதியில் செருப்புக் கடைகளும், நகைக்கடைகளும் இடம்பிடித்துவிட சோப்புத் தண்ணீர் ஊதி குமிழ் வியாபாரம் செய்பவன் குறித்து ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.

கவிதைக்காரர்கள் அவனை நிகர்த்தவர்கள்

வணிகமும், தொழில்நுட்பமும் பெருகிவிட்ட இப்பெரும் பூமியில் நாம் எழுதிக்கொண்டிருக்கிறோம். எழுத்து நமக்கு எதைத் தரும்? எதையும் தருவதற்கல்ல எழுத்து. தந்ததை உரசிப் பார்க்க. தடையில்லாது நடந்து போக. ஜென்ம சாபல்யத்தை எட்டிப் பார்க்க. இடையிடையே பகிர்ந்து கொள்ள.

குஞ்ஞுண்ணி சொன்னதுதான் நினைவில் வருகிறது. நாவில் எலும்பில்லாதவனுக்கு முதுகெலும்பு முடங்கிவிடும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: