யுகபாரதி

பெண்களின் கண்கள் ஆண்களின் இதயம்

Posted by யுகபாரதி மேல் நவம்பர் 20, 2009

இப்படியாய் இன்னும் ஏராளமான ஆசைகள். உன் இமைச் சிறகடிப்பில் அத்துணையும் தொங்கிக் கொண்டு இருக்கிறது.

வதைக்கும் உன் ஞாபகங்களைச் சுமந்து கொண்டு சாக முடியாது. எல்லாவற்றையும் உன்னிடம் கொட்டிவிடுகிறேன்.

நீண்ட அந்தத் தெருவில் நீ நடந்து வருகிறாய். உன்னுடன் கூடவே மாலையோடு ஒருவன். உன் கழுத்திலும் மாலை.

கண்ணீர் வழிய நிற்கிறேன். அருகே நீ வந்ததும் தலை குனிந்து கொள்கிறேன். மெட்டி அணிந்த பாதம் என்னைக் கடந்து போகிறது. ஏக்கத்தோடு திரும்பிப் பார்க்கிறேன். அலங்கரிக்கப்பட்ட உன் ஜடைப் பின்னல் கை அசைத்துக் கொண்டே செல்கிறது.

தோளைப் புடிச்சிக்கிட்டு
தொடர்ந்து போற தோழிப்பொண்ணு
உன் நெழல மிதிச்சாலும்
நெஞ்சு வலிக்குதடி

என்கிற தய்.கந்தசாமியின் கவிதை என் ஞாபகத்தில் மோதுகிறது. நெஞ்சு வலிக்கிறது. நீ என்னை விட்டு வெகு தூரம் போய் விட்டாய்.

உன் மெல்லிய புன்னகை உதட்டருகே ஒரு சின்ன மச்சத்தை என் விரலால் வைக்க வேண்டும்.

பீரோவில் தூங்கும்  மடிப்பு கலையாத உன் சேலைக்குள் என் கைக்கடிகாரத்தை வைக்க வேண்டும்.

நீண்ட அந்தத் தெருவில் நீ நடந்து வருகிறாய். எனக்குள் அதிர்வோடு தையல் மிஷின் ஓடுகிறது.

அவஸ்தை……….உயிரைப் பிழிந்தெடுக்கும் இம்சை. உன்னிடம் சொல்லிட நினைத்து வைத்திருக்கும் பிரியங்களை ஒற்றை அறைக்குள் புதைத்து வைத்திருக்கிறேன்.

சதா மனசுக்குள் உன் ஞாபகங்கள் மழை பெய்து கொண்டேயிருக்கிறது. சமயங்களில் தடுமாறி கண்களில் வழிகிறது.

இப்படியான பிரிவுகள் உங்களுக்கும் இருந்திருக்கலாம். பெரும்பாலும் தேவதைகள் கனவுக்கும் நிஜத்துக்குமான இடைவெளியில்தான் நடமாடுகிறார்கள். இந்தத் தேவதைகள்தான் தூக்கத்தைக் கொன்று இரவு முழுவதும் சிரித்துக் கொண்டிருக்கும் காதல் பிசாசுகளாகிப் போகிறார்கள்.

சந்தோஷம், துக்கம், கண்ணீர் புன்னகை இவைகளால் செய்யப்பட்ட காதலின் தோள் மீது தலைசாய்க்கிற அனுபவம் வாய்க்காதவன் வாழ்வின் அர்த்தத்தை தொலைத்து விடுகிறான்.

அவள் முந்தானையால் தலை துவட்டி விடுவதற்காகவே மழையில் நனைந்து வருவது……..

அவள் கைகளால் நெற்றியில் தைலம் தடவுவதற்காக தலைவலி வராதா என்று ஏங்கிக்கிடப்பது………

அவளின் கோபத்தை ரசிப்பதற்காகவே சொன்ன நேரத்தைத் தாண்டி வருவது.

இப்படியான காதல் சுவாரஷ்யங்களால்தான் வாழ்க்கை நதி  ஓடிக்கொண்டிருக்கிறது.   அந்த நதியில் கை நிறைய நீரள்ளி தன் முகம் பார்க்காதவர்கள் யாரேனும் உண்டா?

எந்தெந்தக் கனவுகளால் இந்தப் பூமி அழகாயிருக்கிறதோ அந்த அழகு முழுவதும் காதலாம் நிகழ்ந்தது. எந்தெந்த அவதிகளால் இந்த பூமி அழுது வடிகிறதோ அதுவும் காதலால் நேர்ந்ததுதான்.

காதல் ஒர் அற்புதத் திரவம். அருந்த அருந்த மகிழ்ச்சி தரும். அருந்தி முடித்து அமர நினைக்கையில் திராவகமாகிவிடும். கண்களில் பூச்சரமும் கைகளில் சாட்டையுமாய் வருகிற காதல் தாயின் தாலாட்டும், ஒப்பாரியாகி விடுகிறது. அவளது அரவணைப்புகள் ஆளைக் கொல்லும் அபாயத்தைத் தருகிறது. தன்னைக் காதலிக்க கிடைத்த ஒரு ஜீவனை காலமும் சமூகமும் மாறிமாறி சூறையாடிப் போவதைக் கண்டால் யார்தான் உன்மத்தமாகாமல் தப்பிக்க முடியும்? உன்மத்தனாகாதவன் கவிஞனாகி விடுகிறான்.

எங்கிருந்து முளைக்குதிந்த
காதல் தாவரம் – என்
உள்புகுந்து கிளை விரிக்க
என்ன காரணம்?

இரண்டு கண்களிருந்தும்
உறங்க முடியவில்லை
இரண்டு கால்களிருந்தும்
மண்ணில் பதியவில்லை

விட்டு விட்டு மழையடிக்க
நனைந்ததுமில்லை – எனை
விட்டு விட்டு பூமி விலகி
சுழன்றதுமில்லை

உன்னைப் பார்த்த நிமிடம்
உயிரில் கொஞ்ச துயரம்

எங்கோ, எப்போதோ, யாராலோ, தூவப்பட்ட தானியத்திலிருந்து ஒரு மரம் உருவாகிறது. அந்தத் தானியம் வீசியவனுக்கு நிழல் தருகிறதோ இல்லையோ ஏந்திக் கொண்ட பூமியை அழகாக்கி விடுகிறது. மருதாணி பூசிக் கொள்ளும் பெண்ணின் நாணத்தை ஒத்தது அதன் நிழல். இருக்கும் போதே இறக்கவும் நடக்கும் போதே பறக்கவுமான சிங்காரச் சிறகினைத் தோள்களில் பொருத்தி விடுகிறது காதல்.

இந்தப் பூமியின் சுழற்சி தன்னை மட்டும் விட்டு விட்டுச் சுழல்வதான மாயத் தோற்றத்தை உற்பத்தி செய்கிறது. இந்த மண்ணில் விளைந்த அனைத்து தத்துவங்களும் காதலின் மேன்மையைப் போற்றுவதற்காகவே உருவாக்கிய ஏற்பாடு. மனித குலத்தை நேசிக்கிறவன் புரட்சிக்காரன் என்றால் சக மனிதனை / மனுஷியை நேசிப்பவனும் உன்னதமானவந்தான் ஒரு மலரை, ஒரு பறவையை, ஒரு விலங்கை, ஒரு செடியை நேசிப்பது போல் உங்களால் இன்னொருவரும் உங்களை இன்னொருவரும் சந்தோஷப்படுத்திக் கொள்வதே காதல். இதில் அவஸ்தைகளும் உண்டு. தனிமையின் நரக வேதனையும் உண்டு.

நானொருவன் மட்டிலும் – பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ?

என்றான் பாரதி. நரகம் மிக மிகக் கொடூரமானது. அதனினும் தனிமையான நரகமெனில் சொல்லத் தேவையில்லை. மயிலிறகுகளால் கோதி விடுகிற அதே உணர்வுதான் கள்ளிச் செடியாகவும் மாறுகிறது.

இந்தப் பிரஞ்சத்தின் முதல் காதலர்கள் இப்போது எங்கேயிருப்பார்கள்?

சொர்க்கத்திலா? நரகத்திலா?

வாழும் போது நரகத்தை சந்தித்த காரணத்தினால் நிச்சயமாய்  சொர்க்கத்தின் கதவுகளே  அவர்களை  சுவீகாரம் செய்திருக்கும்.

இந்தத் தொன்மையான மொழியின் முதல் காதல் கடிதம் இப்போது எங்கேயிருக்கும்?

காலத்தால் அழியாது போகவே பெண்களின் கண்களிலும் ஆண்களின் இதயத்திலும் அவை மடித்து வைக்கப் பட்டிருக்கும்.

இழந்த காதலை இலக்கியமும் தோற்ற காதலை இதயங்களும் சொல்லிக் கொண்டே இருக்கும். அள்ளி எடுக்கிற கை மணலில் கடல் அகப்படுமெனில் பார்வைகள் வானத்தை தொடாதா?

Advertisements

ஒரு பதில் to “பெண்களின் கண்கள் ஆண்களின் இதயம்”

  1. அதுவன்றோ இவ்வுலகத் தலைமை இன்பம் .
    ரணமான இதயத்தையும் வனமாக்கிய வரிகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: