யுகபாரதி

ஊடல் பூ

Posted by யுகபாரதி மேல் நவம்பர் 26, 2009

இடது காலை வைக்கின்றபோது இருக்கின்ற நதி வலது காலை வைக்கும் போது இல்லை என்பதைப்போல ஒவ்வொரு நிமிடமும் புதுப்புது அழகு கொண்டிருப்பாள் காதலி. சிணுங்கலில் மிதமாகவும் கோபத்தில் அதிகமாகவும் அழகு கூடும். காதலியின் அழகோ காதலிப்பவனின் பார்வையோ இரண்டில் எது அவ்விதம் உருவாக்குகிறது என்பதுதான் புதிர்.

புதிர்கள் அடங்கிய பதில்களாக வாழ்க்கை. ஒரு நாளின் நீளத்தை நரகமாகக் கருதவும் ஒரு நிமிடத்தின் சந்தோசத்தை சொர்க்கமாகக் கொண்டாடவும் கூடிய மனது காதல் மனது. செல்லமாய்க் கிள்ளாத விரல்கள் என்ன விரல்கள்? செல்லமாய்த் திட்டாத இதழ்கள் என்ன இதழ்கள்? செல்லமாய் முறைக்காத விழிகள் என்ன விழிகள்? ஊடல், செல்லத்தின் இன்னொரு வடிவம். பிரியமுள்ளவரிடத்தில் மட்டுமே பூக்கிற விசேஷமான பூ ஊடல்.

ஊடல்தான் காதலின் மகத்துவத்தை உணர்த்துவது. ஊடலில்லாத பிரியமும் தேடலில்லாத வாழ்வும் காகிதக் கப்பல் போன்றது. காதலின் பயணம் ஊடல் வாகனத்தில் அரங்கேறாது போனால் காதலித்த திருப்தியே கிடைக்காது. திணறத் திணறக் காதலித்தாலும் திருப்தி வராது. திருப்தி வந்த காதல் காதலுமில்லை.ஊடல் கொண்ட தலைவிக்கு தோழி அறிவுரை கூறுகிறாள்:

ஊடலில் பிடிவாதம் கூடாது. ஊடல் ஊறுகாயை போல் இருக்க வேண்டும். அவ்வப்போது தொட்டுக்கொள்ளலாம் உணவு போல் உட்கொண்டால் வெறுப்புதான் மீதமாகும். ஊடலை ஒத்திப் போட்டுவிட்டு அவரோடு உடன்படு என்கிறாள். தலைவிக்கோ தாளாத ஊடல்.

கண்களால் பிழைகள் கண்டபின்னும்
மீண்டும் அவரை வேண்டுதல், நீரைக்
காய்ச்சி யாற்றிடின் வாய்ச்சுவை கெடல் போல்
காதற் சுவையும் ஏத முறுமே
(மன்மதன்)

என் கண்களால் அந்தப் பிழையைக் கண்டுவிட்டேன். நானே கண்ட பிறகு அந்தப் பிழையை எப்படி மன்னிப்பது? தண்ணீரைக் காய்ச்சி ஆறினாலும் அது முன்னைய சுவையை மீண்டும் பெறாது போலவே காதல் சுவையும் முறிவுக்குப் பின் சிறப்பற்றுப் போகும் என்கிறாள். ஊடல் நிரந்தரப் பிரிவா எனத் தெரியவில்லை. ஊடலைத் தண்ணீரைக் கொண்டு உவமையாக்கி காட்டிய இந்த அற்புதமான பாடல் காதாசப்தசதியில் இடம் பெறுகிறது.

ஆந்திர நாட்டு அகநானூறு எனப்போற்றத்தக்க இத்தொகுப்பு கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஹாலன் என்பவரால் தொகுக்கப்பட்டது. தமிழ்ச் சங்க அகப்பாடல்களுக்கு நிகரான இப் பாடல்களை தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் பன்மொழிப் புலவர் மு.ஜெகன்நாத ராஜா. மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி பெற்றவர். ராஜபாளையத்துக்காரர். பல அறிய தெலுங்கு நூல்களைத் தமிழுக்கு தந்திருக்கிறார். அவற்றில் இது மிக முக்கியமானது. மூலத்தை வாசிக்காமலேயே அதன் சுவையை உணரும் விதமாகத் தமிழாக்கி தந்திருக்கிறார். சிலர் மொழி பெயர்ப்புகளை தமிழ்ப் படுத்தி விடுகிறார்கள். இவர் தமிழில் ஆக்கி தந்திருக்கிறார்.

காதலியின் இதயத்தைத் திருட முடியும். பருக முடியுமா? இதயத்தைப் பருகுவதா? கேட்கும் போதே தலை சுற்றுகிறது. நினைவுகளின் மடியில் தூங்குகிற ரம்மியமான கனவுகள் மட்டுமல்ல காதல். பிசாசுகளின் பிறாண்டல் போல அபாயகரமானதும்தான். காத்திருப்புகள்; எதிர்பார்ப்புகள்; கட்டுப்படுதல்; தனக்குள் தன்னைப் புதைத்துப் புதைத்து சுகம் வளர்த்தல். மெளனங்கள் மேடையிட்டு ஊமையாகிவிடுதல் போலவே ஆணையிடவும் அடக்கிவைக்கவும் அடம்பிடிக்கவும் கற்றிருக்கிறது காதல். இதயத்தைப் பருகி விட்டுப் போனான் அவன். என்ன ராட்சசன்? இரக்கமேயில்லாத கொடூர மனமா அவனுடையது?

அன்னாய்! யான் நீராடுங் காலை
அழகன் வந்தங் காற்றிலிறங்கி
மஞ்சட் கைப்பு நீர் வாழக் குடித்தென்
நெஞ்சம் பருகி நீங்கல் போன்றான்,
(ஹாலன்)

ஆற்றில் அவள் குளித்துக் கொண்டிருக்கிறாள். நாணத்தில் சிவந்த முகத்தை மஞ்சள் பூசி மறைத்துக் கொண்டிருக்கிறாள். ஆறு நடந்து கொண்டிருக்கிறது. வேகமாக ஓடிய எந்த ஆறும் அழகிய ஒருத்தி குளிக்கப் புகுந்தால் நடக்கவே செய்யும்.

நடக்கிற ஆற்றின் கரையில் படபடக்கிற இதயதுடிப்போடு அவன் நிற்கிறான். கொஞ்சம் போல் தள்ளி இன்னொரு படித்துறையில் அவன் இறங்குகிறான். இறங்கத்தான் வேண்டும். இதற்கு மேலும் அந்தப் புழுக்கத்தை ஆற்றிலிறங்கி அலசாமல் என்ன செய்வது? இறங்குகிறவன் மஞசள் மிதந்துவரும் நீரை, மஞ்சளாய் மாறிவிட்ட ஆற்றை அள்ளிப் பருகுகிறான். அந்த நீரின் சுவையை அறிவதற்கு காதலர்களால் மட்டுமே இயலும். பருகியவனுக்கு புத்தியில் போதை வந்ததோ இல்லையோ இவளுக்கு இதயத்தில் நடுக்கம் வந்துவிட்டது. இதயத்தை எடுத்துப் பருகிவிட்டது போல் தோன்றுகிறதாம். இதுவும் காதாசப்தசதியில் இடம் பெறும் பாடல்தான். தேவதை குளித்து நீர்த்துளி எடுத்து தீர்த்தமென்று குடிக்கிற காதலனை சினிமாவில் ரசித்திருக்கிறோம். நிஜத்தில்?

ஒரு பள்ளமான இதயம் இன்னொரு பள்ளமான இதயத்தால் நிறைவு செய்யப்படும். பள்ளத்தை நோக்கி அருவி விழும். விழுகிற அருவி நடந்து நடந்து இன்னொரு பள்ளத்தை நோக்கும். அன்பு கிடைக்காத ஆணும் அன்பு கிடைக்காத பெண்ணும் பகிர்ந்து கொள்வது மட்டுமே இல்லை, காதல். அன்பு கிடைத்தாலும் மிகுதியான அன்பை நோக்கி உயரும். காத்திருக்கும் நேரம் கடற்கரை மணலில் பள்ளம் பறிக்கிறோம். பறித்த மணலை இன்னொரு பள்ளத்தை மூடுவதற்குப் பயன்படுத்துகிறோம். நாம் தோண்டிய பள்ளம் மூடுவதற்காக அல்ல. என்றும் தாமதமாகவே மூடியிட்டுக் கொள்ளும் வித்தை காதலுக்குத் தெரியும்.

ஒவ்வொரு கடற்கரை அமர்விலும்
ஒரு பள்ளம் உருவாகிறது
யாருடைய பள்ளத்திலோ
கை நுழைத்து
எதாவதொரு பள்ளம் நிரம்புகிறது
இப்படியேதான் வழி நெடுகிலும்
அறியாதொரு பள்ளம்
அனிச்சை நிரவல்
பிறகு மீண்டுமொரு பள்ளம்

வி.அமலன்ஸ்டேன்லி எழுதிய இக் கவிதையை மணல் வீடு கட்டி விளையாடிய அனுபவமுள்ள எல்லோரும் சிலாகிப்பார்கள். இழந்து போகும் அபாயத்தோடு கூடிய ஒவ்வொரு மணல் வீடு ஒரு காதலையாவது சொல்லும். சொல்லாத காதலைப் பெரிதாகப் போற்றும் ஊடகங்கள் காதலைச் சொல்லிச் சொல்லி வெறுப்பை மூட்டி விட்டன. அநாகரீகமாக இரண்டுபேர் கடற்கரையில் காதலிப்பதைப் போல. அது காதலில்லை என்றாலும்.

Advertisements

4 பதில்கள் to “ஊடல் பூ”

  1. மிக அழகான பதிவு. எழுத்துக்களை இயற்றியவிதம் மீண்டும் ரசிக்கவைக்கிறது.

  2. Karthick said

    miga arumai yaana padhippu thozhalre…..kadhilikadha vargalum vandha kadhalai yerkka maruthavargalum varunthum padi irundhadhu indha pathippu!!!!!!!!

  3. kovai mu. saraladevi said

    ஊடல் பற்றிய அழகான தொகுப்பு காதலுக்கு பின்னும் கல்யாணத்திற்கு பின்னும் அனுபத்தால் பிறந்திருக்கிறது இந்த பூவை முகர்ந்துபார்க்க வாழ்வியல் உண்மையை சொல்லியிருகிறேர்கள் அனைவரும் அறிந்தது என்றாலும் மற்றவர் சொல்லும் அழகில் அர்த்தம் அதிகமாக இருப்பதை போல ஊடல்பூவின் வாசனை அறிந்தோம் காதாசப்தசதி எந்த பதிப்பகம் எனக்கு அனுப்பினால் நான் மேலு நுகர்ந்து பார்ப்பேன் ஹாலன் சொன்னதாக சொன்ன வரிகள் நம் குறுந்தொகையில் பல புலவர்கள் அனுபவித்து நமக்கு தந்த செய்திகள்தான் நீங்கள் எழுத்துகளை கோர்துள்ளவிதம் என்னை கவர்ந்துள்ளது நீங்கள் மாலையாக கொடுங்கள் மேலும்

  4. thuva said

    true love ib patri sonnathuku rompa thanks odal lifela important enru purija vaithathatkum thanks

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: