யுகபாரதி

Archive for திசெம்பர், 2009

இதயத்தின் அறுவடை

Posted by யுகபாரதி மேல் திசெம்பர் 31, 2009

ஈசான்ய மூலையிலிருந்து நடவைத் தொடங்கினால் மகசூல் சிறப்பாய் இருக்குமென்பது ஐதீகம். மழையும் உரமும் ஒத்திசைந்த போதிலும், நம்பிக்கைகளே விளைச்சலைத் தருமென்பது உழைப்பாளிகளின் தத்துவம். காதல் கண்களிலிருந்து தொடங்கும் நடவு. ஒரு கண்ணில் நட்டு இன்னொரு கண்ணில் அறுவடை செய்து கொள்ளும் அதிசயம். இதில், நீருக்குப் பதில் உதிரத்தைப் பாய்ச்ச வேண்டும். உரத்திற்குப் பதில் அவஸ்தைகளை இறைக்க வேண்டும். பூச்சியடிக்காமல் பயிர்களை காபந்து செய்வதைப் போல், ஊடல்களில் உடைந்து போகாமல் உள்ளத்தைப் பேண வேண்டும். ஈழத்து நாட்டார் பாடல்கள் இயற்கையின் உதடுகளால் காதலைப் பாடும். தமிழில் நா வானமாமலை போல, ஈழத்தில் எப்.எக்ஸ்.சி. நடராசா நாட்டார் பாடல்களைத் தொகுத்துள்ளார். ஒன்றைத் தொகுப்பதற்கு புலமை மட்டும் போதாது. கால வரலாறும் பொருப்புணர்வும் மிக மிக அவசியம். நடராசா அதை உணர்ந்தவர் மட்டுமன்று, உணர்ந்ததை உருவம் கொடுக்கும் வல்லமையுடையவர்.

தாலாட்டுத் தொடங்கி ஒப்பாரி வரை பாடல்களால் ஆன தமிழ் வாழ்வை கொஞ்சமும் பிழையின்றி நீரோடை இலை போல இயல்பாக வடித்துத் தந்துள்ளார்.  மனிதர்களின் ஆசாபாசங்கள்தான் இலக்கியத்தின் மூலமென்பது எத்தனை உண்மையோ,  அதேபோல,  இயலாமையின் குரல்களே நாட்டார் பாடல்களின் நாதம். நாட்டார் பாடல்கள் இலக்கியமா இல்லையா எனக் கேட்கலாம். நாட்டார்  பாடல்கள் வேர்வையின் விளைச்சல். வேர்வைகளைத் தீர்த்தமென்று இலக்கிய ஜாம்பவான்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

வார்ந்து முடிந்த கொண்டை
மகிழம்பு கமழும் கொண்டை
சீர்குலைந்து வேர்வை சிந்த
செய்த கடும் வேலையென்ன?
பொட்டுக்கரைய பிறைநெற்றி
நீர்துளிக்க கட்டுந்துகில்
கலைய வலம்புரி புரள மார்பு
பதைப்பதென்ன?
மலர்க்கண்கள் சிவப்பதென்ன?
சோர்வு கதிப்பதென்ன?
சொல்லிடுகா என் மகளே.

ஒருத்தி காதல் கொண்ட விஷயம் அவள் காதலனுக்குத் தெரிவதற்கு முன்பாகவே அவள் தாய்க்குத் தெரிந்து விடுகிறது. வாசலில் கோலமிடும் போது புள்ளி விலகுவதும், நீரெடுக்கப் போகும் போது வெறுங்குடத்தோடு திரும்புவதும் என நிறையச் செயல்கள் மாறிப் போகும். ஒரே வேலையை தொடர்ந்து செய்தால் பழகிப் போகும் என்பார்கள். கோலமிடுதல், நீரெடுத்தல் யாவும் பழகிய செயல்தான். எனினும், அது பிழையாவது காதலின் கைம்மாறு.  பொட்டுக் கரைய ; பிறை நெற்றி நீர்துளிக்க ; கட்டுந்துகில் கலைய ; சங்கு புரளும் சந்தன மார்பு பதைப்பதென்ன? ஈன்ற தாய் இதையறிய மாட்டாளா? அவளுக்குத் தெரியும்.  பெண் மீது வீசும் ஆண் வாடையை கண்மீது போடும் கனவு மேடையை நன்கறிவாள். காதலைத் தாய் அறிவாள் என்றாலும், சபையில் பேசத்தயங்குவாள். அடி நெஞ்சில் ஆதரவும் உதட்டில் எதிர்ப்பும் அவர்களுது நிரந்தரக் கொள்கை. காதலுக்குத் துணைபுரியும் தாய்களுக்குக் கோடி நமஸ்காரம்.

நாட்டார் பாடல்களின் தொடர்ச்சி போல, தமிழில் அவ்வப்போது சில கவிதைகளை வாசிக்க முடிகிறது. சனங்களின் கதை தொகுப்பில் பழமலய், சந்நதம் தொகுப்பில் வித்யாஷங்கர் ஆகியோரைத் தொடர்ந்து என் டி ராஜ்குமார், பச்சியப்பன், இளம்பிறை, நட சிவக்குமார். இதில் பச்சியப்பனும், இளம்பிறையும் விவசாயக் கூலிகளின் மனத்தைத் துல்லியமாய்ப் பதிவு செய்பவர்கள்.

மடுவங்கரையில்
திருட்டுத் தனமாய
நேர்ந்த சந்திப்பில்
முத்தம்பதித்த பதைப்போடு
நீ பிடுங்கிய
என் மார்பு முடிகள்

மஞ்சு விரட்டில்
கீழ் வல்லத்துச் செவலையின்
கொம்பிலிருந்து உருவிய
துணியில்
உனக்கு தைத்துத்தந்த
ரவிக்கை.

இது, பச்சியப்பனின் கவிதை. நாட்டார் பாடலின் தொடர்ச்சி என்பதைச் சொல்வதற்கு ஏதுவான கவிதை. மஞ்சு விரட்டில் மாட்டை அடக்கி, அதன் கொம்பிலிரும்ந்து உருவிய துணியில் அவளுக்கு ரவிக்கை தைத்துக் கொடுத்தாராம். என் வீரம் உன் மானத்தைக் காக்கும் ஆற்றலுடையது என்பதை இதைவிட சிறப்பாக எழுதிவிட முடியுமென்று தோன்றவில்லை. காதலியின் பிரிவை எழுதுகிற இவர் போல, நாட்டார் பாடலில் காதலனின் பிரிவைப் பாடுகிறாள் ஒருத்தி. இதுவும் ஈழத்து நாட்டார் பாடல்தான்.

மனசை மனசறியும்
வஞ்சகத்தை நெஞ்சறியும்
மனசிலுள்ள பூங்காரத்தை – அல்லா
யாரறியப் போறாங்கா?
முந்திரிக்குக் கீழே
முத்துமணல் பாயிருந்து
மச்சாண்ட மடியில் – நான்
மகிழ்ந்திருத்தல் எப்பொழுதோ?

மனசுக்கும் நெஞ்சுக்கும் என்ன வேறுபாடு? வஞ்சகத்தை நெஞ்சறியும் என்றால் என்ன பொருள்? மனசை மனசறியும் என்பவள் நெஞ்சை வஞ்சகத்தோடு ஏன் இணைக்கிறாள்? மனம் வேறு, நெஞ்சம் வேறா? இந்த நுட்பமான புரிதலை விளங்கிக்கொள்ள அரும்பாடாயிற்று. ஆம், வேறுபாடுண்டுதான். மனதென்பது உள்ளம். நெஞ்சமென்றால் அன்பு. அன்புள்ள நெஞ்சமே வஞ்சகம். மடுவங்கரையில் முத்தம் பதித்தவனிடம் பிடுங்கிய மார்பு முடியும், முந்திரிக்குக் கீழ் முத்துமணல் பாயிருந்தும் மச்சானின் மடியில் மிகிழ நினைப்பவளும் ஒருத்திதானே. புரியாமல் எழுதுவது ; புரியும்படி எழுதுவது என இரண்டு கோழ்டிகள் எல்லாக் காலத்தும் உண்டு. அவர், இவரையும் இவர் அவரையும் இங்கிதமில்லாமல் அங்கதம் செய்வது இலக்கிய விசாரம். எதுவானாலும் கவிதை, கவிதைதான். இது நாட்டார் பாடல்களின் தனித்துவம்.

புரிந்து கொள்ள முடியாத உணர்வுகளின் முதல் நுனிதான் காதல் விதையின் இமைகளைத் திறக்கிறது. மெல்ல மெல்ல புரிந்துணர்வை, பூமியின் அழகைப் புரிய வைக்கிறது. முதல் வார்த்தையிலேயே காதலிக்கிறேன் எனச் சொல்லிவிடாமல், கவிதையின் இறுதியைப் போல காத்திருக்க வைப்பதே காதலின் மகிமை.

ஆராதனைக்காகக் காத்திருக்கும் ஆலயத்தில் தீபத்தைக் காட்டும் போது கண்களை மூடிக் கொள்ளும் பக்தர்களைப் போல, வார்த்தைகளுக்காகக் காத்திருக்கும் காதலின் மெளனங்களே அதிகம் பேசும். நூறு கடல் ஆயிரம் இடியோசை எழுப்பாத சத்தத்தை உன் மெளனம் எழுப்பி விடுகிறது. இந்த மெளனத்தின் பதில் இன்னொரு மெளனம் என்பதைப் போல, என் இதழ்களும் இறுகிக் கிடக்கின்றன.

மண்டிக் கிடக்கும்
காரமுட்களுக்கிடையில்
தளிர்த்தவைகளைப்
பசியோடு கடிக்கும்
வெள்ளாட்டினைப் போல
ஆடைகளுக்குள் உன் வாசம் தேடி
குளிர்கிறதென் பூமி

பசித்த உதடுகள் பண்பறியாது. பண்பை வரவழைக்கப் பசிக்குத் தெரியாது. தாகத்தோடு திரிபவனுக்குக் குளத்து நீர் புனிதம். அள்ளிக் குடித்து தாகம் அடங்கினால் போதுமென்று கருதுவதே இயற்கை. ஆடைகளில் ஆடைகளில் வாசம் தேடும் பச்சியப்பனின் மனது, கார முட்களால் காய்த்துப் போனது. தளிர்த்தவைகளைப் பசியோடு கடிக்கும் ஆட்டைப் போல், பிரிவின் பசிக்கு ஆடைகள் உணவாகின்றன. எனினும், காதல் தாகமல்ல. தாகத்தை தீர்க்க முடியும். காதலை தீர்க்க முடியாது. காதல் பசியுமல்ல. எனில் பசியைப்போக்க முடியும் ; காதலைப் போக்க முடியாது. பசியோடும் தாகத்தோடும் இருப்பதைவிடவும் காதலோடு இருப்பது நல்லது. ஈசான்ய மூலையிலிருந்து தொடங்கும் நடவைப் போல, எந்த மூலையிலிருந்து துவங்குவது இதயத்தின் அறுவடையை?

Advertisements

Posted in கட்டுரைகள் | குறிச்சொல்லிடப்பட்டது: | 1 Comment »