யுகபாரதி

சலசலப்பைக் கண்டு மிரளாதவர்

Posted by யுகபாரதி மேல் திசெம்பர் 4, 2009

நகரம் நாட்டுப்புறமென்று கவிதையிலும் இரண்டு வகை. பரதமும் கரகமும் போல. ஆட்டத்துக்கான மேடையும் குழுமும் கூட்டமும் இந்தப் பாகுபாட்டை வகுத்திருக்கலாம். ஒசத்தி, மட்டம் என்பதைத்தான் தாங்கிக்கொள்ள மனசு மறுக்கிறது.

எல்லாக் காலத்திலும் இரண்டு கோஷ்டிகள் தெய்வத்துக்கு நெருக்கமாகவும் எதிராகவும் செயல்பட்டதை அறியும் போது சில எல்லைகளைத் தீர்க்க முடியாதென்றே தோன்றுகிறது.

அன்று, மாலை முரசில் அதுதான் தலைப்புச் செய்தி: “தீவிரவாதி தமிழரசன் சுட்டுக்கொல்லப்பட்டார். வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை ஊர் மக்கள் ஒன்று கூடி கல்லால் அடித்துக் கொன்றுவிட்டார்கள். முன்னதாக, லாக்கர் சாவி தர மறுத்த வங்கிக் காசாளர் நந்தகுமார் இவர்களது துப்பாக்கிக்கு இரையானர். கலவரத்தை ஒடுக்க போலீசார் விரைந்தனர்”. இந்த தகவலைத் தொடர்ந்து சில காலம் தமிழகமே பரபரப்படைந்தது. பின்னர் வழக்கமான படுகொலைகள் போல் ஞாபக மாறதியாக மக்களுக்கும் விடுதலைப் படை இயக்கங்களுக்கும் வரலாறாக மாறிப் போனார், தமிழரசன்.

தான் பிறந்த
பொன் பரப்பி மண்ணில்
துப்பாக்கிக் கையிலிருந்து
துடி துடிக்கச் சாவான்
தமிழரசன்

இது செய்தியா? அனுதாபமா? கவிதையா? என்று யோசிப்பதைவிட இதற்கு பின்னால் பொதிந்திருந்த பார்வை எனக்குப் பிடித்தது. வங்கியில் கொள்ளையடிக்கப் போனவன் என்ற பார்வை பத்திரிக்கைகள் சொல்லிவைத்தவை.

நந்தகுமாரைப் படுகொலை செய்தது தர்மசங்கடம். ஒரேயொரு துப்பாக்கியைத் திருப்பி மக்களைச் சுட்டிருந்தால் தமிழரசன் தப்பியிருக்கலாம். ஆனால் தமிழரசனின் நோக்கம் அதுவல்ல. செத்துப் போனான். தான் பிறந்த பொன் பரப்பி மண்ணில் தன் உறவுகளைக் கொன்று விட்டு அப்படியென்ன விடுதலை…. இதெல்லாம் விதயாஷங்கரின் வரிகள் சொல்கிற மெய்.

மரபுக்கவிதை எழுதினால்தான் தன்னை ஏற்றுக்கொள்வார்கள் என்ற பயத்தில் புலவர் செல்லகணேசனிடம் யாப்பிலக்கணம் கற்றுக் கொண்டிருந்த சமயம். புத்தகங்கள் நிரம்பிய அவரது அலமாரியில் இருந்து வாசிக்க கிடைத்தது “சந்நதம்”. அதே அலமாரியில் இருந்து பல அபத்தங்களும் வாசிக்க நேர்ந்திருக்கின்றன. “எடைக்குப் போட மனசில்லாமல் வைத்திருக்கிறேன்” என்பார். என்னயிருந்தாலும் ஆர்வமுள்ள படைப்பாளிகளின் உணர்வில்லையா?

யாப்பும் தெரிந்து கொண்டால் நல்லது. அவஸ்தையில்லாமல் வார்த்தை வந்து விழும். அலங்காரமற்று தேர்ந்தெடுக்க வேண்டியது கவிஞனின் வேலை. வாழ்வனுவத்தின் சாத்தியமிருந்தால் போதும். முந்தைய நாள் பாடத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பியதும் ‘சந்நதம்’ வாசிக்க அமர்ந்தேன்.

கருப்பட்டி மிட்டாய்க்குப்
பிள்ளையழ
பலத்த கைத் தட்டலுக்கிடையே
கரகாட்டக்காரிக்கு
ராசாத் தேவர்
அன்பளிப்பு
நூத்தியொண்ணு

திடீரெனப் பிடரியில் தட்டியது போலிருந்தது. யாப்பில்லை. அலங்காரமில்லை. ஏன் பொருத்தமான வார்த்தையில்லை. ஒன்றே ஒன்று தான் அதில் இருந்தது சத்தியம்.

எங்கேயாவது நடந்திருக்கலாம் அந்தச் சம்பவம் என்று சொல்லமுடியாது. எங்கும் கிராமத்தில் நடப்பதுதான். கவுச்சி சமைக்கும் திருநாளில் கரகாட்டமும் பெண் ஷோக்கும் மைனர்மார்களுக்கு மட்டுமில்லை; கூலிக் காசையும் கொடுத்துத் திரும்பும் கலா ரசிகர்கள் தமிழர்கள்.

“நமது கரகாட்டத்தை மெச்சி ரூபாய் நூறை அன்பளிப்புத் தந்த அண்ணாச்சிக்கு நன்றி”ன்னு அந்தப் பெண் சொல்லிவிட்டால் அண்ணார் பிள்ளை ஞாபகம் வந்து வீடு திரும்பி விடுவார். இதுதான் தமிழ் வாழ்வு. இதற்கு முன் பழமலய் எழுதியிருந்ததில் கொஞ்சம் மாறுதலான கவிதைகள். தங்கவேல் படையாச்சி, அம்மா ஆயி எனத் தன் சுற்றம் தாண்டிய பாய்ச்சல்.

கவிதைகள் இரண்டு வகை என்பதில் எதில் நீ? கிராமத்துக்கும் நகரத்துக்குமான இடைவெளியில் இந்தத் தீர்மானங்கள் முன் வைக்கப்படுகின்றன. கிராமத்திலிருந்து வந்தாலும் வெறித்த வானமும், வெறுமையோடு சிட்டுக் குருவியை சிநேகிப்பதுமாகவே இன்றைய நவீனக் கவிதைகள் அமைகின்றன. அசாலனவர்களின் முத்திரையில் போலித் தயாரிப்புகளாக நிறையத் தொகுப்புகளை என்னால் சுட்டிக் காட்ட முடியும்.

தரமானதாக தாமாகவே கருதிக் கொண்டு பிரபலத்தை விரும்பாத சிற்றிதழில் மெச்சி எழுதி விட்டால் அவர் படைப்பு சக்தியின் புது வரவு. வித்யாஷங்கர் – விளம்பரத்தை துண்டேந்தி சம்பாதிப்பவரல்ல.

அங்கிருப்பதே
நலமென்பர் சிலர்
இங்கிருப்பதே
நலமென்பர் சிலர்
எங்கிருப்பதும்
நலமில்லை
இருப்பதைத் தவிர – என்றொரு கவிதை.

பலமுறை வேலையை விட்டவர். ஒன்ற முடியாமல் விட்ட வேலையில்லை எதுவும்; உதறி விட்ட வேலை. அத்தனையும் பத்திரிக்கையாசிரியர் பதவி. ஜீ.வி ஐயரிடம் உதவியாளராய் இருந்தவர். அவர் பற்றி எத்தனையோ பின்னால் அறிய முடிந்தது. எதுவுமே தெரியாமல் படித்த கவிதைகள் இப்பவும் ஞாபகத்தில். டிசம்பர் மாதத்தில் சங்கீத சபாக்களில் நிகழ்கிற பவுடர் பூச்சும், எழுதுகிற கட்டுரைகளும், தலையங்கமும் குக்கிராமத்தில் வாழ நேர்ந்த கரகத்திற்கு கிடைப்பதில்லை. வயல்பாட்டு, முன்பாவது சென்னைத் தொலைக்காட்சியில் வயலும் வாழ்வில் காட்டப்பட்டது. இப்போது அதற்கும் வழியில்லை. செயற்கைக் கோள் தொலைக்காட்சிகளுக்கு தமிழ் சார்ந்த எதைக் கண்டாலும் ஒவ்வாமை.

ரகசியமாய்
அழைத்து
பிளேடு வாங்க
அனுப்பிய
அடுத்த வீட்டக்கா
கைலிக்கு மாறிய
என்னுடன்
முகங்கொடுத்து
பேசுவதேயில்லை
ஏனோ.

சொல்லத் தயங்குகிற பேருண்மைக்கு மிக அருகில் அல்லது அதிலேயே தன்னை அடையாளப்படுத்துகிற வித்யாஷங்கர் தமிழில் குறிப்பிடத்தக்க கவிஞர். எந்தப் பட்டியலிலும் தன் பெயர் இல்லை என்பதற்காக வருத்தப்படாதவர். மிகப் பெரிய மிரட்டலுக்கும் அஞ்சாது, வாழ்வைத் தொடர்ந்த பத்திரிக்கையாளர். அனுபவங்களின் வாயிலாக அவர் உணர்ந்த தமிழ் வாழ்வு – உணர்த்தும் தமிழ் வாழ்வு சிலாகிப்புக்குரியது. பாலியல் சார்ந்தும் போட்டுடைக்கும் தடாலடிப் பதிவுகள் அவர் இரும்பு.

பழகிப் போச்சு
ஓவர் குடியிலும்
ஒரு நாளும்
பக்கத்து வீட்டுக் கதவை
தட்டினேனில்லை
என்றாலும்
கனவில் வராமலில்லை
அவள்

என்கிற தைரியம் நிறைந்த வார்த்தைகள் அவருடையன. தொன்ம வேர்களின் ஊடே துல்லியமான தன் திசையைத் தொகுத்துக் கொண்ட அவரது மூன்றாவது தொகுப்பு ’கல்மண்டபத்துக் கிளிகள்’. சிறு தெய்வ வழிபாடு குறித்து இங்கே சொல்ல வேண்டும். அம்மன் அம்பாளானதும் பிள்ளையார் முருகனுக்கு அண்ணனானதும் சிந்திக்கத்தக்கன. நாத்திகம் வெற்றி பெற்ற மேலை நாடுகளிலும் தென்படாத யோக்கியம் தமிழில் இருப்பதற்காக பெருமை பட்டுக் கொள்ளலாம்.

கோயில்பட்டிக்காரர்கள் தமிழுக்கு நிறைய கொடுத்திருக்கிறார்கள். வரிசைக் கிரமமாக வைத்துப் பார்த்தாலும் தனித்தனி அடையாளம் அவர்களுடையது. பிழைப்புத் தேடி சென்னைக்கு வந்தவர், சினிமாக் கனவுகளை நடைமுறை வாழ்வுக்கு அர்ப்பணித்துவிட்ட விட்ட சோகம் சொல்லி மாளாது. அவராகவே உதற முயன்றாலும் ஒட்டியே வருகிற ஊரும் ஞாபகமும் துரத்திக் கொண்டே இருக்கின்றன.

எந்த வேஷத்துக்கும் பொருத்தமற்றது என் முகம். சுற்றிச் சூழ நடக்கிற நாடகம் – ஒரு புத்தகத்தை வாசித்த பிற்பாடு அதிலிருந்து இரண்டு வரியாவது திரும்பவும் நினைவில் தங்குகிறதென்றால் அது சிறந்த புத்தகம் என்பார்கள். நினைவிலிருந்து அகல மறுக்கிற எழுத்துக்கு என்ன பரிசு?

கவிதையில் பொதுத்தன்மை காக்கப்பட வேண்டும் என்று சதா சொல்லி வருகிறவர்களுக்கு நகரமும் கிராமமும் ஒன்றென்பதில் ஒத்த கருத்தில்லை. ஒன்றில்லாத இயற்கையில் பொதுத்தன்மை சாத்தியமா? அவர்களுக்கே வெளிச்சம்.  ஒரு Regional Poet  ஆக, வட்டாரக் கவிஞனாக அடையாளப்பட்ட சங்க காலப் புலவர்களில் பலரும் இன்றைய உலகியலுக்கு எதுவான தன்மைகளைக் கொண்டிருக்கிறார்கள். என் வீட்டிலிருந்து உன் வீட்டிற்கு என்பதே சரி. உன் மேஜைக்கு ஏதுவான ரோஜாவை கள்ளிக் காட்டில் தேடிக்கொண்டிருப்பதில் நியாமில்லை.  உனக்கு அது. எனக்கு இது. உசத்தி, மட்டம் பற்றி உரைப்பதன் மூலம் நீ தேர்ந்தெடுக்கும் அஸ்திரம் உன்னையே காவு கொள்ளும் கால நிதர்சனம்.

வித்யாஷங்கரின் கவிதைகள், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாசிக்க கிடைக்கின்றன. இந்த இடைவெளியில் புதிய தலைமுறைகள் உருவாகிவிட்டன. ஆனாலும் அவருக்குரிய இடம் முன் கூட்டியே தயாராய் இருக்கிறது.

சவாரி செய்ய குதிரையைக் கேட்காமல், தானே தூக்கிச் சுமக்கிற தோழமையை இவரது தொகுப்பு நிரூபிக்கிறது. பத்து பதினைந்து ஆண்டுகள் ஒருவரோடு பழகிய அனுபவத்தை – பாதியிலேயே கையசைத்து விட்டுப்போன காதலியின் புன்சிரிப்பை – ரயில் நிலைத்துக் கண்ணீர்த் துளிகளை என மெல்லுணர்வை அடுக்கிக் கொண்டே போகலாம். ‘பரந்து விரிந்த வானத்தைத் தனதாக்கும் பறவைகளை அப்படியே  விட்டு விடு ரசிக்கிறேன்’ என்ற வார்த்தைச் சிக்கலில்  அதன் காலொடித்து விடாதே என்பதுபோல் ரோஜா, பூ, பிரளயம், ஜன்னல், சிட்டுக்குருவி, தனிமை, வெறுமை, விரக்தியைப் பேசாத கவிதைகள்.

தடுக்கி விழுந்ததும் தாங்கிப் பிடிக்க தாமாகவே நீளும் கரத்தைப் போல முப்பதுக்கும் மேற்பட்ட புதுக் கவிஞர்களுக்கு பின்னால் வித்யாஷங்கர் தெரிகிறார். முதல் வரிசைக்கு வரத் தக்கதை காலம் அவரிடமிருந்து பறித்து வைத்து பின் அவரிடமே தந்திருக்கிறது.

சொல்லைக் கட்டுகிற லாவகமும், கூடவே ஓடி வரும் ஒலியமைவும் யாப்பின் மிச்சம் தான். விடமுடியாத அவர் ஊர் ஞாபகம் போல இரண்டறக் கலந்த பதிவுகள்.

எனக்கான கவிதையை
நீ எழுதலாம்
ஒரு போதும் முடியாது
என் கவிதையை
உன்னால்

எழுத மாட்டேன். எனக்காகதை விட்டு விடு நீ எதிர்பார்ப்பதை எழுதுவதற்கு நானேன் வைத்திருக்கனும் பேனா. கட்டுச் சோறும் கருவாடும் என்றால் உன் முகத்தில் பரவும் அசூயை, நான் கொண்டிருக்கும் வாழ்வு மீதானதுதான். பிரஜையாக வைத்திருப்பதே வாக்களிக்கத்தான் என்பதைப்போல தயாரித்து வைத்த குடுவைக்குள் என்னை அடைக்காதே. புத்தகப் பெயர் சொல்லி மிரட்டாதே.

ஆர்தர் கொய்ஸரும்
ஆல்பட் காம்யூவும்
ஆயிரம்தான் படித்தாலும்
அவை எனக்குச் செய்திகளே
பேர் சொல்லி
மிரட்டாதே
அறிந்ததும்
அனுபவமும்
கணியான் கூத்து
வரகணி மாரிமுத்து
நையாண்டி மேளக்
கரகாமாடும்
தச்ச நல்லூர் சாரதாவும் தான்.

என்கிறார், இரண்டாயிரமாவது ஆண்டில் பெரிதும் விவாதத்துக்குரியதாக கருதப்பட்ட தாய் மொழிக் கல்வி பற்றியும் ஒரு கவிதை.  “கிளி” கவிதை வடிவில், தமிழ் நாட்டில் இவ்விவாதம் மெட்ரிக்குலேஷன் பள்ளி நிர்வாகிகளின் பேரிரைச்சலால் பெரிதாக்கப்பட்டது. உலகமெங்கும், உலகத் தரத்தில் என்ற மேற்கோளைப் பிரதானமாகவும் உணர்வு, லெகு என்பதைப் பின் தள்ளியும் நிகழ்ந்த நிகழ்வுகளைத் தப்பான தீர்ப்புகளாலேயே பெயர் வாங்கும் நீதிபதிகள் மறுபரிசீலனை செய்யவேண்டும்.

சமகாலச் சூழல் பிரதிபலிப்பைக் கவிதையில் நேர்மையோடு வைத்திருக்கிறார். டியர் காம்ரேடுகளுக்கு ‘மே தின’க் கவிதையில் ஒரு சொடக்கு. சாட்டையால் சாதிக்க முடியாத எதையும் சாதுர்யத்தால் சாதிக்க முடியும். தன்னால் ஈர்க்கப்பட்ட மனிதன் தவறும் போது சுட்டத் தவறிய அரசியலே எழுபதாண்டு கால வரலாறு.

தமிழ்மொழிக் கல்விக்கு எதிராக பெரியாரே சொல்லியிருக்கிறார். ஆதாரம் இதோ என்று அட்டைப் பக்கத்திலேயே அறிவித்தது ஒரு பிரபல பத்திரிக்கை. அந்த வார லாபத்தைக் கருதி பிரசுரிக்கப்படுகிற எதுவும் நேர்மையின் தராசில் நிற்காது. பெரியார் சொன்ன எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வதாக இருந்தால் நமக்கு உடன்பாடே, தாய்மொழிக் கல்விக்கு எதிரான குரலில்.

துரை என்றழைக்கப்படும் வித்யாஷங்கர் சலசலப்பைக் கண்டு மிரளாத படைப்பாளி. “எவ்விதமாய் அறியப்பட்டிருக்கிறேன் என்பதில் இல்லை நான்” என்பார். எவ்விதம் நீங்கள் அறியப்பட்டீர்கள் என என்னாலும் சொல்லமுடியாது. பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன் எவ்விதமாய் அறியப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் காலம் அறியும்.

நகரம், நாட்டுப்புறம் என்னும் வகையில் இது, இரண்டும் சூழ்ந்த தமிழ் மண் என்றால் போதும். பெண் கவிஞர்கள், ஆண் கவிஞர்கள், வட்டாரக் கவிஞர்கள், உலகளாவிய கவிஞர்கள், இதற்காகவா எழுதிக் கொண்டிருக்கிறோம் கவிதை? அது அது தன்னை நிலைநிறுத்தும். வகைப் படுத்துகிற வேலையைச் செய்வதற்கு நீங்கள் யார்? என்பதே வித்யாஷங்கரின் கவிதை கொண்டு வரும் கேள்வி.

இப்பவும் எப்பவும்
அம்மா என் காவல்
தெய்வம்
எட்டுரூச் சண்டைக்கு
எதிர்ச்சண்டை போடவும்
இத்தனை வயசிலும்
அம்மா இருக்கிறாள்

வித்யாஷங்கரின் தாய் போலத்தான் எல்லாமும். தாயால் காக்கப்படும் பூமியிம் எழுத்தும் நிச்சயம் நிற்கும்.
பாரதிக்குப் பராசக்தி. இவருக்கு நூல் சேலை உடுத்திய தாய். உனக்கும் உன் நிழல் படத்துக்குமிடையே, உனக்கும் உன் கடவுளுக்குமிடையே, உன் சொல்லுக்கும் பொருளுக்குமிடையே தொக்கி நிற்கிறது கவிதை என்கிறார். ‘கல்மண்டபத்துக் கிளிகள்’ நிழல் தேடிய ஏங்கிய வாழ்வுக்கான பதில்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: