யுகபாரதி

பரிச்சுவடு

Posted by யுகபாரதி மேல் திசெம்பர் 12, 2009

காதலிக்காதவர்கள் என்ற வரிசையில் நின்று கொள்ள சிலர் பிரியப்படுகிறார்கள். மனசுக்குள் தேங்கிய மழை நீரை வலுக்கட்டாயமாக மறைத்துக் கொண்டு, எனக்கெந்த அனுபவமுமில்லை என்கிறார்கள்.

காதலிக்காமலோ அல்லது காதலிக்கப்படமலோ ஒருவர் இருப்பாரேயானால், அதற்காக அவர் பெருமைப்படத் தேவையில்லை.

மாறாக வருத்தப் படவேண்டும். தன் வீட்டுத் தொட்டிச் செடியில் ஒரு பூ கூட பூக்கவில்லை என்று எந்தக் குழந்தையின் இதயமும் சந்தோசப்படுவதில்லை.

குழந்தையின் இதயத்தையும் வாலிபத்தின் குறும்பையும் கொண்டியங்குவது காதல். அரசனின் கம்பீரத்தையும் அடியவரின் மனப்பக்குவத்தையும் சேர்த்துக் கொள்வது காதல். மார்கழியில் வெயிலையும் சித்திரையில் குளிரையும் அனுபவிப்பது போல, இதமும் சூடும் பரவும் இன்பமது.

அகிலத்தையே வென்றாலும் அம்மாவுக்குக் கிழேதான் ஒவ்வொருவனும். அவள் ஊட்டும் பருக்கையின் ருசியைத் தேடுகிறவனல்ல மகன். அன்பைச் சுவைப்பவனே பெருமைக்குரியவன். அம்மாவுக்கு ஆட்சி செய்யத் தெரியாது. மகனிடத்தில் தனது அதிகாரங்களைப் பிரயோகிக்கத் தயங்குவாள். தவிர்க்க முடியாமல் சிம்மாசனத்தில் அமர்ந்தாலும், தனது கீரிடத்தை மகன் தலைக்கு மாற்றும் வரை அவன் பாடு பெரும்பாடு.

அம்மாவைப் பற்றி சொல்கிற ஒவ்வொரு வாசகமும் காதலுக்கும் பொருந்தும். எனில், காதலிப்பவர்கள் எல்லோரும் அவள் பிள்ளைகள். அழத் தொடங்கும் முன்னமே அவிழத் தொடங்கும் அவள் மார்பு. போதும் என்பதை குழந்தையின் இரைப்பையாய் இருந்து அறிந்து கொள்வாள். நந்திக் கலம்பகத்தில் ஒரு காட்சி.

மாட்டாதே இத்தனை நாள்
மானந்தி வான்வரைத் தோள்
பூட்டாதே மல்லையர் கோன்
போந்த பரிச்சுவடு
காட்டாதே கைதைப்
பொழிலுலவும் காவிரிநீர்
ஆட்டாதே வைத்தென்னை
ஆயிரம் செய்தீரே
(நந்திக் கலம்பகம்)
எதைச் செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்யாமல், எதை எதையோ செய்து கொண்டிருப்பது சிலரது சுபாவம். நினைவு மரத்தடியில் அமர்ந்திருக்க ஒருத்தி மீது கொத்து கொத்தாய்ப் பூக்கள் விழ, தட்டுத்தடுமாறி திணறிப் போகிறாள். இந்தத் தடுமாற்றத்திற்கு முக்கியமான காரணம் நந்திவர்மன். அரசனான நந்திவர்மனை நினைத்து நினைத்து இளைத்துக் கொண்டிருக்கிறாள். தானாகப் பூப்பறித்துத் தலை சூடிக் கொள்ளும் திராணியற்றுப் போகிறது அவள் தேகம். தாகமென்று அள்ளிப் பருகினால் தண்ணீரால் தாகம் கூடுகிறது. ஒவ்வொரு செயலும் இன்னொரு உபசெயலுக்குத் தள்ளிவிட பசலை கோர்த்துப் படுத்துவிடுகிறாள் காய்ச்சலில்.

அரசன் மீது காதல் கொண்ட அரசகுமாரியல்ல அவள். நம் பக்கத்துத் தெருவில் வசிக்கிற ஒருத்தியைப் போல பாசாங்கற்ற சிரிப்புடையவள். இதற்கு முன் அவள் கண்கள் இப்படி கொதிக்கவில்லை. இதற்கு முன் அவள் விரல்கள் இப்படி நடுங்கவில்லை. கொதிப்பும் நடுக்கமும், காதல் கொண்டு வந்ததால் சற்றே அதிகமாயிருந்தன.

என்னானதென்று கேட்பவருக்கெல்லாம் எதாவதொரு மருந்து தெரியவே செய்யும் என்றாலும், எந்த மருந்து நோயைத் தீர்க்குமென்பதை வைத்தியரே அறிவார். காய்ச்சல் கண்டவளின் நெற்றியில் பச்சிலை தடவுகிறார்கள். வெவ்வேறு கைகள் உடலின் வெப்பத்தைத் தொட்டுத் தொட்டுப் பதறுகின்றன. எந்த விரல் தொட்டால் குளிரத் தொடங்குமோ, அந்த விரல் தொடவே இல்லை. பத்தியத்துக்கும் பச்சிலைக்கும் வெளியேறாத காய்ச்சல் அவன் நினைவு உள்வர ஒதுங்கிச் செல்கிறது. முழுவதுமாக நழுவாமல் கொஞ்சம் போல் விலகிக் கொள்கிறது. காய்ச்சல் கண்டவளே மருந்தையும் சொல்கிறாள்.

பச்சிலைச் சாற்றைவிட காவிரி நீரைக் கொண்டு தாருங்கள். எனில், அது அவனுடைய நதி. ஒத்தடம் கொடுப்பதைவிட குதிரைகளின் காலடியைக் காட்டுங்கள். எனில், அது அவனுடைய சுவடு. சுற்றி நிற்பதை விட சற்றுத் தள்ளியிருங்கள், என்பது போல நோயின் கசப்பை உணராத தோழிகளை வைகிறாள். படுக்கையிலிருப்பவரை விட பக்கத்திலிருப்பவர்க்கே இம்சை அதிகமென்பது உண்மைதான் போல.

இப்படியானதொரு காய்ச்சலில் விழுந்தவள் வேறொரு இடத்தில் அருகில் இருப்பவரை மட்டுமல்ல, தன் காய்ச்சலுக்குக் காரணமான நந்திவர்மனையே திட்டுகிறாள். கள்ளர் பயமில்லாத இத் தேசத்தில் எனது கைவளையலைக் காணவில்லை. பசலையால் சுழன்றது என்றபோதும் அதைப் பாதுகாக்கும் கடமை அவனுடையதல்லவா?

ஊர் வாழு உழைப்பவன் என் உடல் நோகச் செய்வதா? பேர் வாழ நினைப்பவன் என் உயிர் வேகக் கொல்வதா? வீரதீரப் பிரதாபன் என அழைக்கப்பட்ட நந்திவர்மனை ஒருத்தி எத்தனை கேலியோடு அணுகிறாள்? காதல் அணுகுமுறைகளைக் கற்றுத் தரும். அடக்குமுறைகளில் முத்தம் பெறும்.

நங்கள்கோன் தொண்டை வேந்தன்
நாமவேல் மன்னர்க்கெல்லாம்
தங்கள்கோள் அங்க நாடன்
சந்திர குலப் பிரகாசன்
திங்கள்போல் குடையின் நீழல்
செய்யகோல் செலுத்தும்என்ப
எங்கள்கோல் வளைகள் நில்லா
விபரீதம் இருந்த ஆறே.
(நந்திக் கலம்பகம்)
சந்திர குலத்துக்கே ஒளியைத் தருகிறவன், என் விழிகளில் இருட்டைத் தடவுவதா?

சந்திரனைப் போன்ற குடையில் கீழே ஆட்சி புரிபவன், என் கைவளைகள் நழுவிட உதவுவதா?

ஊரைப் பழித்து உறவைப் பழித்து ஒன்றிக் கிடக்கும் இயற்கையின் அழகைப் பழித்து, காதலிப்பதைவிட காதலிக்காமலேயே இருக்கலாம், என காதலிக்காதவர் சொல்லக் கூடாது.

காதலிக்காதவர் வரிசையில் இப்போது ஒரே ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை நாம் கடவுளென்று கூப்பிடுகிறோம். கடவுளைக் கண்டதும் ஆர் புருஷோத்தமனின் மரங்களுக்காகவும் சில வீடுகள் தொகுப்பிலுள்ள தேரோட்டம் கவிதை நினைவுக்கு வருகிறது.

உற்சவ மூர்த்துயில்லை
உடனமர்ந்த விற்பன்னரில்லை
வடமிழுத்த பெருங்கூட்டமில்லை
சுற்றியிருந்த மாலைகளுமில்லை
நிஜங்களில் வெயில் சுட
நிலையிட்டு நின்றது தேர்
ஓடுகிறது பல தேர்
மனிதர்களின் மனங்களினூடும்

நிஜங்களின் வெயில் சுட நிலையிட்டு நின்ற தேரில் காக்கைகள் அமராது. சிலந்திகள் அண்டாது. கடவுளைப் பார்த்து, தேர் கேட்டது; நீங்காளாவது காதலிக்காமல் இருக்கக் கூடாதா?

Advertisements

3 பதில்கள் to “பரிச்சுவடு”

 1. Karthick said

  arumai yaana pathippu thozhare!!!

  karthick

 2. தங்களின் “மழை பெய்யும் போதும்”
  பாடல் அசத்தல்..
  மிக மிக அருமை.. 🙂

  உங்களுக்கு விருப்பமிருந்தால்..
  இந்த படலை எழுதிய அனுபவம் குறித்து ஒரு பதிவு எழுதவும்..

 3. chithra said

  nadaivandi natkal yen nagaraveillai?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: