யுகபாரதி

எதிர்மேதைமை

Posted by யுகபாரதி மேல் திசெம்பர் 21, 2009

நம்முடைய மேதைமைதான் நமக்கு எதிரி. தெரிந்தும் தெரியாமலும் நாமாகவே விரித்த மிகப் பெரிய அலட்சிய வலைக்குள் சிக்கித் தவிக்கிறது காலம். சமூகத்திலிருந்து விட்டு விலகி வெகு தொலைவு வந்துவிட்டது போல் தோன்றுகிறது. இந்தத் தோற்றம் தற்செயலன்று. ஏற்படுத்தப்பட்டது. ஏற்கனவே இருந்த பொய்யாலும் புரட்டாலும் நாகரிகமென்கிற அழுக்கு நம் மூளைக்குள் திணிக்கப்பட்டுவிட்டது. இப்போதைய கவலை, அழுக்கை எடுப்பதன்று. அழுக்கைப் பிறர் பார்த்து விடாதவாறு மெருகு பூசுவதே.

ஒரு திரைப்படத் தொடக்கவிழா சுவரொட்டியைப் பார்த்ததும் அந்தப் பெயர் மீண்டும் நினைவுக்கு வந்தது. ஒரு காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த பெயர். பிரபலமென்பது ஒரு காலத்தோடு  முடிந்துவிடக் கூடியதுதான். எனினும், அந்தப் பெயருக்குப் பின்னுள்ள சரிதம் அறியத்தக்கது. சுவரொட்டியில் பொறித்திருந்த பெயர் பருத்திவீரன்”.

பருத்திவீரனின் வீரக்கதைகளை முன் மொழிவதன்று என் நோக்கம்.மாறாக கற்பு குறித்து அதிக விவாதங்கள் நிகழும் இச்சூழலில் அப்பெயரின் தனித்துவமும் அப்பெயருக்குக் கிடைத்திருக்கும் வியாபார முக்கியத்துவமும் கவனிக்கபட வேண்டியவை.

யார் அந்தப் பருத்தி வீரன்? ஐம்பதுகளுக்குப் பின்னோக்கித் திரும்பினால் கிடைக்கிற மணிக்குறவன் வரலாற்றைப் புரட்டுகையில் அப்பெயர் வருகிறது. பால்யத் திருமணம் வழக்கிலிருந்த அக்காலத்தில் மணிக்குறவனுக்கும் அழகம்மாளுக்கும் திருமணம் நடக்கிறது. அழகம்மாளுக்கு வயது பதினெட்டு ஆகும்போது மணிக்குறவன் வெட்டப்பட்டு இறக்கிறான்.

இறந்த மணிக்குறவனின் மாமியார் அதாவது, அழகம்மாளின் தாய் ‘என் மருமகனைக் கொன்றவனை யார் பழி தீர்க்கிறார்களோ அவர்களுக்கு என் மகளை மறுமணம் செய்துவைப்பேன்’ எனச் சொல்கிறாள். அதுபடி, செல்லம் என்ற இளைஞன் பழி தீர்த்து அழகம்மாளை மணம் முடிக்கிறான். செல்லம் முதுகுளத்தூர் அருகிலுள்ள பருத்தியூரைச் சேர்ந்தவனாதலால் பருத்தி வீரன் எனப் பெயர் பெறுகிறான்.

இது திரைக்கதையாக எப்படி வரும் என்பதை சம்பந்தப்பட்ட குழுக்களே அறியும். ஆனால், அந்தக் கதை இதுகாறும் உலவுவதற்கு முக்கிய காரணம் மணிக்குறவன் பாடலே ஆகும். அப்பாடலை இயற்றியவர் டி.வி பச்சையப்பன்.

கற்பென்பது உடல் சார்ந்ததன்று. மன் ஒழுக்கத்தின் இன்னொரு சொல்லீடு. மறுமணமும் அறுத்துக் கட்டுதலும் உடலோடு சம்பந்தப்பட்டதல்ல என்பதை இதோ இன்றைக்குத்தான் கண்டுபிடித்ததுபோலச் சிலர் பிதற்றுவது வேடிக்கை.

மரபு சார்ந்த அறிவுடைய எவருக்கும் இந்த நவீன அறிவுஜீவிகளின் பம்மாத்து விளங்கக் கூடும். மரபு பற்றி பேசத் தொடங்கினால் அது ஆகாத வீட்டில் உறை மோர் கேட்டதுபோல் அலுக்கிறவர்கள், மேலும் இக்கட்டுரையை வாசிக்காமல் இருத்தல் நலம்.

மணிக்குறவன் பாடலுக்கு என்ன பெரிய மகிமை? எழுத்து மற்றும் ஊடக வளர்ச்சியற்ற அக்காலத்தில் நிகழ்வுகளைக் கதைப்பாடலாக மக்கள் வாழ்மொழியாக்கிய பெருமை அப்பாடலுக்கு உரியது. டி.வி பச்சையப்பன் என்னும் கவிஞனின் சமூகப் பதிவுகளாக அப்பாடல் போலவே அவர் எழுதிய பல பாடல்களையும் கொள்ளவேண்டும்.

அரியலூர் ரயில் விபத்து, மதுரை மணிநகர் பள்ளிக்கூட விபத்து போன்ற அசம்பாவிதங்களை எழுதி வைத்த அவருக்குக் கவிஞர் அந்தஸ்தோ, கவிப்பேரரசு பட்டமோ எந்த முத்தமிழ் வித்தகராலும் வழங்கப்படவில்லை.

ஒரு கவிஞனின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டுமென்பதில் ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் வேறுபாடு இருக்கலாம். ஆயினும், அவ்வேறுபாடு குறைந்த பட்சம் பொறுப்புணர்வு கொண்டதாக அமையாவிட்டால் ஏது பயன்?

பயன் கருதியா இலக்கியம் படைப்பது என்று மற்றொரு கோஷ்டி. பயனில்லாமல் படைப்பது இலக்கியமாகுமா என இன்னொரு கோஷ்டி. முஷ்டி உயர்த்தி முட்டிக் கொண்டதைத் தவிர, தொண்ணூறுகளில் எந்தப் புதிய முயற்சிகளும் இலக்கியத்தில் ஏற்படவில்லை.

டி.வி பச்சையப்பனின் பள்ளிக்கூட விபத்து பாடலில் கும்பகோணம் பள்ளிக்கூட விபத்தின் உக்கிரம் வெளிப்படுகிறது. மதுரை மணிநகர் பள்ளிக்கும் ‘சரஸ்வதி வித்யா சாலை’ என்றுதான் பெயர்.

சரஸ்வதி பெயரை பள்ளிக்கு வைத்தால் அது மதுரை மணிநகரானாலும், கும்பகோணமானாலும் விபத்து நேர்ந்து விடும் போல, மணிநகர் பள்ளி விபத்தை டி.வி பச்சையப்பன் எழுதியது போல கும்பகோணம் பள்ளி விபத்தை எத்தனை பேர் பதிவு செய்தோம் எனக் கேட்பதில்லை யாதொரு நியாமுமில்லை.

எழுத்து சமூக தளத்தை விட்டுப் பிறழ்ந்து வேறொரு திசை நோக்கி நகர்ந்துவிட்டது. ஜன்னலில் அமரும் சிட்டுக்குருவி அல்லது சமயத்தில் வருகிற ரோமக் கிளர்ச்சி அல்லது ஆணிய – பெண்ணிய – கோணிய பார்வையோடு முடிந்துவிடுகிறது, நம் இலக்கிய வெளி. இதற்கெல்லாம் அப்பாலுள்ள சூட்சம உலகத்தை நாம் அறிவதே இல்லை.

இலக்கிய நுட்பங்களைப் பேசிக்கொண்டு எதிர்தரப்பு எழுத்துக்காரர்களோடு நாக்குத் தேய்ப்பதன்றி பிறிதொரு செயலை நாம் கைகொள்ளத் தவறுவதை ஏன் எல்லோருமே சுலபமாக மறந்துவிடுகிறோம்?

குண்டு விழுந்ததுபோல் குபுகுபு வென்று
பள்ளிக்கூடம் விழுக – பெண்களெல்லாம்
குய்யோ முறையோ வென்றழுக – அன்று
கூட்டோடு மடிந்த உடம்பில் ரத்தம் தான்
குபுகுபு வென்று ஒழுக – தரையில்
குபுகுபு வென்று ஒழுக.

கும்பகோணம் பள்ளி விபத்து முடிந்து ஓராண்டு அஞ்சலியும் செலுத்தியாயிற்று. இலக்கிய நாடி மற்றும் நுரையீரலாக விளக்கும் சிற்றிதழ் எதிலுமே ஒரு சின்னப்பதிவு கூட இடம் பெறவில்லை. இடம் பெற்றிருப்பின் அதன் காத்திரம் முறையாக வரவில்லை எனலாமா?

போகிற போக்கில் பாடி வைத்த பழம் பாடல்கள்தான் இன்றைக்கும் திரட்டுகளாக நம் பொக்கிஷங்களாக இருந்து விளங்குகின்றன. இந்தத் திரட்டு முயற்சிகளில் டி.வி பச்சையப்பன் போன்ற பாமர எழுத்துக்காரர்கள் இடம் பெறுகிறார்கள்.

இவர்களுக்கு பெயரோ, பணமோ பிரதானமாகப்படவில்லை. அரியலூர் ரயில் விபத்து போல இன்று எத்த்னை, எத்தனையோ விபத்துகள் நொடிக்கொன்றாக நிகழ்ந்து வருகின்றன. எனினும், அது வெறும் விபத்து. அவ்வளவே. தலைப்புச் செய்தியாக வந்தால் கூட அடுத்தப் பக்கத்தைப் புரட்டிக்கொண்டே தேநீர் கேட்கிறவர்களாக மாறிவிட்டோம்.

சகிப்புத்தன்மை ஒருவனுக்கு வந்துவிட்டால் அவன் எதையும் சாதித்துவிடுவான் எனபது எதற்குச் சொல்லபட்டதோ? இப்போது நாம் சகிப்புச் சிகாமணிகளாகச் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம்.

மேலவளவோ, திண்ணியமோ, கண்ட தேவியோ அவசியமில்லாமல் ஜெயலஷ்மியும், குஷ்புவும் நம்மைக் கவர்கிறார்கள். கற்பைப் பற்றிக் கருத்து கேட்க / சொல்ல அவர்களும் மனமுவந்து போஸ் கொடுக்கிறார்கள்.

கலாசாரக் காவலர்களும் பத்திரிகாதிபர்களும் பெரியாரின் நிழலுவருங்களும் காட்சி தருகிற புகைப்படங்கள் ச்சீயோ….. ச்சீ.

ஊருக்கொரு மணிக்குறவன்..ஊருக்கொரு பச்சையப்பன்..ஊருக்கொரு அழகம்மாள்…ஊருக்கொரு பருத்திவீரன். இன்னும் சில வருடங்கள் கழித்து திரும்பிப் பார்க்கையில் அதீத மேதைமையால் நாம் அழித்த பலவும் நம்மைத் தலை குனிய வைக்கும். நாமிருக்கமாட்டோம். நமக்குப் பதிலாக நம்மால் உருவான அழுக்குகள் பல்லிளித்து நிற்கும். அந்த அழுக்கிலும் பிள்ளையார் செய்து கும்பிடுபவர்கள் யோசிக்கக்கூடும். வருகிற தேர்தலுக்கு யார் யாரோடு கூட்டு சேர்வார்கள்?

(வீட்டுக்கு வெளியே வெவ்வேறு சுவர்கள் என்ற எனது கட்டுரைத் தொகுப்பிலிருந்து)

Advertisements

ஒரு பதில் to “எதிர்மேதைமை”

  1. ஓ..இதுதான் பருத்திவீரனின் முழுக்கதையா? அந்தப்படம் வந்தபோது இணையத்தில் பருத்திவீரனைப் பற்றி தேடி அலைந்தேன். தோல் தடித்துப் போனப்பின் சகிப்புத்தன்மைக்கென்ன குறைச்சல்!! நல்ல இடுகை1

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: