யுகபாரதி

ஒன்று

Posted by யுகபாரதி மேல் திசெம்பர் 22, 2009

ஒன்று என்று புத்தகத்திற்குத் தலைப்பிடக் காரணம் ஒன்றுமில்லை. சட்டனெத் தோன்றியது, அவ்வளவுதான்.

ஒன்றைப் பற்றிய அக்கறை துளிர்க்கும்போது அதைச் செய்து விட வேண்டும். இரண்டாவது கருத்திற்கு இடம் வைக்கக் கூடாது.

ஒன்று என்பது நல்லது மட்டும் தான். கெட்டது வரும் போது அது இரண்டாகி விடுகிறது.

‘ஒன்றுக்கு மேல் வேண்டாம்’ என்பது அரசு அறிவித்திருக்கும் வாசகம். இந்த அரசாங்கத்திற்கு ஒன்றின் மீதுள்ள ஆசை இன்னொன்றில் இருப்பதில்லை.

‘நான்’ என்கிற அகந்தை ஒன்றால் விளைவது.

‘ஒரு குடம் தண்ணி ஊத்தி’ எனத் தங்கை முணுமுணுக்கிறாள்.  ‘இரண்டில் ஒன்று சொல்’ என எச்சரித்து எச்சரித்து அப்பா அலுத்துக் கொள்வார்.

ஒன்றுக்குப் பிறகுதான் ஒவ்வொன்றும்.

‘ஒன்றுபடு’ என்பதைத்தான் உலகத் தொழிலாளர்களுக்குக் கம்யூனிஸ்ட் கட்சி முழக்கமாக வைக்கிறது.

‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்றவனுக்கு என் முதல்மரியாதை என்றுமுண்டு. ‘ஒன்றே செய் அதை இன்றே செய்’ என்பார் என் தமிழ்வாத்தியார். ஒன்றாம் தேதி அரசு அலுவலர்களுக்கு மகிமை படைத்தது. எண்களின் தொடக்கமாக ஒன்றைக் கண்டுபிடித்தவன் பல மடங்கு பாராட்டுக்குரியவன்.

‘எண்ணும் எழுத்தும் கன்ணெத் தகும்’ என்று தான் சொல்கிறார்கள். எழுத்துக்கு முன்பு எண் வருவதால் எண் மீது எனக்கேற்பட்ட காதல் அளவிட முடியாதது.

எதிலும் ஒன்றாதிருப்பதி பிழை. எதிலாவது ஒன்றியிருப்பது பக்தி. ‘இவ்வளவு தூரம் நீ எழுதியிருப்பதில் ஒன்றுமே இல்லை’ என நீங்கள் கூடிப் பேசுதலும் குதூகலம்தான். ஒன்றுக்குப் போவது என்றால் சிறுநீர்க் கழிக்கப் போவது எனப் பொருள் கொள்ள வேண்டும். சில சொற்களுக்கு, தமிழ் கொண்டிருக்கும் அர்த்தம் சூசகமானது.

‘ஒன்றே குலம்’ தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்தியது. ஒன்றை அறிவதற்கு இத்தனை தேவை என்பதால் ஒவ்வொரு மனிதனும் தனித்தனியாகப் பிரிந்து கிடக்கிறான்.

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்குப் பெயரென்ன? – பாடலைக் கேட்குந்தோறும் காதலிக்கப் பெண் கிடைக்காத சோகம் கவ்வுகிறது பலபேரை.

சினிமாவுக்குப் பாட்டெழுதக் கிடைத்த முதல் வாய்ப்பில் எனக்கு அமைந்த கதைச்சூழல் ஒரு ரூபாயைப் பற்றியது. ஒருவருக்காவது அது பிடித்திருக்கும். அந்த ஒரு ரூபாய் இல்லாததால் பேருந்த்திலிருந்து நடத்துனரால் இரக்கமில்லாமல் இறக்கி விடப்பட்டிருக்கிறேன். ஒருவழியாக, நடந்து வரும் வழியில் ஒரு கைப்பிடி சுண்டல் வழங்கினார்கள் பிள்ளையார் கோயிலில்.

பிணத்தின் நெற்றியில் ஒரு ரூபாய் நாணயம் எதற்காக? ஆரத்தி எடுத்த கெளசல்யாவிற்கு, ஒரு ரூபாய் இடச் சொன்னாள் அத்தை.

வெகுநாட்களாக சாமி காசென்று பீரோவில் கிடக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை, கைக்குட்டையில் மடித்து வைத்தது பாட்டியாம்.

ஒன்று என்பதை ‘முதல்’ என்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

முதல் கவிதை, முதல் சிறுகதை, முதல் நாடகம், முதல் திரைப்படம், முதல் காப்பியம், முதல் அரசியல் அனுபவம், முதல் அவமானம், முதல் பாராட்டு, முதல் காதல், முதல் முத்தம், முதல் பிரிவு என விரித்துக் கொண்டே போகலாம்.

கடந்த காலத்துச் சாதனைகளை வியந்து பார்த்தல் சுகம். முகமறியாதவரிடம் வழி கேட்கிறோம். அவர் சொல்வதை நம்பிக்கையோடு ஏற்று நடக்கிறோம். வந்தடைந்த பிறகு இவர் முகம் நினைவில் நிற்பதில்லை. அந்த வாய்ப்பை வழங்கியவரை ஏன் நினைக்காது மறக்கிறோம்?

அதேபோல, ஒருவர் காட்டிய வழி தவறாகி விடுகிறது. அவருக்குத் தெரிந்தது அவ்வளவு தானென்று விட்டுவிடுகிறோமா என்ன? வலுக்கட்டாயமாக ஒரிரு முறையாவது அவரை சபிக்கிறோம்.

எனது அபிப்பிராயங்கள் முழுவதையும் ஏற்க வேண்டிய அவசியமில்லை. பாதியிலேயே நிறுத்திவிட்டு இன்னொரு புத்தகத்தின் மீது உங்கள் கவனம் திரும்பினால் அதுவும் ஏற்புடையதே. என் அபிப்பிராயத்தை நீங்கள் அவமதித்திவிட்டதாக எடுத்துக் கொள்வதற்கில்லை. எனில், அபிப்பிராயம் தனி மனிதனின் அடிப்படை உரிமை அதை மறுப்பதும்.

ஒன்று இன்னொன்றாதல் இயற்கை. ஒன்று அழிந்து இன்னொன்று  உருவாதல் தத்துவம். ‘ஒன்று’க்கு தமிழ் அகர முதலியில் தரப்பட்டுள்ள வேறு சில சொற்கள் வீடு பேறு, வாய்மை, அறம், மதிப்பிற்குரிய பொருள்.

நல்லதை மறப்பதும் தீயதை நினைப்பதும் ஒன்றை அதீதமாகக் கருதுவதே ஆகும். அதீதம் சரியிலும் தவறிலும் முக்கிக்கிடக்கும்.

( ’ ஒன்று ’ கட்டுரைத் தொகுப்பிற்காக எழுதப்பட்டது )

Advertisements

2 பதில்கள் to “ஒன்று”

  1. tamilan said

    I like very much about his thoughts, his way of thinking like a river keep it up yugabarathi

  2. //முதல் கவிதை, முதல் சிறுகதை, முதல் நாடகம், முதல் திரைப்படம், முதல் காப்பியம், முதல் அரசியல் அனுபவம், முதல் அவமானம், முதல் பாராட்டு, முதல் காதல், முதல் முத்தம், முதல் பிரிவு //

    இதில் “முதல் இரவு” விட்டுப்போச்சு….இப்படி நிறைய எழுதலாம்…நீங்கள் எழுதிய ஒன்று பிடித்திருக்கு கருத்திருக்கு….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: