யுகபாரதி

ஒரே இரவில் முதல் வசனம்

Posted by யுகபாரதி மேல் திசெம்பர் 23, 2009

ஒருவர் இன்னொருவர் மீது தனக்குள்ள கருத்து முரண்பாட்டை எந்தத் தடையுமில்லாமல் விமர்சனமாக முன்வைப்பது ஜனநாயகத்தின் சிறப்பு. ஆனால் அதே ஜனநாயக மதிப்பீட்டில் அவ்விமர்சனம் கொச்சையானதாகவோ மொன்னையானதாகவோ இருக்கும் பட்சத்தில் அதை எதிர்த்து அல்லது எதிர்வினையாற்றும் உரிமையும் ஜனநாயகத்துக்கு இருக்கிறது என்பதை யாரும் ஏற்பதில்லை.

போகிற போக்கில் தன் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக சில விமர்சனங்களை வீசிவிட்டு அதன் மூலம் கிடைக்கும் மிக கேவலமான பிரபலத்தை விரும்புகிறவர்களாக அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். உண்மையில், இவர்கள் அரசியல்வாதிகள் என்று சொல்வதிலும் பார்க்க அரசியல் வியாபாரிகள் என்று அழைப்பதே பொருத்தம்.

தன்னால் நிறுவப்பட்ட கட்சி மக்கள் மத்தியில் கவனிப்பைப் பெற வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்து
கடைசியில் மக்களின் அதீத வெறுப்புக்கு உள்ளாகிவிடும் அபாயத்தை நாம் கடந்த காலங்களில் கண்டிருக்கிறோம். பிரதேச உணர்வை
முன்வைத்து எழுப்படும் இம்மாதிரியான உணர்ச்சிக் கொந்தளிப்புகள் ஒரு சராசரியின் முன்னேற்றத்துக்கு எவ்விதத்திலும் உதவுவது இல்லை.

பால்தாக்ரே தென் இந்தியர்களுக்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடியதைப்போல இப்போது ராஜ்தாக்ரே வட இந்தியர்களுக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார். ஒரு பக்கம் நகைப்பாகவும், மறுபக்கம் போக்கிரித்தனமாகவும் தோற்றம் காட்டும் இச்சிக்கல் வன்முறைக்கும் ஆபாசக்கூத்துக்கும் இடமளித்திருக்கிறது.

உத்ரப்பிரதேசத்தில் நடிகர் அமிதாப்பச்சன் கல்லூரி தொடங்க திட்டமிட்டிருப்பதை அரசியல் லாபத்துக்காக மகாராஷ்டிரா மக்கள் நேசனாக இருப்பதுபோல காட்டிக்கொள்ள ராஜ்தாக்ரே அடுக்கடுக்கான அபாண்டங்களை உமிழ்ந்திருக்கிறார். மும்பை நகரமே கிடு கிடுக்கும் என்று அவர் நினைத்து உமிழ்ந்த கூற்று அவர் விரும்பிய அளவுக்கு விளம்பரத்தைத் தரவில்லை. என்றாலும், சின்னதாக ஒரு சலசலப்பை ஏற்படுத்தியே இருக்கிறது.

இந்த சலசலப்புக்கு அஞ்சாத நரிகளாக இதர கட்சிகளும் பிரமுகர்களும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார்கள். என் கவலை, ராஜ் தாக்ரே மாதிரியான பேர்வழிகள் அரசியல் தளத்தில் இருந்து கொண்டு செய்து வரும் ரவுடித்தனங்களை முற்றிலுமாக ஒழிக்க முடியாதா என்பதுதான். முன்வைக்கும் கருத்தின் எதிர்வினை என்னவாகும் என்ற ஆரம்ப அறிவு கூட இல்லாத ஒருவரை ஒரு கட்சியின் தலைவராகச் செயலாற்ற அக்கட்சியின் பிற உறுப்பினர்கள் எப்படி அனுமதிக்கிறார்கள் என்பதை விட அவற்றில் உள்ள சூதையும் சூட்சுமத்தையும் நம்மால் வெளிப்படையாக அறியமுடிகிறது.

‘ஆரம்ப அறிவு” என்ற பிரயோகத்தை எனக்கு வழங்கியவர் எழுத்தாளர். ஜெயமோகன். அங்காடித் தெரு என்னும் தலைப்பில் புதிதாகத்
தொடங்கப்பட்டுள்ள இயக்குனர் வசந்தபாலனின் திரைப்படத்துக்கு ஒரே நாளில் முதல் பாகத்துக்கான வசனத்தை எழுதி மெயில் பண்ணியவர் என்ற பெருமைக்குரியவர். ஐம்பது நூறு ஆண்டு நெகட்டிவ்வாக இருக்கப் போகிற ஒரு திரைப்படத்துக்கு ஒரே நாளில் வசனம் எழுதி இயக்குனரின் நன்மதிப்புக்கு உரியவராக மாறியிருப்பவர். அத்தனை அவசரமாக அல்லது முனைப்பாக செயல்படும் எழுத்தாளர் “அவசர புத்திக்காரர்” என்னும் பெருமைக்கும் தகுதிக்கும் தன்னைப் பொருத்தமானவராகவே எப்போதும் காட்டிக்கொண்டிருக்கிறார். அவர் அசுர எழுத்தாளர். அவரால் விடுப்புக் கடிதங்களைக் கூட இருபது பக்கத்திற்கு மிகாமல் எழுத முடியாது என்கிறார்கள். சக எழுத்தாளர்களை விட தனக்கு எப்படியும் கூடுதல் கொம்பும் கம்பீரமும் இருப்பதாக நினைத்துக் கொள்பவர். வசந்தபாலனின் முதல் திரைப்படமான ஆல்பம் குறித்து அவரிடமே “சவசவ” என்று எடுத்திருந்தீர்கள் என விமர்சனத்தை வைத்தவர். அந்த விமர்சனத்துக்கு பதிலாகவே வெயில் என்ற அதி அற்புதத் திரைப்படத்தை தான் இயக்கியதாக வசந்தபாலன் கூறுகிறார். ஜெயமோகனின் விமர்சனத்தை மதித்து அல்லது மேலும் அவர் விமர்சிக்காமல் இருக்க அல்லது விமர்சனத்துக்கான பழிவாங்கலாக அங்காடித் தெருவுக்கான வசன வாய்ப்பை கொடுத்திருக்கிறார். இதற்கு முன்பாக எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதி வெளிவந்து அமோக வெற்றியடைந்தத்  திரைப்படம் “கஸ்தூரிமான்”. திரைத்துறையிலும் எழுத்தாளர் ஜெயமோகன் கை ஓச்சி (காலோச்சிக்கான எதிர்ப்பதம்) புகழ் பெற வேண்டும் என்பதே தமிழ் கூறும் நல்லுலகில் உள்ள இலக்கியக் குழுக்களின் தீராத பிரார்தனை. அப்பிரார்தனைக்குப் பலன் கிட்ட நாமும் தனித்தனியாக பிரார்த்திப்போம்.

ஜெயமோகன் ஒரே இரவில் நாவலும் திரை வசனமும் எழுதுகிறவராக அறியப்படுவதன் மூலம் மேலும் சில நல்ல வாய்ப்புகளைப் பெற
முடியும். ஆனால்,பாலகுமாரன்,சுஜாதாவுக்கு போட்டியாளராக வர முடியுமா? தெரியவில்லை.அந்த சமத்து ஜெயமோகனுக்கு இல்லை என்பது போலத்தான் அவர் வசனமெழுதிய கஸ்தூரிமானின் படுதோல்வியில் இருந்து நாம் கணிக்கக் கடவது.  சினிமாவுக்காக தன்னை தகுதி உடையவராக மாற்றிக்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாகவே அவரது சமீபத்திய நேர்காணல்கள் அமைந்திருக்கின்றன. அதாவது,சினிமாவை புதிதாக்கும் முயற்சிக்கு அவரிடம் போதிய பாடநூல் திட்டங்கள் இருக்கின்றனவாம்.படு சுறு சுறுப்பான வசனப்பணிக்கு இடையிலும் அவரால் இலக்கியத்தை விட முடியாமல் தமிழர் புத்தாண்டாக சித்திரை இருக்கக் கூடாது என்று பெரியார் சொன்னதை உயிர்எழுத்து இதழ் குறித்த வாசகர் பதிவில் ஆய்ந்திருக்கிறார். அதாவது, குமரிமைந்தன் போன்றவர்கள் பஞ்சாங்க நூல்களை விரிவாக ஆராய்ச்சி செய்து தமிழருக்குத் தொன்மையான தனித்துவம் கொண்ட வானியல் உண்டு என்றும், இதுவே பிற்பாடு ஜோதிடமாக உருமாறியது என்றும் பல்லாண்டு காலமாக எழுதி வருகிறார்களாம். சித்திரை மாதக் கணக்கு தமிழர்களின் தொன்மையான வானியலின் சான்று என்கிறார்களாம். தன் குறைவான அறிவிலேயே ஜோதிட நூல் சார்ந்த அந்த ஆய்வுகள் முக்கியமானவை என்று கண்டிருக்கிறாராம். தமிழ் சார்ந்த இத்தகைய ஆய்வுகள் இப்போதுதான் தொடங்கியே இருக்கிறனவாம்.

தமிழ் நாட்டில் கிடைத்துள்ள இலக்கிய மற்றும் கல்வெட்டு சான்றுகளின்படி ஞாயிற்றை அடிப்படையாக கொண்டதும் சித்திரையில் தொடங்கப்பெறுவதுமான ஞாயிற்று ஆண்டு கணக்கும் வியாழனை அடிப்படையாக கொண்ட வியாழ ஆண்டுமக் கணக்கும் இருந்ததாகத் தெரிகிறது. ஞாயிற்று ஆண்டை சோழ மன்னர்களும், வியாழ ஆண்டை பாண்டிய மன்னர்களும் பின்பற்றியதாகவும் கல்வெட்டுகள் கூறுகின்றன.

சிந்து சமவெளி நாகரிக மக்களால் பின்பற்றப்பட்ட ஆண்டு, வியாழ ஆண்டே என்பதை ருசிய அறிஞர்கள் நிறுவியிருக்கிறார்கள். இந்த ஆய்வுகள் தொடர்ச்சியாக தமிழ் இலக்கியப் பரப்பிலும் நிகழ்ந்தே வந்திருக்கின்றன. என்றாலும், தமிழர்களுக்குப் தொடர் அண்டு இல்லாத
குறைபாட்டினை போக்குவதற்காக கி.பி.1921ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் மறைமலையடிகள் தலைமையில் கூடிய தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவராண்டு முறையைத் தமிழர்கள் கடைபிடிக்க வேண்டும் என முடிவு செய்தனர். அதன் விளைவாக 2001 மலேசியத் தலைநகரில் நடந்த தமிழ் அமைப்புகள் மாநாட்டில் தை முதல் நாளே தமிழ் ஆண்டின் தொடக்க நாளாக அறிவிக்கும் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.இருந்தபோதும் திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் சித்திரை முதல்நாளா? தை முதல் நாளா என்னும் குழப்பம் நீடித்த நிலையில் தை முதல் நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்து சட்டபூர்வமாக அமுலுக்கும் கொண்டு வந்திருக்கிறார். இது ஏதோ நேற்று பட்ட காயத்திற்கு இன்று கட்டிய பச்சிலை இல்லை என்பதை ஜெயமோகன் உணராதவர் இல்லை. அவருக்குப் பெரியாரையும் திராவிட இயக்கங்களின் மீதுள்ள காழ்ப்பையும் வெளிப்படுத்த  இப்பிரச்சனை ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது அவ்வளவே. ஒரே நாளில் வசனம் எழுதும் அவசரத்தைப் போல அவசர அவசரமாக எதையாவது எழுதி தனக்கும் தன் எழுத்துக்கும் கேட்டைத் தேடித்கொள்ளும் நோயில் உழல்கிறார்.

ஈ.வே.ரா. ஒரு சமூக சீர்திருத்தவாதியாகவோ போராட்டக் காரராகவோ நிறுத்துவதே தமிழுக்குச் செய்யும் நன்மையாம். தமிழ்ப்பண்பாடு பற்றிய ஆரம்ப அறிவு கூட இல்லாத அவரை தமிழ்ப்பண்பாட்டின் அனைத்து கூறுகளையும் தீர்மானிக்கும் நபி போல சித்தரிக்கும் இன்றைய போக்குகள் மிக ஆபத்தானவையாம். ஜெயமோகன், பெரியாரை நபிபோல யார்  சித்திரிப்பது? இல்லாத ஒன்றை பற்றி வக்கணை செய்வதையே சித்திரிப்பு என்பார்கள். அப்படி பெரியாரை சித்திரிப்பு செய்தவரை பற்றியும் உங்கள் வலைப்பூ அல்லது பிழைப்பூ-வில் எழுதினால் நாங்களும் படித்து பயன்பெறுவோம்.நபி போல என்ற சொல்லை பிரயோகிப்பது சிறுபான்மையினரின் இதயத்தில் ஈட்டி பாய்ச்சும் என்பதையும் அறிந்தே கூறியிருக்கிறீர்கள் இதன்மூலம், ஏக இந்தியாவின் இந்துத்துவா பரவலுக்கு தமிழகத்தின் ஏஜெண்டாக உங்களை ஸ்தாபித்துக் கொள்ளும் அவரசம் உந்தித் தள்ளியிருக்கிறது.

ராஜ் தாக்ரே மும்பையில் செய்துவரும் போக்கிரித்தனத்துக்கம் ஜெயமோகன் தமிழ் நிலத்தில் செய்துவரும் எழுத்து வியாபாரத்துக்கும் ஒப்பீட்டு அளவில் பெரிய வித்தியாசமில்லை.

ஒரு துறையில் கூடுதலாக பங்களிப்புச் செய்து கவனம் பெற்ற ஒருவர் பிற துறைகுறித்து அறிவில்லாத போதும் அத்துறை குறித்த
கருத்துக்களை முனைந்து முன்வைப்பதற்கு காரணம் விளம்பர ஆசையின்றி வேறு எதுவாகவும் இருக்க முடியாது. அதனால்தான், சினிமா உலக பிரபலங்களைச் சுதந்திர தின நிகழ்ச்சிக்கு காட்சி ஊடகங்கள் கவர்ந்து வந்து பேட்டி எடுக்கின்றன போல.தமிழ்ப் பெருநிலத்தில் பெரியார் ஆவேசக்காராக ஆதிக்கத்தை வேரறுக்கும் கோடாலியாக நிறுத்தப்படுகிறவர் இல்லை.  ஜெயமோகன் தன் குறைந்த அறிவிலேயே ஜோதிட நூல் சார்ந்த ஆய்வுகள் முக்கியமானவை என்று பறைசாற்றும் போது பெரியார் தன் தொடர்ச்சியான போராட்டக் களங்களுக்கு இடையே தமிழ் ஆய்வுகளையும் தமிழர் பண்பாட்டின் ஆய்வுகளையும் மேற்கொண்டிருப்பதை பெரியாரியல் ஆய்வாளர்கள் நன்கறிவார்கள். ஜோதிட நூல் முக்கியம் என்று படுகிற ஒருவருக்கு ஜோதிடத்தை மூடத்தனம் என்ற ஒருவர் எவ்விதத்திலும் ஏற்புடையவராக இருக்க முடியாதது இயற்கையே.

ஜெயமோகன் வசன பணிக்கு மத்தியிலும் எஸ்.ராமகிருஷ்ணன்., கோணங்கி போன்ற சக எழுத்தாளர்களின் நடவடிக்கைகளை  அவயங்களை அங்கத தொனியில் எழுதிப்பார்த்து சந்தோசங் கொள்பவராயிருக்கிறார்.இப்படியான காமெடி எழுத்தும் ஜெயமோகனுக்கு நன்கு வருவதால் புலிகேசி மாதிரியான கதை வைத்திருக்கும் இயக்குநர்கள் வசனத்திற்கு அணுகலாம்.கட்டணம் பிரச்சனையில்லை.தனி நபரை அல்ல.சக எழுத்தாளர்களை இத்தனை கீழ்தரமான மனித நாகரீமற்ற முறையில் எழுதி மகிழும் போக்கு  மிக கேவலமான அற்ப வாழ்வுக்கு அம்மாவை சந்தேகிப்பதற்கு சமமானதேயாகும். அதேபோல, பெரியாரின் சகல பங்களிப்பையும் கேள்விக்குட்படுத்தும் ஒவ்வொருமுறையும் பெரியாரை ஈ.வே.ரா. என்றே நீங்கள் அழைப்பது கலைஞரை கருணாநிதி என்றே அழைக்கும் ஜெயலலிதாவின் காழ்ப்பு மனத்தை ஒத்ததாகவே படுகிறது.

ஒருவரின் சிறப்புகளை ஏற்காத பட்சத்தில் அவரது செயல்பாட்டின் நுண்மையை நம்மால் விளங்கிக்கொள்ள இயலாது.அவ்விதமே அச் சிறப்புகளை ஏற்கிற ஒருவராலும் அவரது செயல்பாட்டின் நுண்மையை விளங்கிக்கொள்ள இயலாது என்பதை நாமறிவோம்.பெரியாரின் வழித்தோன்றலாகத் தங்களை கருதிக் கொள்ளும் யாருக்கும் பெரியாரின் பேராற்றல் நிரம்பிய ஆளுமை வாய்த்துவிடாது. தனிப்பெரும் ஆளுமையாகக் கருத வேண்டிய பெரியாரின் சொற்களில் செயல்பாட்டில் உள்ள சாதக பாதகங்களை விமர்சிக்கும் வெளியை பெரியாரே ஏற்படுத்தித் தந்திருக்கிறார். இறுதியாக, ஜோதிட நூல்களில் நம்பிக்கையுள்ள ஜெயமோகனுக்கு நாம் சொல்ல விரும்புவது: உங்களுக்கு நேரம் சரியில்லை.

அங்காடித் தெருவுக்கான அடுத்த பகுதி வசனத்தை எழுதுவதை விட்டுவிட்டு எதற்கிந்த அவசர குடுக்கைத்தனம். வசந்தபாலன் காத்திருக்கிறார்.விசனப்படுவதை விட்டு விட்டு வசனத்தில் கவனம் செலுத்துங்கள்.

(நக்கீரன் இணைய தளத்தில் தொடராக வெளிவந்த அதாவது என்ற கட்டுரைத் தொகுப்பிலிருந்து)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: