யுகபாரதி

நடைவண்டி நாட்கள்: பதினேழு

Posted by யுகபாரதி மேல் திசெம்பர் 24, 2009

பத்திரிகையிலோ தொலைக்காட்சியிலோ நேர்காணல் தருகின்ற பிரபலங்கள் தன் ஆரம்ப காலக்கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்கையில், அதில் என்ன இருக்கிறது? என்று தோன்றும்.வாழ்வை ஜெயிக்க வேண்டுமானால் துயரங்களை எதிர்கொள்ளத்தானே வேண்டும்.இதை ஏன் பெரிதுபடுத்தி பேட்டியளிக்கிறார்கள் என்று நினைத்துக்கொள்வேன்.மேலும் அந்தக் கஷ்டங்கள் சமூக நலனுக்கோ நாளைய மக்களின் விடுதலைக்கோ இல்லையே..சுயத்தை மேம்படுத்திக்கொள்ளத்தானே… இதை ஏன் இத்தனை அலங்காரங்களோடும் அதீத பொய்மை கலந்தும் வெளிப்படுத்துகிறார்கள்? எனவும் யோசித்திருக்கிறேன். தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பதைப்போல எந்தக் கஷ்டமும் நம்மை வந்து தாக்கும்போதுதான் அதன் வீரியமும் விபரீதமும் விளங்குகின்றன.

கையில் ஐம்பது ரூபாயோடு சம்பளம் கிட்டும்வரை வாழ்வை ஓட்ட வேண்டிய சிக்கலான நிலைமை.சரவணன் அகமும் முகமும் சுருங்கி ஊருக்கே போய்விடலாமா எனக் கேட்டான். இரண்டோரு நாளில் சம்பளம் வந்து விடுமென்று நாள்களைத் தள்ளிக்கொண்டே இருந்தேன்.ஊருக்குப் போவதென்றால் கூட சம்பளம் வந்தால்தான் சாத்தியம்.வேலை கிடைத்தும் சம்பளம் கிடைக்காத சங்கடத்தை என்னவென்று சொல்வது?

வேலைமுடித்து விடுதிக்கு வந்ததும் வராததுமாக சரவணன் எனக்காக வைத்திருந்த செய்தியை அவிழ்க்கத் தொடங்கினான்.பாலாவும் பழனியாப்பிள்ளையும் உடன் இருந்தார்கள்.நாளை உலகநாயகன் கமலஹாசனின் பிறந்தநாள் விழா பேச்சுப் போட்டி இருக்கிறது. மூன்றாவது பரிசு இரண்டாயிரம் ரூபாய்.இரண்டாவது பரிசு மூவாயிரம் ரூபாய்.முதல் பரிசு ஐயாயிரம் ரூபாய்.தவிர ஆறுதல் பரிசாக ஐவருக்கு தலா ஐநூறு தருகிறார்கள் என்றான். சரவணன் அவ்விஷயத்தை என்னிடம் சொல்வதற்குக் காரணம் அப்போட்டியில் கலந்துகொண்டு பரிசை வெல்வதன் மூலம் பணக் கஷ்டம் ஓரளவு நீங்கும் என்பதேயாகும்.போட்டி அறிவிப்பை மட்டும் கையில் வைத்துக்கொண்டு அப்போட்டியில் வென்றால் கிடைக்கும் பரிசுத் தொகைக்காக கனவு காண ஆரம்பித்துவிட்டான்.பரிசு வாங்குவதற்குரிய சகல தகுதிகளும் அவனிடம் உண்டு.அவன் மிகச்சிறந்த மேடைப் பேச்சாளன்.என்னை அவன் ஈர்த்ததே ஒரு மேடையில் பேசிய பேச்சால்தான்.தஞ்சை மாவட்டம் முழுக்க அவன் பேச்சு பிரசித்தி பெற்றிருந்தது.கல்லூரி அளவில் அவன் பேச்சுப்போட்டிகளில் பெற்ற வெற்றிகள் எண்ணிலடங்காதவை.அவன் கலந்துகொள்ளும் போட்டியில் அவனுக்கே பரிசு கிட்டும் என கலந்துகொள்ளும் பிற மாணவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். பேச்சில் பொருளும் கவித்துவ அழகும் ஒருசேரக் காண முடியும்.மேடை மீது அவன் கைகளை நீட்டிப் பேசத் தொடங்கினால் அரங்கத்தில் உள்ள அத்தனை பேருக்கும் அவனே ஆசானாவான். கூட்டம் அவனை மெய்மறந்து கைதட்டி ஆரவாரம் செய்து கெளரவித்த சம்பவங்களை பலமுறை உடனிருந்து நானும் ரசித்திருக்கிறேன்.

என்றோ எப்போதோ எங்கேயோ எதனாலே சிறிய அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றதை எண்ணிக்கொண்டு தமிழக அளவில் நடைபெறும் இப்போட்டியில் கலந்துகொள்வது சாத்தியாமா? சாத்தியமே இல்லை என்றால்தான் என்ன? கலந்துகொள்வதில் என்ன தவறு?ஆறுதல் பரிசு தலா ஐநூறு இருக்கிறது.ஐநூறு ரூபாய்க் கிடைத்தால் ஒருவாரத்தை பிரச்னை இல்லாமல் ஓட்டிவிடலாம். பிறகு சம்பளம் வந்துவிடும்.சம்பளம் வந்ததற்குப் பின்னால் தமிழகப் பெருங்குடி மக்களுக்கான சேவையைத் தொடரலாம் என கூடிப்பேசி அப்போட்டியில் கலந்து கொள்வதென முடிவு செய்தோம். பாலாவுக்கும் பழனியாப்பிள்ளைக்கும் மறுநாள் தேர்வு என்பதால் என்னையும் சரவணனையும் வாழ்த்தி அனுப்பினார்கள். நான் அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு போட்டிக்குக் கிளம்பினேன்.

போட்டியில் கல்லூரி மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.அதுவும் கல்லூரியில் இருந்து துறைத்தலைவர் கடிதம் பெற்றுவந்தாலன்றி போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கமாட்டார்கள்.  முதல்நாளே சரவணன் கடிதம் பெற்று வந்திருந்தான்.போட்டி கோபாலபுரத்திலுள்ள காந்தி கிராமோதயா பவனில் நடைபெற்றது.நானும் சரவணனும் கடிதத்தோடு அரங்கத்திற்குள் நுழைந்தோம்.எங்கள் கடிதத்தை சரிபார்த்தது பத்ரி.அந்தப் பத்ரி வேறு யாரும் இல்லை.இயக்குநர் சுந்தர் .சியை வைத்து வீராப்பு என்ற படத்தை இயக்கினாரே அவரேதான். கடிதத்தைப் பார்த்துவிட்டு பச்சையப்பன் கல்லூரியில் இருந்து ஏற்கனவே ஒருவர் கலந்துகொண்டுவிட்டாரே என்றார். ஒரு கல்லூரியில் இருந்து ஒருவரே போட்டியில் கலந்துகொள்ள அனுமதி.உங்கள் கல்லூரிக்குமுடிந்துவிட்டது என்றதும் சரவணின் முகம் வாடிப்போனது.சரவணன் முகம் வாடிப்போனதை பத்ரி கவனித்திவிட்டு  ’நீங்கள் மாலை வகுப்பில் பயில்பவரா”என்று மட்டும் கேட்டுக் கொண்டார்.”எப்படியானாலும் வாய்ப்பு வழங்க இயலாது. போட்டி விதிமுறையை நான் கடைபிடிக்க வேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறேன்”என அன்போடு பேசி வெளியே அனுப்பினார்.

ஆகாயத்தில் கோட்டை கட்டி அதிலே ஊஞ்சலும் ஆடிப்பார்த்த எங்கள் மனம் சீனப் பீங்கனாய்ச் சிதறிப்போனது.ஐநூறு ரூபாய்க்குக் கூட லாயக்கற்றவர்களாயகப் போய்விட்டோமே எனச்சிரித்துக் கொண்டே அதே தெருவில் இருந்த மாலைக்கதிர் பத்திரிகை அலுவலகத்திற்குப் போனோம்.எனக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்த பவித்திரன் அங்கேதான் பணியாற்றிக் கொண்டிருந்தார்.இத்தனை தூரம்
வந்துவிட்டோம் அவரையாவது பார்த்துவிட்டுத் திரும்புவோமே என்றேன்.சரவணன், சலிப்போடு சரி என்றான். அலுவலகம் இரண்டாவது தளத்தில் இருந்தது.பவித்திரனை சந்தித்தோம்.தேநீர் அருந்தக் கடைக்கு அழைத்தார்.கையிலிருந்த ஐம்பது ரூபாயைக் கெளரவத்துக்காக எடுத்து நீட்ட, பவித்திரன் தனக்கு சிகரெட் பாக்கெட்டையும் கடைக்கு செலுத்த வேண்டிய பழைய பாக்கியையும் கழித்துக்கொள்ளச் சொன்னார்.கடைக்காரர் பவித்திரனை முறைத்துக்கொண்டே இருந்ததற்கான அர்த்தம் அப்போதுதான்
எங்களுக்குப் புரிந்தது.இருந்த பணத்தையாவது சேமித்து இருக்கலாம் அதுவும் போச்சே.. என்ற கவலையோடு விடைபெற்றோம். போட்டியில் கலந்துகொள்ளவில்லை என்றால் என்ன.. வேடிக்கையாவது பார்ப்போம் வா என்று சரவணன் அழைத்தான்.

மீண்டும் கிராமோதயா பவனுக்குப் போனோம்.கமல்ஹாசன் பெரிய நடிகர்.அவர் பிறந்தநாளில் பேச்சுப்போட்டி நடத்தி நற்காரியங்களுக்கு கொடையும் வழங்குகிறார்.அப்படியான விழாவில் மதிய உணவும் ஏற்பாடு செய்திருப்பார்கள்தானே நாம் ஏன் விழாவைப் பார்த்துவிட்டு வாய்ப்பிருந்தால் சாப்பிட்டுவிட்டுப் போகக்கூடாது என்றான்.நல்ல யோசனையாகப் பட்டது.மீண்டும் அரங்கிற்குள் நுழைய வாசலில் பத்ரி நின்றிருந்தார்.நீங்கள்தானே ஏற்கனவே பச்சியப்பன் கல்லூரியில் இருந்து வந்தது? என்றார்.ஆம் என்றான் சரவணன். போட்டி குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே முடியப்போகிறது.கமல் சார் வருவதற்கு நேரமாகும்.அதனால் போட்டியை நீட்டிக்க விழா ஏற்பாட்டாளர்கள் விரும்புகிறார்கள்.உங்களுக்கு சிறப்பு அனுமதி வாங்கித் தருகிறேன்.பேசுகிறீர்களா? என்றார். எனக்கும் சரவணனுக்கும் அதிர்ஷ்ட தேவதை அவர் ரூபத்தில் தெரிந்தாள்.போட்டியின் நடிகராக பிரபல நடிகர்.நாசரின் துணைவியார் திருமதி.கமீலா.சரவணனின் பெயர் அழைக்கும் வரை பின்னிருக்கையில் போய் ஒருவித பதற்றத்தோடு வீற்றிருந்தோம்.பேசிய மாணவர்கள் பலரும் சிறப்பாகவே பேசினார்கள். தலைப்பு,இன்றைய இந்தியா எங்கே போகிறது? தலைப்பை வைத்துக்கொண்டு வெவ்வேறு மாதிரி குறிப்பெடுத்தோம்.அவசர அவசரமாகக் குறிப்புகளை எடுக்க வேண்டும்.நினைவில் உள்ளவற்றை தொகுத்துக்கொண்டு முதல் சுற்றுக்கு சரவணன் தயாரானான்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: