யுகபாரதி

அதாவது

Posted by யுகபாரதி மேல் ஜனவரி 5, 2010

ஒருநாள் போவார்,ஒருநாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம் என்ற படகோட்டித் திரைப்பாடலை யாரும் மறந்திருக்க மாட்டோம். மீனவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் அவ்வரிகளை எழுதிய வாலியை இப்போதும் நினைத்துக் கொள்கிறேன். தஞ்சை பர்மா காலனி பகுதியில் வாணி திரையரங்கம் அமைந்திருந்தது. ஒவ்வொரு தீபாவளிக்கும் படகோட்டி திரைப்படமே திரையிடுவார்கள்.தொடர்ந்து மூண்டு ஆண்டுகள் தீபாவளியன்று அப்படத்தை பார்க்க நேர்ந்ததால் அப்படமும் அப்படத்தின் பாடல் வரிகளும் எனக்கு மனப்பாடம். மக்களின் வாழ்நிலையை உணரத்தக்க வரிகளை திரைப்பாடல்கள் நமக்கு வழங்கியிருக்கின்றன.கடலைப் பார்த்தறியாத அந்தச் சின்ன வயதில் மீனவர்களின் நிலையை உள்வாங்கிக் கொண்டது வெறும் கவிதை ரசனை அல்ல. அந்த வரிகளுக்கு இடையே பொதிந்திருந்த உண்மை.

கடல் ஒரு ராட்ச்ச நீர்விலங்கு மாதிரி  எனக்குத் தோன்றியதுண்டு. அது,அலைக்கரத்தால் ஆளை விழுங்கிவிடும் என்ற அபாயத்தை எனக்குள் நானே கற்பனை செய்திருக்கிறேன்.மீனவர்கள் அந்த நீர்விலங்கால் நாளும் நாளும் தின்னப்படுகிறார்கள் என்று அஞ்சியிருக்கிறேன்.அந்த அச்சம் இப்போது அதிகரித்துவிட்டது. கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று பலரும் பலகாலமாக பேசிவந்த விஷயம் தற்போது கூடுதல் கவனம் பெற்றிருக்கிறது. கச்சத்தீவை மீட்டே தீருவோம் என்று அத்தனைக் கட்சிகளும் ஆவேசத்தோடு களமிறங்கியுள்ளன.நல்ல சகுணம் என்பது போலவும் தமிழக மீனவர்களின் நெடுநாள் கனவு ஈடேறும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பது போலவும் எண்ணத் தோன்றுகிறது.இதன்,முதல் கட்ட போரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இலங்கைத் தூதரக முற்றுகை போராட்டத்தின் மூலம் ஆரம்பித்திருக்கிறது.

இரு நாடுகளின் எல்லையோரப் பகுதிகளில் மீன் பிடிக்கச்செல்லும் மீனவர்கள் இரண்டு நாட்டு கடற்படையினராலும் அநியாயமாகப் பிடித்துச் செல்லப்படுவதும் துன்புறுத்தலுக்கு ஆளாகித் திரும்பி வருவதும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது.குறிப்பாக, தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுக்காப்பை இந்திய அரசு வழங்கியதில்லை. அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் அப்பாவி மீனவர்கள் விடுதலைப் புலிகள் என்று சுட்டுக்கொல்லப்பட்ட சோகக்கதைகள் எண்ணிலடங்காதவை.இந்த நிலை மேலும் நீளாதிருக்க கச்சத்தீவை மீட்கும் போராட்டம் சூடு பிடித்திருக்கிறது.

கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது திராவிட முன்னேற்றக் கழகம்.அதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆச்சியிலே அதை மீட்கும் முனைப்பு தோன்றியிருக்கிறது.ஒருவிதத்தில் முள்ளை முள்ளால் எடுப்பதுபோல என்று உருவகிக்கலாம். அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்தான் இப்போதும் மத்தியில் இருக்கிறது.ஆனால், இப்பிரச்சனையை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின்னான காங்கிரஸ் அரசு எப்படி அணுகும் என யூகிக்க முடியவில்லை.எந்த முக்கியத்துவமும் இல்லாத வெற்றுப்பாறை என்று இந்திராகாந்தியால் வர்ணிக்கப்பட்ட கச்சத்தீவை இலங்கை கேட்ட போதே இந்தியா சுதாரித்து இருக்க வேண்டும்.அதைவிடுத்து, இடைப்பட்ட காலத்தில்
நேர்ந்துவிட்ட ஏராளமான இழப்புகளுக்குப் பிறகு தொடங்கப்பட்டுள்ள இப்போராட்டம் இரு நாடுகளின் உறவுச் சிக்கலை உண்டாக்கும் என்பதில் அய்யவில்லை.இலங்கையோடு இந்தியா சுமூக உறவை கொள்ளாது இருப்பதே தமிழர்களுக்கும் தமிழ்த்தேசியத்திற்கும் நல்லது.

ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான ஒப்பந்த கணக்கு வழக்குகளைப் பற்றி இப்போது ஆராய வேண்டியதில்லை.நம்மால் இலங்கை அரசுக்குத் தாரைவார்க்கப்பட்ட பகுதியை மீண்டும் நாமே கோரிப் பெறுவது உரிமை மீட்பே ஆகும்.இடையில் இரண்டு அரசுகளும் செய்துகொண்ட ஒப்பந்த மோசடிகளுக்குப் பின்னால் ஓராயிரம் அரசியல் காரணங்கள் இருக்கின்றன.அந்தக் காரணங்களை விவரித்துப் பேசினால் தொடர்ச்சியாக தமிழகத்திற்கு இந்திய அரசு செய்துவரும் வஞ்சம் வெளிப்படும்.தமிழக அரசின் ஒப்புதல் பெறாமலேயே கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்த காங்கிரஸ் அரசு தனக்கு முற்காலத்தில் ஏற்பட்டுள்ள களங்கத்தை அதாவது தமிழக நலனில் அக்கறைகாட்ட மறுத்த அல்லது மறந்த களங்கத்தை இதன் மூலம் கழுவிக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அன்றைய தி.மு.க ஆட்சி தன்னுடைய எதிர்ப்பை காட்டவில்லை என்றும் அப்போதே தாரைவார்ப்பைத் தடுத்திருந்தால் தமிழக மீனவர்களின் இன்றைய சோக நிலை தவிர்க்கப்பட்டிருக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவிக்கின்றன.எதிர்ப்பு தெரிவிக்கபட்ட போதும் அன்றைய காங்கிரஸ் அரசு கண்டுகொள்ளாமல் நடந்துகொண்டது என்பதுதான் உண்மை.தி.மு.க.வைச் சேர்ந்த இரா.செழியனும் நாஞ்சில் மனோகரனும் அதுகுறித்து பாராளுமன்றத்தில் பேசி வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். ஆனாலும்,கடலுக்குள் எறியப்பட்ட கூழாங்கல்லைப் போல அந்த எதிர்ப்பு பெரும் கவனத்தை ஏற்படுத்தவில்லை.அப்போதைய அரசியல் நிலவரங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கிடைத்து சாக்கென்று காலங்கடந்து குடுமியைப் பிடித்து எந்த பிரயோசனமுமில்லை. இந்திய- இலங்கை ஒப்பந்தம் தொடர்ப்பான சமாச்சாரங்கள் ஒருபுறமிருந்தாலும் தமிழக பகுதிகள் அல்லது இந்தியாவின் வேறு எந்த மாநிலத்துப் பகுதிகள் ஆனாலும் இந்திய நலனுக்காக மத்திய அரசு தாரை வார்த்தாலும் அந்த பகுதி அமைந்துள்ள மாநில அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற நிபந்தனையை கூட்டணிக்கட்சிகள் முன்வைக்கவேண்டும்.தங்கள் தனிப்பட்ட அரசியல் லாபத்துக்காக மத்திய அரசில் அங்கம் வகிப்போர் செய்துவிடும் இம்மாதிரியான செயல்கள் வேறு எந்த நாட்டு அரசியலிலும் அரசியல் அமைப்புச் சட்டத்திலும் இல்லாதவை. தான்தோன்றித் தனமான முடிவுகளுக்கு மக்களை பலிகொடுப்பதற்கு பெயர் தேச ஒற்றுமை அல்ல.

‘இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் தேச விரோதமானது.தேசப்பற்று இல்லாதது.உலகில் உள்ள நாகரீகமடைந்த நாடு எதுவும் இத்தகைய மோசமான ஒப்பந்தத்தை செய்துகொண்டது இல்லை.இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை பிரதமர் வெற்றி பெற்றவராகிறார்.இந்தியப் பிரதமரோ பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.இது,நம்முடைய ஒருமைப்பாட்டின் மீது விழுந்த பலமான அடியாகும்’ என்று அப்போது அவையில் ஆவேசமாக பேசிய நாஞ்சில் மனோகரனின் பேச்சை ஏன் தி.மு.க. தொடர்புச்சங்கலிபோல இணைத்து தமிழக நலனில் அக்கறைகாட்ட தவறியது? எதிர்ப்பைத் காட்டிவிட்டு அந்த எதிர்ப்பின் சூடு தணிவதற்குள் வேறு தலையாய பிரச்சனைக்குத் தாவிவிடுவதை உலக வரலாறு சந்தர்ப்பவாதம் என்று வர்ணிக்கிறது.தி.மு.க.வுக்கும் தேர்தல் சந்தர்ப்ப வாதத்துக்கும் நிறைய தொடர்பு இருப்பதாக சந்தர்ப்பவாதத்துக்கு(?) சற்றும் தொடப்பில்லாத அ.தி.மு.க கூறிவருகிறது.

இது, மிகச் சரியான தருணம். அகஸ்டில் இலங்கையில் நடைபெறவிருக்கும் சார்க் மாநாட்டில் இந்தப் பிரச்சனை குறித்து மத்திய அரசு இலங்கையிடம் நிபந்தனை வைக்கலாம். மத்திய அரசுக்கு பெய்யாகவே தமிழக மீனவ மக்களைக் காப்பாற்றும் எண்ணம் இருந்தால் இந்த நிபந்தனை பயனளிக்கும்.இல்லையென்றால்,கச்சத் தீவு மீட்பு சாத்தியமில்லை.வெறும் பாறைதானே என்று இந்திரா வர்ணனையை மன்மோகனும் வைப்பாரேயானால் வரவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் மண்ணைக் கவ்வும் வாய்ப்பு ஏற்படும்.ஒப்பந்தத்தை மீறுவதா? என்று இந்தியா தயங்கினால் எந்த ஒப்பந்தத்தையும் மதிக்காத இலங்கை கடற்படைக்கு மீண்டும் தமிழக மீனவர்கள் பலியாக வேண்டியதுதான்.தொடர்ச்சியான இழப்புகள் உறவை கேள்விக்குள்ளாக்கும். இரண்டு வெவ்வேறு நாட்டின் உறவுகளை மட்டுமல்ல,ஒரு நாட்டிலுள்ள தேசிய இனங்களுக்கு உள்ளான உறவுகளையும்.கச்சத் தீவை மீட்பதற்கான நேரம் நெருங்கிவிட்டது என தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். அவர் காலத்தில் இத்தீவு மீட்கப்பட்டால் மன்னராட்சி புகழாரங்களில் மகிழும் தொண்டர்கள் அவருக்கு புதிய அடைமொழியைச் சூட்டுவார்கள்.செம்மொழி கொண்டான் என்பதைப் போல கச்சத்தீவு வென்றான் என்பது அவற்றில் ஒன்றாகலாம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: