யுகபாரதி

தெப்பக்கட்டை

Posted by யுகபாரதி மேல் ஜனவரி 12, 2010

1

கொலு வைத்துக்
கொண்டாட நவராத்திரி
கொட்டக் கொட்ட
விழித்திருக்க சிவராத்திரி

ஏதுவான பூசை
எதுவென்று
அறியாதவர்களை
ஆதரிப்பாளா மாரியம்மா?

திரவியம் தராவிட்டாலும்
பராவாயில்லை
தின்பதற்கு சோறாவது

கொடுக்காத தெய்வத்தை
குறைசொல்லிப் பலனில்லை
பிய்த்துக் கொடுப்பதற்கு
நமக்கெங்கிருக்கிறது
கூரை?

2

குதிகால் மணல் புதைய
நீரற்றுப் போயின
குளங்கள்

சிரித்த தாமரைகள்
செத்துவிட்டன
நின்றிருந்த தெப்பங்கள்
நொண்டியாயின

நீரின்றி அமையாத
உலகத்தை
நினைப்பதில்லை
புவியரசி

தெப்பங்கள் வெறும்
கட்டைகளாயின
தெய்வங்கள் கருங்
கற்களாயின

காசு கொழிக்கிற
திருப்பதியே சக்திமிக்கது

பங்கிட்டுத் தராத
பரதேசிகளுக்கு
வெங்கட்டு என்ன
வெங்காய மென்ன?

இல்லாதவற்றுக்குக்
கட்டுகிறான் கோபுரம்
இருப்பதிற்கில்லை
ஒரு வீடு

கடவுளேயானாலும்
காசு வேண்டும்
கூட்டம் சேர

3

ஐயாற்றுக் கரையில்தான்
அவதரித்தது சங்கீதம்

நெளிந்து வளைந்த
நிர்மல பெண்டுகளின்
அழகு ரசிக்க
நாங்களும் போவோம்
கச்சேரிக்கு

ஆறு வறண்டாலும்
நிற்பதில்லை
இசைவெள்ளம்

எழவு வீட்டில் குந்தி
குரல் குழைய
எது பாடினாலும்
ஒப்பாரிதான்

செத்தால் அடிப்பது
தமிழ்ப்பாட்டு
செத்துப் போக படிப்பது
இசைப்பாட்டு

உற்சவ மூர்த்திக்கு
பட்டாடை
அதே காவிரியில்
மிதக்கின்றன சவங்களும்

ஆற்றுக்குக் கருமாதி
நட்டாற்றில் உழவு
பதினெட்டாம் பெருக்கை
படையிலிடு
தேநீர்க் கோப்பையில்

4

எழுதுக தோழி
எதுவானாலும்
மறைத்து வைக்க
மார்பில்லை எழுத்து

சங்கூதும் கண்ணனை
ஆண்டாள் விரும்பியது
பாட்டுக்காக அல்ல
உதட்டுக்காக

உடம்பை அறிவி
பேணி உடுத்துதற்கு
கற்பொன்றும் உடையில்லை

பருவ மாற்றத்தைப்
பறைசாற்று
தைரியமிருந்தால்
கொச்சையாகவும்

தெருவெங்கும் விளம்பரங்கள்
ஆணுறைக்கு
நீயேன் மறைக்கிறாய்
தீட்டுத் துணியை

யாருக்காவது
மனைவியாகலாம்
எல்லாருக்காகவும்
எழுத முடியாது

5

அடித்துப் போடு
ஆடோ கோழியோ

காரநெடியேற
புசித்தால்தான் உணவு
கொல்வது பாவமென்றால்
செடிகளுக்கும் உயிருண்டு

அலகால் இரைதேடும்
பிராணி யாவும்
உடம்புக்கு ஏது
காலால் கவ்விப் பறப்பன
பெருங்கேடு

பழக்கமே இல்லையாயின்
உணவோ உறவோ
விட்டுவிடு
திணிக்காதே

6

பெரிதினும் பெரிது
ஒருவரை
சிரிக்க வைப்பது

சிரிக்காத பெண்ணும்
செழிக்காத மண்ணும்
லட்சணமற்றவை
எப்போதுமே

சிரமப்பட்டாவது
சிரிக்க வேண்டும்
நரி சிரிக்காது

நிலைப்படியில்
கண்ணைப்பார் சிரி
முடியாத பட்சத்தில்
நாட்டைப் பார்
வந்துவிடும் சிரிப்பு

Advertisements

2 பதில்கள் to “தெப்பக்கட்டை”

 1. karthick said

  நிலைப்படியில்
  கண்ணைப்பார் சிரி
  முடியாத பட்சத்தில்
  நாட்டைப் பார்
  வந்துவிடும் சிரிப்பு

  Sathiyamaai vandhadhu siruppu ennakku….arumai thozhare…

  vazthukkaludan
  karthick

 2. கவிதைகளை படித்து முடித்ததும் ஒவ்வொரு முறை என் நிஜ வாழ்க்கையை மறந்து விட்டு புதிய ஒரு வாழ்க்கையில் சஞ்சாரம் செய்கின்றேன்.

  இந்தப் பகுதியில் எழுதுக தோழி மட்டும் அந்த நிலையை உருவாக்கியது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: