யுகபாரதி

காலப்பெரு வெள்ளம்

Posted by யுகபாரதி மேல் ஜனவரி 20, 2010

ஆதியில் மனித மேனி
ஆடையை உடுத்த வில்லை
நீதியும் நெறியும் பார்த்து
நேர்வதை கணிக்க வில்லை
மாதமும் நாளும் வைத்து
மாற்றத்தை இயக்க வில்லை
வீதிகள் தெருக்கள் இல்லை
வீடுகள் அறவே இல்லை

யோகியர் எவரும் இல்லை
யோசனை பகர வில்லை
ஆகம விதிகள் இல்லை
ஆண்டைகள் அடிமை இல்லை
மோகன முனகல் இல்லை
முற்பிறவி கதைகள் இல்லை
வாகன நெரிசல் இல்லை
வழிப்பறி கொள்கை இல்லை

பாத்திரம் பண்டம் இல்லை
பத்தினி வேசம் இல்லை
சாத்திரம் சடங்கு இல்லை
சத்திரக் கூடம் இல்லை
மாத்திரை மருந்து இல்லை
மன்மதத் தவிப்பு இல்லை
வாத்தியார் வகுப்பு இல்லை
வகைக்கொரு வரிகள் இல்லை

சில்லறைச் செருக்கு இல்லை
சிந்தனை முறுக்கு இல்லை
செல்லிடைப் பேசி இல்லை
செல்வத்தைப் பெருக்க வில்லை
கொல்வதைப் புசித்து வாழ்தல்
குற்றமாய் இருக்க வில்லை
அல்லலை அணைத்துக் கொள்ளும்
அறியாமை மிதக்க வில்லை

காலப்பெரு வெள்ளம் ஒன்று
கரைகளைத் தகர்த்துக் கொண்டு
ஞாலமிதை நனைத்துப் போக
நடந்தன மாற்றம்; மனிதம்
ஓலமிடும் ஆந்தை போல
ஒப்பாரி வைக்கக் கண்டோம்
மூலவிதை முறிந்து போனால்
முளைக்காது செடியும் மரமும்

வசதியைக் கேட்டுக் கேட்டு
வாழ்வைநாம் இழந்து விட்டோம்
இசங்களை நம்பி, நாச
இலக்கியம் செய்தல் போல
அசதியை ஏற்றுக் கொண்டு
ஆனந்தம் துறந்து நின்றோம்
கசங்கலை உடுத்தத் தானா
கைத்தறி நெசவு செய்தோம்?

காகிதம் எதற்குக் கண்டோம்
கற்பனை கிறுக்கத் தானா?
கோகிலம் எதற்குக் கண்டோம்
கொண்டுபோய் மறைக்கத் தானா?
இலாகிரி எதற்குக் கண்டோம்
இலட்சியம் குறைக்கத் தானா?
புரோகிதம் எதற்குக் கண்டோம்
புதுமையை மறுக்கத் தானா?

நாடுகள் எதற்குக் கண்டோம்?
நடுவிலே எல்லை போட
கூடுகள் எதற்குக் கண்டோம்?
குவலயம் குன்றிப் போக
மேடுகள் எதற்குக் கண்டோம்?
மெலிந்தவர் தடுக்கி வீழ
மூடுதல் எதற்குக் கண்டோம்
முடிந்தவர் திறந்து காண

மசக்கையில் சாம்பல் உண்ண
மகப்பேறு கேட்டல் போல
கசப்பினை ஏற்கத் தானோ
கடவாயை அகலச் செய்தோம்?
வசப்படும் யாவும் என்று
வன்தொழில் புரிந்த தாலே
தசையிலே அழுக்குச் சேர்த்தோம்
தக்கதை முழுக்கு போட்டோம்

மகத்துவம் எதிலே எனநாம்
மதத்தினை வகுத்த தீங்கால்
முகத்திரை அணிந்து நின்றோம்
முழுநிலா பகலில் என்றோம்
பகட்டினில் பொழுதைக் கற்றோம்
பார்வைக்கு இமையை விற்றோம்
நகத்திடம் லஞ்சம் வாங்கி
நறுக்கினோம் விரலை மெல்ல

இந்திர லோகம் வேண்டி
எமனுக்குத் தூது சொன்னோம்
தந்திரம்  முழுவதும் வெல்ல
தழும்புகள் கோடி பெற்றோம்
சொந்தமாய் மரித்துப் போகச்
சூனியம் பழகிக் கொண்டோம்
பந்தியில் இடம்பி டிக்க
பதார்த்தத்தைத் தவற விட்டோம்

வந்தவை போதா தென்று
வறுமையை மேலும் உற்றோம்
சிந்திய ஆசை யாலே
சீர்பெற மறந்து போனோம்
தொந்தியை வளர்த்துக் கொண்டு
தொடர்ந்திடும் மோகப் பேயால்
மொந்தையில் கள்ளைத் தேடும்
மூர்க்கனாய் மாறிப் போனோம்

( இக்கவிதை,  கவிதையின் சாத்தியமான அத்தனை வடிவங்களிலும் எழுதிப்பார்க்கும் முயற்சியான  “ஒரு மரத்துக்கள்” தொகுப்பில் உள்ளது. அழகியலும் ஓசை நயமும் ஒருங்கே அமைந்த இந்நூல், மரபுக் கவிதைகளின் மீட்டுருவாக்கம் என்பதும் குறிப்பிடத்தகுந்தது)

Advertisements

3 பதில்கள் to “காலப்பெரு வெள்ளம்”

 1. 3000 வருட வாழ்க்கையை முத்தான வரிகளில். உங்கள் சந்தம், மரபு, யாப்பு எதுவும் தேவையில்லை. வாசிக்க எளிது. புரிதல் அதனினும் சிறப்பு. மூர்க்கம் சேர்ந்து முழு ஒப்பனையுடன் வாழ்பவர்களுக்கு இன்னும் சிறப்பாய் உருத்தும்.

 2. Toto said

  உங்க எழுத்தின் ரசிகன் நான்.

  Toto
  http://roughnot.blogspot.com

 3. biopen said

  சொந்தமாய் மரித்துப் போகச்
  சூனியம் பழகிக் கொண்டோம்
  பந்தியில் இடம்பி டிக்க
  பதார்த்தத்தைத் தவற விட்டோம்

  – Arumayaana varigal. Arumai Nanbare!

  -karthick
  http://eluthuvathukarthick.wordpress.com/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: