யுகபாரதி

நொம்பலச் சிந்து

Posted by யுகபாரதி மேல் ஜனவரி 27, 2010

நோயிலே வீழக் கூடும்
நோன்பிலும் வீழக் கூடும்
பாயிலே பரத்தை யோடு
படுப்பதால் வீழக் கூடும்
கோயிலே கதியென் றாலும்
குருக்களும் வீழக் கூடும்
தீயிலே பரவும் விட்டில்
திடும்என வீழக் கூடும்

ஆயிரம் செல்வம் சேர்த்து
அணிகலன் பூண்ட போதும்
பாயிர நூல்கள் கற்று
பக்குவம் பயின்ற போதும்
தாயிடம் அன்பு வைக்கா
தலைமுறை வீழக் கூடும்
வாயினைக் கட்ட எண்ணா
வார்த்தைகள் வீழக் கூடும்

தூளியில் ஆடும் பிள்ளை
துன்பத்தில் வீழக் கூடும்
நாழிகைக் கழிந்த பின்னால்
நல்லதும் வீழக் கூடும்
கோளினைச் சுற்றும் பூமி
கோட்டையும் விழக் கூடும்
தாளிலே பொறித்த சொற்கள்
தப்பெனில் வீழக் கூடும்

வான்மழை வாங்கா விட்டால்
வயல்வெளி வீழக் கூடும்
ஏன்எனக் கேட்கா விட்டால்
எண்ணமும் வீழக் கூடும்
கூன்பிறை காணா விட்டால்
கூதலும் வீழக் கூடும்
நான்அது தீராவிட்டால்
நாளைகள் வீழக் கூடும்

நரம்புகள் அறுந்து விட்டால்
நல்லிசை வீழக் கூடும்
குறும்புகள் கரைந்து விட்டால்
கூச்சமும் வீழக் கூடும்
நிரந்தரம் எதுவும் இல்லை
நிதர்சனம் வீழக் கூடும்
பிறந்து வாழ்வ தற்கு
பிணக்குகள் வீழக் கூடும்

ஆறிலே வீழக் கூடும்
அறுபதில் வீழக் கூடும்
நூறையும் தாண்டிச் சிலபேர்
நொடியிலே வீழக் கூடும்
பேரையும் புகழும் தேடி
பேதைகள் வீழக் கூடும்
ஊரையே வளைக்க எண்ணி
உழைத்தவன் வீழக் கூடும்

தேவைகள் தீர்ந்த பின்பு
தேடுதல் வீழக் கூடும்
பாவையின் அழகு, பார்த்துப்
பழகிட வீழக் கூடும்
யாவையும் அனுப வித்தால்
ஏக்கமும் வீழக் கூடும்
சாவைநாம் அழைக்கும் போது
சகலமும் வீழக் கூடும்

அந்திவரும் நேரம், கண்ட
ஆதவன் வீழக் கூடும்
தொந்தரவு நிரம்பும் போது
துணிவுகள் வீழக் கூடும்
சொந்தம்நமை விலகும் போது
சொப்பனங்கள் வீழக் கூடும்
வெந்துவிழி கருகும் வேளை
வியப்புகள் வீழக் கூடும்

நித்திய வடிவம் என்று
நிச்சயம் எதுவும் இல்லை
தத்துவப் பிதற்றல் போல
தரணியில் நிலையும் இல்லை
சொத்திலும் சூழ்ந்து வாழும்
சுகத்திலும் காணும் எல்லாம்
நித்திரை மயக்கம் என்னும்
நிகழ்ச்சியின் நிரலே ஆகும்

கொண்டது பாதி; வாரிக்
கொடுப்பதில் மீதி; நேரும்
சண்டையிலே பாதி; செய்யும்
சடங்கிலே மீதி என்னும்
உண்மையை உணர்ந்து விட்டால்
ஒருபோதும் நடுக்க மில்லை
இன்மையைப் புரிந்து கொண்டால்
இருப்பதில் கலக்க மில்லை

Advertisements

3 பதில்கள் to “நொம்பலச் சிந்து”

 1. அன்பு பாரதி, வணக்கம். கவிதை மிக்க நன்று.
  சித்தர்களின் பாடலை போல உள்ளது. பட்டினத்தார் பாடல் போலவும். சித்தர் ஆகிவிட்டீர்களோ?
  எளிமையான சொற்களுடன் அருமையாக எழுதியுள்ளீர்கள்.

  வாழ்த்துகள்.

  நாலாம் பத்தியில் கீழிருக்கும் வரிகள் புரியவில்லை.

  //நான்அது திராவிட்டால்
  நாளைகள் வீழக் கூடும்//

 2. நான் அது தீராவிட்டால் என வரவேண்டுமோ!

  எழுத்துப்பிழையாக இருக்கும் என நினைக்கிறேன்.

 3. நித்திய வடிவம் என்று
  நிச்சயம் எதுவும் இல்லை
  தத்துவப் பிதற்றல் போல
  தரணியில் நிலையும் இல்லை
  சொத்திலும் சூழ்ந்து வாழும்
  சுகத்திலும் காணும் எல்லாம்
  நித்திரை மயக்கம் என்னும்
  நிகழ்ச்சியின் நிரலே ஆகும்

  இந்த உண்மையை உணர்வதற்குள் நம் வாழ்க்கை முடிந்துவிடுகிறது.. ஆனால் வாழும் போது இந்த உண்மையை புரிந்தவர்கள் இந்த உலகத்தில் முட்டாள்கள் என்றே முத்திரை குத்தப்படுகிறார்கள் என்றே நினைக்கிறேன்.. எது எப்படியோ சத்திய வார்த்தைகள்

  வாழ்த்துக்கள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: