யுகபாரதி

செளந்தர்யலஹரி

Posted by யுகபாரதி மேல் ஜனவரி 28, 2010

செளந்தர்ராஜன் என்று அவனுக்கு யார் பேர் வைத்ததென்று தெரியவில்லை. செளந்தர்யம் என்றால் அழகு. அழகுக்கும் அவனுக்கும் துளிக் கூட சம்பந்தமில்லை. மேலும் அழகென்று பிறரால் போற்றப்படுகின்ற எதையும் அவனுக்கு ரசிக்கத் தெரியாது. பெண்கள் அழகானவர்கள் என்று சதா அவனிடம் வாலிப கிறுக்கில் உளறப்போக, அதற்காக சதாவின் முகத்தில் காயமேற்பட்டதுதான் மிச்சம்.

சதாவும், செளந்தரும் அழகுக்காக அடித்துக் கொண்ட சம்பவத்தை இப்போது நினைத்தாலும் சிரிப்புத்தான் வருகிறது. அழகு மீது செளந்தருக்கு ஏற்பட்ட வெறுப்புக்கும் சதாவுக்கு இருந்த கிறக்கமும், எதன் பொருட்டு உருவானது அல்லது எதை முன்வைத்து நிகழ்ந்தது என்பதை நல்ல மனநல மருத்துவர்களால் மட்டுமே உணர முடியும்.

சதாவுக்கும், செளந்தருக்கும் கண்ணாடி அணியாமலே கண்கள் தெளிவாகத் தெரியும். சதா பார்க்கிற காட்சியை செளந்தராலும் பார்க்கமுடியும் ஒரே காட்சியை இருண்டு பேரும் பார்ப்பார்கள். ஆனாலும், இரண்டு பேருக்கும் அழகு குறித்த அபிப்பிராயம் …. போராகும். புஷ்பலதாவின் காதலானாக சதா மாறியிருந்தான். செள்ந்தரின் நண்பனாகவுமிருந்த சதாவுக்கு அவளைப் பிடித்திருந்தது. பேச்சுவாக்கில் செளந்தரிடம் புஷ்பாவைப் பற்றிச் சொல்ல வேண்டியிருந்தது. சொல்லாமல் மறைத்தால் கோபிப்பான்.

அவள் அழகு சதாவை இம்சித்தது. மழையில்லாத பின்னிரவுகளில் மனதுக்குள் ஈரமான கனவுகளை விதைத்துக் கொண்டிருந்தது. கையெழுத்து அழகாக வேண்டுமென்று பிரார்த்திக்கத் தொடங்கினான். யாரேனும் புதிதாகப் பேனா வாங்கியதாக அவனிடம் சொல்ல நேர்ந்தால், உடனே அந்தப் பேனாவின் செழுமையைச் சோதிக்க அவள் பெயரை எழுதிப்பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டான். இதற்கு முன் செளந்தர் பெயரைத்தான் எழுதினானோ என்னவோ?

இரண்டு இதயத்தை அழகென்றொரு இதயம் செயழிழக்கச் செய்தது. அவர்களுக்குள் கருத்து முரண்பாடு முற்றி, நிரந்தர எதிரிபோல் கருதத் தொடங்கினர் என்பதோடு நமக்குத் தேவையான விஷயம் தொடங்குகிறது.

சதாவை அழகானவன் என்று நான் சொல்வதற்கும், செளந்தர் அழகில்லை என்று மற்றவர் கருதுவதற்கும் என்ன காரணம்? புஷ்பலதாவுக்கு செளந்தரைக் காட்டிலும் சதாமீது பிரியம்வர யாது காரணம்? இந்த அழகுச் சமாச்சாரம் யாரல் உருவாக்கித் தரப்பட்டது? பக்கம் பக்கமாய் அழகுக் குறிப்புகளை வெளியிடும் மாதர் இதழ்களால் இதைத் தெளிவாக்க முடியுமென்று தோன்றவில்லை.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்னும் சொல்லடைக்குள் பொதிந்து கிடக்கிற உண்மையை ஏன் புஷ்பலதாவால் புரிந்து கொள்ள முடியவில்லை? பெரும்பாலான நாட்டார் சாமிகள் உருவாக்கப்பட்ட அழகுச் சட்டத்துக்குள் அகப்படுவதில்லை. பார்த்தாலே பரவசம் என்னும் திரைப்படத்தில் இரண்டு கதாநாயகர்கள் ஒருவர் செளந்தர் போலவும் மற்றவர் சதா போலவும் இருப்பார்கள். செளந்தரைப் பற்றி சதா பேசும் போது அவன் கறுப்பாக இருப்பதால் தனக்கு வன் மீது அருவருப்பு தோன்றுவதாகப் பேசுவான்.

கறுப்பு அருவருக்கத்தக்க வண்ணமா?கறுப்புதான் துக்கத்தின் வண்ணமென்றால் ஆலயங்களில் வழங்கப்படுகிற பூஜை கயிறுகள் ஏன் கறுப்பு வண்ணம் பூசியிருக்கிறது? மண்டேலா, பார்த்தாலே பரவசம் பார்த்திருந்தால் எப்படி துடித்திருப்பார்? நிறங்களில்லை, ஒருவனின் மனது. மனம் ஒருபோதும் நிறங்களால் கவரப்படுவதில்லை. சிவப்பு புரட்சிக்கும் வெண்மை சமாதானத்துக்கும் எனத் தீர்மானித்த முதல் மனிதனின் சிந்தனை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

அழகைப் புகழ்ந்து பாடும் ஆதிசங்கரரின் செளந்தர்யழஹரி, ஐந்து லட்சணங்களை உண்டாக்கியது. நமஸ்கரித்தல், பிரார்த்திருநத்தல், ஆசி வழங்குதல்,  பெருமைகளைப் பேசுதல், உண்மையை அறிதல் என்பவை அவை.  அந்த லட்சணங்களை ஒவ்வொரு மனதும் கொண்டிருக்கின்றன. எனினும் அதை முழுமையாக கைக் கொள்ளும் போதே சிறப்பாகக் கருதப்படும். அழகு மட்டுமல்ல அத்தனையும் அருளால் நிகழ்வதென்பார் மாணிக்கவாசகர்.

அன்றே என்றேன் ஆவியும்
உடைமையும் எல்லாம்
குன்றேயனையாய் என்னையாட்
கொண்டபோதே கொண்டிலையோ
இன்றோர் இடையூறு எனக்குண்டோ
எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய்
நானா இங்கு நாயகமே.

தன்னை அர்ப்பணிக்கும் தகைமை வரும்போது சகலமும் தன்னிடம் ஐக்கியமாகும். உடல், பொருள், ஆவி மூன்றையும் ஒப்படைப்பதே சரணாகதி. பாதரசத்தால் கண்ணாடிக்குப் பிரதிபலிக்கும் திறன் உருவாகிறது. அந்தப் பாதரசம் பாழ்பட்டால் பார்ப்பவனின் முகமோ, கண்ணாடியின் அகமோ, நமக்குத் தெரியப் போவதில்லை. எனவேதான் அழகைப் பாதரசம்போல் கருத நேர்கிறது.

அழகென்பது மூக்கும் முழியுமாக இருப்பது மட்டுமல்ல. கபடமற்ற குழந்தைகள் சிரிப்புக்கு ஈடாக எதைச் சொல்லமுடியும்? சிரித்த முகத்தோடு தென்படும் எந்த மனிதரும் அழகற்றவராக இருப்பதில்லை. சதாவின் அழகு வெளியாகவும், செளந்தரின் அழகு உள்ளாகவும் இருக்கிறது. அகமும் புறமும் கொண்டதே அகிலம்.

செளந்தருக்கும் சதாவுக்கும் நடந்த சண்டையைப் பார்த்துப் புஷ்பலதா சிரித்ததுகூட எனக்கு அப்படித்தான் படுகிறது. இரண்டு மனம் வேண்டும் என்பார் கண்ணதாசன். நினத்து வாட ஒன்று, மறந்து வாழ ஒன்று. மறந்தால் தானே நினைப்பதற்கு என்கிறது புதுக் கவிதை. யாதும் நீயான பிறகு எது நினைவு? எது மறதி?

செம்மண் பாதையில்
அவளும் நானும்
கல் விளையாட்டு
ஆடிக் கொண்டிருந்தோம்
வீசிய கல்லை
குறி பார்த்து அடித்து விட
சந்தோஷத்தின் ததும்பலில்
வானம் பார்க்க முத்தமிட்டாள்
குழைவில்
இடம் மாறிய வானத்தால்
விண்மீன்களை வீசி
நட்சத்திர விளையாட்டைத்
தொடர்ந்தோம்

குட்டி ஆலிஸிம் கோடி நட்சத்திரங்களும் தொகுப்பிலுள்ள கவிதையிது. டி. எல் சிவக்குமார் எழுதியது. செளந்தர் சதாவானாலும், சதா செளந்தரானாலும், புஷ்பலதா புஷ்பலதாகவே இருப்பதுதான் இந்தக் கவிதையின் மையம். கல் விளையாட்டை நட்சத்திர விளையாட்டாக மாற்றுகிறது காதல். காதலோடு இணையும் போது கிழக்கின் ரேகை மேற்கில் விரியும். அஸ்தமனமும் அவதரிக்கும் சக்தி பெறும்.

முதல் பத்தியில் செளந்தர்ராஜனின் அழகு சகிக்க முடியாதது என்ற என் எழுத்தும் காதலற்றவர்களால் தோற்றுவிக்கப்பட்டதே ஆகும். சதா அழகானவன் என்பது புஷ்பலதா காதலிப்பதனால் எனக்குள் மலர்ந்த ரசாயன மாற்றம். புஷ்பலதாவுக்கு இப்போது திருமணமாகி மூன்று வயது குழந்தையாக திரும்பவும் நடந்து வருகிறாள், நாங்கள்  வசித்த அருளானந்தர் நகர் தெருக்களில். குழந்தையின் சிரிப்பு பழைய சந்தோஷத்தைத் தருகிறது.

பிறிதொரு சந்தர்ப்பத்தில் செளந்தர், சதா, புஷ்பலதா உறவைப் பற்றி எழுதும்போது இப்படித் தொடங்குவேன்,  செளந்தர் பேருக்கு ஏற்றாற்போல் அழகாயிருப்பான். சதாவுக்கும் அழகுக்கும் சம்பந்தமில்லை. மேலும் அழகானதென்று போற்றப்படுகிற எதையும் அவனுக்கு ரசிக்கத் தெரியாது.

ஏன் இந்தக் கதையை இப்படிச் சொல்ல நேருமென்றால், புஷ்பலதாவின் கணவனாக அவனில்லை. அந்தக் குழந்தைக்கு மட்டும் தனது அப்பாவாக சதாவைத் தெரியும். இறந்து போன புஷ்பாவின் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறான் செளந்தர். சதாவாவது எளிது செளந்தராவது கடினம்.

Advertisements

ஒரு பதில் to “செளந்தர்யலஹரி”

  1. வித்தியாசமான முடிவு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: